இந்திரபுரி.
வசந்த காலம். இனிய பொன்மாலைப் பொழுது.
மேற்கு வானில் தினகரன் தகதக எனத் தங்கத் தாம்பாளமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தான். தன் இரு கரம் நீட்டி அவனைக் கலவி மயக்கத்தால் தழுவிட வேண்டும் என்று வெள்ளாடை கட்டிய மேகப் பெண் ஓடித் திரையிட்டு அழகு முகம் காட்டுகிறாள். தென்றலோ மழலையின் தளிர் நடை நடந்து காண்பவரை எல்லாம் காண்பவற்றை எல்லாம் தன் ஸ்பரிசதால் கிலுகிலுப்பூட்டிக் கொண்டிருந்தது. பச்சைப் புல்வெளிகளும் வானுயர்ந்த சோலைகளும் மலர்க் கூட்டங்களும் சற்று முன் பெய்த அமுத மழைச் சாரலில் நனைந்து ஆதவன் ஒளித் தெறிப்பினால் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.
இந்திரலோகத்து மாந்தருக்கோ இரவு வரும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லை. இப்போதே களியாட்டங்களில் இறங்கி விட்டார்கள்.
சோமபானக் கோப்பைகள் ஒன்றோடொன்று மோதுமொலி இந்திரலோகத்து அழகு தேவதைகளின் சலங்கை ஒலியோடு கலந்து கதம்பமாய் ஒலிக்கிறது. சாத்திரிய நடனத்தில் வெறுப்புற்ற இளைஞர் கூட்டம் ஒன்று அத்தேவதைகளின் சிற்றிடைகளைத் தழுவி வினோத நடனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. ஆனால் மேனகை ரம்பையின் சாஸ்திரிய நடனத்தில் இன்றும் திளைக்கும் ஒரு கூட்டமும் இல்லாமலில்லை.
அக்கூட்டத்தில் சிலர் பல்லியங்களைத் தம் கைகளிலேந்திச் சுருதி பிசகாத இசை மழை பொழிந்து கொண்டிருந்தனர்.
அப்பப்பா...! இன்பத் தெவிட்டல் என்பது இதுதானோ-- ?
ஆனால் அந்தக் களிப்பாட்டங்களின் நிழல் கூடப்படுவது தோசம் என்று கருதுவது போல இளைஞர் குழு ஒன்று ஒதுங்கியிருந்தது. இந்திரலோகக் காலக் கணிப்பில் ஏறத்தாழ இருபத்தைந்து நாட்கள் இருக்கக்கூடுமோ...?
ஆனால் இவர்களுக்கு இந்திரலோகக் கணிப்பு பற்றிய பிரக்ஞை இருப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் பூலோகக் காலக் கணிப்பையே தமதாய்க் கொண்டிருந்தனர்.
இவர்களுக்காய் ஒரு நல்ல செய்தியை ஏந்தி வந்த நான் சற்றுத் தயங்கி நிற்கின்றேன்.
அவர்களிடத்தில் ஏன் இந்தப் பரபரப்பு...?- நான் கொண்டு வந்த செய்தி பற்றி முன்னரே இவர்கள் அறிந்திருந்தார்களா ?.அவர்களை நெருங்குகிறேன். உண்மை புலப்படுகிறது.
இரண்டு அக்கினிக் குஞ்சுகள் ஒன்றை ஒன்று தழுவுகின்றன. அந்த ஒளி என் கண்களைக் கூச வைத்தது. அனால் அதன் வெப்பம் என்னைச் சுடவில்லை. தமிழகத்தில் விடுதலைத் தீயை ஒளிரச் செய்த முத்துக்குமரனும் புலத்தில் அத்தீயை வளரவிட்ட முருகதாசனும் ஒருவரை ஒருவர் இறுகத் தழுவிக் கொண்டிருந்தனர். இவர்களிடந்தான் என்ன பெயர்ப் பொருத்தம்...?
முத்துக்குமரன் முருகனின் பெயர். அவனது கொள்கைக்குத் தாசன் முருகதாசன். என்னுள் வியப்பு.
