"மக்கள் தயாராகி விட்டார்களான்னு பார்த்துட்டுத்தானே தொழுகையை ஆரம்பிக்கணும், நீங்கள் ஏன் அப்படிச் செய்யலை?" நிர்வாகக் கூட்டத்தில் இமாமைக் கேட்டார் தலைவர்.
"அது எனக்குத் தெரியாம போச்சுது!" இமாம் விளக்கமளித்தார்.
"அது எப்படித் தெரியாமப் போகலாம்?" உறுப்பினர் அன்வர் இடைமறித்தார்.
"மீம் எழுத்தில் துவங்கும் மூன்று சூரா சொல்லுங்க!" இமாம் எதிர்க்கேள்வி கேட்டார்.
"அது எனக்குத் தெரியாது!"
"அது எப்படித் தெரியாமப் போகலாம்?" இமாம் கேட்க, திருதிருவென விழித்தார்.
"எதிர்க்கேள்வியா கேட்கிறீங்க?" இன்னொரு உறுப்பினர் எகிரும் சப்தம் வலுத்தது.
தலைவர் அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
"சரி விடுங்க! இனி கவனமா இருங்க!”
இமாம், “சரி” என்றார்.
"நிர்வாகக் கூட்டத்தில் எதிர்க்கேள்வி கேட்கச் சொன்னீங்களே? இந்த யோசனை எப்படித் தோணிச்சுது?” இமாம் சேமக்கண்ணுவிடம் கேட்டார்.
"மார்க்கத்துக்கு முரண் இல்லாத விஷயத்துக்கு உங்கள நிக்க வச்சி, கேள்வி கேட்கிறது எனக்குப் பிடிக்கல! என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ, தெரியாதவர்கள் தெரிந்தவர்கள் இடம் கேளுங்கன்னு பயான்ல (சொற்பொழிவு) சொன்னது ஞாபகம் வந்தது. அதை வச்சித்தான் சொன்னேன்” என்றார் சேமக்கண்ணு.