வணக்கம் அண்ணாச்சி. சுந்தரி இருக்காளா. வேல முடிஞ்சாச்சுன்னா வாசத்திண்ணைக்கு வரச்சொல்லுங்க. வெளியிலிருந்து எட்டிப்பார்த்து குரல் கொடுத்தாள் பக்கத்துவீட்டு இல்லத்தரசி நந்தினி. தெருவில் வீடு இருப்பது இவங்களுக்கெல்லாம் நல்ல வசதி. ராச்சாப்பாடு முடிஞ்சவொடனே அரட்டைக் கச்சேரிதான் தினமும். ஐந்து உறுப்பினர்கள் கொண்ட அரட்டைச்சங்கம் அது. யாராவது ஒருத்தர் வரவில்லையென்றால் அன்றைய டாபிக் யார் வரவில்லையோ அவர்களைப் பற்றியது. எல்லாரும் வந்திருந்தால் பொது விசயங்கள், சமையல் குறிப்புகள் போன்றவை அலசப்படும். இன்னிக்கு இவுங்க பேச்சுல யார் தலை உருளப்போகுதோ...
யோசித்துக் கொண்டிருக்கும் போதே சுந்தரியும் திண்ணைக்குப் போய்விட்டாள். ஹாலில் நான் மட்டும் தான். நிம்மதியாக கதை எழுதலாம். மூன்று வாரப் பத்திரிகைக்குத் தொடர்ச்சியாகச் சிறுகதைகள் அனுப்பி வருகிறேன். எது எப்படிப் போனாலும் வாரம் மூன்று கதை அனுப்பியே தீர வேண்டும். இந்த முறை என்னவோ ரெண்டு கதை எழுதியாச்சு மூன்றாவது கதை மனசுக்குப் பிடிச்ச மாதிரி அமையவே மாட்டேங்குது. காலக் கெடு கொடுத்து வேலை செய்யச் சொன்னால் எரிச்சல் தானே வரும். எப்ப வேணும்னாலும் எழுதி அனுப்பலாம்னு இருந்தா நல்லா இருந்திருக்கும். இது நானா இழுத்துப்போட்டுக்கிட்டது. செஞ்சுதான் ஆகணும். மனம் ஒரு நிலையில் இல்லை.
நந்தினியோட குரல் கேக்க ஆரம்பிச்சிடுச்சு. அவ லௌட் ஸ்பீக்கர் மாதிரி. வேற வழியில்லாம அவ பேச்சக் கேட்டுதான் ஆகணும். மெதுவா பேசுன்னு சொன்னா சுந்தரி கோபப்படுவா.
உங்க வீட்ல என்ன சமையல். பரஸ்பர விசாரிப்புக்குப் பிறகு அன்றைய டாபிக் தொடங்கியது. பரமு அன்றைய கூட்டத்தில் இல்லபோல. பரமு அண்ணன் பொண்ணு சடங்கப் பத்திதான் விலாவாரியா பேசறாங்க.
நந்தினி தான் பேசுகிறாள். பரமு வீட்டுக்காரரு கோபிச்சுக்கிட்டாராமா. அவுக அண்ணன் தன் பொண்டாட்டி அதான் பரமுவோட மைனி பேச்சக் கேட்டுக்கிட்டு மைனி தம்பிய வீடு தேடிப் போயி பாக்கு வெத்தல வச்சு சடங்கான சேதி சொன்னாங்களாமா. பரமுக்கு மூலக்கடை அண்ணாச்சி தம்பி சொன்ன தகவல்தானாம்.
மச்சான் படிச்சவரு புது பணக்காரரு அதான் முறை செஞ்சிருப்பாங்க. இது எதிர் வீட்டரசியின் குரல்.
நந்தினி தொடர்ந்தாள்.
