இருபது வருடங்களுக்கு முன்புதான் டாக்டர் ஜகதீஷும், டாக்டர் அம்பிகாவும் ஒரு ரெஜிஸ்டர் ஆபீசில் மனு கொடுத்து கல்யாணம் செய்துகொண்டது. இரண்டு பேர்களுடைய அப்பா, அம்மாக்களும், குடும்பக்காரர்களும் அடிதடி மிரட்டல்களையும், பயமுறுத்தல்களை தாராளமாகப் பயன்படுத்தி எதிர்த்தார்கள் அந்தக் கல்யாணத்தை. வெறும் மூடநம்பிக்கையின் அடிப்படையில்தான் அந்த எதிர்ப்பு என்று ஜகதீஷூம், அம்பிகாவும் அவர்களுடைய வீட்டில் உள்ளவர்களிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் புரிந்துகொள்ளச் செய்ய முயற்சி செய்தார்கள், என்றாலும் ஒரு பயனும் ஏற்படவில்லை. ஜாதக தோஷம் என்று ஒன்பது ஜோசியர்கள் அடித்துச் சொன்னார்கள். அதுதான் எல்லாத் தகராறுகளுக்கும் காரணமானது. இந்த உறவு அல்ப ஆயுசில் முடிந்துவிடும் என்பதுதான் மூடநம்பிக்கை உடையவர்களான ஜோசியக்காரர்களுடைய முன்னறிவிப்பும், எச்சரிக்கையும்...
“சரி... அப்படியே சாகறதா இருந்தால் ஒன்னாச் சேந்தே சாகலாம்” என்று காதல் உணர்வுகள் வாரித் தந்த பரிசுத்தமான ஆனந்தத்தாலும், பெருமிதத்தாலும் ஜகதீஷூம், அம்பிகாவும் தீர்மானம் செய்து கொண்டார்கள். வீட்டுக்காரர்களும், குடும்பக்காரர்களும் அதோடு அவர்களை முழுவதுமாக தலை முழுகினார்கள். “கடவுள் நிச்சயித்ததை யாரால் தடுக்க முடியும்” என்ற மகாவசனத்தைக் கூட ஜகதீஷூடைய குடும்பத்தில் ஒரு வயதான ஆயா சொன்னாள். கல்யாணத்துக்குப் பிறகு மூன்று வருடங்கள் ஆனதற்கு பிறகும் ஒரு குழந்தையைப் பெறமுடியாமல் இருந்ததும், இந்தப் பிறவியில் அதைத் தங்களால் சாதிக்கமுடியாது என்பதைப் பலவிதமான பரிசோதனைகளின் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதும்தான் ஒரு ‘தத்து எடுக்கும்’ தீர்மானத்துக்கு அந்தத் தம்பதிகளைக் கொண்டு போய் விட்டது. அந்தக் காலத்தில் அவர்களுடைய ‘ஜகத்தம்பிகா மெடிகல் சென்டர்’ என்ற சிறிய ஆஸபத்திரி அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மிகவும் எளிமையான ஆரம்பமாக இருந்தது அது.
பதினேழு வருடங்களுக்கு முன்பு இரண்டு பேருக்கும் ஒரே மாதிரிப் திருப்தி தருகிற ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடு முழுவதும் அலைந்து திரிந்திருக்கிறார்கள் அந்தத் தம்பதிமார். “ஆண் குழ்ந்தையைத் தத்து எடுப்பதா...? இல்லை, பெண் குழந்தையைத் தத்து எடுப்பதா?” இதைப் பற்றிப் பல தடவைகள் யோசனைகள் செய்தும், கலந்து பேசியும் ஏறக்குறைய ஒரு வருடகாலம் இதற்கே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். “எதுவா இருந்தாலும் அல்ப ஆயுசுதான்?” என்பதுதானே தீர்க்கத்தரிசிகளின் கூற்று..! அப்படி என்றால் இறந்து போனால் ஆத்மாவுக்கு வேண்டிய இறுதிச்சடங்கு காரியங்களைச் செய்வதற்கு ஆண்குழந்தைதான் நல்லது என்று டாக்டர்களுடைய நல விரும்பிகளில் பலரும் சொன்னார்கள். தங்களுடைய இந்தக் கருத்தை வலியுறுத்தி அவர்களை அதையே நிச்சயமாக ஏற்றுக்கொள்வதற்கும் அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். அப்போது அம்பிகா மற்றொரு நியாத்தை அவளுடைய புருஷனிடம் சொன்னாள்.