ஏனோ என் கண்கள் சட்டென்று திரும்பித் திலீபனையும் அன்னை பூபதியையும் நோக்குகின்றன. அவர்கள் கண்களில் கண்ணீர்க் கோவைகள். என் கண்கள் மேலும் அவர்களை ஊடுருவுகின்றன. அந்தக் கண்ணீருக்குப் பின் சோகமும் விரக்தியியும் தெறிக்கின்றன. இவ்விருவரும் இங்கு வந்த போது மகாத்மாவின் கண்களிலும் இத்தகைய உணர்வுகள்தானே வெளிப்பட்டது. அதன் காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். தம்மையே திரியாக்கியாவது உலகுக்கு ஒளி தந்திட வேண்டும் என்று தியாகத்தின் எல்லைக்குச் சென்றாலும் அதனைப் பூலோகம் கணக்கில் எடுக்கவில்லையே... அகிம்சை இன்று செல்லாக் காசாகி விட்டதே? என்ற எண்ணத்தின் வெளிப்பாடுகளை அவர்கள் கண்கள் நன்கு பிரதிபலித்தன.
சில கணப் பொழுதுகள் அக்கினிக் குஞ்சுகளின் தழுவல் நீடிக்கிறது. வார்த்தைகளில் சிக்காத எத்தனையோ விடயங்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர். தழுவழின் இறுதியில் எதேச்சையாகத் திரும்பிய முருகதாசனின் கண்கள் வியப்போடு விரிகின்றன.
பாரதி...! மகாகவி...! -ஓடி வந்து என்னைத் தழுவிக் கொள்கிறான்.
என் தேகம் மின்சாரத்தைப் பாய்ச்சினாற் போல் சிலிர்க்கிறது. மகன் தந்தையைத் தழுவியது போன்ற பரவசம... பாசம் எம் இருவரிடையேயும் ஊற்றெடுக்கிறது.
“பாரதி...நீ ஏன் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாடினாய்...?”-திடீரென இக்கேள்வி அவனிடமிருந்து பிறக்கிறது. அதில் கோபமும் கூடவே தொனிக்கிறது. ``செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது“ என்று ஆராக் காதலுடன் பாடிய நான் அன்றைய நிலையில் இந்திய தேசியக் கருத்தினைக் கொண்டிருந்தேன். முப்பதுகோடி மக்களையும் இந்தியத் தாயின் மக்களாகவே கருதியிருந்த காலம். வெள்ளையனிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனதும் கருத்தும் கனவுமாய் இருந்த காலம். இந்நிலையிலேயே பெரும்பான்மை நோக்கி.”சிங்களத் தீவு` என்று இலங்கையைக் குறுப்பிட்டிருந்தேன். இதனூடாக ஈழத் தமிழர்களின் தாயக உரிமையை மறுத்தேன் என்ற கருத்துக்கு இடமேயில்லை. ஆனாலும் இன்றைய நிலையில் அது எத்தகைய பாதிப்பை எற்படுத்தியிருக்கிறது என்று எண்ணுகையில் மிகவும் வருத்தம் ஏற்ப்படுகிறது. அதற்காக அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
முருகதாசனைத் தொடர்ந்து தமிழ் வேந்தனும் சொர்க்கம் வந்தபோது, வன்னிப் பேரவலம் கணத்துக்குக் கணம் அதிகரித்த போது மாவீரர்கள் முற்றாகவே பொறுமை இழந்திருந்தனர். அவர்கள் கண்கள் சினத்தால் சீறின. உள்ளக் கொதிப்பால் போங்கிப் போனார்கள்.
முத்துக்குமரன் வருகை தந்த போதே பெரும் ஆர்ப்பாட்டம் செய்து அதன் முடிவில் இந்திரனிடம் மனுச் சமர்ப்பித்திருந்தனர். பரமசிவனைச் சந்திக்க வேண்டுமென்பது அவர்களது பிரதான கோரிக்கையாக இருந்தது. அதன் பின்பு வைகுண்டாதிபதிக்கும் இந்திரனூடாக மனு வழங்கப்பட்டாகி விட்டது. எங்கிருந்தும் பதில் கிட்டவில்லை.இந்திரன் மனுக்களை உரியவர்களிடம் சமர்பித்தானா என்பது மிகுந்த சந்தேகமானதாகவே இருந்தது.
