தேனிப்பட்டி ஊர் முழுக்க மத வேறுபாடு பாராமல் பள்ளியில் இஃப்தார் விருந்தில் கலந்து கொள்ளத் திரண்டிருந்தனர்.
"எங்கள் அழைப்பை ஏற்று வந்ததற்கு நன்றி!" - பள்ளித் தலைவர் காதர் மஸ்தான்.
"உபவாசம் எங்கள் மதத்திலும் உண்டு!" - ஃபாதர் பெர்ணாண்டஸ்.
"இஸ்லாம் மனிதனை மனிதனாகப் பார்க்கிறது!" - பாலகுரு அடிகளார்.
"என் தோழி ஃபரீதாவுக்காக நோன்பு நோற்றுக் கொண்டு வந்துள்ளேன்! " - துப்புரவுப் பணியாளர் முனுசாமி மகள் அஞ்சு.
"என் வீட்டில் வேலை பார்க்கும் மீராவுக்காக வந்தேன்!" - சகுந்தலா டீச்சர்.
குறித்த நேரத்தில் சாமோஸ், மட்டன் சம்ஸா, உளுந்து வடை, கட்லெட், பாலூதா, நன்னாரி சர்பத், நோன்புக் கஞ்சி, கத்தரிக்காய் சட்னி பரிமாறப்பட்டது.
அனைவரும் உண்டு மகிழ்ந்து, பரஸ்பரம் வாழ்த்து சொல்லிக் கலைந்தனர்.
"உங்க ஐடியா சூப்பர்! உங்களுக்கு ரொம்ப சமூக அக்கறை இருக்குண்ணே!" - தலைவர்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லே! நான் மட்டும் கஞ்சி குடிக்கிறேன். எங்க குடும்பத்தில யாருக்கும் கொடுப்பினை இல்லியேன்னு நம்ம பள்ளி துப்புரவு பணியாளர் முனுசாமி வருத்தப்பட்டான். அதனால் தான் இந்த ஐடியா!” - சேமக்கண்ணு.