“யம்மா, யம்மா பேச்சி”
“என்ன மாமா? என்ன செய்யுது? ஏன் நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு வாரீங்க...”
“கொஞ்சம் சுடுதண்ணி வைம்மா. வெதுவெதுன்னு குடு, கொஞ்சம் நெஞ்சு வலிக்கற மாதிரி இருக்கு...”
“என்ன ஆளே இப்பிடி சொல்லிக்கிருக்க, இந்நேரத்துல. ஒன்னுமில்ல, இந்தாச் சுடுதண்ணி வச்சு கொண்டுக்கு வர்றேன்”
பேச்சி சுடுதண்ணி வைக்கப் போகையில் பாண்டிக்கு வெளிக்கு போகணும் போல் இருந்தது. நெஞ்சும் அதிகமான வலி கொண்டது.
பேச்சி சுடுதண்ணி வைத்துவிட்டுப் பாண்டியைத் தேடினாள்.
“மாமா …… மாமா” என்று கூப்பிட்டுக்கொண்டே நடுவீட்டில் சுடுதண்ணியை வைத்தாள். பாத்ரூம்மிலிருந்து தள்ளாடித் தள்ளாடி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் வியர்த்து விருவிருக்க மேல்சட்டை நனைந்து உடம்பிலேயே ஒட்டிக்கொள்ள பாண்டி நடந்து வருவதைப் பார்த்ததும் பேச்சிக்குத் தலைசுற்றுவதைப் போல் ஆனது. பதற்றத்தில் என்ன செய்வது என்றே அவளுக்கு மறந்து போனது.
“மாமா என்ன செய்யுது...? கொஞ்சம் சேருல உட்காருங்க” என்றாள்.
ஆனால் பாண்டியால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை. கையை மட்டும் முடியவில்லை என்பது போல் அசைத்தார். இதற்கும் முன்பும் இரண்டுமுறை இப்படி ஆகி இருந்தது. அதுதான் பேச்சி பயங்கொள்ள காரணமாய் இருந்தது. மனது பேச்சிக்கு படபடக்க படிகளில் தடத்தட என இறங்கினாள்.
தனது முதல் மகன் வீட்டின் கதவைத் தட்டினாள்.
“ஆங்கா… ஆங்கா கதவத் தொறடா” என்றதும்,
“என்னம்மா... என்ன ஆச்சு?” என்று அவனுக்கும் அந்த படபடப்பு தொற்றிக் கொண்டது.
“தம்பி அப்பா என்னமோ மாதிரி இருக்காருடா. நான் போய் நம்ம தெரு நர்ஸக் கூட்டிட்டு வந்துர்றேன்”னு சொல்லிவிட்டு வேகமாக ஓட்டம் எடுத்தாள்.
“அப்பா…. அப்பா என்று கூப்பிட்டுக் கொண்டே ஆங்கனும், அவன் மனைவியும் பதறியடித்து மேலேச் செல்கையில் எந்தவிதத் தெம்புமின்றி அவர் ஜன்னல் கம்பியை இறுகப் பிடித்தபடி மெதுவாக அசைந்து சேரில் உட்காரவும், நர்ஸ் சத்யா வந்து சேரவும் சரியாக இருந்தது.
“கொஞ்சம் தள்ளுங்க... காத்து வரட்டும், என்னன்னு பாப்பம், ஸ்டெதெஸ்கோப் வேற என்கிட்ட இல்ல. அடுத்தத் தெரு கண்ணன்கிட்ட இருக்கு. யாராவது போய் வேகமா வாங்கிட்டு வாங்க”ன்னு சொன்னதும்,
ஆங்கன் படபடக்கும் இதயத்தோடு மிக வேகமாக ஓடினான். இரவு 1 மணிக்கு மேல் என்பதால் தெருவே அமைதியாக இருந்தது. போனை அடித்துக்கொண்டே ஆங்கன் சென்றான்.
“சார் கதவத் தொறங்க சார்...”
“என்ன ஆங்கா. என்ன ஆச்சு. இந்நேரத்துல?”
“சார் அப்பாவுக்கு ரொம்ப முடியல. சத்யா நர்ஸ் உங்கள ஸ்டெத்தெஸ்கோப் எடுத்துக்கிட்டு வரச் சொன்னாங்க. வாங்க சார்... பிளீஸ்...”
