எவ்வளவு சுலபம்? கொஞ்சம் கூடக் கஷ்டப்படவேண்டி வரவில்லை. நினைத்ததை விட நன்றாக நடந்தது. எல்லாம் நடந்து முடிந்தது. தெய்வத்துக்கு நன்றி. அப்பா சீரியஸ்... பூமியில் அவர் வாழும் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. அக்கா கூப்பிட்டுச் சொன்னபோது, அந்த அளவு சீரியஸாக நான் நினைக்கவில்லை. அவர்கள் எப்போதும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரியில் அப்பாவை அட்மிட் செய்யச் சொன்னார்களாம். உண்மையில் அது ஆஸ்பத்திரி இல்லை. ப்ளேடு கம்பெனி. போன வருஷம் லீவுக்கு வந்தபோது அம்மாவை அங்கே காட்டினேன். ஏதோ ஒரு சின்னப் பிரச்சனைதான் அம்மாவுக்கு இருந்தது. கால் மூட்டுக்குக் கீழே ஒரு சின்ன பிரச்சனை. லேசாக ஒரு வலி. நடக்கும்போது ஒரு சுளுக்கு மாதிரி. உள்ளே நுழைந்தது முதல் டெஸ்டுகள் ஆரம்பித்தன. ஸ்பெஷலிஸ்ட்டுகளின் அவ்வப்போதைய படையெடுப்புகள்.
அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லி அம்மாவுக்கு அலுத்துப்போனது. ஏழாவது நாள் அம்மா தீர்மானமாகச் சொன்னாள். “எனக்கு இப்ப என்னோட வீட்டுக்குப் போகணும்”. யார் பேசியதையும் அம்மா கேட்கவில்லை. ஏழு நாள் ஆஸ்பத்திரியில் இருந்ததற்கு ஐம்பத்தியேழாயிரம் ரூபாய் பில். ஆஸ்பத்திரிக்கு போனபோது இருந்த வலி அதே இடத்தில் அப்படியே இருந்தது. அப்புறம் குமார வைத்தியருடைய தைலத்தைத் தடவி மூட்டு வலியைச் சரிசெய்தாள்.
அதற்கான மொத்தச் செலவே முப்பத்தி மூணு ரூபாய்தான். ஆனால் அப்பாவுடைய விஷயத்தில் அந்த மாதிரி பரிசோதனைகளுக்கு எல்லாம் நேரம் ஒன்றும் இல்லை என்று பெரியண்ணனும் சொன்னான். அப்பாவுடைய நிலைமை அந்த அளவுக்கு மோசமென்று அர்த்தம். அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம் என்றும் அதற்கு ஆகும் செலவு அத்தனையையும் நானே பார்த்துக் கொள்கிறேன் என்றும் வாக்கு கொடுத்தேன்.
அதை நான் சொல்லியிருக்க வெண்டிய அவசியமில்லை என்பதே ஊரில் இருக்கும் அத்தனை பேருடைய நினைப்பும். செலவையெல்லாம் நான் பார்த்துக் கொள்வேன் என்பது அவர்கள் எல்லோருக்குமேத் தெரியும். கல்ஃபில் வேலை பார்க்கிற தம்பி இருக்கும் போது அப்பா அம்மா செலவுகளைப் பற்றிக் கூடப் பிறந்தவர்கள் எதற்காகக் கவலைப்படப் போகிறார்கள்?
அப்பாவை அவர்கள் நகரத்தில் இருந்த பெரிய ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கே இருந்த முதன்மை மருத்துவருடைய மொபைல் போன் நம்பரை அக்கா அனுப்பி வைத்தாள். மூன்று நான்கு தடவை அழைத்த பிறகுதான் டாக்டர் போனை எடுத்தார். அவர் அவ்வளவு பிசியாம். டாக்டர் கரடுமுரடான குரலில் சொன்னார். “அப்பாவோட நிலைமை கவலைக்குரியதுதான். வயசு எம்பத்தி ஏழு ஆயிடுச்சு இல்லயா? இதுவரைக்கும் கவனிச்சதுனால ஒரு கேடும் வராம இருந்தாரு”.