“பாத்துப் பாத்து வளக்கறதுக்கு பெண்குழந்தைதான் நல்லதுங்க...”
அம்பிகா சொன்னாள்.
“ஆண்குழந்தையை எல்லாக் காலத்துலயும் நாம சொல்றப்படி கேக்க வைக்கறதுங்கறது முடியாத காரியம்... அது மட்டும் இல்ல... குடும்பத்து மேலப் பெண் குழந்தைகளுக்குத்தான் அதிகமாப் பாசம் இருக்கும்... நாம உசிரோட இருக்கற காலம் முழுக்கவும் அவ நம்பள கண்ணுல மணி போல பாத்துப்பா...”
இந்த வாதத்தையைப் பரிபூரணமாக அங்கீகரிக்க ஜகதீஷ் தயாராக இல்லை. குடும்பத்தின் மீது அன்போடு இருக்கிற எத்தனையோ ஆண் குழந்தைகளைத் தான் பார்த்திருப்பதாக உதாரணங்களோடு சொல்லிப் பார்த்தான் அவன். சகாதேவனுடைய மகன் யஷ்வந்த், சீதாலஷ்மியுடைய மகன் உமேஷ், தாமசுடைய மகன் ஜிம்மி.. இன்னமும் வேண்டும் என்றால் வேறு பெயர்களையும் கூடச் சொல்லமுடியும் என்ற பாணியிலும், இப்போதைக்கு இது போதும் என்கிற பாணியிலும் ஜகதீஷ் தொடர்ந்தான்.
“பெண் குழந்தைதான் நல்லதுன்னு ஒன்னும் வாதாடாத அம்பிகா... அவ நம்பள நல்லாப் பாத்துக்குவான்னு ஒன்னும் ஒரு கனவயும் நம்ம மனசுக்குள்ள கோட்டை கட்டிக்கவும் வேணாம்...”
டாக்டர் அம்பிகா அதைக் கேட்டுவிட்டு மூக்கு நுனியின் மேல் சுண்டுவிரலை வைத்துக்கொண்டு கொஞ்சநேரம் யோசித்தாள். பிறகு சிறிய தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பாவத்தில் கலந்த சிரிப்பில் துக்கத்துடைய நிழல்களை விழச்செய்துகொண்டு சொன்னாள்.
“நீங்க சொல்றாது எல்லாம் சரிதான்... ஆனா... அதெல்லாம் ஆயிரத்தில் ஒன்னு...”
சொல்லி முடித்ததிலும், இனிமேல் சொல்லப் போவதிலும் ஒரு சக்தி இருக்கட்டும் என்ற பாவத்தில் தலையைக் கொஞ்சம் ஆட்டி அவளுடைய நீண்ட முடியை முன்னால் மஞ்சளில் நீலப்பூக்கள் போட்டிருந்த புடவைத் தலைப்பு மறைத்துக் கொண்டிருந்த மார்பகத்தின் மீது ஒரு வீசு வீசி எறிந்தாள் அம்பிகா... பிறகு ஜகதீஷுடைய உள்ளங்கைகளை இலேசாகப் பிடித்துக் கொண்டு தொடர்ந்தாள்.
“நாம வாழற இந்த நாட்டுல அதிகமா கைவிடப்படறாது பெண் குழந்தைங்கதான்... அதிகமா கொடுமப் படுத்தப்படறதும் அவுங்கதான்... சின்ன வயசுலயே இல்லாட்டா... பிறக்கறதுக்கு முன்னாலயே இல்லாம ஆக்கப்படறதும் கூட பெண் குழந்தைங்கதான்... வாய் வார்த்தையில சும்மா புகழ்ந்தாலும் கடவுள் சோறு கூட போடாதது அதுங்களுக்குத்தாங்க...”
