ஒரு விபத்தைப் பார்த்து அதன் கொடூரத்தை உணர்ந்து கொள்வது வேறு; ஆனால் விபத்தில் சிக்கி அந்தக் கொடூரத்தை அனுபவிப்பது வேறு. எதையும் அனுபவித்தால்தான் வலியும் வேதனையும் புரியும். இதை மீண்டும், மீண்டும் கூறிக்கொண்டிருந்தாள் கயல். அவளுடைய வேதனை அவளுக்கு. கயலுக்கு வயது நாற்பத்தைந்தைத் தாண்டி விட்டது. அவளுக்குக் குழந்தை இல்லை. அதை எழிலிடம் அடிக்கடிக் கூறிக் குறைபட்டுக் கொள்வாள் கயல்.
எழில், அழகுக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என ஆணும் பெண்ணுமாகப் பெற்றுக் கணவனுடன் நிம்மதியாகக் குடும்பம் நடத்தி வருபவள். இருவரும் லேக்சைட் தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகின்றனர்.
இருவரும் அன்று பேசிக் கொண்டேப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த ஏப்ரல் மாதத்திலும் வானம் சிறு சிறு மேகக்கூட்டங்களை முற்றுகையிட்டு எதற்காக விசாரணை நடத்தியதோ தெரியவில்லை. கண்ணீரைச் சொரிந்து மேகம் தன் துக்கத்தைத் தெரிவித்துக் கொண்டிருந்தது.
சிங்கப்பூரில் அவ்வப்போது மழை பெய்யும் என்பது தெரிந்ததுதான். தயாராகக் கைப்பைக்குள் வைத்திருந்த குடையை விரித்தபடி தோழிகள் இருவரும் நடந்து கொண்டிருந்தனர்.
‘எனக்கு என் வீட்டுக்காரர் துணை. என் வீட்டுக்காரருக்கு நா துணை. அவரை விட்டா எனக்கு யாரு இருக்கா சொல்லு’
‘நீ எங்கூட எவ்வளவு பழகியிருக்க.... ஏ யாருமே இல்லாதது மாதிரி பேசுற’
‘என்ன இருந்தாலும் எழில், பெத்த புள்ள மாதிரி சொந்தம், நட்புன்னு எதுவும் வருமா? நீயே சொல்லு.’
இது மாதிரி நேரங்களில் எழிலுக்கு என்ன சொல்வதென்றேத் தெரியாமல் போய்விடும். குழந்தை இல்லாத ஏக்கத்தைக் குழந்தை இல்லாத இன்னொரு பெண்ணால்தான் புரிந்து கொள்ள முடியும் போலிருக்கிறது என்று நினைத்தாள் எழில். பேருந்து வந்ததும் எழில் ஏறிச் சென்றாள்.
கயல் காத்திருந்தாள். காத்திருப்பது என்பது இன்று மிகவும் மாறிவிட்டது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால் சினிமாத் தியேட்டரில், மருத்துவரைப் பார்க்க என்று எல்லாவற்றுக்கும் வரிசையில் காத்திருந்து சென்ற காலமும் தலைமுறையும் மாறிவிட்டது.
இன்று காத்திருப்பதில் எல்லாம் காலம் வீணடிக்கப்படுவதில்லை. வயிற்றில் சுமக்காமலேயே பிள்ளை பெறும் அளவிற்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் முன்னேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால், பேருந்து கயலைக் காத்திருக்க விடவில்லை. திறன்பேசிச் செயலி காட்டியபடி அடுத்த இரண்டு நிமிடத்தில் கயல் வர வேண்டிய பேருந்தும் வந்து சேர்ந்தது.
கயல் ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் குடியிருக்கிறாள். அவள் பத்து வருடங்களுக்கு முன்புதான் சிங்கப்பூரின் நிரந்தரவாசி ஆனாள். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்த கண்ணன் இப்போது சொந்தமாக ‘ரெயின்போ லாஜிஸ்டிக்’ நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறான். கண்ணனுடைய தாய் சிறுவயதிலேயே இறந்து விட்டாள்.
கண்ணனையும் அவனுடைய தங்கையையும் அப்பா கண்ணாயிரம்தான் வளர்த்து ஆளாக்கினார். சிங்கப்பூர் வந்து கணவனும் மனைவியும் குடும்பம் நடத்துவதற்குப் படாதபாடுபட்டுவிட்டனர். குறைந்த வருமானத்தில் கண்ணன், சிங்கப்பூரில் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தபோது கயலுக்கு வேலை கிடைக்கவில்லை. கண்ணனின் ஒற்றை வருமானத்தில்தான் குடும்பமே ஓடியது. அப்போது ஊரில் இருக்கும் அப்பாவுக்குப் பணம் அனுப்ப முடியாது. பலமுறை நண்பர்களிடம் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு ஆளாகி இருக்கிறான் கண்ணன். இந்தப் பொருளாதர நெருக்கடியை விட, குழந்தை இல்லை என்று கயல் விடும் கண்ணீர் கண்ணனைத் திக்குமுக்காடச் செய்து விடும். நகைகளை அடகு வைத்துக் கயலுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறான். இளங்கலை வேதியியல் படித்திருந்த கயலுக்கு ஏதாவது வேலை கிடைத்தால் குடும்பம் நடத்துவது எளிதாக இருக்கும் என்று நினைத்தான். ஆனால், அவன் நினைத்தபடி அவளுக்கு
ஏற்றவேலை ஒன்றும் கிடைக்கவில்லை. கொஞ்சநாள் கழித்து சமாளிக்கவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டான் கண்ணன்.