“இருப்பா வர்றேன்” என்று அவசரமாக கண்ணன் உள்ளே ஓடி ஸ்டெதெஸ்கோப்பைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தார். வந்து பார்க்கும் போது சுத்தமாகப் பாண்டியால் பேச முடியவில்லை. அவரை நர்ஸ் போர்வையைத் தரையில் விரித்துக் கிடத்தி இருந்தாள். அவர் வந்ததும் இவருக்கு ஏற்கனவே கொடுக்கற மாத்தரய கொடுத்தீங்களான்னு கேட்டார்.
“சார், நான் கையைப் புடிச்சுப் பாத்தேன் துடிப்பு ரொம்ப குறைஞ்சிடுச்சு. எதுக்கும் சீனிக் கரைச்சு கொடுப்போம்னு குடுத்தேன். அதுக்கப்புறம் அவர் நாக்குக்கு அடியில வைக்கற மாத்தரையையும் குடுத்தேன். ஆனா புரயோஜனம் எதுவும் இல்ல”ன்னு நர்ஸ் சொன்னதும் கண்ணன் மீணடும் ஒருமுறை நாடித்துடிப்பைக் கவனித்தார். அது மிகவும் குறைந்திருந்தது. உடலும் ஜில்லிடத் தொடங்கி, வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது.
“அவசரமா பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போனாலும் பலன் இருக்காது. அவர் நிம்மதியா இங்கயே இருக்கட்டும். கண்ணுக்குள்ள மட்டும் தான் உயிர் இருக்கு. நாடித்துடிப்பு ஒடுங்கிருச்சு என்றதும் பேச்சியும் மகனும் தாங்க முடியாமல் கதறவும், கண்ணன் அமைதிப் படுத்தினார்.
“கத்தாதீங்க. இது மூணாவது அட்டாக். நீங்களும் இந்த 20 வருசமா எவ்ளோ முடியுமோ, அவ்ளோப் பாத்திட்டீங்க. கொஞ்சம் நேரம் சத்தம் போடாம இருங்க. அவர் மூச்சு நிம்மதியா அடங்கட்டும்”
சொல்லிவிட்டு இரண்டு படிகள்தான் இறங்கி இருப்பாட். கண்ணிலும் உயிர் இல்லை என்று நர்ஸ் உறுதிப்படுத்தவும், ஆற்ற முடியாத அழுகை பீறிட்டுக் கொண்டு கொட்டியது பேச்சிக்கு.
“நல்ல மனிதன்” என்று சொல்லிக் கொண்டு கண்ணன் திரும்பவும் மேலேறிச் சென்று அவரைத் தொட்டு வணங்கிவிட்டுச் சென்றார். அவர் அப்பாவும், பாண்டியும் நல்ல நண்பர்கள். அப்பாவைப்போல்தான் பாண்டியும் அவருக்கு.
அழுகைச் சத்தம் கேட்கவும் ஒவ்வொருவராய் வரவும்...
“இங்கே மேல மாடியில வச்சா, வர்றவக வரப்போகத் தோதில்ல, கீழ இறக்கி அவக அக்கா வீட்டு முன்னாடி வைங்க”
பாண்டியின் அக்கா பூமயிலால் தாங்க முடியவில்லை.
“ஏன்டா தம்பி, அக்கா இருக்கும் போது, உனக்கு இந்த நெலம வரலாமா? ஏம்பிள்ளைய நடுக்காட்டுல விட்டிட்டியே சாமி, நான் என்ன சொல்லி எம்பிள்ளயத் தேத்தப் போறேன். நீ வேணுமின்னு ஆத்தாளும் அப்பனும் தவமா தவமிருந்து வேண்டி பிறந்தியே, நீ பெறந்ததும் பாண்டிச்சாமிக்கு வேண்டிக்கிட்டு ரெட்டக் கெடா வெட்டுனாகளே. தம்பி தம்பி எழுந்திரிப்பா...”
“எதுவும் சொல்லத் தெரியாத இந்தப் பிள்ளய நான் என்ன செய்வேன், நல்லது கெட்டது பாக்காம இப்பிடி விட்டுட்டுப் போகலாமா சாமி...” என்று அக்கா தலையிலும் நெஞ்சிலும் மாறி மாறி அடித்துக் கொண்டு தன் மகளைக் கட்டிப்பிடித்து அழுதாள்.