இல்லாவிட்டாலும் அப்பா அடிக்கடி அவருடைய குடும்பத்தில் எல்லோருக்கும் நீண்ட ஆயுசு என்று சொல்லுவார். அப்பாவோட அப்பா 93 வயசுலதான் செத்தாரு! இதையெல்லாம் நான் சொன்ன போதும் டாக்டருக்கு நம்பிக்கை வரவில்லை. அவர் மறுபடியும் சொன்னார். “அப்பாவோட நிலைமை ரொம்ப ரொம்ப மோசம். மருந்தும் மந்திரமும் இப்ப அவருக்கு அவசியமில்ல. பசங்க பக்கத்துல இருந்தாலேப் போதும். உங்களப் பாக்கமுடியாத ஏக்கம்தான். இததான் அப்பா எப்பவும் சொல்லிகிட்டு இருக்காரு” டாக்டர் சொல்லி முடித்தார்.
இப்படியெல்லாம் சொல்லிவிட்டால் உடனே சட்ட்டுபுட்டு என்று கிளம்ப முடியுமா என்ன? சூசையம்மாவுக்கு லீவு கிடையாது. பசங்களுடைய படிப்பும் டியூஷனும் நின்றுபோகும். பரீட்சைக்கு இன்னும் ஒன்னரை மாதமே இருக்கிறது. கம்பெனி புதிய பிசினெஸ்களில் ஈடுபடும் ஆலோசனைகளில் மூழ்கியிருக்கிறது. லீவு கிடைக்கவில்லை.
ஊரில் இருந்து அக்கா ஊசி குத்துவது போலப் பேசினாள். “உனக்கு லீவு கிடைக்கற மட்டும் அப்பா காத்துகிட்டிருப்பாரா?”. சமாதானப்படுத்தினேன். “இல்ல.. இல்ல.. நீ பயப்படற மாதிரி ஒன்னும் நடக்காது. அப்படியே அப்பாவுக்கு ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா நீங்க கவலப்படாதீங்க. சவக்கிடங்குல வச்சுக்கலாம். இப்ப இதெல்லாம் சர்வசாதாரணம் இல்லயா? அப்பா செத்துப் போயிட்டாருன்னு சொன்னா கம்பெனி லீவு தரும். நிச்சயம்.
அப்படி இல்லாம அப்பா ஆஸ்பத்திரியில... ரொம்ப அவசரம்ன்னு சொன்னா அவுங்க நம்பமாட்டாங்க”
டாக்டருடைய கணக்கும் தவறாக முடிந்தது. அப்புறம் எட்டு ஒன்பது மாதங்கள் வீட்டிலேயே இருந்து சாவகாசமாக வேண்டியதையெல்லாம் கேட்டு வாங்கி கடைசியாகக் கர்த்தரிடம் போய்ச் சேர்ந்தார். உடனே அக்கா கூப்பிட்டுச் சொன்னாள். “அப்பா... போயிட்டாரு”. நான் அவளைச் சமாதானப்படுத்தினேன்.
“நீ வருத்தப்படாத. அப்பாவ சவக்கிடங்குல வச்சிடுங்க... பெரிய அண்ணன் அங்க இருக்காரு இல்லயா? அவரு இதெல்லாத்தயும் பாத்துப்பாரு. ஒன்பது நாள் அப்பா ஆஸ்பத்திரியில் சவக்கிடங்கில் ஜில்லிப்பை ரசித்தபடி கிடந்தார். அப்பாவுடைய மரணத்தைப் பற்றிச் சொன்னபோது கம்பெனி லீவு கொடுத்தது. கர்த்தருக்கு மறுபடியும் நன்றி.
வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தவுடன்தான் பிரச்சனைகள் ஒவ்வொன்றாகப் புறப்பட்டு வந்தன. சொந்தக்காரங்கள் எல்லோருக்கும் மரணச்செய்தியைச் சொல்லவேண்டும். சவ அடக்கத்துக்கு இரண்டு மூன்று பாதிரியார்களாவது வேண்டும். சர்ச் மயானத்தில் கல்லறை கட்டவேண்டும். ஈட்டி மரத்தால் ஆன சவப்பெட்டி செய்யவேண்டும். முற்றத்தில் பந்தல் போடவேண்டும். சவ ஊர்வலத்துக்குச் சர்ச்சில் இருந்து தங்கச் சிலுவையும் வெள்ளியாலான சிலுவையும் தங்க அலங்காரக் குடைகளையும் கொண்டு வரவேண்டும்.
வீட்டில் இருந்து சர்ச்சுக்குப் போகும் தூரத்துக்கு மரண ராகம் பாடும் பேண்டு வாத்தியம் வைக்க வேண்டும். சவ அடக்கத்துக்குப் பிறகு பாதிரியார் சிஸ்டர்கள் எல்லோருக்கும் விருந்து வைக்க வேண்டும். அப்புறம் ஊர்வலத்துக்கு வரும் மற்றவர்கள் எல்லோருக்கும் ஏதாவது லைட் டிபன் கொடுக்கவேண்டும். இதையெல்லாம் செய்யப்போவது யார்?
பெரியண்ணன் இதைப் பற்றிய சிந்தனைகள் எதுவும் இல்லாமல், மோவாயைத் தூக்கிக் கொண்டு சும்மா ஒரு மூலையில் ஆகாயத்தின் நெளிவு சுளிவுகளைப் பார்த்து நின்று கொண்டிருந்தான். “அப்படிச் செய்யணும். இப்படிச் செய்யணும்” என்று முறை தவறாமல் சொல்ல எத்தனை பேர் வேண்டுமானாலும் இருப்பார்கள். ஆனால் எல்லாவற்றையும் எடுத்துக்கூட்டிச் செய்ய யாரும் இல்லை.
சில சொந்தக்காரர்களால் ஒரு உபகாரம் உண்டு. அந்தஸ்து பற்றிப் பேசிக் கொளுத்திப் போடுவார்கள். ”மேல்புரத்து பெரியப்பன் செத்தப்ப அஞ்சு பாதிரியாருங்க வந்தாங்க. இங்க அதுக்கும் குறச்சலா வச்சா, அது பெரிய அவமானமாப் போயிடும். தெய்வத்தோட புண்ணியத்தால இங்க எதுக்கும் ஒரு குறைச்சலும் இல்லயே? சவக்கிடங்குல இருக்கற பெரியவரு எப்படியெல்லாம் வாழ்ந்தவரு. எப்படி எல்லாத்தயும் நியாய தருமத்தோட செஞ்சாரு?”.
பெரியண்ணன் தூரத்தில் இருந்த ஆகாயச்சரிவுகளில் இருந்து கண்ணை எடுக்காமல் நின்றான். சொல்வதையெல்லாம் கேட்டு ஒரு உற்சாசகத்தோடு இறங்கினால் கையைச் சுட்டுக் கொள்ளவேண்டும் என்பதுதான் அவனுடைய பயம். அக்கா உள்ளே அழுது கொண்டிருந்தாள். தூணில் சாய்ந்து நிற்பதைத் தவிர, சின்னத்தம்பி எதையும் சொல்லவேயில்லை. பத்து பைசா நஷ்டம் வரும் காரியம் எதிலும் அவன் ஈடுபடமாட்டான். போதாக்குறைக்கு அவனுடைய மனைவி மந்திரமும் ஓதுவாள்.
“நீங்க எதுலயும் ஈடுபடவேணாம். சோகமா நின்னாப் போதும். எல்லாத்தயும் ஜானிக்குட்டி பாத்துப்பாரு. கஷ்டப்படாம ஒரு இடத்துல சும்மா நில்லுங்க இல்லாட்டா உக்காந்துகிட்டு இருங்க”. தம்பி மனைவி எப்போதும் அப்படித்தான். கணக்குப் பார்த்து சொல்வதில் அவளுக்கு ஒரு தனித்திறமையே உண்டு. யோசித்துக் கொண்டே இருக்க நேரமில்லை. அப்பா பிரேதக் கிடங்கில் கிடக்க ஆரம்பித்து பதினோரு நாள் ஆகிவிட்டது.
