சாயங்காலம் ஏழு மணி ரெங்கநாதர் திருக்கோயில் எதிரில் அரை மண்டை வழுக்கை, சுருங்கிய கண்கள், முகம் முழுக்க முனிவரைப் போன்று வெண் தாடியுடன் அறுபத்தைந்து வயது முதியவர் ஒருவர், உடம்பில் கிழிந்த சட்டையும், இடுப்பில் வேட்டியையும் கட்டியிருந்தார். அவர் கட்டியிருந்த அரை முழம் வேட்டி பாரபட்சம் பார்க்காது கிழிந்திருந்தமையால், அது கால் முழம் வேட்டியாகியிருந்து. ஆம் அவர் தான் பிச்சைக்காரர், கோடிசுவரன்.
வெள்ளிக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் வசூல் நூறு ரூபாய்க்கு தேறும். தொண்டை கிழிய கத்தினாலொழிய அவ்வளவு, இல்லையென்றால் இருபதைக் கூட தாண்டாது. கோடிசுவரனிடம் ஒரு பழக்கம் இருந்தது. தட்டில் சில்லறைகளை மூன்று ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாயைக் கூடச் சேர விடமாட்டார். ஒவ்வொரு நான்காவது ரூபாயையும், அழுக்கான மஞ்சப்பையில் உள்ளே தள்ளிக்கொள்வார்.
மனிதனா பொறந்தவன், கோடியில பொறண்டாலும் சரி, குப்பையில பொறண்டாலும் சரி, கண்டிப்பாக் கூட்டாளி இல்லாம இருக்க முடியதுல? அதே மாதிரி, கோயில் வாசல்ல பிச்சை எடுக்கும் கோடிசுவரனுக்கு, கருப்பையாங்குற நட்புறவு இருந்தது. அவருக்கும் வயது கிட்டத்தட்ட அறுபது இருக்கும். கருப்பையாவும் அதே வரிசையில் ரெண்டாவதாக உட்கார்ந்திருந்தார். பிறர் வாயைக் கிளறுவதில் கெட்டிக்காரரான அவர் ஆரம்பித்தார்.
"என்னப்பா கோடிசுவரா... பேருக்கேத்த மாதிறி இன்னைக்கும் அமோக வரவோ?”
"நீ வேற... ஏன் கருப்பையா..? கத்தி,கத்தி..... தொண்டை புண்ணா போனது தான் மிச்சம். இன்னைக்கு ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லே! எப்பவும் போலத்தான். உனக்கு எவ்வளவு தேறுச்சி?"
"உனக்கே ஒன்னுமில்லங்கிறப்போ! எனக்கென்ன கொட்டி குடுத்துடவா போரானுங்க...? இன்னைக்கு ஒரு கட்டிங்க்குத் தேறுச்சி அவ்வளோ தான். இந்தப் பாழாப் போன கவர்மெண்ட்டு, விலைய வேற ஏத்திபுடுறானுங்க. இங்க கோயில் வாசல்ல நான் கத்துற கத்து, முக்கால் வாசி கவர்மெண்டுக்கே போய்டுது!" என்றார் கருப்பையா.
"சரி...சரி பொலம்புறத நிப்பாட்டு, பசியில வயிறு 'வின்னு வின்னு' ங்குது சாப்புட போலாம். நாளைக்கு காலையில, மார்கழி சொர்க்கவாசல் திறக்குற நேரம் கொஞ்சம் சீக்கிரம் வந்தால் இன்னைக்குக் கிடைக்காததை நாளைக்கு தேத்திக்கப் போரே! என்ன? நான் சொல்லுரது சரிதானே?"
அதற்க்கு கருப்பையா, "ஹூம்...” என்று இழுத்து, "ஏதோ சொல்றே... பாக்கலாம்! சரி வா...போகலாம்." என்றான் கருப்பையா.
"சரி... ந்தா வந்துட்டேன் இரு" என்றவாறு பக்கத்துல இருக்கற பூஜை சாமான் விக்குற கடைக்குப் போனார். தட்டில் கிடந்த அந்தக் கடைசி மூன்று ரூபாய எடுத்து நீட்டினார்,
"இந்தாம்மா... ஒரு கற்பூரத்தைக் குடு. கூடவே ஒரு தீப்பொட்டியையும் சேர்த்துக் குடு... இந்தா... பொட்டிய இப்ப வந்து குடுத்துடுறேன்"
அதற்க்கு அந்தக் கடைக்காரரோ, "ஏன் பெரியவரே... அந்தக் குடுமி சாமி தான் உங்கள உள்ளவே விட மாட்டேன்ங்குறானே! இந்த கற்பூரத்த வாஙகிட்டு போய் என்னா பன்றே? தெனம் உனக்கு கிடைக்குறதே அஞ்சோ பத்தோ! இதுல அந்த சாமிக்கு தண்ட செலவு தேவையா?" என்றார்.
