வறுமையின் கோரப்பிடியில் வாடிப்போனது செடிகள் மட்டுமல்ல, மனித மனங்களும் தான்!
வற்றாத ஜீவநதி தாமிரபரணியிலிருந்து வந்து கொண்டிருந்த குடிநீர்க் குழாய்களில் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அருகில் உள்ள அண்ணாநகர் நீர்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டுபோகும் பெரிய இரும்புக் குழாயிலிருந்து நேரடியாக எங்கள் தெருவில் உள்ள 30 வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தன. ஆகையால் தண்ணீர் எப்போதும் அதிக விசையுடன் வீட்டுக் குழாய்களில் விழுந்து கொண்டேயிருக்கும். அதனால் நாங்கள் கிணற்றையோ, அடிபம்பையோ, ‘போர்’ மோட்டாரையோ நினைத்துப் பார்த்ததே கிடையாது. தெருவின் கிழக்குப் பக்கம் ஒரு பெரிய குளமும், தெருவுக்குப் பின்னால் வயல்வெளிகளும் இருந்தன. குளத்துப் பாசானத்தால் ஒரு போகம் நஞ்சையும், ஒரு போகம் புஞ்சையும் விளையும். குறுகிய கால ஓட்டத்தில் வயல்களும் குளமும் வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்டு, விற்கப்பட்டன. அங்கு புதிய வீதிகளும், சாலைகளும், விளக்குகளும், வீடுகளுமாய் ஒரு புதிய ‘அன்புநகர்’ உருவாகிவிட்டது.
இதனால் குடிநீரின் தேவை அதிகரித்தது. எனவே பெரிய இரும்புக் குழாயிலிருந்த நேரடிக் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, புதிதாக அன்பு நகருக்குப் போடப்பட்ட சிறிய பி.வி.சி பைப்பில் அவைகள் மாற்றி இணைக்கப்பட்டன. இதனால் குறிப்பிட்ட நேரம், குறைந்த அளவு தண்ணீர்; சில நாட்களில் கலங்கல் தண்ணீர்; சில நாட்களில் அதுவும் வருவது இல்லை என்ற நிலை உருவானது.
தண்ணீரின் அருமையைப் பொதுமக்கள் வெகுவாக உணர ஆரம்பித்தனர். தண்ணீரைச் சேமித்து வைக்க சிமிண்ட் தொட்டிகள் கட்டினர். தரையில் ‘சம்ப்’ கட்டினர். ஒரு பசையுள்ள பார்ட்டி திருட்டுத்தனமாக மின்மோட்டாரை நேரடியாகக் குடிநீர் இணைப்பில் பொருத்தி தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாகவும், அது மாநகராட்சிக்குத் தெரிந்ததால், சோதனை போடவந்த அதிகாரிகளை அன்று முறத்தினால் அடித்துத் துரத்திய மறத்தமிழ்ப் பெண் போல, தாய் அம்மாள், அவர்களை வீட்டு கேட்டை தாண்ட விடாமல் திருப்பி அனுப்பி விட்டதாகவும் பேசிக் கொண்டார்கள். அடிக்கடி பொது மக்கள் கூடிநின்று அன்றாட குடிநீர் பிரச்சனையை அலசி ஆராய்வதாகவும் கேள்வி!
வீட்டில் நானும் மனைவியும் தண்ணீரின் தேவையையும், சேமிப்பையும் உணர்ந்தோம். வீட்டுக்குப் பின்னால் 3 அடி உயர சிமிண்ட் தொட்டியில் நிம்மதியாய் வாழ்ந்து கொண்டிருந்த கலர் மீன்கள் அகற்றப்பட்டு, தொட்டி சுத்தப்படுத்தப்பட்டு, அதில் குடிநீர்க் குழாய் பொறுத்தப்பட்டது. மாடியில் ஒரு பெரிய சிமிண்ட் தொட்டி கட்டப்பட்டது. கோவையிலிருந்து தருவிக்கப்பட்ட மின்விசை மோட்டார், கீழ்த் தொட்டியோடு பொறுத்தப்பட்டு, மாடித் தொட்டியோடு குழாய் மூலம் இணைக்கப்பட்டது. இதனால் கீழ்த்தொட்டியில் சேமிக்கப்படும் தண்ணீர் மோட்டார் மூலம் மாடித் தொட்டிக்கு ஏற்றப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் அடுக்களைக்கும், குளியலறைக்கும், சலவை எந்திரத்துக்கும், தோட்டத்துக்கும் வினியோகிக்கத்தக்க விதத்தில் வேலைகள் துரிதமாய் நடந்து முடிந்தது.