அப்போதுதான் எதிர்பாராதவிதமாக லிட்டில் இண்டியா கடைத்தெருவில் எழிலைச் சந்திக்க நேர்ந்தது கயலுக்கு. இருவரும் திறன்பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டனர்.
நட்பு வளர்ந்தது. எழில் கொடுத்த ஆலோசனையின் படி ஊருக்குச் சென்று இளங்கலை தமிழ் பட்டப்படிப்புப் படித்து விட்டு வந்தாள் கயல். சில ஆண்டுகளுக்குப் பிறகு கயலுக்கு ஜூரோங் வெஸ்ட் பள்ளியில் தமிழாசிரியாரகப் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.
அதன்பிறகுதான் அவர்களுடைய குடும்பக் கஷ்டம் தீர்ந்தது. ஐந்தாண்டுகள் கழித்து எழில் பணிபுரியும் லேக்சைட் பள்ளிக்கே பணிமாற்றம் பெற்றுக்கொண்டு வந்து சேர்ந்தாள் கயல். அதற்குப் பின் இருவரும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இன்னும் அதிகரித்தது.
பள்ளியில் பயிலும் சிறு குழந்தைகளைப் பார்க்கும் போதும் கர்ப்பிணிகளாக இருக்கும் பெண்களைப் பார்க்கும்போதும் கயலின் மனது அடித்துக் கொள்ளும். இறக்கி வைக்கவே முடியாத சுமையாக அவளுடைய மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது.
அவ்வப்போது குழந்தை இல்லையென்று கணவன் மனைவிக்குள் சண்டை வந்து போகும். அது அவளுடைய மனத்தை இன்னும் ரணமாக்கிக் கொண்டிருந்தது. எவ்வளவு சண்டை வந்தாலும் கண்ணனுடன் அவள் உடனே சமாதானமாகி விடுவாள். ஏனெனில், அவ்வப்போது தொலைபேசியில் பேசும், கண்ணனின் தங்கை ஏதேனும் தூபம் போட்டுவிட்டால் இருக்கிறப் பிரச்சினையில் இன்னும் பிரச்சினை வேறு வந்து சேரும். வீடு வந்த கயல், கண்ணன் யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டாள்.
‘நான்தான் எல்லா மாதமும் பணம் அனுப்புகிறேனே. மாத்திரை தீர்ந்துவிட்டால் மருந்துக் கடையில் வாங்கி சாப்பிடுவதுதானே’
‘ஓ…. அப்படியா. சரி.... சரி’
‘ எப்போ? ரெண்டு நாளைக்கு முன்னாடியா?’
‘ம்ம்..... ரசம் வைத்துச் சாப்பிட்டீர்களா?’
‘சரிப்பா…..தங்கச்சிய வந்து பாக்க சொல்றேன். ஒடம்ப பாத்துக்கோங்க’
கண்ணன் பேசுவதிலிருந்து ஊரில் இருக்கும் மாமனார்தான் போனில் என்பதைப் புரிந்து கொண்டாள் கயல்.
‘என்னவாம்?’ என்று கேட்டாள் கயல்.
‘ஒன்னுமில்ல.... அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லயாம். பாவம் அம்மா இல்லாம அப்பா தனியாளாக் கிடந்து எத்தன வருஷமா கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிறாரு’
‘ஆமா... அதுக்கு நாம என்ன பண்றதுங்க... அவருக்கும் வயசாயிட்டுது இல்லையா... இனிமே இப்படிதா அடிக்கடி ஒடம்பு சரியில்லாம போகும்’ என்றபடி அறைக்குள் சென்றாள் கயல்.
எப்போதும் போல வேலைக்கும் வீட்டுக்குமாகவே இருவருக்கும் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அன்று, ஞாயிற்றுக்கிழமை. தொலைக்காட்சியில் இன்னிசைத் தென்றல் தேவாவின் இசைக் கச்சேரி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இருவரும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கயலுக்கு அருகில் இருந்த கண்ணனின் தொலைபேசி ஒலித்தது. அதைப் பார்த்தாள் கயல். தொலைபேசி கண்ணனை அழைப்பது அவனுடைய தங்கை என்பதைக் காட்டியது. கயலுக்கு என்னவோ போலாகிவிட்டது.
அவள் கண்ணனிடம் எதையாவது போட்டுக் கொடுக்காமல் இருக்கமாட்டாள். இருந்தாலும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல், தொலைபேசியைக் கண்ணனிடம் கொடுத்தாள் கயல்.
‘என்ன?...அப்படியா? ம்...’