அதற்குக் கோடிசுவரன், தன் தவடையில ரெண்டு பக்கமும் 'தப்பு தப்பு'னு நாளு அரைய போட்டுகிட்டு, "என்ன கடக்காரரே...? கோயில் சன்னதியில உட்கார்ந்துட்டு பேசுற பேச்சா இது? அந்த குடுமிக்கார ஆசாமி தானே என்னை உள்ள சேர்க்க மாட்டேன்ன்னு சொன்னாரு, நான் கும்புடுற சாமியா என்னை வர வேணாம்னு சொன்னாரு? ஜோதி எங்க கொளுத்தினாளும் ஒளிரும். எனக்கு அந்தக் கடவுள் அருள் கிடைச்சாப் போதும்..." என்றார்.
அதற்குக் கடைக்காரர் எதுவும் மறு பேச்சு பேசவேயில்லை. பெரியவர் கேட்டதைக் கொடுத்துவிட்டு, வேடிக்கை மட்டும் பார்க்கலாம் என்று அமைதியானார்.
பொழுது மெல்ல இருளத் தொடங்க, கோடிசுவரன் கோயில் உள்ளே நுழைந்தார். கையிலிருந்த கற்பூரத்தை கீழே இட்டுக் கொளுத்தியவர், கையைத் தலைக்கு மேல் தூக்கி கருவறையைப் பார்த்தவாறு,
"ஆண்டவா உண்மை கண்டுவிட்டேன், தினமும் உன் காலடியில் இருக்கும் எங்களை ஏன் கண்டு கொள்ள மறுக்கிறாய்? "நின் திரு உருவம் கண்ட எனக்குப் புண்ணியம் கோடி.." என்று பாடியவாறே, மஞ்சப்பைக்குள் கையை விட்டு இன்னொரு பில்லையை எடுத்துப் பூசாரி நீட்டிய தட்டில் போட்டார். தட்டிலிருந்து குங்குமத்தை எடுத்த பூசாரி, பெரியவர் முகத்தை பார்த்தும் கோபமாய், "அடேய்... அபிஸ்து நீ எப்படி உள்ளே வந்தே? உன்னை யார் உள்ளே விட்டது! " என்று தட்டில் அவர் போட்ட அந்தச் சில்லறையை எடுத்து வெளியே வீசினார்.
"உன்னை உள்ளே வரக்கூடாதுன்னு தானே சொன்னேன்! எதுக்கு வந்தே? நான் சொல்லியும் மதிக்காம உள்ளே வந்தேல! நோக்கு பிரம்மஹத்தி தான் பிடிக்கும். இனி உன்னை நான் உள்ளே பார்க்கவே கூடாது" என்று துரத்தியடித்தார்.
பூசாரியின் திட்டுகளைச் சிறிதும் பொருட்படுத்தாத கோடிசுவரன் நிதானமாக நடந்து வெளியே வந்தார்.
வெளியே இவருக்காக காத்துக் கொண்டிருந்த கருப்பையா, "என்ன கோடிசுவரா? தட்டுல நீ காச போட்டும் அந்தப் பூசாரி உன்னைக் கோடிசுவரன்- ன்னு நம்பலையா? நம்ம பிச்சைக்காரங்க தான்னு கண்டுபுடிச்சிட்டாரோ!" என்று நக்கலடித்தார்.
அதற்குச் சிரித்துக் கொண்டே, "மனதால் நான் பணக்காரன் என்று அந்த மகேசனுக்கேத் தெரியும். மண்ணில் மக்கப் போகும் மனுஷன் சொல்லியா தெரியனும்! நான் சாகிற வரைக்கும் கோடிசுவரன் தான் கருப்பையா" என்றார்.
"சரிதான் கோடிசுவரா, பேச்சுல உன்ன மிஞ்ச முடியுமா ? கெளம்பலாம் வா" என்றார்.