“ஆளுங்க என்ன நினைப்பாங்க?”. இப்படி யோசித்துக் கொண்டு இருக்கும்போதுதான் புத்தம் புதிய காரில் அவன் வந்து இறங்கினான். கொஞ்சம் கூட முன் பின் தெரியாத ஆள். அவன் எல்லோரையும் மாறிமாறிப் பார்த்தான். ஒரு ஆளிடம் ஏதோ குசலம் விசாரித்தான். அப்புறம் ஆண்களுக்கு நடுவில் நுழைந்து என்னை நெருங்கினான். தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“என்னோட பேரு சன்னிக்குட்டி. சமூக செயல்பாட்டாளன். அடுத்தவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிங்கள செஞ்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன்...” பார்வைக்கு ஆள் எதையும் உற்சாகத்தோடு செய்பவன் என்று தோன்றியது. அவன் சொன்னான். “ஜானிக்குட்டி கவலப்பட வேணாம். எல்லாத்தயும் நான் பொறுப்பெடுத்துகிட்டேன். இப்படி நின்னு என்ன வேணும்னு சொல்லுங்க போதும்.
சொந்தக்காரங்க எல்லாருக்கும் சாவுச்செய்திய சொல்றது. சவ அடக்கம் எப்பன்னு சொல்றது. சவப்பெட்டி வாங்கறது. சர்ச்சு மயானத்துல கல்லற கட்டறது. எல்லாத்தயும் நான் கவனிச்சுக்கறேன். தங்க சிலுவைங்க... வெள்ளி சிலுவைங்க... தங்கக்குடைங்க எத்தனை வேணும்...? இங்க இருக்கறது போதாதுன்னா, பக்கத்து சர்ச்சுலேருந்து வாடகைக்கு எடுத்துக்கலாம். முத்தத்துல மல்ட்டி கலர்ல ஷாமினா. மூனு நாலு பாதிரிமாருங்க. அப்புறம் சிஸ்ட்டருங்க. எல்லாத்தயும் நான் ஏத்துக்கிட்டேன்.
அப்பாவக் குளிப்பாட்டி அலஞ்காரம் செஞ்சு நடுப்பந்தல்ல வைக்கறது எல்லாம் நாங்க செஞ்சுக்கறோம். அடக்கம் முடிஞ்சப்புறம் சர்ச்சுக்கு வர்றவங்களுக்கு ஒரு லைட் டிபன். பாதிரியாருங்களுக்கும் வைதீகருங்களுக்கும் சிஸ்ட்டருங்களுக்கும் அன்பளிப்புங்க. விருந்து. இதயும் செஞ்சுடலாம். இத தனித்தனியாச் செய்யலாம். இல்லாட்டி ஒன்னாச் சேத்தே செஞ்சுடலாம். அது உங்க விருப்பம். என்ன வேணும்னு சொன்னாப் போதும்”.
“சரி. இது எல்லாத்துக்கும் எவ்வளவு ஆகும்?”. சன்னிக்குட்டி சைகை காட்டிக் கொண்டே சொன்னான். “அதெல்லாத்தயும் அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல அப்பாவோட காரியங்க நல்லா நடக்கட்டும். எல்லாத்தயும் நல்லா செஞ்சுடலாம்”.
“இந்த சர்ச்சுல சமீப காலத்துல இப்படி ஒரு சவ அடக்க காரியம் இந்த அளவுக்கு சீரும் சிறப்புமா நடக்கலை” என்று ஊரேப் புகழ்ந்தது.
”பெரிய தோட்ட முதலாளியும் முன்னாள் மந்திரியுமான கரியாச்சனோட சவ அடக்கத்துக்கு இப்ப நடந்ததுல பாதி கூட நடக்கல”. இப்படி அப்பாவுடைய கடைசி காரியங்களை ஊரேப் பேசியது.