அம்பிகா கடைசியாக சொன்ன துயரம் நிறைந்த வார்த்தைகளில் கண்ணீரின் ஈரமும், ஆத்மார்த்தமான சோகமும் இருப்பதாக ஜகதீஷுக்குத் தோன்றியது. அவன் அவசரமாக தன்னுடைய உள்ளங்கைகளை அவளுடைய கைப்பிடியில் இருந்து உதறி விலக்கி எடுத்துவிட்டு சமாதானத்தோடு பேசினான்.
“உன் விருப்பப்படி நடக்கட்டும்”
அதற்குப் பிறகு, இரண்டு பேருக்கும் பிடித்தமான ஒரு தகுதியான பெண் குழந்தையைத் தேடி ஒரு தேடல் ஆரம்பித்தது. பதினாறு வருடங்களுக்கு முன்பு... அன்று ஒன்றும் இன்றைய நாளைப் போல ஆன்லைனில் எதையும் தேடிப் பிடிக்கமுடியாது... நேராகச் சென்றோ, இல்லை கடிதங்கள் வழியாகவோத்தான் எல்லாவற்றையும் செய்தாகவேண்டும். பல செய்தித்தாள்களிலும் பார்த்த பல தத்து எடுத்துக் கொடுக்கும் ஏஜென்சிகளுக்கும் கடிதங்கள் போட்டார்கள், அந்த டாக்டர் தம்பதிகள். சிலர் பதில் அனுப்பினார்கள்... பலரும் அவர்கள் அனுப்பிய கடிதங்களின் உறைகளைக் கூடக் கிழித்துப் பார்க்காமல் குப்பைத்தொட்டியில் போட்டார்கள். பதில் போட்டவர்கள் எல்லோரையும் நேரில் போய்ப் பார்த்தார்கள். போய்ப் பார்த்துவிட்டு வந்த குழந்தைகள் எவையும் அவர்களுடைய மனதில் இடம் பிடிக்கவில்லை.
அப்படி இருக்கும்போது... தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில்தான்... அவர்கள் அந்தக் குழந்தையைப் பார்த்தது. அன்றைக்கு இரண்டு வயது கூட ஆகியிருக்கவில்லை அந்தக் குழந்தைக்கு... எந்தவிதமான உரிமையையும் கோரி வராத ஒரு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைதான் அவள் என்று அனாதை இல்லத்துடைய நிர்வாகிகள் சொன்னார்கள். கிராமத்தில் ஒரு சின்ன அம்மன் கோயிலுடைய பூசாரியாக இருந்தார் அந்தக் குழந்தையுடைய அப்பா. கோயிலே கடுமையான வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. தினப்படி பூசைகளை நடத்துவதற்குத் தேவையான காசுக்காக பிராமணன் தனக்கு சொந்தமாக இருந்த இரண்டு சென்ட் நிலத்தை அங்கே எண்னை வியாபாரம் செய்துகொண்டிருந்த அப்துல்லா ஹாஜிக்கு விற்றுவிட்டார். அதை வைத்துக் கொஞ்சக் காலத்துக்குப் பூசைகளைச் செய்தார் அந்தப் பிராமணன். அப்புறம் அதுவும் தீர்ந்துபோனது. அப்போது அந்த அப்துல்லா ஹாஜியே பிராமணனுக்கு இடையிடையேக் காசு கொடுத்து உதவி செய்து கொண்டிருந்தான். பிறகு அந்த ஊர்க்காரர்களுக்கு ஒன்றும் நிச்சயமாகத் தெரியாத ஏதோ ஒரு போலீஸ் கேசுடைய பேரில் ஹாஜிக்கு திடீரென்று ஊரை விட்டேப் போக வேண்டி வந்தது.
அப்போது அந்த உதவியும் நின்று போனது.