நாட்கள் நகர நகர தண்ணீரின் வரத்தும் குறைய ஆரம்பித்தது. கலங்கல் நீர் ஆனாலும் முகம் சுழிக்காமல் கீழ்த் தொட்டியில் சேமித்து, நீர் தெளிந்த பின் மாடித் தொட்டிக்கு மோட்டார் மூலம் ஏற்றி, உபயோகிக்கக் கற்றுக்கொண்டோம். நேரமும், மின்சாரமும் அதிகமாக செலவானது. கண்ணீர் சொட்டுவதுபோல், தண்ணீர் கொட்டியது குழாயில்!
தண்ணீர் கஷ்டம் தீரவில்லை! தண்ணீரின் அருமையை அதிகம் உணர்ந்தோம். அதிகமாகத் தண்ணீர் கிடைத்தால் மாடியை வாடகைக்கு விடலாமே? என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தோம். ‘போர்’ போட்டால் கிடைக்கும் தண்ணீரைக் குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ, செடிகளுக்கு என உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மாநகராட்சி மூலம் கிடைக்கும் ஆற்றுநீரைச் சமையலுக்கும், அதிகம் கிடைத்தால் குளிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் - இந்த ஞான உதயத்தால் உந்தப்பட்டு, காரியங்களை மடமடவென்று செயல்படுத்த ஆரம்பித்தோம்!
காண்ட்ராக்டர் மணி ஒரு நிலத்தடி நீர் பார்க்கும் ஒருவரைக் கூட்டிவந்து, ‘பாய் ஊத்து பாத்து தண்ணி இல்லாம போனதா சரித்திரமே கிடையாது…. அவ்வளவு திறமைசாலி’ என்று அவரை அறிமுகம் செய்து வைத்தார்.
‘சார், ஒரு தங்கசெயின் கொடுங்க’, என்று பாய் கேட்டார். செயின் அவர் வலது கையில் தொங்க, வீட்டின் பின்புறம் வடக்கு தெற்காய், கிழக்கு மேற்காய் காலில் செருப்பு அணியாமல் மெதுவாகப் பவனி வந்தார்.
செயின் சில இடங்களில் சுற்றியது. மற்ற இடங்களில் சுற்றவில்லை. மூன்று இடங்களைக் குறிப்பிட்டு அங்கெல்லாம் தண்ணீர் இருப்பதாகச் சொன்னார். திரும்பவும் அந்த மூன்று இடங்களையும் ஆய்வு செய்து, அதில் ஒரு இடத்தில் அதிக நீரோட்டம் இருப்பதாகக் கூறி, அந்த இடத்தில் ஒரு செங்கலை வைத்து அடையாளப்படுத்தி, 100 அடி ஆழம் ‘போர்’ போடச் சொன்னார். ‘ஓ’-பாசிட்டிவ் (O+) இரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பூமியில் நீரோட்டம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்ற விஞ்ஞானத்தையும் கூறி பணம் பெற்று மகிழ்ச்சியோடு விடைபெற்றார்.
நிலத்தடி நீர் பார்த்த விஷயம் இரண்டு வீடு தள்ளிக் குடியிருக்கும் குடும்ப நண்பர் வீட்டில் தெரிந்தவுடன், அந்த வீட்டு அம்மா, மேரி, என் மனைவிக்கு உடன் பிறவா சகோதரி, ஓடோடி வந்தார்கள். ‘சார், இங்க ஒருத்தர் ஜேம்ஸ்னு இருக்கார். அவர்தான் வேதக்கோயில்ல தண்ணி பார்த்தார்… நிறைய தண்ணி..’, என்று அதிக கரிசனையோடு சொன்னார்கள்.
