ஜூம்ஆ தொழுகை முடிந்ததும், வெளிப்பள்ளியில் சப்தம் கேட்க என்னண்ணே என்றவாறு பள்ளியில் இருந்து இறங்கி வந்தார் இமாம்.
"இமாம், பிரசங்கம் பண்றப்போ இந்த ரெண்டு பேரும் தொணதொணண்ணு பேசிக்கிட்டே இருக்காங்க. பேசினா ஜூம்ஆ உடைய நன்மை போயிருந்தானே?"
"அதெல்லாம் இல்லை. மிம்பரில் ஏறினப்புறம் தான் பேசக்கூடாது!" அஸ்லம் சொன்னான்.
"இல்லை! பயானைக் கேட்கலைன்னா ஜூம்ஆ உடைய நன்மை கிடைக்காது" சேமக்கண்ணு உரக்கச் சொன்னார்.
"அதெல்லாம் கிடைக்கும்...” அஸ்லமுக்கு துணையாக அஷ்ஃபாக் வந்தான்.
நிலைமை மோசமடைவதைக் கண்ட இமாம், அப்பிரச்சனையைத் தீர்க்க முன் வந்தார்.
“மிம்பரில் இமாம் குத்பா ஓத ஏறினப்புறம் தான் பேசக்கூடாது. இருந்தாலும், அதைத்தான் தமிழில் நமக்குப் புரியும் படி பிரசங்கம் பண்றாங்க. நாமக் கவனமாக் கேட்க வேண்டாமா தம்பிங்களா...? இனிமே இப்படி நடக்காதீங்க! உங்க மேலே இருக்கிற அக்கறையிலதானே இவரு இப்படிச் சொல்றாரு!"
இருவரும் சரி எனத் தலையாட்டி விட்டுக் கிளம்பியதும் இமாம் சேமக்கண்ணு இடம் திரும்பி, “உங்களுக்குப் பொறுப்புணர்ச்சி ரொம்ப அதிகம்ணே... அதனால்தான் இந்த பையன்களைச் சத்தம் போடுறீங்க...?" என்றார்.
"அதெல்லாம் இல்லை. நல்லா ஏஸியில தூங்கலாம்னு வந்தா... இவனுக... பேசியேக் கடுப்படுக்கிறானுவோ...” என்று சேமக்கண்ணு எளிதாகச் சொல்லிவிட்டு நடந்தார்.
இமாம் விழித்தார்.