அடக்கம் முடிந்து எல்லோரும் பிரிந்து போகும் வரை சன்னிக்குட்டி காத்துக் கொண்டு நின்றான். “எப்படிப்பட்ட பணிவான குணம் அவனுக்கு! சொந்தக்காரனுக்கும் மேலா நடந்துகிட்டான்”. மனதுக்குள் அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த போதே அவன் வந்தான். “ஜானிக்குட்டி நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்துச்சு இல்லயா?”. சொல்லிவிட்டு அவன் ஒரு சிரிப்பு சிரித்தான்.
“ம். எல்லாம் நல்லபடியா நடந்துச்சு. கம்பீரமா நடந்துச்சு. சன்னிக்குட்டி சரியான நேரத்துல வந்து உதவி செய்யலைன்னா நான் ரொம்பக் கஷ்டப்பட்டுப் போயிருப்பேன். தனியாளா இருந்துகிட்டு எதச் செய்யமுடியும்?”. பெரியண்ணனும் அக்காவும் ஒளிந்து கொண்டார்கள். அவர்கள் நழுவுவுவது எனக்குப் புரிந்தது. எல்லாவற்றையும் என்னுடைய இஷ்டப்படி செய்தேன் என்ற நினைப்பு வேறு அவர்களிடம் இருந்தது.
அப்பாவுடைய சவ அடக்கமானாலும் கூட, சொந்தப் பாக்கெட்டில் இருந்து ஒரு பைசா எடுக்கும் போது கூட அவர்களுடைய கை நடுங்கும். கால் மரத்துப்போகும். கடைசியாக சன்னிக்குட்டி பாக்கெட்டில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினான். எழுபத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு பில்! உள்ளுக்குள் லேசாக ஒரு நடுக்கம் ஏற்பட்டது என்றாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ரூபாயை எண்ணிக் கொடுக்கும்போது நான் சொன்னேன்.
“சன்னிக்குட்டி நீங்களும் ஒரு தடவ எண்ணிப் பாத்துக்கங்க”.
அவன் பிரகாசத்துடன் ஒரு சிரிப்பை உதிர்த்தான். தலையை ஆட்டினான்.
“ஓ. அதுக்கெல்லாம் அவசியமில்ல”. ஜானிக்குட்டி என்ணிணீங்க இல்லயா? எனக்கு நம்பிக்கை இருக்கு” ரூபாயை மடக்கி இடுப்பில் பத்திரமாக வைத்த பிறகு “நான் கிளம்பட்டுமா?” என்று விடைபெற்றுக் கொண்டான். தூரத்தில் மர நிழலில் காரை நோக்கி நடக்கும் போது சட்டென்று எதையோ நினைத்துக் கொண்டது போல அவன் திரும்பி வந்தான்.
“இப்ப நடந்ததெல்லாம் நடந்ததா இருக்கட்டும். இனியும் அவசியம் ஏற்படும் இல்லயா? நாம அத இத விட சூப்பரா செய்யலாம். நாலைஞ்சு பிஷப்ங்க. மந்திரிங்க. எம் எல் ஏக்கள். ஜானிக்குட்டி. நீங்க கவலயேப்படாதீங்க. எல்லாத்தயும் நான் ஏத்துகிட்டேன். என்னோட கார்ட வச்சுக்கங்க. லேண்ட் போன் நம்பரும் மொபைல் நம்பரும் இ மெயிலும் எல்லாம் இதுல இருக்கு”.
முகத்தைத் திருப்பிப் பார்த்த போது, வராந்தாவில் பாதி இருட்டில் நன்மை நிறைந்த மரியாளின் பைபிள் வசனங்களைச் சொல்லிக்கொண்டு எழுபத்தி ஒன்பது வயதைத் தாண்டிய அம்மா உட்கார்ந்து கொண்டிருந்தாள். என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு நடுக்கம். அந்த ஆள் எதை உத்தேசித்து அப்படிச் சொன்னான்?