எங்கு பார்த்தாலும் கட்டிடங்களாகவே கண்ணுக்குத் தென்பட்டன. ஒரு மரங்கூட கண்ணில் படவில்லை. ஆங்காங்கே திட்டுத் திட்டாக ஒரு சில மரங்கள் மட்டும் கண்ணில் தட்டுப்பட்டது. மாடிமேல் மாடியாக வரிசை வரிசையாக ஓங்கி உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள். ஒவ்வொரு அடுக்கு மாடிக் குடியிருப்பிலும் குறைந்தது பத்துப் பதினைந்து வீடுகள் இருந்தன. இன்னும் சொல்லப் போனால் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெரிய சைஸ் தீப்பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்ததைப் போன்று இருந்தன.
மதுரையில் இருந்த அப்படியொரு அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் சிந்தாமணியும் அவளது கணவனும் குடியிருந்தனர். மணி நான்கு இருக்கும் சிந்தாமணியிடம் ஒருவிதமான பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
அவள் தன் கணவனைப் பார்த்து, “என்னங்க... இன்னும் நம்ம கண்ணனைக் காணலை… ஏங்க ஸ்கூல் வேன் வந்திருச்சா? இல்லையா? எனக்கு ஒரே பயமா இருக்குங்க. எப்பவும் நாலு மணிக்கே வர்றவன் இன்னைக்கு நாலு பத்தாகியும் வரலையே” என்று பதற்றத்துடன் கேட்டுக் கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் கணவனின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் வாசலுக்கு ஓடினாள்.
அவள் பரபரப்பாக ஓடுவதைக் கவனித்துக் கொண்டிருந்த அவளது கணவன் நாகராசன் அவனுடைய அப்போதைய அசதியைப் போக்குவதற்கு அவனுக்கு ஒரு ஸ்ட்ராங்கான காபி தேவையாக இருந்தது. அதைக்கூடக் கொடுக்காமல் வேகவேமாகச் செல்கிறாளே என்று நினைத்துக் கொண்டவன் ஏதும் பேசாது திரும்பி தன்னருகில் இருந்த மேஜையைப் பார்த்தான். பார்த்தவனுக்கு ஆச்சரியம். ‘‘அட! மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த தம்ளரை இப்போது தான் பார்க்கிறேன்! ஆறிப் போய்விட்டதோ என்று தொட்டுப் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே சிந்தாமணி ஏமாற்றத்துடன் திரும்பி வந்தாள்.
“இன்னைக்கு லேட் ஆன மாதிரி தெரியலயே? கண்ணன் எப்பவும் நாலு மணிக்கெல்லாம் ஸ்கூல்விட்டு வந்திருவானே..!” என்று தானாகவே புலம்பிக் கொண்டு வந்தாள். அவள் வருவதையே நாகராசன் பார்த்துக் கொண்டிருந்தான். மஞ்சள் பூசிமுகம் கழுவித் தலைவாரிப் பூவைத்துப் பாண்ட்ஸ் பவுடரின் மெல்லிய வாசத்துடனும் நெற்றியில் வட்டமான சாந்துப் பொட்டுடனும் அழகாகத் தெரிந்த தன் மனைவியை அவன் ரசித்தான்.
ஏழு வருடங்களுக்கு முன் அவளைப் பெண் பார்க்கச் சென்ற போது பார்த்து ரசித்த அதே முகம் சிறிதும் மாற்றமின்றி! படபடப்புடன் இருந்ததாலோ என்னவோ லேசான வியர்வையில் முகம் மினுமினுத்தது.
நெற்றியிலிருந்து ஒரே ஒரு வியர்வைக் கோடு காதோரமாய் வடிந்து கன்னத்தில் காணாமல் போனது. அவள் கேட்டதைக் காதில் வாங்கிக் கொண்ட நாகராசன் அதற்கு, “வண்டி ட்ராஃபிக் ஜாம்ல மாட்டீருக்கும் சிந்தாமணி. கண்ணன் இப்ப வந்திருவான். இதுக்குப் போயி நீ ஏன் இவ்வளவு பதட்டப்படுற?” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே வாசலில் வேன் வரும் சத்தமும் கதவைத் திறந்து கொண்டு கண்ணன் கீழே குதிக்கும் சத்தமும் கேட்டது. சிந்தாமணி சத்தத்தைக் கேட்டவுடன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போன்று வாசலுக்கு விரைந்தாள்.