வயிற்றுப் பிழைப்புக்கே வழி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் காலத்தில்தான் இளமை எப்போதோ தீர்ந்து போன பிராமணனுடைய மனைவி சொந்தப் புருஷனையே ஆச்சரியப்படுத்தியும், பரவசப்படுத்தியும் காலம் தப்பிக் கருவுறுவதும், சில காலமானபோது ஒரு பெண் குழந்தையைப் பெற்று எடுப்பதும் எல்லாம் உடனே உடனே நடந்து முடிந்தது. அதை வளர்ப்பதற்கு ஒரு வழியும் தெரியாமல் குழந்தையை அனாதை இல்லத்துக்குக் கொடுத்துவிட்டு, அந்தக் குழந்தைடைய அப்பா அம்மா புனித யாத்திரைக்குப் போய்விட்டார்கள். இதுதான் அனாதை இல்லத்துடைய நிர்வாகிகள் உணர்ச்சிகள் எதுவும் இல்லாமல் சொல்லிமுடித்த சோகக்கதை..!
கதையைக் கேட்டு முடித்த போது டாக்டர் தம்பதிகளுடைய மனது உருகியது. குழந்தையுடைய முகத்தைப் பார்க்கும் போது எல்லாம் அவர்களுடைய மனது தெளிவடையவும் செய்தது. அம்மனுடைய முகத்தில் இருப்பதைப் போல ஒரு பிரகாசமோ இல்லை, ஒரு செல்வச்செழுமையோ, அந்தக் குழந்தையுடைய முகத்தில் மின்னி மறைவதைப் போல அவர்களுக்குத் தோன்றியது. குழந்தையை உடனே கொண்டு போய் விடவேண்டும் என்று அம்பிகா சொன்னாள் என்றாலும், குழந்தையைத் தத்து எடுப்பது அத்தனை ஒன்றும் சுலபமான காரியம் இல்லை என்பதை அவர்கள் உடனே புரிந்து கொள்ளவும் செய்தார்கள். ஏராளமான அதிகாரப்பூர்வமான தடங்கல்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. முதலில் ஏஜென்சி ஒரு சமூக சேவையாளரை ஏற்பாடு செய்தது. அந்தப் பெண் பல தடவைகள் டாக்டர்களுடைய க்ளீனிக்கையும், வீட்டையும் வந்து பார்த்துவிட்டுப் போனாள். ஒவ்வொரு தடவையும் தடபுடலாக சாப்பாடு சாப்பிட்டு வந்து போனதற்கு பணத்தையும் வாங்கிக் கொண்டு போனாள்.
“இதுக்கெல்லாம் ஒரு அவசியமும் இல்ல டாக்டர்...” ஜகதீஷூடைய நண்பர் விசுவநாதன் வக்கீல் சொன்னார். “ஒரு அம்பதினாயிரம் ரூபா கொடுத்தா இந்த அதிகாரப்பூர்வமான தொந்தரவுங்க எதுவுமே இல்லாம குழந்தய உங்ககிட்ட நான் கொண்டு வந்து சேக்கறேன்...”
அவர்களுக்குப் பிடித்த அதே பிராமணக் குழந்தைதான் வேண்டும் என்றும், எல்லாம் நேர்மையான வழியில்தான் நடக்கவேண்டும் என்றும் விருப்பப்பட்ட டாக்டர் தம்பதிகள் வக்கீலுடைய யதாரத்தமான உபதேசத்தை நிராகரித்தார்கள். பதிலுக்குக் குழந்தையைத் தத்து எடுக்கிற பகுதியாக கோர்ட்டில் செய்ய வேண்டிய வேலைகளை மட்டும் அவர் செய்து தந்தால் போதும் என்று சொல்லி விட்டார்கள். சாதாரணமாகப் பழகுகிற ஒரு நண்பராக இருந்ததாலும், அவர் கேட்ட தொகையை மொத்தமாக பேரம் எதுவும் பேசாமல் கொடுக்கத் தயாரானதாலும் ஒரு ஆறு மாதத்துக்குள் தத்து எடுக்கும் நடவடிக்கை முடிந்தது.
