அன்று ஏனோ விடுதலையாகிய பெரியசாமிக்கு ஜெயிலை விட்டுப் போகவே மனமில்லை. ஜெயிலர் இரண்டொரு நாட்களுக்கு முன்னரே விடுதலை பற்றிச் சொல்லியும் சுவாரசியமே காட்டவில்லை. இங்கேயே பர்மனென்ட்டாக இருக்க முடியாதா எனக் கேட்க அதுக்கு நீ பழையபடி தப்பு செஞ்சுட்டு வந்துடு பெருசு... இதுக்கே ஆயுள்தண்டனைன்னு போட்டுட்டு 35 வருஷத்துக்கு அப்புறம் வெளியே வுடறாங்க... சந்தோஷமாப் போவியா... என கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாகத் தள்ளிக் கதவைச் சாத்தினான் காவலாளி. பெரியசாமி கதவை விட்டு வெளியே தள்ளாடித் தள்ளாடி கைத்தடியை ஊன்றி வெளியே வந்தான்.
வானத்தில் சிறகடித்துப் பறந்து கூட்டை நோக்கிப் பறந்து செல்லும் பறவைகளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் கரைந்து கதிரவன் கதிர்களை மறைத்துக் கொண்டான்.
போவதற்கு இடமில்லாமல் தனக்கு அளிக்கப்பட்ட ஜெயில் உழைப்புக் காசுகளை எண்ணிக் கொண்டிருந்தான். நேராக சென்ட்ரல் போய் தனது நண்பர்களைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.
யார் இருக்கிறார்களோ... இல்லையோ... கந்தன் இருப்பான்... அவனுக்காகத்தானே இத்தனை கஷ்டம். செய்யாத தப்புக்காக அவன் செஞ்ச தப்புகளையெல்லாம் நாம செஞ்சதா ஏத்துக்கிட்டோம். அவன் எப்படியும் நம்மைப் பார்த்துப்பான் என்ற நம்பிக்கையில் பஸ் நிற்கும் இடம் சென்று பார்த்தான். புழலில் இருந்து நேரிடையான பஸ் இன்னும் வர சிறிது நேரம் ஆகும் தாத்தா! நீங்க அதனால பில்லர் போய் மாறிக்கங்க தாத்தா! நானும் அந்தப் பக்கம்தான் போறேன் என்றான் ஒரு இளைஞன். அந்த இளைஞனையே உற்றுப் பார்த்தான். தனது சாயலில் தெரிந்த இளைஞனிடம் என்னை சென்ட்ரலில் பிள்ளையார் தெருவுக்குக் கொண்டுபோய் வுடறியா கண்ணா! எனக்கேட்டார்.தாத்தா! எனக்கும் அந்தத் தெருதான்... யார் வீட்டுக்குப் போவணும் நீங்க?
அந்தத் தெருவுல கந்தன்னு ஒருத்தன் இருந்தாருல்ல... அவரு வீட்டுக்குத்தாம்ப்பா போகணும்.
எங்கப்பாதான் அவரு... உடம்பு நல்லா இருக்கும் போது யாருக்கும் நல்லது செய்யலை... உடம்பெல்லாம் நோய்... செய்யாத பாவம் கிடையாது. கொலை, கொள்ளை, போதைமருந்து கடத்தறது, பணத்துக்காக அடிதடி சண்டை, நல்லா இருக்கற குடும்பத்தைப் பிரிக்கறது, வெட்டுறது எல்லாம் உண்டு. இவரு ஃப்ரெண்டு செஞ்ச தப்பையெல்லாம் ஏத்துக்கிட்டு ஜெயிலுக்குப் போய்ட்டாராம். யாரோ பேரு கூடப் பெரியசாமியாம்! பள்ளிக்கூடத்துல ஒண்ணா படிச்சு வந்தாராம். அவரு நல்லா படிப்பாராம்! எங்கப்பன்தான் கூட சேர்ந்து படிக்கவிடாம செஞ்சாராம்... காரணம் அந்த பெரியசாமிக்கு அப்பா, அம்மா யாரும் கிடையாது. எங்கப்பன்தான் தான் கொண்டு போற சோற்றைக் கொடுப்பாராம். இப்ப எங்கப்பனுக்கு எந்தக்கையால அரிவாளு, பொண்ணுங்க இதைத் தொட்டாரோ அந்தக்கைகள் இரண்டுமே வரலை! எந்தக்காலால எல்லாரையும் மிதிச்சாரோ அந்தக்கால்கள் இரண்டும் எழுந்து நடக்க வரலை... இருந்தும் அந்த உயிர் யாருக்காகவோ வாசலை மட்டும் பாத்துக்கிட்டே வருஷக்கணக்கா இருக்கு... ஏன்னுதான் தெரியலை?
