அவனை இப்படி ஒரு தடவை பார்க்க முடியும் என்று கற்பனையில் கூட அவள் நினைத்துப் பார்க்கவில்லை. எந்த இடத்தில் இதற்கு முன்பு அவனைப் பார்த்தோம் என்று? எவ்வளவு முறை யோசித்துப் பார்த்தாலும் சரியாக ஞாபகத்திற்கு வரவில்லை. ஏதோ ஒரு நாள் கண்ட கனவில் அவன் வந்ததாக இருக்கலாம். எத்தனை முறை நினைத்துப் பார்த்தாலும் கொஞ்சம் கூட ஞாபகம் வரவில்லை.
அன்றைக்கு வந்த கனவில் அவளும் அவனும் மட்டுமே இருந்தார்கள். உள்ளுக்குள் ஆழ்ந்து இறங்கி மனிதனை அப்படியே விழுங்கிவிடுவது போல ஒரு பார்வை. அவனுக்கு இதெல்லாம் புரிகிறதோ என்னவோ? வெட்டித்தனமான இந்த யோசனைகளை நினைத்து அனுவிற்கு சிரிப்புதான் வந்தது. உடனே அவன் பக்கத்தில் வந்து கேட்டான்.
“அனுதானே?”.
“ஆமாம். ஆனா நீங்க யாருன்னு எனக்குத் தெரியல”. அவள் சொன்னாள்.
“என்னை ஞாபகமில்லயா? ஒரு கனவிலாச்சும் பார்த்த ஞாபகம்?” அவன் கேட்டான்.
அவளுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஒருவேளை தான் கண்ட கனவில் வந்ததாக இருக்குமோ? என்று நினைத்தாள்.
“நான் ஒரு முட்டாள். நான் பாத்த கனவு அந்த ஆளுக்கு எப்படித் தெரியும்?”
அவள் சொன்னாள், "தப்பா நினைக்காதீங்க. கொஞ்சநாள் முன்னால நான் கண்ட கனவுல நீங்க வந்தீங்க”
அவன் சொன்னான். “ஆமாம். நான் கண்ட கனவுலயும் நீங்க வந்தீங்க. அதுல உங்க பேரு அனு”
இப்ப எதிர்பாராம உங்களைப் பாத்தப்ப தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சு கேட்டேன்”. அவனுடைய சிரிப்பு அழகாக இருந்தது.
அவள் கண்ட கனவில் வந்த அதே சிரிப்பு.
ஆனால் அவனை கனவில் பார்த்ததைப் பற்றி அவள் அப்போது அவனிடம் சொல்லவில்லை. “பேரு என்ன? எவ்வளவு யோசிச்சாலும் ஞாபகத்துக்கு வரல”
அவள் வாய் விட்டுப் பேசியதைக் கேட்டு அவன் பெரிதாக சிரித்தான்.
“நான் கண்ட கனவுல என்னோட பேர உங்ககிட்ட சொல்லியிருந்தேன். அப்புறம் எப்படி அது மறந்துபோச்சு? யோசிச்சுப் பாத்தாலும் ஏன் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது?”
இதைக் கேட்டு அவளும் லேசாக சிரித்தாள். திடீரென்று அவளுடைய நினவில் நிறைவான ஒரு ஒளி படர்ந்தது. அவளையும் அறியாமல் அவள் கேட்டாள். “விஜய்தானே உங்க பேரு?”
இந்த முறை அவன் வாயைப் பிளந்துகொண்டு நின்றான். நம்பிக்கை ஏற்படாமல் அவன் கேட்டான். “என்னோடப் பேரு எப்படி புரிஞ்சுச்சு?”
“முன்னாலயே என்னை உங்களுக்குத் தெரியுமா?. கனவுலதானே என்னைப் பாத்ததா சொன்னீங்க?”. அப்போதும் அவனுக்கு ஆச்சரியம் நீங்கவில்லை.
மறுபடியும் அவன் கெஞ்சினான். “ப்ளீஸ். என்னோட பேரு எப்படித் தெரியும்? கொஞ்சம் சொல்லுங்க”
ஆதிக்க மனப்பான்மையோடு மீண்டும் சொன்னாள். “சொன்னேனில்லயா? கனவுல சொன்னதா?”