பாய் பார்த்த இடத்தில் ஏதாவது குறைபாடு ஏற்படும் பட்சத்தில், மனைவியின் அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொள்ள முடியாது என்ற தொலைநோக்குப் பார்வையில், ஜேம்ஸை தண்ணீர் பார்க்க வரச் சொன்னேன். நான் வெளியில் சென்றிருந்த நேரம், ஜேம்ஸ் ‘லு’ வடிவ வேப்பமரக் குச்சியை கைகளில் பிடித்து, சுற்றவிட்டு, பாய் பார்த்த இடத்திலிருந்து சுமார் பத்து அடி துரத்தில் நீரோட்டம் இருப்பதாய்க் குறித்துக் கொடுத்து பணமும் பெற்றுக் கொண்டு சென்று விட்டார்.
மறுநாள் ‘போர்’ போடும் லாரி வீட்டின் முன் வந்து நின்றது. நாய் குரைத்துக் கொண்டேயிருந்தது. மொத்த ஆட்களும் வீட்டின் கொல்லைப்புறத்துக்கு வந்து போர் போட வேண்டிய இடத்தைப் பார்வையிட்டார்கள். ஜேம்ஸ் குறியிட்ட இடம் எவ்வித இடையூறுமில்லாமல் இருந்ததாலும், மனைவியின் சிநேகிதி மேரி சோன்ன ஜேம்ஸ் தேர்வு செய்த இடம் என்பதாலும் அந்த இடம் போர் போட ஆயத்தப்படுத்தப்பட்டது.
ஐந்து அடி துளைக்குப்பின் போர் போடும் எந்திரத்தின் சத்தம் மாறியது. கரும்பாறைத் தூள்கள் வெண்புகைமேகம் போல் காற்றில் மிதந்து பரவியது. 20.. 30.. 40.. 50.. அடி ஓடியும் எந்த மாற்றமும் இல்லாமல், யாரும் கொல்லைப்புறம் போக முடியாத அளவிலும், யாரும் யாரையும் பார்க்க முடியாத அளவிலும், சிமிண்ட் தொழிற்சாலையை நினைவூட்டும் வகையில் வெள்ளைப் புகை கொல்லைப்புறக் காற்றில் மண்டிக் கிடந்தது. வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் யாவும் அடைக்கப்பட்ட நிலையிலும், வெண்டிலேட்டர் இடுக்கின் வழியாக வீட்டினுள் வெள்ளைப்பொடி ஆங்காங்கே படியத் துவங்கியது. 60.. 65 அடி ஓடியும் அதே நிலை நீடித்தது. வீட்டிலிருந்தவர்கள் முகத்தில் சோகத்தின் ரேகைகள் வெள்ளைப் பொடியால் வெளிறிக் கிடந்தது. தலைமுடியெல்லாம் ஒரே நாளின் ஏமாற்றத்தாலும், ஏக்கத்தாலும் வெள்ளையாய் மாறிவிட்டது போலிருந்தது. தெருமக்களில் சிலர் அரவம் இல்லாமல் சந்து வழியாய் ஒளிந்து வந்து போர் போடும் இடத்தை எட்டி நின்று பார்த்துச் சென்றார்கள். 70 அடியை நெருங்கிக் கொண்டிருந்தது போரின் ஆழம்!
தனிமை விரும்பி சந்துக்குள் நின்று கொண்டிருந்த என்னை போர் போடும் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பார்த்தார். அவரின் பார்வை நான் எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழம்பிப்போய் நிற்பதை புரிந்து கொண்டதாய் தெரிந்தது. அருகில் வந்த அந்த முதியவர், கரிசனையோடு, உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக, ‘சார்… நிறுத்தறது நல்லது… ஓடுறதால எந்த பிரயோஜனமும் இல்ல… கரும்பாற… அதுல எந்த மாத்தமோ, முறிவோ இல்ல… நான் இப்படி சொன்னதா முதலாளிக்குத் தெரிஞ்சா என் வேலயே போயிடும்..’ இப்படி சொன்ன அவர் வெண்புகைக்குள் மறைந்து விட்டார். ஒரு நிமிடம் திகைத்து நின்றேன்.