ஒவ்வொரு ஊருக்கும் போன் மூலம் ஒருத்தர் ஒருத்தரா தகவல் சொல்லி வரவும் தெருவே மக்கள் வரவால் நிரம்பியது.
பேச்சி மாமனைப் பார்த்து கண்ணிமைக்காமல் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் “ பேச்சி…. யம்மா பேச்சி” என்ற குரல் திரும்பக் கேட்டதும், வெடித்துச் சிதறிவிட்டாள்.
“மாமா… மாமா எந்திரி மாமா, உன் பேரன் வந்துட்டான்... உன்னப் பாக்க... அவன் கூப்பிடறான் பாரு. இத்தன வருசமா எப்புடி இருந்த, இப்ப மட்டும்... இப்படித் தவிக்க விட்டுட்டயே...” என்றாள்.
அங்கு குவிந்திருந்த மாலைகளைப் பார்த்தவாறு, இத்தனை மாலையும் உனக்குன்னு பூத்திருந்துச்சா மாமா… அதான் நீ ஓடிட்டியா, என்ன ஒரு நிமிசம் நெனச்சியா மாமா…மாமா…”
பேச்சியின் கதறலில் ஊரே சேர்ந்து அழுது கொண்டிருந்தது. பேச்சி அழுவதைப் பார்த்துப் பார்த்து அவள் அம்மா அதாவது இறந்த பாண்டியின் அத்தையும் அக்காவுமான பூமயில் நெஞ்சைப் பிடித்து உட்கார்ந்து விட்டாள். மயக்கத்தில் சரியவும் வேகமாக ஓடிப்போய் இரண்டு பேர் தூக்கினர். தண்ணீரை முகத்தில் அடித்து, கொஞ்சம் சுடுகாபியையும் புகட்டப் பார்த்தனர்.
கொஞ்சம் தெளிந்து உட்கார்ந்த பூமயில் காபியைச் சிறிதும் குடிக்க மறுத்தாள்.
“உங்கத் தம்பிதான் உங்க பிள்ளய தவிக்க விட்டுட்டார். நீங்களும் இப்புடிப் பண்ணா பேச்சி என்ன செய்வா கொஞ்சம் அமந்து அழுகுங்க.” என்று கூட்டத்தில் சிலர் அதட்டவும் அந்த ஒரு மடக்குத் காப்பித் தண்ணியைத் தொண்டையில் இறக்கிளாள் பூமயில்.
“செரிங்கப்பா பொணத்த தூக்கணும். நோய்வாய்ப்பட்ட உடம்பு” என்று கொட்டகையில் உட்கார்ந்திருந்த சில பெருசுகள் ஆரம்பிக்கவும்,
புதிதாய் வாங்கி வந்த வளையலையும், பூவையும் பேச்சிக்கு வைக்க முயற்சித்தார்கள்.
“இல்ல எனக்கு வேணாங்க்கா… எம் புருசன் இருந்த நாளிலயே அதெல்லாம் நான் போடல. அத நான் இப்பப் போடவா… வுட்டுடுங்க அக்கா என்ன...” என்று ஒப்பாரியாய் அழுக ஆரம்பித்தாள்.
“ஏன் இந்தம்மா இப்புடிச் சொல்லுது. எல்லா இடத்திலயும் செய்யுற சடங்குதான புருசனுக்காக இதக்கூடச் செய்யாதா இந்தம்மா...” என்று தெருவுக்குப் புதிதாய் வந்த மருமகள் காது கடிக்க,
“அந்தக் கதை ஒனக்குத் தெரியாதா...?” என்று சொல்ல ஆரம்பித்தாள் பரமேஸ்வரி புதிதாய் வந்த மருமகளிடம்,
“பேச்சி இருக்காளே பேச்சி. பேருதான் கிராமத்துப் பெண். அவுக குடும்பம் இங்க மதுரைக்குள்ள மூனாவது தலமொற. அவள சொந்தத் தாய் மாமனுக்கு 14 வயசுல கட்டிக் கொடுத்தாக. 18 வயசுக்குள்ள ரெண்டு புள்ளயாச்சு. எதுவும் மறைக்கத் தெரியாத வெகுளி மனசு. அவ சிரிச்சா இந்தத் தெருவுக்கேக் கேக்கும். அப்படிப்பட்டவ, எங்கயும் வெளிய கௌம்பணும்னா முதல் நாளே சொல்லணும். ஏன்ன புடவ என்ன, பூ என்ன, ஜடைமாட்டி, எப்படி சட்டைனு, அவ முடிவெடுத்து மை தீட்ட ஆரம்பிச்சா மான் கொம்பு மையில் ஆரம்பித்து, அந்தக்கால கதாநாயகி கெணக்கா மையிட்டு பூ முடிஞ்சு நடப்பா. பாண்டி அண்ணனும் சொந்த அக்கா மகள எந்தக் கொறயும் இல்லாம பாத்திக்கிடிச்சு...”
