"மாமா நீங்க பெரிய ஜோசியரா இருக்கலாம். ஆனா கனவுகள் பலிக்கும்னு சொல்லுறத என்னால ஏத்துக்க முடியாது. கனவுகள் உண்மைன்னு நினைக்கிறதைத் நான் மூடநம்பிக்கைன்னு நினைக்கிறேன்" சற்று உரத்த குரலில் தன்னுடைய கருத்தை வலியுறுத்தினாள் ஷாலினி.
"ஷாலினி நீ பி.ஏ வரைக்கும் படிச்சிருந்தாலும் சின்னப் பொண்ணு மாதிரி பேசுறே. ஆனா கனவுகள் உண்மைங்கிறது எல்லாரும் ஏத்துக்கிட்டது. நீ மறுத்தா மட்டும் இல்லைன்னு ஆயிடுமா என்ன?" அமைதியாக கூறினார் ஜோசியர் பாலன்.
" மாமா, நாம படுக்கையில எதையாவது நினைச்சுகிட்டு படுத்தா, அது ராத்திரி கனவா வருது. நான் முதலமைச்சாராகுற மாதிரி நினைச்சா அன்றைக்கு ராத்திரி கனவுல நான் முதலமைச்சாயிடுறேன். இது எப்படி மாமா உண்மையாகும்" நியாயமான சந்தேகத்தைக் கேட்டாள் ஷாலினி.
"ஷாலினி, கனவுன்னா நாம நினைக்கிறது மட்டும் வருமுன்னு சொல்ல முடியாது. நாம நினைக்காத விஷயங்கள் கூட கனவா வரும். அப்படிப்பட்ட கனவுகளுக்குக் கண்டிப்பா பலன் உண்டு"
"மாமா, நீங்க என்னதான் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது" திட்டவட்டமாய் கூறினாள் ஷாலினி.
"சரி மாமா, என்னோட பதினெட்டு வயசுல இருந்து ஒரு கனவு எப்பவாவது வந்து வந்து போகுது. அது என்னன்னா, ஒரு சித்தெறும்பு ஊர்ந்து போகுது. ஆனா அது மேல பாரமா ஏதோ ஒன்னு சுற்றியிருக்கு. அந்த எறும்போ எதைப் பற்றியும் கவலைப் படாம சாதாரணமா ஊர்ந்து போகுது. இதுக்கு என்ன பலன் சொல்லுங்க உண்மையான்னு பார்ப்போம்" என பெரிய புதிரை போட்டு விட்டவள் போல நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
இதனைக் கேட்ட பாலனின் முகம் பிரகாசமானது. "ஷாலினி உன்னோட வயசு என்ன?"
"என்ன மாமா தெரியாத மாதிரி கேட்கிறீங்க. முப்பத்திரண்டு"
“உன்னைய இருபது வயசுல இருந்தே பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொரு வரனும் தள்ளிப் போறப்ப உன்னோட மனசு எவ்வளவு கஷ்டப்படுமுன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் உன்னோட இலட்சியப் பயணம் இதனால என்றைக்காவது தடைபட்டிருக்கா? இல்லையே, அந்தச் சித்தெறும்பு வேறு யாருமில்ல நீதாம்மா" என்றார் ஜோசியர் பாலன்.
ஷாலினியின் திருமணம் தடைபட்டுக் கொண்டே போவதால் அவள் மனம் கஷ்டப்படக் கூடாதென இப்படியொரு விளக்கத்தைச் சொல்லி வைத்தார் அவள் மாமாவான பாலன்.
ஆனால், இது வரை கனவு பலிக்காது என கூறி வந்த ஷாலினி, கனவு பலிக்குமோ எனக் குழம்பியவாறே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.