மூக்கும் வாயும் மறையும் விதமாய் ஒரு துணியால் முகத்தை சுற்றிக் கொண்டு கொல்லைப்புறத்தை அடைந்து போர் போடுவதை நிறுத்தச் சொன்னேன். ‘வேணும்னா இன்னும் அஞ்சு அடி ஓட்டிப் பார்க்கட்டுமா?’ என்றார் எந்திரம் ஓட்டுனர். 75 அடி ஓடிய பின் எந்திரம் கலைக்கப்பட்டது!
தண்ணீர் கிடைக்காத தளிர் செடிபோல் என் மனம் துவண்டு போயிருந்தது!
இவ்வளவு நேரமும் எங்கோ வெளியில் நின்று கொண்டிருந்த காண்ராக்டர் மணி, ‘சார் நான் கூட்டிக்கிட்டு வந்த பாய் சொன்ன இடத்தில் போர் போடலையா?’ - நான் தவறு செய்து விட்டது போல் மெதுவாகப் பேச்சைத் துவக்கினார் - புரிந்து கொண்ட நான், ‘நாளைக்குச் சொல்றேன்..’ என்று கூறி வீட்டுக்குள் சென்றேன். மனைவி போனில் யாரோடோ பேசி முடித்துவிட்டு வந்தாள். முகம் சிவந்து போயிருந்தது. கோபம் சுருக்கங்களாய் முகத்தில் நெளிந்தது!
‘என்ன?’ என்றேன்.
‘சார் 75 அடியில் நிறுத்தச் சொல்லிட்டாங்களாமே… இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாமில்லையா? அப்படின்னு மேரி கேக்குறாங்க..’ என்றாள்.
நானே உடைந்து போயிருக்கிறேன். முடிந்து போன கதை! இதில் இனி யாருக்கு யார் சமாதானம் கூறுவது?
மலர்ந்த பொழுதுகள் மறைந்து போனதால் நாட்கள் நகர்ந்தன!
விட்டப் பணத்தை எடுக்க விரும்பும் சூதாட்டக்காரன் போல் காண்ட்ராக்டர் மணிக்கு போன் செய்து போர் போட ஏற்பாடு செய்யச் சொன்னேன்.
லாரி வந்தது. நாய் குரைத்தது. பாய் குறிப்பிட்ட இடத்தின் அருகில் கொய்யாமரம் - அப்பா வைத்தது - 40 வயதிருக்கும் - என்னிடமே அரிவாள் வாங்கி என் கண்முன்னே அதை வெட்டிச் சாய்த்தார்கள். வீட்டின் கதவுகள் சாத்தப்பட்டன. ஜன்னல்கள் மூடப்பட்டன. வெண்டிலேட்டர்கள் சாக்குத் துண்டுகளால் அடைக்கப்பட்டன. போர் எந்திரம் ஓடத் துவங்கியது. 5 அடிக்குப் பிறகு கரும்பாறையின் வெள்ளைப்புகை..! நான் மொட்டை மாடியில் நின்று பார்க்கிறேன். நான்கு நாட்களுக்கு முன்பு நடந்த அதே நாடகத்தின் மறு ஒளிபரப்பு! முருங்கை மரத்தில் வேதாளம்! யாருக்காக நான் போர் போடுகிறேன்? காண்ட்ராக்டர் மணிக்காகவா?
70 அடியைத் தாண்டி ஓடுகிறது… கொல்லைப்புறத்தில் மழை பெய்யாத அடர்த்தியான வெள்ளை மேகக்கூட்டம்! கரும்பாறையின் தன்மையில் எவ்வித மாற்றமும் இல்லை! தேற்றுவார் இன்றி நான் தனித்து நிற்கிறேன்!
80… 90…. 100 அடி.. மனைவியிடம் சென்றேன்.
‘போதுமா?’ ‘நிறுத்தலாமா?’ என்றேன்.
‘உங்க இஷ்டம்’ என்றாள்.
110 அடியில் போர் நிறுத்தப்பட்டது! மனைவியின் சிநேகிதி மேரிக்காக போர் 35 அடிகள் அதிகமாக ஓடியதா? எனக்குத் தெரியவில்லை..!