உங்களைப் பார்த்தா எங்கப்பாவைப் பார்க்குற மாதிரி இருக்கு... எங்கப்பன் அவருதான் படிக்கலையே தவிர என்னை ஹாஸ்டல்ல அனுப்பிச்சு நல்லா படிக்க வச்சிட்டாரு... அவர் ஃப்ரெண்ட் ஆசைப்பட்டாராம். கைக்குழந்தையா இருந்த என்னைப் பார்த்துக்கிட்டே இருப்பாராம். எங்கவீட்டுப் பரண்ல சின்னவயசுல நீங்க இருக்கற மாதிரி ஒரு ஞாபகம்...
பெரியசாமி முகத்தில் நிலாவின் ஒளியால் வந்த வெளிச்சமா! இலலை... தனது மகன் இவ்வளவு பேசுகிறானே என்ற பெருமையா என்று தெரியாமல் மகிழ்ச்சியினை மறைத்துத் தலைகுனிந்தார்.
எனது மகன் என நான் எந்தக் காலத்திலேயும் சொல்லமாட்டேன் என கந்தனுக்குச் செய்து கொடுத்த சத்தியம் ஞாபகத்திற்கு வந்தது.
எனக்குன்னு யாரும் இல்லை பெரியசாமி! அடி, தடி, கொள்ளைன்னு இருக்கறவனுக்கு எவன் பொண்ணு கொடுப்பான் சொல்லு... உன் பையனை எனக்குக் கொள்ளி போடச் சொல்லுவியா பெரியசாமி!
தனக்கும் யாரும் இல்லை என்பதை ஏனோ உணர மறுத்த பெரியசாமி நோயினால் மனைவி இறந்த துக்கத்தைத் தாளமுடியாமல் குழந்தையையும் தூக்கிக் கொடுத்தான். டீக்கடை வைத்த நாள்முதல் ஏதோ வருமானம் வந்ததில் ஓடிய பிழைப்பு கந்தன் செய்த தவறுக்கெல்லாம் பொறுப்பேற்று ஜெயிலுக்குச் சென்றதில் கடை மூடுவிழா கண்டது.
கந்தனைப் பார்த்துவிட்டு ஏதாவது அனாதை ஆசிரமத்தில் சேர்ந்து விடவேண்டும் என்ற நினைப்பு மனதில் எழுந்தது. கண்ணை மூடியபடியே சீட்டில் சாய்ந்து படுத்திருந்த பெரியசாமியைத் தாத்தா... இறங்கி ஆட்டோ பிடிச்சு போய்டலாம் தாத்தா! வீட்ல அப்பாவுக்கு சோறு ஊட்டணும்... பாத்ரூம் வேற போயிருப்பாரு... வேஷ்டியெல்லாம் மாத்தணும்... சீக்கிரம் போகணும்...!
மகனை அப்படியே இழுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை அடக்கிக் கொண்டார் பெரியசாமி.
ஆட்டோவைக் கையைத் தட்டி அழைத்தான் மகன்.
சர்ரென ஆட்டோ அருகில் வந்து நின்றது.
ஐயா! நல்லா இருக்கிங்களா... என சத்தமாக டிரைவர் பேசவே திகைத்தான் மகன்.
அங்கிள் இவரைத் தெரியுமா?
இவரை இந்த ஏரியாவில் தெரியாதவங்களே கிடையாது தம்பி... உங்கப்பன் பொழுதன்னைக்கும் பெரியசாமி கையாலே கடைசிச் சோறு வாங்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்குதே... அவருதான் இவரு...
அவரு டீ போட்டாருன்னா இன்னைக்கெல்லாம் எத்தனை டீ வேணும்னாலும் குடிக்கலாம். ஐயா! இது யாருன்னு தெரியுதா! உங்க... என்று இழுத்த டிரைவரை உஷ்! என சைகை காட்டி வாயடைத்தார் பெரியசாமி.
