வாசலில் வந்து நின்ற வண்டி சத்தத்தைக் கேட்டதும், சமையலறையிலிருந்து தனது முந்தானையால் முகத்தை துடைத்தவாறே வெளியே வந்தாள் வசந்தா. வந்தது அவள் மகன் கதிரேசன், வெள்ளிக்கிழமை, மாசக்கடைசி வேறு அலுவலக வேலையில் மூழ்கி எழுந்து வந்தவன் துவைத்தெடுத்துக் கொடியில் காயப்போட்ட துணிபோல தோற்றமளித்தான். கதிரேசனைக் கண்டதும் உள்ளே சென்ற வசந்தா என்னடா, இவ்ள லேட்டா வர்ற, ஆபிசுல எதாவது பிரச்சனையா? எனக் கேட்டவாறே காபியை நீட்டினாள், ஷோபாவில் அமர்ந்தவாறே மடிக்கணினியில் மூழ்கியிருந்த கதிரேசனிடம்.
காபியை வாங்கிக் கடமைக்கு குடித்துவிட்டு மீண்டும் மடிக்கணினியில் மண்டையை நீட்டிய கதிரேசனை பார்த்து, டேய் போய் குளிச்சிட்டு வா கோயிலுக்குப் போய் வரலாம், என்ற வசந்தாவின் குரலைக்கேட்டதும், இல்லம்மா... எனக்கு ரொம்ப வேல இருக்குது, நீ வேணுன்னா போய்வா, இல்லன்னா அப்பா வந்தா அவர கூட்டிட்டுப் போ என்றான், விட்டா போதுமடா சாமி என்ற தொனியில்.
உம், காலா காலத்துல இந்த வீட்டுக்கு ஒருத்தி வந்தா, நா(ன்), கோயிலுக்கு போரதுலயிருந்து, கடத்தெருவுக்கு போரது வரைக்கும் நாம்பாட்டுக்கு அவளக் கூட்டிட்டுப் போவேன். உம், நம்ம பேச்ச யாரு கேக்கறா? என்ற அம்மாவின் புலம்பல் டிராஃபிக்கில் அடிக்கும் ஹாரன் சத்தம் போல அடித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்த கதிரேசன், அம்மா கொஞ்சநேரம் சும்மா தான் இரேன், இப்படி கத்தற... என்றான் எரிச்சலாக.
ஆமான்டா நா(ன்) பேசறது எரிச்சலாகத் தான் இருக்கும், இத்தினிநாளா உங்கொப்பா சொல்லிக்கிட்டிருந்தாரு, இப்ப நீ சொல்றியா? சொல்லு. நா(ன்) புலம்பறது இன்னிக்கு வேணுமின்னா ஒனக்கு கசக்கலாம், ஒரு நாளைக்கு நீ மட்டும் இருந்து தனியா கஷ்டப்படுவ பாரு அன்னைக்குத் தெரியும்டா நா(ன்) புலம்பினது எதுக்குன்னு... என எரிந்து விழுந்தாள் வசந்தா.
ஏ(ன்) இப்டி புலம்பற, இப்ப என்ன நா கல்யாணம் பன்னிக்கனும் அவ்வளவு தானே? நா(ன்) மட்டுமென்ன வேணாமுன்னா சொல்றேன்? அதுக்குள்ள, நல்ல வேல, பெரிய வீடு வாசல்னு செட்டில் ஆக வேணாமா? என பொங்கிப் பொசுங்கிய தீ போல பதிலளித்தான் கதிரேசன்.