மதியில்லா விட்டில் பூச்சி தன் விதியை எரியும் விளக்கில் தானே மாய்த்துக் கொண்ட கதையா…? என் கதையும்..? அதுவும் தெரியவில்லை..!
கணக்கு முடிக்க காண்ட்ராக்டர் மணியைத் தேடினேன். அவரைக் காணவில்லை. யாரோ சொன்னார்கள், ‘சார், அவரு அப்பமே தண்ணி வராதுன்னு தெரிஞ்சதும் பைக்கை எடுத்துக்கிட்டு போயிட்டாரு’, என்று.
ஓடுங்காலம் காத்திருப்பதில்லை..!
அடிக்கடி எனக்கும் என் மனைவிக்கும் தண்ணீரால் கருத்து வேறுபாடுகள் வரத்தொடங்கின. காலையில் 5 மணிக்குக் குழாயில் தண்ணீர் வரத்தொடங்கும். தொட்டியின் உயரம் அதிகம் என்பதால் தண்ணீர் அதனுள் விழாது. அதனால் வாளியோ குடமோ வைத்து தண்ணீர் பிடித்து அடுக்களைக்கும் குளியலறைக்கும் கொண்டு போக வேண்டும். 25 வருடமாய் வீட்டில் வேலை செய்யும் ஆச்சி காலை 7 மணிக்குத்தான் வருவாள். சீக்கிறமாய் அவளை வரச்சொல்ல மனைவிக்கும் துணிச்சல் கிடையாது. செல்போனில் காலை 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து தண்ணீர் பிடிக்க எங்களை நாங்களே பழக்கப்படுத்திக் கொண்டோம்..!
திருமணமாகி சென்னையில் குடியிருக்கும் இரண்டு பிள்ளைகளும் ஒரு வார விடுமுறைக்கு இங்கு வந்தார்கள். அவர்கள் வரவால் கரைபுறண்டோட வேண்டிய உற்சாகம், வீட்டில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தடம்புறண்டு நின்றது. குழாயில் தண்ணீர் சரியாக வராததால் மனைவியின் கண்களில் அடிக்கடி கண்ணீர் வந்தது. சொந்தபந்தங்களைக் கூட பார்க்கப் போகாமல் பிள்ளைகள் இருவரும் வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தார்கள்.
‘வீட்ல இப்படி தண்ணி கஷ்டம் இருந்தா நாங்க இனி இங்க வரவே மாட்டோம். உங்க மருமகன்களும் வர மாட்டாங்க… இதுக்கு இன்னைக்கே ஒரு நல்ல முடிவு எடுங்க..’ என்று பிள்ளைகள் பிடிவாதமாய்க் கூற, தரையில் ஆழமாய்க் குழிதோண்டி தண்ணீர் பிடிக்க ஒரு ‘சம்ப்’ கட்டுவதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்து உடனடியாக காண்ட்ராக்டர் மணியை வரவழைத்து சம்ப் கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்தோம்.
அதே நாளில், மாலையில், என்வீட்டு தண்ணீர் பிரச்சனையை நன்கு அறிந்த என் நண்பன், அவனோடு படித்த ‘மீட்டர்’ வைத்து தண்ணீர் பார்க்கும் அவன் நண்பனை, கஷ்டப்பட்டு, தேடிக் கண்டுபிடித்து கூட்டிக்கொண்டு என் வீட்டுக்கு வந்து விட்டான். சரி என்று சொல்வதா? வேண்டாமென்று சொல்வதா? - இரண்டுங் கெட்டான் நிலையில் செய்வதறியாது மலைத்து நின்றேன். நாம் ஒன்று நினைக்க இறைவன் ஒன்று நினைக்கிறான்! வந்தவர் நண்பனின் துணையோடு வீட்டின் பின்பக்கம் சென்று இரண்டு போர்கள் போடப்பட்ட இடங்களையும் பார்வையிட்டார்.
