மணி ஓன்பது. குடிசையின் வெளியே பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த செல்வியின் பாட்டி, ராணி கத்தினாள், “மணி ஒம்பது ஆவுது இன்னும் படுத்துட்டு இருக்கியே! எந்திரி செல்வி நாம தோப்புக்கு போகனும்” என்றாள்.
பாட்டியின் குரல் கேட்டதும் கிழிந்து போன பாயில் படுத்திருந்த செல்வி, தாலாட்டு கேட்ட குழந்தைப் போல, பொத்தல் விழுந்த பெட்சீட்டை இழுத்து, இன்னும் இருக்கமாக போர்த்திக் கொண்டாள். அவள் காலடியிலிருந்த பெட்சீட்டின் ஓட்டை வழியாக ஒரு நாய்க்குட்டி தலையை வெளி நீட்டி பார்த்துவிட்டு, மீண்டும் உள்ளே இழுத்துக்கொண்டது. அந்த நாய்க்கு ஒரு பக்கம் கண்ணு தெரியாது. போன வாரம் மெர்சி மெட்ரிகுலேசன் ஸ்கூல் பக்கத்தில் மாங்காய் விற்கப் பாட்டியுடன் சென்றபோது, அந்த ஸ்கூல் பசங்க கல்லால் அடிச்சதுல, ஒரு பக்கம் பார்வையிழந்து இரத்தக் காயத்தோட கத்திக்கிட்டு இருந்தப்போ, செல்வி அதை பரிதாபப்பட்டு தூக்கிட்டு வந்து, அனாதையாக இருந்த அந்த நாயைத் தன் உறவாக்கிக்கிட்டாள். அதற்கு அவள் வச்ச பெயர் டோனி. (அந்த பெயர் ஒரு நாள் ஹைவேயில் போய்கிட்டிருந்தப்ப, பென்ஸ் கார் ஒன்றில் வந்த ஒருவரின் பொமேரியன் நாயிக்கு வைத்திருந்த பெயர்) அதை நினைவுப்படுத்தி நாய்க்குட்டிக்கு அந்தப் பெயரை வைத்திருந்தாள். பாத்திரங்களைக் கழுவி முடித்த ராணி பாட்டி, பாத்திரங்களைத் தின்னையில் கவுத்துப் போட்டுக்கொண்டே மீண்டும் செல்வியை எழுப்பினாள்.
“எழுந்து போய் பல்ல தொலக்கு செல்வி நேரமாச்சி இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கியே...” என்றாள்.
”ம்ம்ம் சரி பாட்டி”ன்னு திறக்காத தொண்டைக் குழியிலிருந்து “ம்ம்ம்” கொட்டிக் கொண்டே, நேத்துப் பொறந்த மொசக்குட்டி போல் அரைக்கண்ணைத் திறந்து மூடி, மீண்டும் திறந்து மூடினாள்.
செல்வி ஆறு வயதில் போலியோ தாக்கி ஒரு கால் இழந்தவள். மற்றவர்களைப் போல் ஓடியாட முடியாத பெண். சோம்பல் முறித்து, பின் படுக்கையை விட்டு அடுப்பங்கரைக்கு அடியெடுத்துச் சென்று, கீழே எரிந்து கிடந்த கட்டையின் கரியை வாயிலேப் போட்டு மென்றவள் ஆல்காட்டி விரலைப் பல் துலக்கும் குச்சியாக்கிப் பின் சொம்புத் தண்ணியில் முகம் கழுவினாள். ராத்திரி சட்டியில் மிச்சம் இருந்த கஞ்சியைப் பாட்டி பரிமாற இருவரும் உண்டனர். மூன்றாவதாக வந்த டோனிக்கு செல்வி தன் பங்கில் கொஞ்சம் எடுத்து ஒரு பிடிச் சோற்றைப் பிளாஸ்டிக் மூடியில் வைக்க, நன்றியோடு வாலாட்டிக் கொண்டே தின்றது. பாவம், வயிறு நிறையாத அது இருவரும் சாப்பிடும் போது கையையும் வாயையும் பார்த்துக் கொண்டிருந்தது. உண்ண அவர்களுக்கே உணவில்லை என்பதை உணர்ந்ததும், டோனி தன் தலையை பிளாஸ்டிக் மூடி பக்கம் திருப்பிச் சிதறியிருந்த பருக்கைகளை ஒன்று விடாமல் நக்கியது.