கடைசியில் அவனுடைய வற்புறுத்தலுக்கு அடிபணிந்தாள்.
நிதானமாக சொன்னாள். “என்னோட ஏதோ ஒரு நாள் கனவுல நான் உங்களப் பாத்தேன். அதுல உங்களோடப் பேரு விஜய்னு இருந்துச்சு”
அவர்கள் இரண்டு பேருக்குமே அது அதிசயமாக இருந்தது. ஒருவரையொருவர் அறியாத முன்பின் பழக்கம் இல்லாத இரண்டு பேர் முதலில் கனவுகளிலும் அப்புறம் நிஜ வாழ்க்கையிலும் சந்திக்க முடியுமா என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. கடைசியாக அவன் சொன்னான். “போன ஜென்மத்துல நாம ஒன்னா வாழ்ந்திருப்போம்” என்றாலும் கனவில் கண்டு நிஜ வாழ்க்கையில் சந்திக்க அவர்கள் இருவரும் மொபைல் போன் நம்பர்களைப் பரிமாறிக் கொண்டு பிரிந்து போனார்கள்.
அப்போதும் இரண்டு பேராலும் ஆச்சரியத்தை அடக்கமுடியவில்லை.
வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தவுடன் அனு அரவிந்தனிடம் நடந்ததைச் சொன்னாள். கேட்கும்போது அவனுடைய முகம் இறுக்கமடைந்தது. இல்லாவிட்டாலும் அரவிந்தனுக்கு ஒரு போதும் மனிதர்களுக்கு இடையில் இருக்கும் நல்ல உறவுகளைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.
ஆனால் ஒவ்வொரு நிமிடமும் அனுவுக்கு அந்த ஆச்சரியத்தில் இருந்து மீண்டு கரையேற முடியவில்லை.
இந்த அனுபவத்தை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளாவிட்டால் மூச்சே நின்றுபோய்விடும் போலிருந்தது. குழந்தைக்கு உணவு கொடுத்து தூங்கச் செய்துவிட்டு தோழி சிந்துவிடம் நடந்தது எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொன்னபிறகுதான் அனுவுக்கு நிம்மதி ஏற்பட்டது.
சிந்து கடைசியில் சொன்னாள். “நீ எச்சரிக்கையா இரு. அந்த ஆளு கல்யாணமாகாதவன்”
அனு திரும்பச் சொன்னாள். “அதனால பிரச்சனைய்ல்லடி. கல்யாணமாயிருந்தாதான் இந்தக் காலத்துல பெரிய பிரச்சனையெல்லாம் வருது கல்யாணமானவங்கதான் அடுத்தப் பொண்ணுங்களத் தள்ளிக்கிட்டுப் போகப் பார்க்கறாங்க”
சிந்து தொடர்ந்தாள்.
“எப்படியிருந்தாலும் அரவிந்தனுக்கு இது பிடிக்காது. முன்னாலயே உன்னோட நல்ல எண்ணங்கள் எதுவும் அடுத்தவங்களுக்குப் புரியாது இல்லயா? இதுக்கு மேலயும் ஏடாகூடமா எதயாச்சும் செஞ்சு வச்சுடாதே. தெரியுதா?”
“ஏய். எப்படின்னாலும் இது ஒரு அதிசயம் இல்லல்யா?” அவளுடைய வியப்பு அப்போதும் அடங்கவில்லை.
நல்ல மூடில் இல்லாததால் அனு படுக்கையறைக்கு போனபோது அரவிந்தன் தூங்கிப் போயிருந்தான்.
தூங்குகிற மாதிரி நடிக்கலாம் என்று மனதுக்குள் நினைத்தபடி அவளும் தூங்க முயற்சி செய்தாள். ஆனால் முடியவில்லை. விஜயின் முகம் மனதில் இருந்து மாறவில்லை.
“நாம் வழி தவறிப் போகிறோமா?” அனுவுக்கு அவள் மீதே சந்தேகம் ஏற்பட்டது.