பேசிக்கொண்டே வண்டி ஓட்டியபடி வந்ததில் கந்தனின் வீடு வந்து விட்டது. வீட்டிற்குள் நுழையவும் பினாயிலும், டெட்டாலும் கலந்த வாசனை பெரியசாமியை வரவேற்றது.
அப்பா! யாரு வந்திருக்காங்கன்னு பாருங்க!
அப்பாவால தானா எழுந்திருக்க முடியாது... யாராவது தூக்கித்தான் உட்கார வைக்கணும். பக்கபலத்திற்குத் தலையணை வைக்கணும்... நீங்க பாத்திட்டு இருங்க...
நான் போய் சாதத்தைக் கரைச்சு எடுத்திட்டு வர்றேன்...
மகன் உள்ளே சென்றதை உறுதிப்படுத்தியபடி நனைந்திருந்த கண்களைத் துடைத்தபடி நல்லாப் படிக்க வைச்சுட்டடா! எம் புள்ளையை... உன்னைத் தூக்கறதுக்கு ஆள்வேணும்னுதான் என்புள்ளையைக் கேட்டியாடா! சொல்ல மாட்டேண்டா அவன் என் புள்ளைதான்னு...
மகன் வரவே! கொண்டா... நான் ஊட்டுறேன்...
வந்ததிலிருந்து ஒண்ணுமே பேசாம ஏண்டா கண்ணீரா கொட்டுறே...!
அப்பாவுக்கு உங்களைப் பார்த்த சந்தோஷம். அப்பாவாலே பேச முடியாது... கர்ருன்னு சத்தம்தான் வரும். காது மட்டும் கேட்கும் - சொன்ன மகனை உற்றுப் பார்த்தான்.
யாரையும் அசிங்கமாப் பேசாதடா கந்தா! கடைசி காலத்துல பேச்சு வராம போய்டும்னு தனது பேச்சு பலித்ததைப் பெரியசாமி நினைத்தான்.
கொண்டா... வேஷ்டியை நான் மாத்தறேன்...
வேஷ்டியை மாற்றியபின் தட்டில் இருந்த சாப்பாட்டை ஒரு ஸ்பூன் எடுத்துக் கந்தன் வாயில் வைத்தார்.
ஹக்! என்ற சத்தம் வர... என்னப்பா! என்ன செய்யுது... என மகன் நெருங்கி வர... பெரியசாமி... என்னைக்குன்னாலும் கடைசி சோறு உங்கையாலதாண்டா சாப்பிட்டுட்டு சாகணும் எனச் சொன்னது ஏனோ பெரியசாமிக்கு நினைவில் வந்தது. நெஞ்சைத் தொட்டுப் பார்க்க முகத்தை அவனுடைய நெஞ்சில் பதித்தார் தாத்தா.
அப்பாவின் கையைத் தொட்டுப் பார்த்துச் சில்லென்று இருக்கவும் அப்பா இறந்துட்டார்! நான் போய் வெளியில் ஆட்டோக்கார அங்கிள் போய் இருக்கமாட்டார்... சொல்லிட்டு வர்றேன் எனக் கண்ணீரைத் துடைத்தபடி கிளம்பினான்.
ஆட்டோக்காரர் வெளியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கவே, அங்கிள் அப்பா இறந்துட்டார்... எனக்கு யாரும் இங்கே அவ்வளவா தெரியாது.ஹெல்ப் பண்ணுங்க அங்கிள்... என்றான் மகன். நேராக ஆட்டோக்காரர் உள்ளே வந்து பார்த்தார்.
பெரியசாமி நெஞ்சில் படுத்தபடி இருக்கவே, மகனுக்குச் சந்தேகம் எழுந்தது. அங்கிள் அப்போதிலிருந்தே இந்தத் தாத்தா இப்படித்தான் இருக்கார்... என யோசித்தான்.
தாத்தான்னு சொல்லாதேப்பா... அவர் பெற்ற மகன் நீதானப்பா! உன்னை வளர்த்ததுதாம்ப்பா கந்தன்...
வளர்த்த அப்பாவிற்குக் கொள்ளி வைச்சுடுப்பா! பதில் சொல்லிய ஆட்டோக்காரரை வினோதமாகப் புரிந்தாற் போலப் பார்த்தான் மகன்.