“ஒருநாள் திடீருன்னு அந்த அண்ணன நெஞ்சு வலிக்குதுன்னு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிப் போனாங்க... அன்னயிலருந்து அவரால சரியா வேலைக்குப் போக முடியல. கொஞ்சம் கொஞ்சம் அவங்க வாழ்க்கைல கஷ்டகாலம் ஆரம்பிச்சது. அப்பவும் யாரயும் விட்டுப் பிரியாத பேச்சிக்கு சூழ்நில புரியல. எப்பவும் போலத்தான் இருந்தா, யாரும் எதுவும் சொல்லல. சும்மா ஒருநாள் அவங்க அம்மா ஜாதகம் பாக்கப் போக மங்களம் தவிர்க்கச் சொன்னாங்களாம்”
“அப்படின்னா என்னங்க அத்த..., ஒன்னும் புரியல...”
“அதாவது உங்கத் தம்பி உயிரோட கொஞ்ச நாளைக்கு இருக்கணும்னா உங்க மகள சுமங்கலிய இருந்தாலும், ரொம்ப மங்களமா பூ வைச்சுக்கிறது, குங்குமம் நெறயா வச்சுக்கறதுன்னு இருக்க வேணாம்னு சொல்லியிருக்காங்க, அதத் தன் மக கிட்ட சொல்ல தாயா பூமயிலோட மனசு தாங்கல. அதனால சொல்லாம விட்டுட்டா. ஏதோ நெருங்குன சொந்தம் விசேசம்னு சொந்த ஊருக்குப் போகையில...”
“எப்பவும் போல கண்ணுக்கு மான் கொம்பு மையிட்டு, தலை நிறைய பூச்சூடி, முகம் நிறைய மஞ்சள் பூசி, அதன் நடுவே அழகாகப் பெரிய வட்டக் குங்குமப் பொட்டிட்டு, தன் மாமனுடன் கௌம்பிப் போயிருக்கா...”
“அப்பறம் என்ன ஆச்சு அத்த...”
“அன்னைக்குத்தான் அவள நாங்க அழகாப் பாத்தது. ம்… அன்னைக்கே அவ மாமனுக்கு ரெண்டாவது தடவ நெஞ்சு வலிக்கவும் ஆஸ்பத்திரியில கொண்டு சேத்து, உயிர் பொழச்சதே மறு பொழப்பாச்சு...”
“அப்ப விட்டவ தான். அதுக்கப்புறம் வெறும் மஞ்சக் கயிறுதான் வருசம் முழுக்க. இன்னைக்கு அந்த மஞ்சக் கயிறும் அவ மாமன் கால்கட்டுக்காச்சு...”
“கல்யாணத்தப் பேசும் போதே, மகனுக்கு ஒரு கால்கட்டு போட வேண்டியதுதானேன்னு ஊருபக்கம் சொல்வாக. அது இதுதான் போல, ஒரு பையன் கட்டுற தாலி, பிறகு அவனுக்கு கால் கட்டாகி இடுகாட்டுச் செல்கிறது...”
எது எப்படின்னாலும் இதுவரை விதவைக் கோலத்தில் வெளியில் தெரியாமல் வாழ்ந்தவள். இன்று நிஜ விதவையாகும்படி மாமன் இடுகாடு ஏகிவிட்டான்.
ஒரு பொட்டு மங்களமாய் ஒட்டிக் கொண்டிருந்த மஞ்சள் கயிறும் அவள் கண் முன்னே மாமன் காலோடு போவதைக் கூட பேச்சியால் பார்க்க முடியாமல், கண்கள் சொருக கீழேச் சுருண்டு விழுந்து கிடந்தாள்.