“இல்ல. அவனோட முகமில்ல. அந்த சம்பவம்தான் மனதில் இருந்து ஊஞ்சலாடுகிறது. எங்கேயாவது இப்படி நடக்குமா? என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் தூக்கம் கண்ணுக்குள் வந்து குடியேறும் போது விஜய் முன்னால் வந்து சிரித்துக்கொண்டே சொன்னான். “நான் கனவுல கூட நினைச்சுப் பாக்கல. வாழ்க்கையில உன்னை மறுபடி பாப்பேன்னு. என்னோட மனசுலேர்ந்து உன்னோட முகம் மாறவே இல்லயே? அதான் திரும்பவும் வந்தேன்”. அந்த கண்கள் என்ன சொல்கிறது என்பது அவளுக்குப் புரியவில்லை.
அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்கேத் தெரியவில்லை.
கடைசியாக அவள் சொன்னாள். “நாங்கூட கொஞ்சமும் எதிர்பாக்கல. கனவுல பாத்த ஒரு ஆளோட முகம் மனசுல இப்படி அழியாம இருக்கறத நினைச்சாலே ஆச்சரியமாயிருக்கு. எனக்கும் இதான் முதல் அனுபவம்” விஜயோடு பேசறது அரவிந்தனுக்குப் பிடிக்காது என்று எப்படி அவனிடம் சொல்லுவது?
யோசித்துக் கொண்டிருக்கும் போதே விஜய் சொன்னான். “நான் இப்படி வர்றதும் உங்கூடப் பேசறதும் அரவிந்தனுக்குப் பிடிக்கறது இல்ல. ஆனா உன்னைப் பாக்காம எப்படி இருக்கறது? என்ன காரணம்னு எனக்கும் புரியல”. அரவிந்தனுடைய ஒரு கால் அவள் மீது விழுந்தபோது சட்டென்று விழித்துக் கொண்டாள்.
இதுவரை பார்த்ததெல்லாம் கனவுதானா என்று யோசித்தபடி தூங்க முயற்சி செய்தாள்.
ஆனால் அவளால் அதற்குப் பிறகு தூஞ்கவே முடியவில்லை. அடுத்தநாள் அரவிந்தனிடம் சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் அரவிந்தனுக்கு அது பிடிக்காது என்று தோன்றியதால் எதையும் சொல்லவில்லை. சிந்துவைக் கூப்பிட்டு சொல்லவும் பிடிக்கவில்லை. இதெல்லாம் ஒரு இரகசியமாக தனக்குள்ளேயே இருக்கட்டும் என்று நினைத்தாள். அதில் அவளுக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது.
அன்றைக்கு ராத்திரி அவள் சீக்கிரமேப் படுக்க முயற்சி செய்தாள். கனவில் விஜய் வருவானா? அதைத் தெரிந்து கொள்ள அடக்கமுடியாத ஆவல் ஏற்பட்டது. அன்றைக்கும் அரவிந்தன் நிம்மதியில்லாமல் இருந்தான். அவன் தூங்க வேண்டுமே என்ற ஆதங்கத்துடன் அனு படுக்கையறைக்குள் நுழைந்தாள். தூங்கினால் தூங்கட்டும். நடிப்பதாக இருந்தாலும் இருக்கட்டும். அவள் தன்னுடைய உலகிற்குள் நுழைந்தாள்.
படுத்தாள் என்றாலும் எதிர்பார்ப்பு காரணமாக தூக்கம் வரவில்லை. நேற்று பகலில் நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்துக் கிடந்தபோது யாரோ தன்னைத் தட்டிக் கூப்பிடுவது போலத் தோன்றியது. பார்த்தபோது விஜய். “என்னால இப்ப பாக்கமுடியாம இருந்துச்சு. என்னன்னு தெரியல. தப்பா நினைக்கவேணாம்” என்று அவன் சொன்னபோது அனு நினைத்துக்கொண்டாள்.
“என்னோட நிலைமையும் இதுதானே?” அன்று வெகுநேரம் கழிந்தே அவர்கள் பிரிந்தார்கள். அதுவும் அரவிந்தன் அவளைத் தட்டி எழுப்பியபோது அவளுடைய பகல் பொழுதுகள் விஜயின் சிந்தனைகளால் நிறைந்தன. அரவிந்தனோடு அவ்வப்போது சண்டை போடும் அனு இப்போது உள்ளுக்குள்ளேயே கனவு காணும் ஒருத்தியாக மாறியிருந்தாள்.