வீட்டின் முன்பக்கம் மதிற்சுரை ஒட்டி ஒரு அழகான மரம். அந்த இடத்தை சுட்டிக்காட்டி இங்கு கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் என்று குத்துமதிப்பாகக் கூறினார். பின்பு இரண்டு பெரிய இரும்பு ஆணிகளை, சுமார் 50 அடி இடைவெளிவிட்டு, மண்தரையில் சம்மட்டியால் அடித்து ஒயர் சுருளை கலைத்து ஆணிகளோடும் மீட்டரோடும் இணைத்து, மீட்டரை ‘ஆன்’ செய்து, கால்குலேட்டரில் கணக்குப் போட்டு, முதலில் அவர் குத்துமதிப்பாய்ச் சொன்ன அந்த மரம் இருக்கும் இடத்தில், 25 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கிறது; தண்ணீர் சற்று உப்பு கரிக்கும்; தேவைக்கு அதிகமாக இருக்கும்; பத்து அடி உறை போட்டால் போதும்; 40 அடிக்கு மேல் போர் போட வேண்டாம்’ என்று இரத்தினச் சுருக்கமாய்ச் சொன்னார்.
எனக்கு அந்த மரத்தை இழப்பதற்கு விருப்பமே இல்லை. என் மனைவியின் ஒரு பிறந்தநாள் அன்று கேரளாவிலிருந்து சிறு செடியாகக் கொண்டு வந்து அதிக அக்கரையோடு பேணி வளர்த்ததால் இன்று அது ஒரு பெரிய அழகான மரமாக பச்சைப்பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக நிழல் கொடுத்துக் கொண்டு வீட்டுக்கு அலங்காரமாய் நிற்கிறது. இந்த ஊரில் என் வீட்டைத்தவிர வேறுயார் வீட்டிலும் இந்தவகை மரம் இல்லை. பழங்கள் சின்னதாய், ஆப்பிள் பழம் போல் ரோஸ் கலரில் குலை குலையாய் காய்த்துத் தொங்கும். அதனால் ‘ரோஸ் ஆப்பிள் மரம்’ என்று பெயர்! மரத்தில் பழங்கள் தொங்கும்போது அநேகர் நின்று பார்த்து, மரத்தைப்பற்றி விசாரித்துச் செல்வது எனக்குப் பெருமையாக இருக்கும். தண்ணீருக்காய் நாங்கள் கஷ்டப்படும் காலகட்டத்திலும், தேவைக்கு அதிகமாயத் தண்ணீர் ஊற்றி மரத்தைப் பராமரித்தேன். அதனால் அந்த இடத்தைத் தவிர்த்து வேறு ஏதாவது தண்ணீர் இருக்கும் இடமாய்ப் பார்க்கச் சொன்னேன். அவரும் பார்த்தார். மரம் இருக்கும் இடத்தில்தான் தண்ணீர் இருக்கிறது, வேறு இடத்தில் இல்லை என்று கூறி, என் பதிலுக்குக் காத்திராமல், அவரே செல்போன் மூலம் போர் போடும் லாரிக்கும் ஏற்பாடு செய்து விட்டு, பணத்தைப் பெற்றுக் கொண்டு நண்பனோடு காரில் சென்று விட்டார். பிள்ளைகளுக்கு விஞ்ஞானப்பூர்வமாய் தண்ணீர் இருக்கும் இடம் பார்த்ததில் அதிக திருப்தி!
மறுநாள் காலை, போர் போடும் லாரி வந்தது. பணியாட்களோடு லாரியின் சொந்தக்காரரும் வந்திருந்தார்.
‘யார் தண்ணி பாத்தது?’ என்று அவர் கேட்டார்.
‘மிஸ்டர். சாமிநாதன்’ என்று சொன்னேன்.
‘அந்த வழுக்கத்தலையரா..?’ என்று கேட்டார்.
‘ஏன் சார், அவரு பாத்தா சரியா இருக்கும்லா?’ என்று கேட்டேன்.
‘யாருக்கு சார் தெரியும்.. பூமிக்குள்ள என்ன இருக்குன்னு’ என்று லாஜிக்கா பேசினார்.