அதுக்கிலல்டா மத்தியானம் புரோக்கர் சுப்பரமணி வந்தாரு, போன மாசம் கோயில் திருவிழாவுல பாத்தமே... அதான்டா அந்த சிங்கப்பூர் பொண்ணு, ‘அகல்யா’ வீட்டுல பொண்ணு கொடுக்கச் சம்மதிச்சிட்டாங்களாம். நிச்சயத்தார்த்தத்தை எப்ப வெச்சிக்கலாமுன்னு பெண் வீட்டுக்காரங்க கேட்டதா, புரோக்கர் சொன்னாரு, இந்த நல்ல விஷயத்த ஒங்கிட்ட சொல்லலாமுனுதா(ன்) ஒன்னக் கோவிலுக்கு வரச்சொன்னா, நீ அதுக்குள்ள இங்க எகிறி அங்க குதிக்குற. அந்தப் பொண்ணுக்கு என்னடா கொற, தேவதை மாதிரி இருக்கா, நூறு பவுனு நக போட்டு, கல்யாணமும் பண்ணிவெச்சி, சிங்கப்பூரில இருக்குர ஷு பேக்டரியும் உனக்குக் கொடுக்கறதா சொல்றாங்க. அவ்வளவு அழகான பொண்ண இந்த ஊரிலியே பார்க்கமுடியாது. அப்படி இருக்கா, அவள கட்டிக்கறதுக்கு நீ இவ்வளவு கஷ்டப்படறியேடா, அதவுட பெரிய இடத்ததுல உனுக்கு எவன்டா பொண்ணு குடுப்பான். அவ்வளவு அழகான பொண்ணக் கட்டிக்கரத்துக்கு நீ குடுத்து வச்சிருக்கனும்.
நம்ம தகுதிக்கு இதுவே ரொம்ப அதிகம், என வசந்தா தன் மகனுக்கு அறிவை அளவில்லாத ஊட்டிக்கிட்டு இருக்கும் போதே வாசலில் செருப்புச் சத்தம் கேட்டவுடன் திரும்பிப் பார்த்தாள். செருப்பக் கழட்டி பொறுப்பான குடும்பத்தலைவரா ஓரமா வெச்சிட்டு உள்ளே நுழைகிறார் வசந்தா... வசந்தா... என கூப்பிட்டவாறே அறிவழகன். என்ன வீட்டுல ஏதோ பஞ்சாயத்து நடக்குது போல, என நக்கலாகக் கேட்டதும், இந்தாங்க தண்ணி குடிங்க, அதெல்லாம் ஒண்ணுமில்ல என பதிலளித்தாள் வசந்தா, நொந்த நூலாக, நம்ம புள்ளைக்குக் கல்யாணம் பண்ணனுமுன்னு நெனப்பு இருக்கா? இல்லையா? நா மட்டுந்தா தனியா கத்திக்கிட்டு இருக்கே(ன்). அப்பனும் புள்ளையும் கண்டுக்கவே மட்டேங்கிறிங்க.
ஆமா என்ன இப்போ நா(ன்) தாசில்தாரு, உம் புள்ள கலக்ட்டரு, ஊரில பல பேரு கேக்காத்துக்கு முன்னியே பொண்ணு கொடுக்குறேன்னு வரிசையில காத்துக்கிட்டு இருக்காங்க பாரு, அடி போடி இவள, நா(ன்) என்ன கல்யானம் பண்ணி வைக்கமாட்டேன்னா சொல்றன். என்ன பாரு, ஒரு சாதாரண ஏட்டாகவே முப்பது வருஷமா காலத்த ஓட்டிட்டு ரிட்டயர்டு ஆயிட்டேன். போலிஸ்காரன் புள்ளைக்கு எவன் பொண்ணு கொடுக்கறன்றான். என வெறுப்பாகச் சொன்னார் அறிவழகன்.
ஆமா, உம்புள்ள குடுக்குற பொண்ணையே கட்டிக்க மாட்டேங்குறான். நீங்க பேசுறிங்க, என்றாள் வசந்தா.
அடி போடி இதுவரைக்கும் எத்தனை பொண்ண பாத்திருப்போம் எவனாவது கொடுக்கறேன்னு சொல்லியிருக்கானா? பேசாம என்ன பண்ணச் சொல்ற, ஏ(ன்) எம்புள்ளிக்கு என்ன கொறைச்சல் அவன் படிப்புக்கும், தகுதிக்கும் வெளிநாட்டுப் பொண்ணையே கொடுக்கறேன்னு சொல்லியிருக்காங்கன்னா, ஏதே பேசிக்கிட்டு இருக்கிங்க என்றாள் வசந்தா. என்னடி சொல்ற வெளிநாட்டுப் பொண்ணா, செத்த தெளிவாத்தா(ன்) சொல்லேண்டி... என ஆர்வத்தின் உச்சியில் நின்று கேட்டார் அறிவழகன்.
