“கணபதி பப்பா மோரியா...” மராத்தியக் குழந்தைகள் கோரசாகக் குரல் எழுப்பினர்.
“கணபதி மகாராஜாக்கு ஜே..”. வயதானவர்கள் ஜே கோஷம் போட்டனர்.
ஒரு சிறிய ஊர்வலம் சௌபாத்தியின் தெருக்கள் வழியாகப் போய்க்கொண்டிருந்தது. பாம்பேயில் மராத்திகள் விநாயகர் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
விநாயகர் சதுர்த்தியின் ஐந்தாவது நாள். அன்று கௌரி நாள். சதுர்த்தி முதல் பூசை செய்து வந்த விநாயகர் சிலையையும் கௌரி சிலையையும் கடலில் கரைக்க மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.
பாம்பேயில் ஒரு வியாபாரியான நாராயணன் கோடே காங்கரரின் பாதயாத்திரைதான் அப்போது அந்த வழியாக கடந்து போய்க்கொண்டிருந்தது. அந்த விநாயகர் சிலை ஐம்பது ரூபாய் விலையுடையது. முதலாளித்துவத்தின் என்றும் பின் தொடரும் பாவங்களையும், வருங்காலத்தில் வர இருக்கும் துன்பங்களையும் ஒன்றாகச் சேர்த்து அகற்ற வேண்டுமே என்ற பிரார்த்தனையோடும் நம்பிக்கையோடும்தான் அந்த ஆள் ஐம்பது ரூபாய் விலை கொடுத்து அந்தப் பெரிய விநாயகர் சிலையை வாங்கியிருந்தார்.
அந்த ஐந்து நாள் பூசைகளில் ரகசியமாகப் பல விண்ணப்பங்களையும், ஆசைகளையும் அந்த சிலையின் செவியில் அவர் மந்திரித்து ஓதி வைத்திருந்தார். அந்தச் சிலையை மலர் அலங்காரத்தோடு கூடிய பெரிய ஒரு பல்லக்கில் தூக்கிக்கொண்டு நான்கு பலசாலியான ஆட்கள் ஊர்வலத்துக்கு நடுவில் மெதுவாக நகர்ந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு முன்னால் ஒரு கதர் பையில் பூசை சாமான்களுடன் ஒரு பூசாரி போய்க்கொண்டிருந்தார். வாத்திய கோஷ்டிகளுடன் ஒரு பாடல் குழுவினரும் ஆட்டக்காரர்களும் சென்று கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் முன்னால் கோடே காங்கரரின் குடும்பத்தில் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் கூட்டமாகச் சேர்ந்து கைகளால் தாளம் போட்டுக் கொண்டு விநாயகர் சிலைக்குப் பின்னால் உரத்தக் குரலில் பாடியபடி சென்றார்கள்.
“கணபதி பப்பா மோரியா... மங்கள பப்பா மோரியா...” உற்சாகத்தோடு பெரிய சத்தத்துடன் உரத்த குரலில் கோஷமாகப் பாடிக்கொண்டிருந்த குழந்தைகளுக்குப் பின்னால் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் சென்றார்கள். சில பெண்களுடைய கையில் குங்குமமும், கற்பூரமும் நிறைந்த தாம்பாளங்களும், தேங்காய்களும் இருந்தன.
பட்டையான பெரிய ஜரிகைக்கரை போட்ட ஒரு சிவப்புப் பட்டுத் தலைப்பாகையுடன் முழங்கால் வரை நீளமான ஒரு கோட்டையும் போட்டுக் கொண்டு உயரம் குறைந்த ஒரு ஆள் ஊர்வலத்தின் பக்கவாட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவர்தான் ஊர்வலத்தின் தலைவரும் நாதனும் கட்டுப்பாட்டாளருமான நாராயணன் கோடே காங்கரர்.
பணத்தின் பெருமையும், மதிப்பு மரியாதையின் பிரகாசமும், தான் செய்த பாவங்கள் எல்லாம் பிள்ளையாருடைய தலையில் போட்டாயிற்று என்ற ஒரு ஆறுதல் மனப்பான்மையும் அந்த வியாபாரியுடைய முகத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. வழியில் பார்க்கும் சில தெரிந்தவர்கள் வணக்கம் சொல்லும் போது, அதைத் தலை குனிந்து ஏற்றுக்கொள்வதும், விநாயகருக்கு எல்லாம் சரியாக நடக்கிறதா என்ற கவலையோடு திரும்பிப் பார்ப்பதும் தவிர, அவர் வேறெதையும் யாரிடமும் பேசவில்லை.
ஊர்வலம் சௌபாத்தி கடற்கரையை வந்து சேர்ந்தது. கரையில் ஒரு நாழிகை தூரம் அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கடலில் கரைக்க வந்து சேரும் நூற்றுக்கணக்கான ஊர்வலங்கள் எல்லாம் அருவிகள் போலச் சிறிதாகத் தொடங்கி பின் ஒன்று சேர்ந்து பெரிய நதியாகி அங்கே வந்து சேர்ந்து கொண்டிருந்தன. எல்லாச் சிலைகளும் கடலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தன. பிடித்து வைத்த பிள்ளையார் அளவு முதல் குட்டியானை அளவுக்குப் பெரியதாக இருக்கும் சிலைகள் வரை ஆயிரமாயிரம் விநாயகர் சிலைகள்.