சொர்க்காதிபதிக்கு இந்த மாவீரர்களிடம் அசூசை. அதற்கு அவன் வரையில் காரணங்களும் இருந்தன. இந்திரன் இதுவரை இரண்டு தரப்பினரையே தன் ஆட்சியில் சந்தித்திருக்கிறான். ஒரு பகுதியினர் இந்திரலோகத்தின் இன்பத்தில் மூழ்கித் திளைப்பவரகள். மற்றையவர்கள் சிற்றின்பச் சிருங்காரங்களை வெறுத்தொதுக்கி இந்திரலோக மலைச் சாரல்களில் யோக தவ முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். பரமுத்திக்காகக் காத்திருப்பவர்கள்.
இந்த இரு பகுதியினராலும் இந்திரனுக்குத் தொல்லையில்லை. இந்த இருவகையினரையும் சாராது மாவீரர் ஆர்ப்பாட்டம் என்றும் உண்ணா விரதம் என்றும் சொர்க்கத்திலும் குழப்பம் விளைவிக்கிறார்களே என்ற கடுப்பு. அதே சமயம் மிகவும் நிதானமாக ஆராய்ந்து கொள்கையை உறுதியாகவும் இறுதியாகவும் வகுப்பது, மலையே எதிர்த்தாலும் கடலே பொங்கி நின்றாலும் அந்தக் கொள்கையில் நின்று எள்ளளவும் விலகாதது என்பன சாதாரண விசயமில்லை என்பது அவனுக்கு நன்கு தெரியும். அரசியல் வாதிகளில் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காட்டினருக்குக் கைப்பாடாத விடயம் கொள்கை விலகாமை. சொர்க்கம் வந்தும் தமது கொள்கைகளில் விலகாது இருப்பார்களாயின் இவர்களை வழிநடத்திய தலைவன் எவ்வளவு உறுதியானவனாய் உயர்ந்தவனாய் இருக்க வேண்டும்?-இந்திரனால் இது குறித்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
எவ்வாறாயினும் ஆதிக்க வர்க்கத்தின் குணாம்சமோ என்னவோ பூலோக சர்வதேசத் தலைவர்கள் போலவே மாவீரர்களின் வேட்கையையும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களது நியாயப்பாட்டையும் நன்கு புரிந்திருந்த போதும் சொர்க்காதிபதியும் இவர்களின் மனுக்களைக் கிடப்பில் போட்டு விட்டான்.
தேவர்களை ஆட்டிப்படைத்த இராவணனின் வழித்தோன்றல் இவர்கள் என்ற காழ்ப்புணர்ச்சியும் பழியுணர்ச்சியும் இத்தகைய செயலுக்குக் காரணம் போலும். அல்லாமலும் இவர்களது தலைமைப் பண்பும் தீரமும் தனது தலைமைக்கு தனது ஆதிக்கத்துக்கு ஒரு காலத்தில் கேடாக அமைந்துவிடுமோ? என உள்ளூரப் பயமும் கொண்டிருந்தான். அப்பயத்தை அவர்கள்மீது வெறுப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
அதனால் இனி வரும் காலங்களில் வைகுண்டாதிபதிக்கோ அல்லது கைலாசபதிக்கோ மனுக்களை வழங்க வேண்டுமாயின் திரிலோக சஞ்சாரியான நாரத முனியிடம் வழங்குமாறு நான் மாவீரரிடம் கூறியிருந்தேன்.