இவ்வளவு நேரம் ஆவலுடன் அவனுக்காகக் காத்திருந்தவள் அவன் வந்ததும் வராததுமாய்த் திட்ட ஆரம்பித்திருந்தாள். “ஏண்டா எத்தன தடவ சொல்றேன்... இப்படி வேன்ல இருந்து குதிக்காத குதிக்காதன்னு? மெதுவா எறங்கி வந்தா என்ன கொறைஞ்சா போகுது?” என்று கேட்டுக் கொண்டே அவனை உள்ளே அழைத்து வந்து அவனது ஷூ சாக்ஸைக் கழற்றத் தொடங்கினாள்.
அவனது சட்டையைப் பார்த்தவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. அவள் கண்ணனது சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து, ‘‘ஏண்டா இப்படி சட்டையை எப்படி அழுக்காக்கிட்டு வந்திருக்க... சரியான அழுக்கு மூட்டை. ஐயையோ ஏண்டா என்னடா இது இன்னைக்கும் சாப்பாட்ட சாப்புடாம மிச்சம் வச்சிக்கிட்டுக் கொண்டுட்டு வந்துருக்கே… இனிமே இதுமாதிரில்லாம் செய்யாதேடா… என்ன புரிஞ்சதா.. பாரு திருதிருன்னு முழிக்கறத கல்லுழி மங்கனாட்டம்… ஆமா மறந்துட்டேனே…? ஏண்டா கண்ணா இன்னைக்கு இங்கிலிஷ் மிஸ் டெஸ்ட் வச்சாங்களா, இல்லையா?” என்று ஒவ்வொன்றாக அவனைப் பேசவிடாது கேள்விமேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருப்பாள். இதுமாதிரித் தொடரும் சில நிமிடங்கள்.
அவளது செயல்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்த நாகாரசன் , கண்ணனைப் பார்த்து, “டேய் கண்ணா, இங்க வாடா... இன்னைக்கு ஒங்க கிளாஸ்ல என்ன பாட்டு சொல்லிக் கொடுத்தாங்க? சொல்லு பாப்போம்” என்று இழுத்து அவனை மடியில் அமர்த்திக் கொண்டான்.
கண்ணனும் நாகராசனின் முகத்தைப் பார்த்த வண்ணம்,“எங்க மிஸ் தோசையின்னா தோசை பாட்டு சொல்லிக் கொடுத்தாங்க” என்று சொன்னான்.
தினமும் அவன் கேட்கும் கேள்விக்கு வழக்கமாக கண்ணன் கூறும் பதிலாகவே இதுவும் இருந்தது. நாகராசன் கண்ணனை விடாது, ‘‘ஏண்டா புதுசா ஒன்னும் சொல்லித் தரலயாடா ஒங்க மிஸ்...?” என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே சிந்தாமணி நாகராசனைப் பார்த்து,
“ஏங்க, அவனோட சிலபஸ் ஷீட்ட எடுத்துப் பாருங்க. அதுல எல்லாம் கொடுத்திருப்பாங்க. இப்படி சும்மா கேட்டா, அவன் டெய்லி இதையேதான் சொல்வான்” என்று கூறிக் கொண்டே ஒரு சிறிய தட்டில் முறுக்கையும் அதிரசத்தையும் கண்ணனுக்காகச் செய்து வைத்திருந்த வாழைப்பூ வடையையும் எடுத்து வந்து வைத்தாள்.
சிந்தாமணியும் நாகராசனும் பேசிக் கொண்டதைக் கண்ணன் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அவன் தமிழ் மிஸ் சொல்லிக் கொடுத்த பாட்டை,
“தோசையின்னா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை
அண்ணனுக்கு ஒண்ணு
அப்பாவுக்கு ஒண்ணு
தம்பிக்கு ரெண்டு
தின்னத் தின்ன ஆசை”
என்று வாய்விட்டுப் பாடத் தொடங்கியிருந்தான்.
மழலை மொழியும் சைகை நடனமுமாய் நிஜமாகவே சாப்பிட்டதைப் போன்று அவனது வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகள் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. உற்சாகத்துடன் நாகராசனும் கண்ணனுடன் சேர்ந்து கொண்டு இன்னும் நிறைய பாடல்களைப் பாடத் தொடங்கியிருந்தான். படிப்பை எல்லாம் முடித்தாகி விட்டவுடன் பசிக்க ஆரம்பித்திருந்தது. மூவருமாக அமர்ந்து இரவு உணவை உண்டு முடித்தனர்.