ஆமாங்க போன மாசம் கோவில் திருவிழாவுல பாத்தோமே, அதான் பக்கத்து ஊர்ல இருந்து சிங்கப்பூரில போய்ச் செட்டில் ஆகியிருக்காரே ராமச்சந்திரன், அவரு பொண்ண நம்ம பையன் கதிரேசனுக்கு கொடுக்கச் சம்மதிச்சிட்டாங்களாம். நிச்சயத்தார்த்தத்தை எப்ப வெச்சிக்கலாமுன்னு கேட்டதா புரோக்கர்கிட்ட சொல்லியனுப்பியிருக்காங்க.
ஏண்டி அந்த பொண்ணு கலருக்கும், அவங்க வசதிக்கும் அவங்க போயி நமக்கு, அதுவும் உம்புள்ளைக்குக் கொடுப்பாங்களான்னு நா அப்பவே அத மறந்துட்டேன். அவங்க பொண்ணு குடுக்க சம்மதிச்சிட்டதா சொல்றியே, என்னால நம்பவே முடியல. இவ(ன்) மூஞ்சிக்கு அப்டி ஒரு பொண்ணா? என நக்கலாகச் சிரித்துக் கொன்டே தன் மகன் கதிரேசனை பார்த்தார் அறிவழகன்.
அப்பாவின் வாழ்த்து மழையில் நனைந்த கதிரேசன், சுட்டெரிக்கின்ற சூரியன் போல தன் அம்மாவை பார்த்து முறைத்தான். மகனின் கோபத்தைப் புரிந்து கொண்ட வசந்தா, எம் பையன் ஒண்ணும் கூலிக்காரன் இல்ல, எம்.சி.ஏ படிச்சிட்டு மாசம் நாப்பது ஆயிரம் சம்பளம் வாங்கறான். உங்கள மாதிரி வீட்டுக்கு வர்ற வரைக்கும் பத்தாயித்துக்கும் பதினைஞ்சாயிரத்துக்கும் குப்பக்கொட்டிட்டு இருக்கறவன் இல்ல எம்புள்ள, என்று தன் மகனின் பெருமையை சொன்னாள் வசந்தா.
ம்மா ஒரு நிமிஷம் உங்க சண்டைய நிறுத்துங்க. உங்கக்கிட்ட புரோக்கர் சொல்றதுக்கு முன்னியே, அந்தப் பொண்ணு எனக்கு பேஸ்புக்ல ப்ரண்ட் ரிக்வஸ்ட்டு கொடுத்திருந்தா, நாங்க ரெண்டு பேரும் சேட் பண்ணி எல்லா விசயத்தையும் பேசினோம்.
ஓட்டல், ரெஸ்டாரன்ட், ஷு கம்பனியின்னு, எக்கச்செக்க சொத்து இருக்காம். வீட்டுல ஒரே பொண்ணு வேற, உங்ககிட்ட புரோக்கர் சொன்ன நூறு சவரனுக்கு மேலேயே அவங்களால செய்ய முடியுமுன்னு அந்தப் பொண்ணு சொன்னா, ஆனா... என இழுத்தான் கதிரேசன். ஆனா என்னடா... இப்போ? ஏல்லாத்தையும் நீயே பேசிட்டு, இப்ப வந்து ஆனா ஊனான்னு என பொங்கினார் அறிவழகன்.