பெண்கள் நடைபாதையில் அணிவகுத்து நின்று கொண்டு அந்த வழியாகப் போகும் சிலைகளின் சிரசுகளின் மீது பயபக்தியுடன் அரிசியையும் மலர்களையும் தூவி வழியனுப்பிக் கொண்டிருந்தனர். கோடே காங்கரரின் விநாயகர் சிலை கரையை அடைந்தது. தூக்கிக்கொண்டு வந்தவர்கள் தலை மீதிருந்த பாரத்தை இறக்கி வைத்தார்கள்.
பூசாரி சிலையைத் தாங்கிப் பிடித்து மண்ணில் பிரதிஷ்டை செய்தார். கடல் நீர் எடுத்துக் கொண்டு வரப்பட்டது. கடைசி பூசைக்குரிய ஏற்பாடுகள் ஆரம்பித்தன. பழங்கள் நிறைத்து வைக்கப்பட்டிருந்த பித்தளைத் தாம்பாலமும், கற்பூரம் ஏற்றிவைத்த வெள்ளித் தட்டும், குங்குமம் கரைத்து வைக்கப்பட்டிருந்த தட்டும், தூபக்காலும் எல்லாம் அவற்றுக்குரிய இடத்தில் வைக்கப்பட்டன.
மணியோசை முழங்கியது. ஆராதனையும் மந்திர உச்சரிப்புகளும் தொடங்கின. ஊர்வலத்தில் வந்த எல்லோரும் சுற்றி நின்று பாட்டு பாடினர். “கணபதி பப்பா மோரியா” என்று ஒரே குரலில் குரல் எழுப்பினர். பூசைகள் முடியத் தொடங்கியபோது கோடே காங்கரர் முழங்காலிட்டு விநாயகருக்கு முன்னால் விழுந்து வணங்கினார். தன்னுடைய விண்ணப்பங்கள் எல்லாவற்றையும் விநாயகரிடம் மறுபடி ஒரு தடவை நினைவுபடுத்தினார்.
பிறகு, விநாயகரின் தங்கக்கிரீடத்தை மூன்று முறை தொட்டு தன் நெற்றியில் வைத்துக் கொண்டார். பூசாரி ஒரு தேங்காயை உடைத்து அதில் இருந்த தண்ணீரை எல்லோருடைய கையிலும் கொஞ்சமாக ஊற்றிக் கொடுத்தார். கடைசியில் விநாயகருக்குப் பிரசாதம் படைக்கும் சடங்கும் முடிந்தது. இப்போது சிலையைக் கடலுக்குக் கொண்டு போய்க் கரைக்கும் வேலை மட்டும்தான் மீதி இருந்தது.
அரை நிர்வாணமான ஐந்தாறு பேர் முன்னால் வந்தார்கள். “சாஹிப். நான் கொண்டு போறேன். நாலனா தந்தாப் போதும். ரெண்டனாக்கு நான் எடுத்துட்டுப் போறேன்” இப்படி கூட்டம் கூடி போட்டி போட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு நடுவில் பலசாலியான ஒரு ஆள் முன்னால் வந்தான். “சாஹிஃப்புக்கு என்ன விருப்பமோ அதக் கொடுத்தாப் போதும்”. கோடே காங்கரர் அவனை உற்றுப் பார்த்தார்.
“அரை நாழிகை தூரம் கடல் தண்ணியில கொண்டு போய் கரைக்கணும். முடியுமா?”
“என்னோட மூக்கு முங்குற மட்டும் ஆழத்துக்குப் போனாப் போதுமில்லயா?”. காக்கி நிறத்தில் நீண்ட கால்சட்டை போட்டுக் கொண்டிருந்த அந்த வாலிபன் விநாயகர் சிலையை அடிப்பலகையோடு எடுத்து தலையில் வைத்துக் கொண்டு கடலில் இறங்கினான். மாலை நேரத்தின் வண்ணமயமான வானம்.
சௌபாத்தி கடலில் பரந்து விரிந்து கிடக்கும் சேறும் சகதியுமான மெல்லிய நீர்ப்பரப்பில் வானத்தின் அழகு நிறம் பிரதிபலித்து ஆடியசைந்து கொண்டிருந்தது. இருட்ட ஆரம்பித்திருந்தது. சிலைகளைக் கரைக்க கடலில் வெகுதூரம் போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த மனிதர்களுடைய நிழல்களும் மின்மினிப்பூச்சிகள் போல மின்னிக் கொண்டிருந்த செயற்கை வெளிச்சங்களும் பளபளக்கும் கடல்நீர்ப் பரப்பின் பின்னணியில் சங்கமித்துக் கொண்டிருந்தன.