அட அது இல்லங்கேன். அவ மைனிக்கு தன் தம்பிய மாப்ள ஆக்கணும்னு எண்ணம். அத நேரடியா சொல்லிட்டுப் போலாம்ல. அத உட்டுப்போட்டு பரமுவ திட்டம் போட்டு அவமானப்படுத்திருக்கா அவ. மொதல்ல சடங்கானத அத்தை மொறைக்கு சொல்லிவுடல. அடுத்தாப்ல சடங்குக்கு பத்திரிகை அடிச்சிருக்காங்க. அதுல பரமு மாப்ள பேரப் போடவே இல்ல. மைனியோட ஒண்ணுவிட்ட மாமன், அண்ணன்னு ஊர்ல இருக்க எல்லார் பேரும் போட்டிருந்ததாமா. பரமு வருத்தப்பட்டிச்சு. இருந்தாலும் பரமு புருசன் ரொம்ப நல்லவரு. விட்டுக்கொடுக்கக்கூடாதுனு ஒரு பட்டுச்சேலை எடுத்துட்டு போய் பிள்ளையப் பாத்துட்டு வான்னு சடங்கு அன்னிக்கு பரமுவ அனுப்பிச்சி வச்சிருக்காரு. போன எடத்துல ஒருக்க வாங்கன்னு சொல்லிட்டுப் போன மைனிய திரும்ப பாக்கவே முடியலயாம். மைனியோட அக்கா ஜாடையா பேசிச்சான். இது சடங்கு வீடு எதுக்கு பரிசம் போடுதது கணக்கா சேலை எடுத்துட்டு வந்திருக்க. பாத்திரம் பண்டத்தச் சீரா கொண்டு வந்திருக்கலாம்லன்னு.
கொஞ்ச நேரங்கழிச்சு பரமு அண்ணன் வந்து சொல்லிச்சான். அவ தம்பி பாம்பேல இன்ஜினியரிங் படிக்கறானில்ல. என்னமோ இப்பவே சம்பாதிச்சுக் கொட்டப் போறாங்கற நெனைப்புல ஆடறா. உம் புள்ளைக்குக் காலேஜ் படிப்பு முடிஞ்சவொடனே அவனோட விருப்பப்படி சிவில் சர்வீஸ்ல கெடைக்கட்டும். அப்பகண்டா உம் பின்னால வருவாளோ என்னவோ. எனக்கு உன்னோட பிள்ளையும் ஒண்ணுதான். அவ தம்பியும் ஒண்ணுதான். எம் பொண்ணு சின்னவ. அவளுக்குச் சொந்தத்துல அதுவும் நெறைய வயசு வித்தியாசத்தோட...
கல்யாணம் முடிக்கறதுல எனக்கு விருப்பம் கெடையாது. நேரம் வரும்போது சொல்லுவேன். இப்ப முடிஞ்ச மட்டும் அவ ஆடிக்கட்டும். நீ ஒண்ணும் மனசுல வச்சிக்காதன்னு.
அவுங்க கூட்டத்தார் எழுதின மொய்யெல்லாம் மைக் போட்டு சொல்லச் சொல்லிச்சாம் அவ மைனி. அதற்குப் பிறகு நந்தினி ரகசியக்குரலில் பேசியதால் ஒன்றும் சரியாகக் கேட்கவில்லை.
நான் யோசித்தேன் எப்படிச் சொல்லியிருப்பார்கள். மைக்கில் பேசும் திறமை ஒரு சிலருக்கு மட்டுமே உண்டு என்பது கிராமப் புற மக்களின் நம்பிக்கை.
வாங்கப்பா. வாங்கப்பா. மொய் வைக்கறவங்கல்லாம் வரிசையில வாங்க. பிள்ளைக்கு திருநீறு பூசிட்டீங்களா. இந்தப் பக்கமா வந்து ஒங்க உறவுமுறை, சமஞ்ச பிள்ளைக்கு நீங்க என்ன சீர் செய்யறீங்க சொல்லிட்டுப் போங்க.