ஆனால் நாரதர் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையும் சிவனும் பெருமாளும் வருடத்தில் ஒரு தடவையும் இந்திரலோகம் வருவது வழமை. அந்த வகையில் பூலோகக் கணிப்பின் பிரகாரம் நாரதரின் இந்திரலோக வருகைக்கு முப்பது ஆண்டுகளும் சிவனது வருகைக்கு நூற்றைம்பது ஆண்டுகளும் இருந்தன. அதுவரை காத்திருப்பது என்பது போராளிகளைப் பொறுத்தவரை நினைத்துப் பார்க்க முடியாததாயிருந்தது.இதனால் இந்திரனை மசியவைக்கத் தமது போராட்டத்தின் வீச்சை மிக வலுப்படுத்த எண்ணியிருந்தார்கள்.
இந்நிலையிலேயே நான் இவர்களுக்கு மிக ஆறுதல் தரத்தக்க செய்தியை அறிந்து வந்திருந்தேன். நாரதர் திடீர் விஜயமாக இந்திரலோகம் வருகிறார் என்ற செய்தியை அவர்களுக்கு அறிவித்த போது விடுதலைக்கான தூரம் அதிகம் இல்லை என்பதை உணர்ந்தவர்களாய் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
நாராயணா! நாராயணா! என்ற கீதம் மிக அருகில் கேட்கிறது. இசையின் பூரணம் அக் குரல் வளையில் இருந்து பிறந்து அவ்விடத்தை நிறைக்கிறது.
எம்முன் நாரதர். ஜால்ராக் கடையுடன் உயர்ந்த முடியினராய், கைகளில் வீணை ஏந்தியவராய், பொதுவாகச் சினிமாவிலும் நாடகத்திலும் பார்த்த நாரதராய் அவர் இருக்கவில்லை.
கண்களில் சதா தேடுதல். உண்மயை நாடியதாய், அகஜபானுவாய் நாரதர் எம்மை நோக்கிப் புன்னகையுடன் கைகூப்புகிறார்.
“என்ன பாரதி, தீவிரவாதிகளுடன் கூடிச் சதித் திட்டமா?”
அவரது கேள்வியே அவரை கண்ட போது ஏற்பட்ட இன்ப அதிர்வில் இருந்து எம்மை மீட்டெடுக்கிறது.
“நியாயத்தை காப்பதற்காய் பல்வேறு போராட்டத்தின் தோல்விக்குப் பின் ஆயுதத்தைக் கையில் ஏந்தியவர்களுக்குச் சுலபமாய் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி விடுகிறீர்கள்...” சற்றுக் கடுப்புடன் என் பதில் அமைகிறது.
“கோபிக்காதே பாரதி, பூலோகத்தில் சஞ்சாரம் செய்து வந்ததால் பழக்க தோசத்தில் அப்படிச் சொல்லி விட்டேன். ஆனால் இந்திரன் இவர்களைப் பயங்கரவாதிகள் என்றல்லவா எனக்கு அறிமுகப்படுத்தினான்.”
நாரதர் கலகத்தை ஏற்படுத்த இவ்வாறு கூறுகிறாரா?புருவம் உயர்த்தி அவரை நாம் நோக்குகிறோம்.
“நான் சொல்வது அத்தனையும் உண்மை நண்பர்களே... இந்திரனிடம் மகாசிவன் திடீர் விஜயமாக இந்திர லோகம் வருகிறார் என்ற செய்தி தாங்கிய ஓலையைச் சமர்ப்பித்தேன்.”
“பரமசிவன் இந்திரபுரி வருகிறாரா...?” வியப்பும் ஆனந்தமும் போட்டியிட நாம் நாரதரைப் பார்த்து வினவுகிறோம்.
நாரதரின் இதற்கிடையில் ஒருவிதமான புன்னகை ஓடுகிறது.
“நீங்கள் ஆனந்தத்தில் திளைக்கிறீர்கள். ஆனால் இந்திரனோ இச்செய்தி கேட்டு ஒரு கணம் நடுங்கிப் போனான். பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டு தனது மந்திரிகளைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தத் தொடங்கி விட்டான். அது தொடர்பாகத்தான் நான் உங்களைக் காண வந்தேன்.”