பிறகு பக்கத்துல இருந்த தள்ளுவண்டி இட்லி கடைக்கு நகர்ந்தனர். கருப்பையா ஒரு குவாட்டர் புட்டிய எடுத்து அதுல பாதி இருந்த சாராயத்துக்கு ஒரு தம்ளர் தண்ணிய மொண்டு சரிபாதியா ஊற்றி "மொடக்கு மொடக்குன்னு" குடிக்க, மூக்கை பொத்திக் கொண்டார் கோடிசுவரன். கருப்பையா குடிச்ச புட்டிய தூக்கி போட்டதும், கடைக்காரர் ஆளுக்கு நாளு இட்டிலிய தானாகவே கொண்டு வந்து கொடுத்தார். வெறும் மூன்று இட்டிலியை மட்டுமே சாப்பிட்ட கோடிசுவரன் இன்னொன்றை கருப்பையாவுக்குத் தானம் செய்தார்.
கடைக்காரர் போடும் நாலு இட்லிக்கு கோடிசுவரன் காட்டும் விசுவாசம், கடைக்காரர் வண்டிக்கடையை சாத்திய பிறகு அந்த தள்ளுவண்டிக்கு காவலாளியாக அங்கேயே படுத்துக் கொள்வார்.
அன்று கோடிசுவரன் தன் பையிலிருந்த எல்லாப் பணத்தையும் எண்ணி விட்டு மஞ்சப்பையில் போட்டுச் சுருட்டி, தலைக்கு மெத்தையாக வைத்துக் கொண்டு உறங்கினார்.
மறுநாள் காலைப் பொழுது அரைகுறையாக விடிகையில், கோவிலில் பஜனைப் பாடல்களும் போட்டாயிற்று. சொர்க்கவாசல் திறப்பதைக் காண ஊரே படையெடுத்து வர ஆரம்பித்தது. கோடிசுவரனைப் பஜனை சத்தம் எழுப்ப, மெல்லத் தரையில் கையை ஊன்றியவாறு எழுந்து சுற்றி முற்றி பார்த்தார். பக்கத்தில் கருப்பையா எந்தக் கவலையுமின்றி குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். கோடிசுவரன் சென்று பக்கத்தில் இருந்த ஆழ்துளை பம்புசெட்டில் நீரைத் திறந்து விட்டு அதற்குக் கீழே உட்கார்ந்தார். மார்கழி மாதக் குளிரில் தண்ணீர், ஐஸ் போல் அவர் மேல் கொட்டியதும், குளிரில் ஒரு நிமிடம் உறைந்து போனார். முழுக்க நனைந்து ஈரத்துணியுடன் வந்தவர் மாற்று உடை கூட இல்லாத நிலையில் அதையேக் கழற்றி, கசக்கிப் பிழிந்து மீண்டும் தன் மீது சுருட்டிக் கொண்டார்.
கருப்பையாவை அங்கேயே விட்டுவிட்டு, தன் மஞ்சப்பையை எடுத்தவர் யாரையும் பொருட்படுத்தாமல் நேராகக் கோயில் உள்ளே சென்றார். வழிபட வந்திருக்கும் கூட்டத்தை அடித்துப் பிடித்து கொண்டு, முன்னே இருக்கும் வரிசை வரை சென்றுவிட்டார் கோடிசுவரன்.
உள்ளே, பூசாரிகள் புரியாத மொழியில் மந்திரம், அஷேகம், தீப ஆராதனை என ஏகபோகமாக அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். அங்கு எழும்பிய ஆரவாரமோ பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
பூஜை முடிந்து ரங்கநாதர் ஊர்வலம் வர பல்லக்கில் ஆயத்தமான போது, பூசாரி கற்பூரத் தட்டைக் கொண்டு வந்து ஒவ்வொருத்தரிடமும் நீட்டினார். கூட்டத்தில் ஒருவரான கோடிசுவரன் கையை நீட்டி, ஜோதியைக் கண்ணில் ஒத்திக்கொள்ள, அவரைக் கண்ட பூசாரி கண்ணை உருட்டி, புருவத்தை உயர்த்தி, ஜாடையில் கோவத்தை வெளிபடுத்தியவாரே மந்திரம் சொன்னார். கோடிசுவரனோ, சாந்தமாக கையிலிருந்த மஞ்சப் பையில் கைய விட்டு கத்தையாகப் பணத்தை எடுத்துத் தட்டில் வைத்தார்.
பணத் தாள்களை கண்டதும் பூசாரி, புன்னகையோடு வலது கையிலிருந்த செம்புக் கலசத்தை எடுத்துக் கோடிசுவரன் தலையில் வைத்து மரியாதை செய்தார்.
அதில் உடல் சிலிர்த்து உணர்ச்சி வெள்ளத்தில் பொங்கிய கோடிசுவரன், "அனைவருக்கும் படியளந்த என் நாதனே! நின் திரு நாமம் வாழ்க!" எனக்கூறியவாறு, தன் கண்ணீரை காணிக்கையளித்தார்.