விநாயகருடைய உணவுப் பொட்டலத்தை அன்று பரிகாசம் செய்ததால் சபிக்கப்பட்ட சந்திரன் ஒரு இடுங்கிப்போன சிரிப்போடு மலபார் குன்றுகளில் ஒளிந்துகொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். கோடே காங்கரர் விநாயகரைத் துதி பாடும் நாமங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். அரை மணிநேரம் கழித்து அந்த வாலிபன் காலியான தட்டுடன் திரும்பி வந்தான். “சாஹிஃப். தன்ணியில மூழ்கியே போயிருப்பேன். எப்படியோ உயிர் பிழைச்சேன்”. அவன் தட்டைக் கீழே வைத்து கால்சட்டையில் தண்ணீரைப் பிழிந்து கொண்டு சொன்னான்.
அவனுடைய உடல் நடுங்கியது. அவர் பாக்கெட்டுக்குள் கையைவிட்டு இரண்டு காலனா நாணயங்களை எடுத்து அவனுக்கு நேரே நீட்டினார். அவன் அந்த நாணயங்களை துச்சமாகப் பார்த்தான். வாங்கத் தயாராகவில்லை. “என்ன! ரெண்டு பைசாவா! எனக்கு வேணாம். நாலனா தரணும். மூனு அனாவாச்சும் தரணும்”. “விருப்பப்பட்டதத் தந்தா போதும்னுதானே நீ சொன்ன? ரெண்டு பைசா தாராளமாப் போதும்”.
“நீங்க என்ன சொல்றீங்க? எவ்வளவு கனம் தெரியுமா? சேத்திலயும் தண்ணியிலயும் கழுத்து வரை முங்கிதான் சிலயக் கரைச்சேன்”
“ஒரு பைசா கூட கூடுதலா கொடுக்கமாட்டேன்”
“சாஹிஃப். நான் பட்டினி கிடக்கற ஒரு ஏழை. ஒரு நேரச் சாப்பாட்டுக்குள்ள ரெண்டு அனாவாச்சும் தயவுசெஞ்சு தரணும்”
“உன்னோட கதயயெல்லாம் கேக்க நான் தயாராயில்ல. மரியாதயா பைசாவ வாங்கிகிட்டுப் போ”
“நீங்க இந்தக் கொண்டாட்டத்துக்கெல்லாம் எவ்வளவு பனம் செலவழிச்சீங்க? என்னோட உழைப்புக்குரிய கூலியயாச்சும் எனக்குத் தரக்கூடாதா? போகட்டும். ஒருநேர ஆகாரத்துக்கு உள்ள பைசா கொடுத்தாக்கூட போதும். பசிக்குது. அதுதான். ஒன்னரை அனாவாச்சும் தயவுசெஞ்சு...”
“டேய். உன்னோட தத்துவத்தயெல்லாம் கேக்க நான் விரும்பல. ஒத்தப் பைசா கூட தரமாட்டேன். இது வேணுமா? இல்லாட்டாப் போ”
“சாஹிஃப். போகட்டும். ஒரு அனாவாச்சும் கூடக் கொடுங்க”
“ஊஹும். தரமாட்டேன்”
“அரையனாவாச்சும் தர்றதுதான் நல்லது. இல்லாட்டா நீங்க கேக்க விருப்பப்படாத ஒன்னு என்னோட வாயிலேர்ந்து வரும்”
அவருடைய முகம் சிவந்தது.
அவர் அந்த வாலிபனுக்கு அருகில் போனார். “என்னடா தெம்மாடி! நீ என்ன சொல்லுற!”
“சாஹிஃப். கோவிச்சுக்காதீங்க. அரையனா கூடக் கொடுத்துட்டுப் போங்க”
“தரமாட்டேண்டா... தரமாட்டேன். இத வேணும்னாப் பொறுக்கி எடுத்துக்க”
அவர் நாணயங்களை மண்ணில் எறிந்தார்.
அந்த வாலிபன் கோபமும் நிராசையும் அருவருப்பும் கலந்த பாவத்தில் அவரைப் பார்த்தான். பிறகு குனிந்து அந்த நாணயங்களைப் பொறுக்கி எடுத்து நிமிர்ந்து நின்று கொண்டு சொன்னான்.
“நான் அதச் சொல்லிடறேன். உங்களோட பிள்ளையாரைத் தூக்கிகிட்டுப் போன நான் ஒரு முஸ்லீம்!”. அவருடைய கண்களில் இருட்டு ஏறியது. காதுகள் அடைத்துக்கொண்டன. தலைக்குள் ஒரு கூக்குரல் முழங்கியது. அப்போது அவன் அங்கேதான் இருந்தான். ஆனால் அவருக்கு ஏதாவது செய்வதற்கும் சொல்வதற்கும் முன்னால் அவன் அங்கே இருந்து எங்கோ மறைந்து போனான்.
அன்று ராத்திரி கோடே காங்கரர் நாசிக் போகும் வண்டியில் ஏறினார். அங்கே இருந்த பெரிய விநாயகர் கோயிலுக்குப் போனார். பிராயச்சித்தமாக இருநூறு ரூபாய் அடைத்த பிறகு, பெரிதாக ஒரு பூசையையும் நடத்தினார்.