அது வந்துப்பா அவங்க அம்மாவுக்கு பொண்ண இந்நதியாவுல கொடுக்க விருப்பம் இல்லையாம். அந்தப் பொண்ணு பொறந்தது, இங்கன்னாலும் வளர்ந்தது, படிச்சது எல்லாம் சிங்கப்பூரிலங்கறதால பொண்ண அங்கேயே கொடுக்கனுங்கிறது அவங்களோட விருப்பமாம். அந்தப் பொண்ணு அகல்யாவோட அப்பா ராமச்சந்திரனுக்கு, சொந்த மண்ணோட வாசமும், சொந்த மக்களோட பாசமும் விட்டுபோக்கூடாதுன்னு ஆச, பையனுக்கு வேணுமுன்னா இங்கேயே பொண்ணப் பார்த்துக் கல்யாணம் முடிச்சி அவன சிங்ப்பூரிலேயே செட்டில் ஆக்கிடலாம். பொண்ணு அகல்யாவ சொந்த ஊரில கல்யானம் பண்ணி அவளுக்கு வேணுங்கறத செஞ்சி கொடுத்து, அவங்களும் கடைசிக் காலத்துல சொந்த ஊரிலேயே செட்டில் ஆகறது அவரோட எதிர்காலத் திட்டமாம். அவங்க அம்மா செல்வி, என்ன அங்கேயே வந்திடச் சொல்றாங்க, உங்களுக்கு வேணுங்கறத செஞ்சிக் கொடுக்கறது என்னோட கடமைன்னு சொல்றாங்க, நான்தான் என்னால திட்டவட்டமா முடியாதுன்னு சொல்லிட்டேன். அவங்க குடும்பத்துல எல்லாருக்கும் என்ன புடிச்சிருக்கு, நான்தான் ஒத்துக்கமாட்டேன்னு சொல்றேன், என கதிரேசன் தனது பெற்றோரிடம் எடுத்துக் கூறினான் பாசமாக.
நான் வெளிநாட்டுல செட்டில் ஆகறதுல எனக்கு ஒன்னும் பிரச்சன இல்ல, உங்களுக்கு புள்ளனு இருக்குறது நா(ன்) ஒருத்தன்தான், வயசான காலத்துல உங்கள என்ன விட்டா யாரு பாத்துப்பா? வயசான காலத்துலையும், சும்மா இருக்கமாட்டேன்னு செக்யுரிட்டி வேலைக்கு போயிட்டு இருக்காரு அப்பா, நாளைக்கே உங்களுக்கோ, அவருக்கோ எதுனா ஒன்னுன்னா என்னால கிட்டயிருந்து பாத்துக்க முடியுமா?, இல்ல அவசரத்துக்கு ஓடிதா(ன்) வர முடியுமா? எனக்கு ஒண்ணும் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லாம இல்ல, உங்ககிட்ட கல்யாணம் வேணாமுன்னு சொல்ல, இப்ப அதப்பத்தி பேசனா நீங்க சூழ்நிலை புரியாம அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க சொல்வீங்கன்னுதா(ன்), இவ்வளவு விஷயத்தையும் உங்ககிட்டச் சொல்லாம இருந்தேன். அதுக்குள்ள புரோக்கர் மூலமா உங்களுக்கு தெரிஞ்சிப் போச்சி. பரவால்ல, அப்புறம் கடைசியா அகல்யா கிட்ட ஒரு விஷயத்தச் சொல்லியிருக்கேன், தாம் பெத்த பொண்ண தன்னவிட வசதியான எடத்துல கட்டிக் கொடுக்கனுன்னு எந்த பெத்தவங்களும் நெனைக்குர இந்தக் காலத்துல, அவ்வளவு வசதியா இருந்தும் ஒரு சாதாரண போலிஸ்காரன் பையனான எனக்குப் பொண்னு கொடுத்து மாப்ள நெனைக்குற எல்லாத்தையும் செஞ்சிக் கொடுக்கனுன்னு நெனைக்குற ராமச்சந்திரன் சாரோட நல்ல மனசுக்கு அவர் நெனைக்குற மாதிரி எல்லாம் நல்லதா நடக்கனுமுன்னு நா(ன்) ஆண்டவன வேண்டிக்குறேன்னு சொல்லி, ஒன்னு நீயும் உங்க அப்பாவும் உங்க அம்மாக்கிட்ட சொல்லி அவங்கள சம்மதிக்க வையுங்க, இல்ல எங்க அப்பா அம்மாக்கிட் பேசி என்ன சிங்கப்பூர் அனுப்பறதுக்கு ஒத்துக்க வையுங்க. இந்த ரெண்டு விஷயத்துல எதாவது ஒன்னு நடந்தாலும் நம்ம ரெண்டு பேர பெத்தவங்களும் சந்தோசப்படுவாங்க. அதுக்கு அகல்யா நல்லதாகவே நெனைங்க நல்லதாகவே நடக்குமுன்னு சொல்லி நம்ம வீட்டு போண் நம்பர வாங்கிக்கிட்டா. இன்னைக்கு ராத்;திரிக்குள்ள எங்க அம்மாவோட முடிவ சொல்றன், இல்லன்னா, எங்க அப்பா உங்க வீட்டுக்கு போண் பண்;ணி உன்னோட அப்பா அம்மா கிட்ட பேசுவாறுன்னு அகல்யா சொன்னா, என பாசமும், கடமையுணர்வும் கலந்த கண்களோடு பெற்றோருக்கு புரிய வைத்தான் கதிரேசன்.