இப்பம் நம்ம செல்வி சுகி யோட பூப்புனித நன்னீராட்டு விழாவுக்கு கூடியிருக்கோம். அவ மாமன் காடுப்பட்டி நல்லமுத்து ஐயா பிள்ளைய ஆசிர்வதிச்சுப் பெரிய பித்தாளக் குத்தடுக்க சீராக் கொடுக்காரு.
ம்... அடுத்தடுத்து வரட்டு. நாடம்பட்டி ஒண்ணுவிட்ட மாமன். பித்தாளத் தவலை. இசக்கித்தாயி சின்ன அறுக்கஞ்சட்டி. பிச்சத்தாயி சித்தி முறை குத்துப்போணி. வேலம்மாள் அத்தை டப்பா. சொல்லுதேம்மா பொறுங்க.
மொத சொன்னது தப்பு. வேலம்மாள் அத்தை பாம்பே சம்படம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு போட்டு மூணு. சரியா சொல்லிட்டேனாமா. சந்தோசமா போயிட்டு வாங்க.
யம்மா... இட்லி கொப்பற. உங்க பேரையும், உறவையும் சொல்லாமப் போனா எப்படி. வரவு வைக்கணும்ல. சரியாச் சொல்லுங்கம்மா. நாள முன்னயும் உங்க வீட்டு விசேசத்துக்கு திரும்பச் செய்யத் தெரியணுமில்ல.
இப்படித்தான் இருக்க வேண்டும். இது யூகம் தான். அப்பாடா எனக்கு கதைக்கரு கிடைத்து விட்டது... சடங்கு வீடு...
வெளியில் கூட்டம் கலைந்து அவரவர் வீட்டுக்குப் போய்விட்டார்கள்.
வாஷ்ரூம் போயிட்டு வந்து எழுதிவிட வேண்டியதுதான்.
அக்கா ஒரு கரண்டி தயிர் குடுங்களேன். பால ஒரைக்கணும்.
உள்ளே நுழைந்த நந்தினி மேசை மேலிருந்த காகிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள். சுந்தரி இங்க வாயேன். அண்ணாச்சி இம்புட்டு நேரம் நான் பேசினதையே எழுதி வச்சிருக்காக. திரும்பி வந்த நான் சுந்தரியின் முறைப்பையும் மீறி அசடு வழிந்தேன்.
இது ஒண்ணுமில்ல கதைக்கரு தான். இதுக்கு இன்னும் வடிவம் கொடுத்துப் பெரிசாக்கிக் கதையா ஆக்கணும். நான் பேசியதைப் பொருட்படுத்தாமல் சுந்தரி கொண்டு வந்த தயிரை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டாள்.
அநேகமாக நாளைக்குத் திண்ணைக் கூட்டத்தின் டாபிக் நான் தான் போல.
வாசல் வரை சென்ற சுந்தரியிடம் நந்தினி, என்னமோபோ அண்ணாச்சி கொழந்த பெக்கற மாதிரி, இது கதைக் கருங்கறாரு. இதுக்கப்புறம் அதுக்கு முகம், கை, கால் எல்லாம் வளத்துவிட்டு பிள்ளையா பெத்துப் போடுத மாதிரிதான். சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
திரும்பி வந்த சுந்தரி பேசியது எதுவும் என் காதில் விழவில்லை... ஊமைப் படம் பார்ப்பது போல் அவளைப் பார்த்துவிட்டு மீண்டும் எழுதத் தொடங்கினேன் நந்தினி சொன்னதை...
ஒவ்வொரு கதையெனும் குழந்தை பெறுவதற்கு முன்னும் கதாசிரியன் கருவை உருவாக்கி அதற்கு வடிவம் கொடுத்து உணர்ச்சிகளை ஊட்டி, பின் அழகுபடுத்திப் பிள்ளையாக முழுமைப்படுத்தி உலகில் உலவ விடுகிறான்.