நேரம் செல்லச் செல்ல வீட்டில் ஒரு மெல்லிய சோகம் மெதுவாகப் புகுந்து ஆட்கொண்டிருந்தது. சிந்தாமணியும் நாகராசனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதைத் தவிர்த்திருந்தனர். அந்த இறுக்கமான நேரத்தைக் கடத்துவதற்கு எதையாவது பேச வேண்டுமே என்று நாகராசன் யோசித்திருந்த வேளையில், “இன்னைக்கு என் செல்லம் சமத்தா ரெண்டு இட்லி சாப்பிட்டிருச்சேன்னு” மடியில் அமர்ந்திருந்த கண்ணனின் கன்னத்தில் முத்தம் பதித்தாள் சிந்தாமணி.
அந்நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது. ‘‘வந்துட்டாங்க போலருக்கு’’ என்று கூறிக்கொண்டே நாகராசன் சென்று கதவைத் திறந்தான். அங்கு பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தேவகி நின்று கொண்டிருந்தாள். கதவைத் திறந்தவுடன் தேவகி, “கண்ணா… வா வா... செல்லக்குட்டி ஒன்னோட அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடு” என்று வீட்டிற்குள்ளே வந்தவள் தன்னை நோக்கி ஓடிவந்தவனை வாரிஅணைத்துக் கொண்டாள்.
கண்ணன் தேவகியைப் பார்த்து, “அம்மா... அப்பா எங்கம்மா?” என்று கொஞ்சும் மழலைக் குரலில் குழைவாகக் கேட்டான்.
அதற்கு, “டேய் அப்பா நம்ம வீட்டுல வெயிட் பண்றார்டா குட்டி” என்று கூறிக் கொண்டே கண்ணனின் கன்னத்தில் முத்த மழை பொழிந்தாள் தேவகி. அதனைப் பார்த்துக் கொண்டிருந்த சிந்தாமணி எதுவும் பேசாது புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள். அந்தப் புன்னகையில் ஒரு வறட்சி தென்பட்டது. சிந்தாமணியைப் பார்த்த தேவகி, “என்னக்கா... கண்ணன் இன்னைக்கு இங்கேயே சாப்பிட்டானா? சாரிக்கா… இன்னைக்குக் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. ஆபீஸ்ல வேலை கொஞ்சம் அதிகங்க்கா” என்று தயங்கித் தயங்கிக் கூறினாள்.
தேவகி கூறியதைக் கேட்ட சிந்தாமணி, ‘‘அதுனால என்ன தேவகி... இன்னைக்குப் பிள்ளைக்கு இட்லி ஊட்டிவிட்டேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.
கண்ணனின் புத்தகப்பையும் லன்ச் பேக்கும் இன்னும் சில பொருட்களும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பக்கத்துப் போர்சனுக்கு இடம் மாறின. சிந்தாமணியும் நாகராசனும் சிரித்துக்கொண்டே கையசைத்துக் ‘குட்நைட்’ சொல்லிவிட்டுக் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டனர். சிந்தாமணி கதவைத் தாழிட்டவுடன் பிரமை பிடித்தவள் போல் நின்று கொண்டிருந்தாள். அவளின் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்களைப் போன்று உருண்டோடியது.
அதனைப் பார்த்த நாகராசனுக்கு என்னவோ போலிருந்தது. அவனது உள்ளத்திலும் சொல்ல முடியாத துக்கம் உருண்டது. அதனை வெளிக்காட்டாது அடக்கிக் கொண்டே நாகராசன் அவளின் தோளைத் தட்டிக்கொடுத்து, ‘‘அட அசடே இந்தாப் பாரு… எதுக்கு நீ அழறே… இதுக்கெல்லாம் போயி அழுவாங்களா… ம்… ம்… கலியாணமாகி ஏழு வருசம் ஆயிருச்சே இன்னும் குழந்தை பொறக்கலையேன்னு வருத்தப்படறியா… அட கூறுகெட்டவளே… குழந்தை இல்லாட்டினா என்ன? நீ எனக்குக் கொழந்தை… நான் ஒனக்குக் கொழந்தைன்னு நெனச்சிக்கிட்டுப் போயிட வேண்டியதுதான். ஆண்டவன் நமக்கு என்ன எப்ப எதைக் கொடுக்கணும்னு நெனக்கிறானோ அதக் கொடுக்காமப் போகமாட்டான்… என்ன… புரியுதா’’ என்று புன்னகையுடன் கூறியவனது கையைச் சிந்தாமணி இறுகப் பற்றிக் கொண்டாள். அது காற்றில் ஆடுகின்ற முல்லைக் கொடியானது கொழுகொம்பைத் தேடித் தழுவியதைப் போன்றிருந்தது.