சாப்பிட்டு முடித்ததும், கரை படிந்த ஒரு கட்டைப் பையை எடுத்துக்கொண்டு பாட்டியும், ஒற்றை காலுடன் செல்வியும், ஒற்றை கண்ணுடன் டோனியும், பெருமாள்சாமி தோப்பில் கீழே விழுந்த மாங்காய்ப் பிஞ்சுகளை பொருக்க சென்றனர். போகும் இடமெல்லாம் டோனி வாலாட்டிக்கொண்டு செல்வியின் பின்னாலேயே ஓடியது.
ஆளில்லா தோப்பில் உள்ளே நுழைந்து, கிடைத்ததைப் பொருக்கி, அவசர அவசரமாகப் பையில் போட்டுக் கொண்டிருந்தாள் ராணி. அந்நேரம் பார்த்து தூரத்தில் சர்ச் மணியோசையை கேட்க, “செல்வி மணி ஆயிடுச்சி, மாதா கோயில் மணி அடிச்சிட்டாங்க பாரு, சீக்கிரம் கெடைச்சத பொருக்கி பையல போடு. நம்ம இங்க வந்தத அந்த கோட்டான் பார்த்தால், பையில இருக்கிற எல்லாத்தையும் புடுங்கிப்பான். அப்புறம் ராத்திரி சோத்துக்கு வழியில்லாம போய்டும்” என்றாள்.
”பாட்டி... இங்க எதுமே நல்லாவே இல்ல வெம்பி போயிருக்கு...”ன்னு சொல்லிக் கொண்டே கையில் வைத்திருந்த இரண்டு மா பிஞ்சுகளை பார்த்துக் கொண்டே முகம் சுழித்தாள் செல்வி.
“அடியேய் கிடைக்கிறத எடுத்துப் பையில போடுடீ. ஆடி மாசம் காத்துல பிஞ்சிங்க அப்படித்தான் இருக்கும். அதை என்ன நாம்மலா திங்கப் போரோம்? நாலா நறுக்கிப் போட்டு மெளகாப் பொடியைக் கொட்டினா வாங்குரவங்களுக்கு தெரியவாப் போகுது...? வித்துக் காசாக்கி ராத்திரி கஞ்சிக்கு வழிய பாரு” என்றாள் ராணி.
செல்வி, பதிலேதும் பேசாமல் கையிலிருந்த பிஞ்சுகளைப் பையில் போட்டாள். திடீரென டோனி கிழக்கு பக்கம் பார்த்து “லொல்லு... லொல்லு...”ன்னு குரைக்க, யாரோ வருகிறார்கள் என்பதையுணர்ந்த செல்வி, பாட்டியின் கையைப் பிடித்து தரதரன்னு இழுத்துக்கொண்டு, “வா பாட்டி போகலாம் யாரோ வந்துடாங்க... அப்பறம் மாட்டிக்கிட்டா வம்பாயிடும்...”ன்னு தோப்பை விட்டு வெளியே ஓட , டோனியும் அவள் பின்னாலயே ஓடியது.
அப்படித்தான் போன மாசம் தனியாய் வந்து மாங்காய் பொருக்கியபோது, பெருமாள்சாமி கிட்ட மாட்டிக்கிட்டு வாங்கின அடியில், சிவந்த செல்வியின் கன்ன்ம், இன்னும் நிறம் மாறவில்லை. அந்த வலியின் பயத்தினால் தான் பாட்டியை இழுத்துக் கொண்டு தலைதெறிக்க ஓடினாள்.
ஒரு வழியாக மெர்சி ஸ்கூல் காம்பவுண்ட்டை அடைந்த மூவரும் , கேட் பக்கத்தில் உட்கார்ந்து ஒரு பிளாஸ்டிக் பைகளை பிரித்ததும், வாட்ச் மேன் கத்தினான்.