போர் போடும் எந்திரத்தின் முக்கோன அடித்தளத்தைத் தரையில் வைப்பதற்காக, பூவும் காயுமாய் புது மணப்பெண்போல் பூரித்து நின்ற மரத்தை நொடியில் வெட்டி புழுதியில் சாய்த்தார்கள். நான் வைத்த மரம். நான் வளர்த்த மரம். நான் நேசித்த மரம். என் கண்முன்னே கொலையுண்டு, நாதியற்று நெடுமரமாய் தரையில் கிடந்தது. நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று அடைத்தது. நினைத்துப் பார்த்தேன்… ஒன்றைப் பெறுவதற்காய் ஒன்றை இழப்பதுதான் தர்மம். ஒன்றைப் பெறுவதற்காய் கடவுளுக்கு நாம் ஒன்றைக் காணிக்கையாய் படைக்கவில்லையா? இப்படி என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.
போர் ஓடத் துவங்கியது. 5 அடிவரை செம்மண்ணும் அதன் பிறகு ஈரப்பதத்தோடுகூடிய சரலும் களிமண்ணும் வந்தது. முதல் முறையாக ஈரப்பதம் பார்த்ததில் மரத்தை இழந்த துக்கம் மனதைவிட்டு சற்று அகன்று நின்றது. ஈரக் களிமண்ணை பிள்ளைளகளிடமும், மனைவியிடமும் கொடுத்தேன். மகிழ்ச்சியின் பிரதிபலிப்பை முகத்தில் காட்டினார்கள்.
10 அடி முடிந்து மேற்கொண்டு ஓடத் துவங்கியது. சத்தம் மாறுபட ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கரும்பாறைத் தூள்கள் வெள்ளைப் புகையாய் வெளியில் வர ஆரம்பித்தது. அதே பழைய கதை..! அதே பழைய பல்லவி..! உடைந்த ரெக்கார்டாய் ஒரே சத்தம்..! 15… 20… 25… 30… 40 அடி.. எவ்வித மாற்றமும் இன்றி பூமிக்குள்ளிருந்து வெண்புகையின் வெளிப்பாடு. வீதியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் விலகிப் போனார்கள். சற்று முன்பு என்னோடு சாதாரனமாய்ப் பேசிக் கொண்டிருந்தவர்கள் சடுதியில் மறைந்து போனார்கள். என்னைப் பார்க்க பரிதாபப்பட்டு எனக்குத் தெரிந்த அநேகர் அந்த இடத்தைக் காலி செய்தார்கள். என்னைச் சுற்றி ஒரு சூன்யம் எனக்குத் தெரிந்தது. விதி என்னோடு விளையாடி வேதனையைக் கூட்டியதாக உணர்ந்தேன். நொந்துபோன இதயத்தோடு சாமிநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு நிலைமையைச் சொன்னேன்.
‘போர் போடுவதை நிறுத்தி விடுங்கள்’, மிகவும் சர்வ சாதாரணமாய்ச் சொன்னார். அவருக்கென்ன? நேற்றே பணம் பெற்றுக் கொண்டவர் - அவருக்கு நேற்றே முடிந்துபோன கதை இது..!
வேதனைகளைத் தாங்கிய சுமைதாங்கியாய் என் இதயம் கனத்தது.
இரவின் மடியில், என் இறுகிப்போன கண்கள், படுக்கை அறைச் சுவரில் தொங்கும் கீதா உபதேசத்தைப் பார்த்தது….
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
...............................................
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
“என்னங்க கவலைப்படுறீங்களா...? பூமிக்குள்ள இருக்கிறதை யாருங்க கண்டுபிடிக்க முடியும்? விடுங்க... மாநகராட்சி குடுக்கற தண்ணியை வைத்துச் சமாளிப்போம்” என் மனைவி ஆறுதல் கூறினாள்.
அவளுக்கெங்கே தெரியப் போகிறது என் மனத்திலிருப்பது...?
தண்ணீர் வராததற்கா என் மனம் கவலைப்படுகிறது? நான் ஆசையோடு வளர்த்த அந்த மரத்தையும், வராத தண்ணீருக்காக அழித்து விட்டோமே… என் மனக் கவலை எனக்கு மட்டுமே...? என் மனத்தில் சிறிது ஈரக்கசிவு.