"நன்னா! இந்த ஜம் ஜம் தண்ணீர் எப்படி வந்திச்சி?" சேமக்கண்ணு பேத்தி அஸ்பியா கேட்டாள்.
"அதுவா செல்லம்! இப்ராஹீம் நபின்னு ஒருத்தர் இருந்தாங்க. அவங்க தன்னோட மனைவி பிள்ளைய காட்டுல விட்டுட்டு போனாங்க!"
"ஏன் போனாங்க?"
"அல்லாஹ் சொன்னதால போனாங்க! "
"அப்புறம்?"
"அங்கேத் தண்ணீர் இல்லே. புள்ள அழுதிச்சி. அம்மா தண்ணீர் தேடி ஓடினாங்க!"
"எங்க ஓடினாங்க?"
"ஸஃபா மர்வா மலைக்கு இடையில!"
"அப்புறம்?"
"அந்தப் புள்ள தாகத்தில, கால உதைச்சதும் அங்கிருந்து தண்ணீர் வந்திச்சி!”
“அதுக்கு ஏன் ஜம் ஜம்னு பேரு வந்திச்சி?”
“தண்ணீர் அதிகமா வந்து குழந்தையைப் பாதிச்சிடக் கூடாதுன்னு அவங்க அம்மா நில்லு நில்லுன்னு சொன்னாங்க! ஜம் ஜம்னு சொன்னா நில்லு நில்லுன்னு அர்த்தம்!”
சமையலறையில் இருந்து சேமக்கண்ணு மனைவி எட்டிப் பார்த்தாள்.
“ஏங்க! ஜம் ஜம் தண்ணீர் மாதிரி ரொம்ப அபூர்வமாக இருக்கிறதுனாலத்தானே எனக்கு ஜம்ஜம்னு செல்லப் பேரு வச்சிங்க?”
“இல்லை. வாயைத் திறந்தா தண்ணீர் கொட்டுற மாதிரி பேசிக்கிட்டே இருக்கியா. அதை நிறுத்தத்தான்!”
சேமக்கண்ணுவை எதனால் அடிக்கலாம் என தேடத் துவங்கினாள் அவரது மனைவி.