"இசை கூடுமா?"
“இசை பச்சை ஹராம்! உனக்குத் தெரியுமா?"அஹமது ஷாஜஹானிடம் கேட்டான்.
“அதிலே விதிவிலக்கு இருக்குன்னு படிச்சிருக்கேன்!" என்றான் ஷாஜஹான்.
“என்ன விதிவிலக்கு?"
“நரம்புக் கருவிகள்தான் கூடாது. தோல் கருவிகள் கூடும்னு சொல்றாங்க!, உதாரணமா பக்கீர்கள் வச்சிருக்கிற தஃப்ஸ் மாதிரி!"
“நமக்குள்ளே ஏன் சண்டை? நம்ம சேமக்கண்ணு மாமா இடம் கேட்கலாம்!"
அஹமது சொல்ல, இருவரும் எதிரே வந்த சேமக்கண்ணுவிடம் அந்தக் கேள்வியைக் கேட்டனர்.
“இசை வெறும் கருவிகளில் மட்டும் இல்லை. பறவைகளின் சப்தம், அருவியின் ஓசை, விலங்குகளின் கர்ஜனை என்று எல்லாமே இசைதான்..."
“ஏழை பசித்திருக்கையில் பணக்காரன் சாப்பாட்டுத் தட்டில் ஓசை எழுப்பும் கரண்டியின் சப்தம் ஹராம்னு மௌலானா ரூமி சொல்றாங்க! அதனால இந்தப் பேச்சை விட்டுட்டு வேற உருப்படியா ஏதாவது பண்ணுங்கப்பா!"
“அதிருக்கட்டும்! உங்களுக்கு எந்த இசை பிடிக்கும்?"
“நம்ம முஸ்தபா கடையில வீச்சு புரோட்டாவ வீசறப்போ... ஒரு சப்தம் வருமே... அந்த சப்தம்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!"