குழந்தையை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வருவதற்காக... பிராமணனும், அவருடைய மனைவியும் குழந்தை தொடர்பான சகலவிதமான அதிகாரங்களையும் அந்த அனாதை இல்லத்தினரிடமே கொடுத்து விட்டிருந்ததால் டாக்டர் தம்பதிகளுக்கு அதிர்ஷ்டவசமாக அவர்களைத் தேடிக்கொண்டு போகவேண்டி நேரடவில்லை. அனாதை இல்லத்துக்காரர்கள் வைத்திருந்த தமிழ்ப்பெயரை மாற்றி குழந்தைக்கு அவர்கள் “ஸவச்சா” என்று பெயர் வைத்தார்கள். பதினாறு வருடங்களுக்கு முன்பு இந்தப் பெயர் அதிகம் பிரபலமாகாத புதுமையான பெயராக இருந்தது. பெயருடைய அர்த்தத்தைப் போலவே குழந்தை நல்ல வெள்ளைவெளேரென்று சிவந்த நிறத்தோடு அழகுராணியாகவே இருந்தாள்.
ஸவச்சா வீட்டுக்கு வந்தது முதலே ஜகதீஷூடைய அம்பிகாவுடைய அதிர்ஷ்டம் மேலும் மேலும் ஒளி வீசத்தொடங்கியது. அவர்களுடைய க்ளீனிக் மெல்ல மெல்ல பெரிய ஆஸபத்திரியாகியது. பதினாறு வருடங்களுக்குப் பிறகு.. இப்போது நூறு படுக்கைகளும், பலவிதமான நோய்களுக்கு நிபுணத்துவத்தோடு கூடிய சிகிச்சை தருகிற இருபத்தி ஆறு டிபார்ட்மென்ட்டுகளும், முப்பத்தி இரண்டு ஸபெஷலிஸட்டுகளும் உள்ள ஆஸபத்திரி ஆகும் “ஜகதம்பா மெடிகல் சென்டர்”. இதனாலேயே இரண்டு டாக்டர்களுடைய வீட்டுக்காரர்களுக்கும், குடும்பக்காரர்களுக்கும் முன்பே சொன்ன வயதான ஆயா உட்பட எல்லோருக்கும் பொறாமையால் வயிறு எரிந்து கொண்டிருந்தது. எல்லாக் குழந்தைகளும் வளர்வதைப் போல ஸவச்சா குழந்தைப் பருவத்தையும், விடலைப்பருவத்தையும், இளமைப்பருவத்தையும் கடந்து வளர்ந்து கொண்டிருந்தாள். அவளுடைய அந்தப் பயணத்தில் அவள் பிடித்த பிடிவாதங்கள் எல்லாவற்றையும் ஜகதீஷூம், அம்பிகாவும் முழுமனதோடு நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.
“ஒன்னே ஒன்னுதானே இருக்கு... அவளுக்கு எந்த ஒரு விஷயத்துலயும் ஒரு குறை கூட இருக்கக்கூடாது...”
இரண்டு பேரும் அவளை விடப் பிடிவாதமாக பரஸ்பரம் சொல்லிக் கொண்டு சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். குழந்தைக்குச் சோறு கொடுக்கிற சடங்குக்குரிய வயது எல்லாம் தாண்டிப் போய்விட்டது என்றாலும் ஒரு சந்தோஷத்துக்காக இரண்டாவது வயதில் அவளைக் குருவாயூருக்குக் கூட்டிக்கொண்டு போய் அந்தச் சடங்கையும் செய்து முடித்தார்கள் அவர்கள். ஆச்சரியமாக அதைப் பார்த்துக் கொண்டு நின்றுகொண்டிருந்த ஆள்களின் முகத்தில் படர்ந்திருந்த பரிகாசத்தை ஜகதீஷூம், அம்பிகாவும் அலட்சியப்படுத்தினார்கள். நாலாவது வயதில் அவளை அவர்கள் திரூருக்குக் கூட்டிக்கொண்டு போய் எழுத்தைப் படிக்க வைக்கிற சடங்கையும் செய்து முடித்தார்கள். சுற்றிலும் இருந்த குழந்தைகள் அலறி அழுது கொண்டிருந்தார்கள் என்றாலும் ஸவச்சா அந்த நிகழ்ச்சியை ரசிப்பவளாக இருந்தாள்.