“உங்கள் கூற்றில் உள்ள அர்த்தம் எமக்குப் புரியவில்லையே...” கலகதாரியான நாரதரின் மேலதிக விளக்கத்துக்காகக் காத்திருக்கிறோம்.
“பரமசிவனது இந்திரபுரி விஜயத்தை மாவீரருக்குத் தெரியாதவாறு முற்றாக இருட்டடிப்புச் செய்ய இந்திரன் முயலுகிறான். பரமசிவனைத் தரிசிக்கும் தேவையோ தகுதியோ அவர்களுக்கு இல்லை” என்று இந்திரன் தனது மேல்மட்டக் குழுவிடம் கூறிக் கொண்டிருந்தான்.
பூலோகத்தில்தான் எமக்கு நியாய நீதி கிடைக்கவில்லை. இங்குமா ஆதிக்கத்தின் இரும்புக் கரங்கள் எங்கள் கழுத்தை நெரிக்க வேண்டும்?” எமது கோபத்தையும் மீறி ஆற்றாமை மேலிடுகிறது.
எமது உள்ளத்தீயில் நெய்யை வார்ப்பது போல நாரதர் கூறிக் கொண்டு போகிறார்.
“சிவனது வருகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே இந்திரபுரி விழாக் கோலம் பூண்டு விடும். இந்திரபுரியின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இன்ப அதிர்வுகள் எதிரொலிக்கும். இந்திரன் சிவனை வரவேற்க எடுக்கும் எடுப்புகளிருக்கிறதே... முன்னைய நினைவுகளில் ஆழ்ந்த நாரதரிடம் நக்கல் சிரிப்பொன்று தோன்றி மறைகிறது. சில கணப்பொழுதுகளில் அந்த நினைவுகளில் இருந்து மீண்டவராய்... இந்த முறை சிவனது வரவேற்பு இந்திரனின் அரண்மனையுடன் முடிவடைந்து விடுகிறது.” என்று கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று தெரியாது நாம் விழி பிதுங்குகிறோம்.
“பரமசிவன் இந்திரலோகம் வரப் பலகாலம் ஆகும் என்பதால் அதற்குள் மாவீரர்களின் குரலை அடக்கி ஒடுக்கி விடலாம் என்ற எண்ணத்தில் அவரது மனுக்களைக் கிடப்பில் போட்டு விட்டான் இந்திரன். தமது கடமையில் இருந்து தவறுபவர்களுக்கு உருத்திரன் வழங்கும் தண்டனை எத்தகையது என்பதை பல தடவைகள் அனுபவரீதியாக உணர்ந்தவன் இந்திரன். அதனால் மாவீரர் விடயத்தில் உருத்திரனின் நெற்றிக்கண் தன்பால் திரும்பி விடுமோ என்று நடுநடுங்குகிறான். அதனாலேயே சிவனது வருகையை மாவீரரிடமிருந்து மறைக்கப் பகீரதப்பிரயத்தனம் செய்கிறான். இது குறித்து உசார்ப்படுத்தவே நான் இங்கு வந்தேன்.”
தமது கடமை நிறைவேறியதாய்க் கருதி நாரதர் எம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
பரம்பொருள் இந்திரனது அரண்மனைக்கு வரும் பொழுது உண்ணாது உறங்காது சாத்விகப் போராட்டத்தை மேற்கொள்வது என்றும் தமது கோரிக்கைகளை உறுதியுடன் முன்மொழிவது என்றும் மாவீரர்கள் தீர்மானத்துக்கு வருகிறார்கள்.
ஆனால் அடுத்த நாழிகைப் போழுதிலேயே அதற்கான தேவை இல்லாது போயிற்று. கன்றின் அவலக் குரல் கேட்டுப் பசு ஓடி வருவது போல அவர்கள் முன் அழிவில்லாத பேரொளிப் பிளம்பாய் பரமசிவன் தரிசனமானார்.