“ஹேய் கெழவி இங்க என்ன பண்றே? எந்திரி... இங்கல்லாம் கடை போடக் கூடாது. எடுத்துட்டு ஓடுங்க...” என்றான்.
“ராசா... ஒரு பத்து நாழிகை இருப்பா பள்ளிக்கூடம் மணி அடிச்சதும் நாங்க போயிடுரோம்...”
“இந்தா இத வெச்சிக்க” என்று நறுக்கிய மாம்பிஞ்சை கொடுத்ததும், கோபமுற்றவன் அதை ரோட்டில் வீசினான்.
“இன்னா லஞ்சமா? இனிமே இங்க, இதை எல்லாம் விற்கக்கூடாது. ஓடிப்போங்க... ம்ம்ம்... இந்த மாங்காயத் திண்ண ஆறு புள்ளைங்களுக்கு வாந்தி பேதின்னு பேரண்ட்ஸ் கம்ப்ளைண்டு... அதனால சேர்மேன் நேத்து இங்க யாரையும் எதையும் விற்க விட கூடாதுன்னு கண்டிப்பாச் சொல்லிட்டாரு... சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணுங்க ஹூம்ம்...“ என்று சீறினான்.
வேறு வழியில்லாமல், பிரித்த எல்லாத்தையும் மூட்டைக் கட்டிக் கொண்டு சாலையைக் கடந்துவள், பள்ளியின் கேட் எதிரே உட்கார்ந்து கடையைப் போட்டாள். பையிலிருந்த எல்லாவற்றையும் மடமடவென கொட்டி, ஒரு பெரிய அளவிலான தாம்பூல தட்டில் சரசரவென நறுக்கிப் போட, எதிரே ஸ்கூல் பெல் அடித்துத்து. பெல் சத்தம் பாட்டி காதுக்கு எட்டியதும் கையை நெத்திக்கு மேல வச்சி கண்களைச் சுருக்கி, ஸ்கூல் கேட்டை உற்றுப் பார்த்தாள். கேட்ல ஒருத்தரையும் காணோம். மீறி வந்தவர்களையும் வாட்ச் மேன் திட்டி உள்ளே திருப்பி அனுப்பினான்.
கொஞ்ச நேரத்தில் ஸ்கூல் கேட்டிலிருந்து பால் டப்பாக்களுடன் ஒருத்தர் வெளியில் வர பின்னாடியே ஒரு ஆட்டோ ரிக்சாவும் வந்தது. ஆட்டோ ரிக்சாகாரன் நின்று, வண்டியிலிருந்து கொண்டே வாட்ச்மேன் கையில் ஏதோ ஒரு அட்டைப் பெட்டியை நீட்ட, அதைச் சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்டு ஒரு வணக்கம் போட்டான். பால் டப்பாக்களோடு வந்த தம்பியைக் கூப்பிட்டு விசாரித்த பிறகு தான் அவளுக்குத் தெரிந்தது, ஸ்கூல் உள்ளயே கேண்டீன் ஆரம்பிச்சுட்டாங்கனு. பாட்டிக்குத் தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது.
“நாசமா போனவனுங்க என் பொழப்புல மண்ணை வாரி போடவே வரானுங்க, அடுத்து எந்த ஸ்கூலுக்கு போறதுன்னு தெரியலயே...” ன்னு பொலம்பிக்கொண்டே, தான் நறுக்கிப் போட்டிருந்த மாங்காய் பெத்தையில் உட்கார்ந்திருந்த ஈக்களை ஓட்டினாள். செல்வியோ கன்னத்தில் ஒரு கையை வெச்சிக்கிட்டு இன்னொரு கையில் டோனியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அதுவோ நாக்கைத் தொங்கப் போட்டு ஹாயாக மூச்சி வாங்கிக் கொண்டிருந்தது. ரோட்டில் போனவர்கள் எல்லாம் சாக்கடையைப் பார்த்து முகம் சுழித்துப் போவதுபோல், இவர்களைப் பார்த்து முகம் சுழித்துக் கொண்டே போனார்கள்.