சேமக்கண்ணு பள்ளி அருகேச் செல்லும் போது, உள்ளே உரத்த சப்தம் கேட்டது.
எட்டிப் பார்க்க அன்வரும் ஷாஜஹானும் எதையோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.
சேமக்கண்ணுவைக் கண்டதும் குரல் தாழ்த்தினர்.
"என்னப்பா என்ன பிரச்சனை?"
"எங்களுக்குள்ளேச் சின்ன வாக்குவாதம். நீங்களே ஒரு முடிவு சொல்லுங்க!"
"என்ன விஷயம்?"
"திக்ரு (இறைநாமம் உச்சரிக்கும் போது) செய்யும் போது, விரல்களாலத்தான் எண்ணணும்னு நான் சொல்றேன். இவன் இல்லை, தஸ்பீஹ் மணி வச்சும் எண்ணலாம்னு சொல்றான்!" அன்வர் கூறினான்.
"நபி ( ஸல்) அவர்கள் விரல்களாலதான் எண்ணியிருக்காங்க! ஆனால் நபித்தோழர்கள் பேரீத்தங் கொட்டைகளால எண்ணியிருக்காங்க. நூல்களில முடிச்சு போட்டும் எண்ணியிருக்காங்க. அதனால எப்படி வேணும்னாலும் திக்ரு செய்யலாம்"
"இறைவனின் பெயரை விட்டுவிட்டு இறைவனை பற்றிப்பிடி! அப்படின்னு மௌலானா ரூமி சொல்லி இருக்காங்க. மொத்தத்தில் திக்ரு செய்யணும். அவ்வளவுதான்!"
"அப்படிச் சொல்லுங்க!" ஷாஜஹான் ஆமோதித்தான்.
"இதெல்லாம் எங்கே கத்துக்கிட்டீங்க?" அன்வர் கேட்டான்.
"எல்லாம் கேள்வி ஞானம் தான்!"
"சரி! நீங்க எப்படி திக்ரு செய்வீங்க?” ஷாஜஹான் கேட்டான்.
"வாயால தான்!" சேமக்கண்ணு சொல்ல இருவரும் "ஙே" என விழித்தனர்.