அந்த எதிர்பாராத பிரசன்னத்தால் மாவீரர் மட்டுமன்றிச் சொர்க்காதிபதி கூடத் திகைத்து நிற்கின்றான். மாவீரரின் வேண்டுதலை நிறைவேற்றவே சிவன் அங்கு வந்தார் என்பதை புரிவதற்கு அங்குள்ளவர்களுக்குச் சிலகணப் பொழுது வேண்டியிருந்தது.
பேரொளியின் முன் போலிகள் யாவும் சூரியனைக் கண்ட பனித் துளியாய் மறைந்தன. உள்ளத்துணர்வுகளையும் கருத்துகளையும் மறைத்து வாயும் கண்ணும் பேசும் நிலைக்கு அங்கு அறவே இடமிருக்கவில்லை.
உண்மை எந்த அலங்காரமும் இன்றி அம்மனக் குழந்தையாய்க் கிடந்தது. முக்காலமும் முழுமையும் உணர்ந்த மும்மூர்த்திகளில் ஒருவரான உருத்திரனுக்கு எது பற்றியும் யார் பற்றியும் எடுத்துரைக்கும் தேவை வேண்டுவதோ..?
ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு. அதன் பயனைக் காலம் அதனதனிடத்துக் காவிச் சென்றளிக்கிறது. இந்த மாறா விதிக்கு மூவுலகிலும் எவையும் எவரும் விதிவிலக்கில்லை. ஈழ விடுதலைக்கு இன்று காலம் கனிந்து வந்திருக்கிறது, பேரோளி வடிவினரான உருத்திரன் மாவீரருக்கு உணர்த்தியவை இவையே.
ஆனால் மாவிரரின் உள்ளக்கிடக்கைய...பரமசிவனே அவர் தம் வேண்டுதலால் ஒரு கணப் பொழுது செயல்ற்றவரானார், எல்லாம் இயல்பின்படி நடக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்தக் கணிப்பு இங்கு தலைகீழ் விகிதமாய்க் கிடந்தது.
பொதுவாகச் சொர்க்கத்தை அடைந்தவர்கள் பரமசிவனிடத்து வேண்டி நிற்பது சிவனும் தாமும் வேறு என்ற பேதமின்றி இறண்டறக் கலக்கும் வீட்டு நிலையையே. துன்பங்கள் சிறிதும் அணுகாத பேரின்ப நிலை. கடவுள் பதவியை வேண்டி நிற்பவர்களிடையே மனிதப் பிறவியை அவாவி நிற்கும் இவர்களது மனநிலை இந்திரனையே இவர்கள் பால் தலை சாய்க்க வைக்கிறது.
தனித் தமிழீழத்தில் பிறந்து தவழ்ந்து சுதந்திரக் காற்றைச் சுகிர்ப்பதையே யாசித்து நிற்கும் அவர்களது கனவு நிறைவேற வரம் அளித்தவராய் சிவன் கைலாயம் திரும்புகிறார், இந்திய தேசம் சுதந்திரமடையும் முன்பே ஆடுவோமே... பள்ளுப் பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் கிடைத்தது... என்று பாடிய எனது மனநிலையும் அன்று இந்த மாவீரரின் எண்ணத்தை ஒத்திருந்தது கண்டு என்னுள்ளத்தில் களிப்பு.
ஆனால் இந்திய சுதந்திரத்தின் பின் நிகழ்ந்த அவலங்கள், பாகிஸ்தான் பிரிவினை. இந்து முஸ்லீம் கலவரம. மகாத்மாவின் படுகொல. அகிம்சை பிறந்த தேசத்திலேயே அது செத்து மடிந்த போது எனது எண்ணத்தில் மாற்றம் நிகழ்ந்து விட்டது.
அத்தகைய அவலம் ஈழ மண்ணில் நிகழாது என்பதற்கு அவர்களுக்குக் கிடைத்திருக்கும் தலைவன் ஒருவனே மாறாத சாட்சியாய் இருக்கிறான். என்னுள் நிம்மதி.
மாவீரர் தாம் ஈழத்தில் பிறக்கவிருக்கும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்திரலோகத்து நாட்களையல்ல வழமை போல் பூலோக நாட்களையேதான்...