‘எப்போ? .....சரி’
‘எந்த டாக்டர்கிட்டே? .....சரி ... அப்படியா?
சிறிது நேரத்தில் தொலைபேசியை வைத்தான் கண்ணன்.
‘என்ன விஷயம்?’ என்றாள் கயல்.
‘அப்பாவுக்கு உடம்பு ரொம்ப சரியில்லையாம். இனிமே பிழைக்க மாட்டார் என்கிறாள் என் தங்கை. அவருக்கும் எண்பது வயசுக்கு மேல ஆகுதில்லையா?.... நா உடனே ஊருக்குப் போகணும். நீயும் எங்கூட வர்றியா?’ யோசித்தாள் கயல். அவளுக்குப் பள்ளியில் முக்கியமான நேரம் அது. தொடக்கநிலை ஆறு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ஆரம்பிக்கப் போகிறது. பிறகு, தயக்கத்துடன் கூறினாள்,
‘மாமா… என்னால இப்போ வரமுடியாது… பொதுத்தேர்வு நேரம் இது. நீங்க போங்க... ஒரு பத்து நாள் கழிச்சு நான் வர்றேன்’
கயலின் நிலையை உணர்ந்த கண்ணன், பத்து நாள் கழித்து வரும்படி அவளுக்கு டிக்கெட் போட்டுவிட்டுத் தான் மட்டும் கிளம்பி ஊருக்குச் சென்றான்.
***** *****
சுருங்கிக் கிடந்த படுக்கையில் படுத்திருந்தார் அப்பா, படுக்கையைப் போலவே சுருங்கிப்போன தோலுடன். கடைசி வரைக்கும் காட்டுக்கும் வீட்டுக்கும் வேலை செய்த உடல் கசக்கிப் பிழிந்த துணியாய்க் கிடந்தது கட்டிலில். ஈக்கள் ஆங்காங்கே மொய்த்துக் கொண்டிருந்தன. பக்கத்துத் தெருவில் குடியிருந்த மூக்காயி கிழவி, கண்ணாயிரத்தின் கையைப் பிடித்து நாடி பார்த்து விட்டுக் கூறினாள்.
‘இன்னைக்கு ராத்திரியத் தாண்டாது....அப்பே, ஒ அப்பனோட மொகத்த பாத்துக்க அப்பே’
‘அப்பா…. அப்பா.... ஒம் மகன் வந்துருக்கேன்பா...’ என்றான் கண்ணன்.
‘கண்ணு…ஒங்க அப்பனுக்கு நெனவு தப்பிருச்சு கண்ணு’ என்றாள்.
செங்கமலம் அத்தாச்சி பெற்றெடுத்த பிள்ளைகளை மனைவி இல்லாமல் ஒற்றை ஆளாக நின்று வளர்த்தெடுத்தவர் கண்ணாயிரம். சிங்கப்பூருக்குச் சென்ற மகன் எப்போதாவதுதான் வருவான். ஆனமட்டும் தனியாகச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கண்ணாயிரத்தின் கைகளும் உடம்பும் தளர்ந்துவிட்டன.
காரை பெயர்ந்து போயிருந்த அந்த வீட்டின் கூரை, முன்புறத்தில் தொய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. வீட்டு வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தான் கண்ணன், அப்பாவின் கடைசி மூச்சிற்குக் காத்துக் கொண்டு....
***** ******
அப்பாவின் காரியம் முடிந்து ஒரு மாதம் கழித்து..... கண்ணனும் கயலும் மருத்துவமனையில் செக்அப்பை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கயல் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
‘கயல் அழுவாதே ….. குழந்தை இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்ன? உனக்கு நான் துணை; எனக்கு நீ துணை’ என்று கூறி கயலை ஆறுதல்படுத்த முயன்று கொண்டிருந்தான் கண்ணன்.
‘சும்மா ஏதாவது சொல்லணுங்கிறதுக்காக நீங்க சொல்லாதீங்க. நாம ரெண்டு பேருக்கும் சாவு, சொல்லி வெச்சுகிட்டு ஒண்ணாவா வரும். கடேசிக் காலத்துல நம்மளுக்கு சோறு போட, பாத்துக்கிட ஒரு புள்ள வேணாமா?’ என்று வேதனை தோய்ந்த குரலுடன் கூறினாள் கயல். அவளுடைய கையை ஆதரவுடன் பற்றிய கண்ணன்,
‘இங்க பாரு கயல்… என்ன செலவானாலும் பரவாயில்ல. ஒனக்கு நிச்சயமா வைத்தியம் பார்த்து, குழந்தை பெத்துக்கிறதுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யப் பார்ப்போம்’ ........என்று தொடர்ந்து பேசி கயலுக்குத் தெம்பூட்டிக்
கொண்டிருந்தான்.......தந்தையை உடனிருந்து பார்க்க மறந்த அந்தக் கண்ணன்.
பேருந்து வெவ்வேறு கதைகளோடு பயணித்துக் கொண்டிருந்த பயணிகளைத் தாங்கியவாறே அடுத்த நிறுத்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.