அனுவுடைய இந்த மாற்றம் அரவிந்தனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதைச் சொல்லி அவன் அனுவிடம் சண்டை போட்டான். நடுவில் எப்போதோ ஞாபகமில்லாமல் அனு அரவிந்தனிடம் விஜயைப் பற்றி சொன்னாள். இது அரவிந்தனுக்கு அவளுடன் சண்டை போட போதுமான காரணமாக அது இருந்து. ஆனால் இது எதுவும் அனுவை பாதிக்கவில்லை.
குழந்தையிடம் கூட வேறொரு உலகத்தில் இருந்து வந்தவளைப் போல நடக்க ஆரம்பித்தாள். நடையிலும் உடையிலும் மாற்றம். அரவிந்தனுக்கு இதையெல்லாம் சகிக்கமுடியவில்லை. அன்று அவர்கள் ஒரு கல்யாணத்துக்குப் போகவேண்டியிருந்தது. சாதாரணமாக புடவை கட்ட சோம்பேறித்தனப்படுபவள் அன்றைக்கு புடவையை அணிந்து கொண்டு அரவிந்தனிடம் பல முறை “நன்றாக இருக்கிறதா?” என்று கேட்டாள்.
பதில் சொல்லாமல் அவன் திரும்பக் கேட்டான். “ உனக்கு புடவையை உடுத்திக்கிற பழக்கம் இல்லயே? அப்புறம் என்ன இன்னிக்கு இப்படி?”. “இதுதான் நக்கு அழகாயிருக்கும்னு தோனுது”. அனு மறுபடியும் கண்ணாடிக்கு முன்னால் போய் நின்றாள்.
நேத்திக்குக்கூட விஜய் சொன்னான்.
“எனக்கு புடவைதான் நல்லா இருக்குதுன்னு. இதே புடவையைதான் நான் நேத்திக்கு கனவுல உடுத்திகிட்டு இருந்தேன். இதையெல்லாம் அரவிந்தனிடம் சொல்லவாமுடியும்?” அனு கிளம்பத் தயாரானாள்.
ஆட்டோரிக்ஷாவில் ஏறும்போது கூட்ட நெரிசலில் பார்த்தாள். விஜயின் முகம். அவள் சந்தோஷத்தால் பூரித்துப்போனாள்.
சட்டென்று எதைப் பற்றியும் யோசிக்காமல் அரவிந்தனைக் கூப்பிட்டுக் காட்டினாள்.
“அதோ விஜய்”
அதற்குள் அந்த ஆள் அவர்களுக்கு பக்கத்தில் வந்தான்.
அரவிந்தன் இருப்பதைக் கூட மறந்து அனு கூப்பிட்டாள். “விஜய்”. அவன் அதை கேட்ட மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.
அனு திடீரென்று ஓடி அவனுக்கு முன்னால் போய் நின்றாள், கேட்டாள்.
“விஜய். இங்க எப்படி வந்தீங்க?. இதோ நீங்க போட்டுக்கச் சொன்ன புடவைதான் இது” அவள் சொன்னாள்.
அனுவைப் பார்த்து அவன் சொன்னான். “நீங்க ஆள் மாறிப் பேசறீங்க. நான் ரவி”
சட்டென்று அரவிந்தன் குறுக்கிட்டான். “சாரி. உங்க மாதிரியே தெரிஞ்சவரு ஒருத்தர் எங்களுக்கு இருக்காரு. ஆளு மாறிப்போயிடுச்சு அவளுக்கு”
“பரவாயில்ல” சொல்லிவிட்டு அவன் நடந்தான்.
அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. அரவிந்தன் தன் கைக்குட்டையை எடுத்து நீட்டினான். “பரவாயில்ல. துடைச்சுக்க”கண்களில் வழிந்த நீரை சுட்டிக்காட்டி அவன் சொன்னான்.
அன்றைக்கு ராத்திரி அவன் கனவில் வரக்கூடாதே என்று நினைத்தபடி அவள் படுத்தாள்.
அரவிந்தனுடைய கைகள் ஒரு பாதுகாப்பு வளையம் போல அவளை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டிருந்தது.