தன் மகனின் அன்பையும், அவன் பெத்தவங்க மீது கொண்டுள்ள அக்கறையையும் பார்த்து உனச்ச்சியற்றவர்களாக அறிவழகனும் வசந்தாவும் இருக்கும் போதே, சமையலறையில் குக்கரும், ஹாலில் போனும் ஒரே நேரத்தில் அழைத்தது.
உணர்ச்சிப்பெருக்கில் ஊறிப் போயிருந்தவர்களைப் பார்த்து ம்மா அடுப்புல குக்கர் விசில் அடிக்குது போய் பாருங்க, அப்பா போன் அடிக்குது, போய் எடுங்க என்ற கதிரேசன், எனக்கு நெறைய வேல இருக்கு என்று சொல்லியபடி மீண்டும் மடிக்கணினியில் மண்டையை நீட்டிக் கொண்டான்.
போனை எடுத்த அறிவழகனின் முகம் சற்று நேரத்தில் மல்லிகை மலராக மலர்ந்தது. எதிரே பேசியவர், ‘ஹலோ, அறிவழகன் சாருங்களா?, நா ராமச்சந்திரன் பேசறேன். பணக்காரப் பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமியார் வீட்டுலேயே செட்டில் ஆகிடனுன்னு நெனைக்குற இந்தக் காலத்துப் பசங்க மாதிரி இல்லாம, நூறு சவரன் போட்டாலும், எங்க வீட்ட விட்டுட்டு வரமாட்டேன்னு, உங்க பையன் சொன்னாரே, அப்பவே முடிவு பண்ணிட்டேன், எம் மாப்பள இவருதான்னு. பெத்தவங்களுக்காக எதையும் இழக்க தாயாரானவரப் பார்த்து எம் பொண்ணு உங்க விருப்பமுன்னு சொல்லி சம்மதம் சொல்லிட்டா. எம் மனைவி செல்வியும் நீங்க ரெண்டு பேரும் சம்மதிச்சிட்டதுக்கப்பறம் நான் சொல்ல என்ன இருக்குன்னு, அவளும் சம்மதிச்சிட்டா, மொத்தத்துல எங்க வீட்டுல எல்லாருக்கும் சம்மதம். இனி நீங்க சொல்ற முடிவுல தான்... நடக்கப்போற நல்ல விஷயம் இருக்கு சார், நீங்க என்ன சொல்றிங்க என்றார் ராமச்சிந்திரன்.
“ஹலோ! அதான் நீங்களும் எம்பையனும் பேசி முடிச்சிட்டிங்களே அதுக்கப்பறம் நான் சொல்ல என்ன வேண்டி இருக்கு, கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழப்போகிறவங்க அவங்க... அவங்க முடிவு பண்ணினால் போதும், இதுல நாம சொல்ல என்ன இருக்கு, நம்மளை விட நல்லா படிச்சவங்க, அவங்க ரெண்டுபேரும் புடிச்சிருக்குன்னு ‘ஒகே’ சொன்ன பிறகு நாம பேச என்ன இருக்கு ‘சம்மந்தி’, இனி சாருன்னு கூப்ட வேண்டியதில்ல, சம்மந்தின்னே சொல்லுங்க என்றார் அறிவழகன் ஆனந்தமாக.
நிச்சயத்தார்த்தம் போனிலேயே நடந்துவிட்டது.