“இவ புத்திசாலிதான்” என்று அன்று டாக்டர் தம்பதிகள் மனதுக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதிகநாள் எடுத்துக் கொள்ளாமல் ஸவச்சாவை நகரத்தில் ஒரு பிரபலமான ஸகூலில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். மூன்றரை லட்சம் ரூபாய் அன்று ஸகூலுக்கு டொனேஷன் கொடுத்திருந்தான் ஜகதீஷ். அது வேலை செய்தது. ஸகூலில் அவளுக்கு ராஜமரியாதையும், கவனிப்பும் கிடைத்தது. அவளுடைய ஐந்தாவது பிறந்த நாளில் திரும்பவும் அவளை குருவாயூருக்குக் கூட்டிக்கொண்டு போனபோதுதான் ஸவச்சா அவளை விட உயரமான ஒரு கிருஷ்ணர் பொம்மையைக் கிழக்கு சந்நிதியில் ஒரு கடையில் இருந்து அநியாய விலைக்கு பிடிவாதம் பிடித்து வாங்கினாள். அவளேப் பிடிவாதத்தோடு அதைத் தூக்கிக்கொண்டு வந்து காரில் வைக்கவும் செய்தாள். வீடு வந்து சேர்ந்தவுடன் அந்தப் பொம்மையை அவளே இறக்கி எடுத்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அதை ஒரு ஸடூலின் மீது ஏதோ ஒரு கடவுள் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்வதைப் போல வைக்கவும் செய்தாள். அப்புறம்... ஒரு பிரதிஷ்டை செய்து முடித்த திருப்தியோடு அவள் கொஞ்சம் பின்னால் தள்ளி நின்று அந்த விக்ரகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னதான் இருந்தாலும் ஒரு பூசாரியோட இரத்தம் இல்லயா...?” என்று அன்று இராத்திரி ரகசியமாக அம்பிகா ஜகதீஷிடம் சொன்னாள். “அதோட புண்ணியமும், புனிதத்தன்மையும் அவளுக்குள்ளாற என்னிக்கும் இருக்கும்” என்று ஜகதீஷ் மேலும் சொன்னான். “அவ கேக்கக்கூடாது”. அம்பிகா ஜகதீஷோட காதில் முணுமுணுத்தாள். கிருஷ்ண விக்ரகத்தோடு ஸவச்சாவுக்கு இருந்த பக்தி நாளாக நாளாகக் குறைந்து கொண்டே போனது. அவளுடைய சிந்தனைகள் சுதந்திரம், பாரம்பரியம், முற்பிறவி என்று இப்படி இருக்கின்ற சில புதியகால விஷயங்களை நோக்கி மாறியது. அதற்காக அவள் படிப்பில் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. எல்லா வகுப்புகளிலும்... எல்லா விஷயங்களிலும்... அவள்தான் ஸகூலில் முதலாவதாக வந்தாள். காலப்போக்கில் ஸவச்சா மௌனியாக ஆரம்பித்தாள். அவள் அவளுடைய தனிப்பட்ட உலகத்திலேயேக் கூடுதலாக வாழ ஆரம்பித்தாள். அப்பா, அம்மா கேட்கிற கேள்விகளுக்கும், விசாரிப்புகளுக்கும் எல்லாம் ஒரு முணுமுணுப்பு மூலமாகவோ, இல்லை ஒரு தலையாட்டலின் வழியாகவோதான் ஸவச்சா பதிலளித்தாள். “ சீரியசான புத்திசாலிப் பொண்ணு” என்றும், “ வருங்காலத்துல அவ ஒரு சூப்பர் ஸபெஷலிஸட் டாக்டராவா” என்றும் அவளுடைய அப்பா அம்மா அவர்களுடைய ஆஸபத்திரியை நடத்திக் கொண்டு போவதில் ஏற்படும் ஆயிரமாயிரம் வேலைகளுக்கு நடுவிலும் அவளை பாராட்டிக் கொண்டு ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ப்ளஸ டூ கிளாசுக்கு வந்த போதே ஸவச்சா மருத்துவம் படிக்கத் தயாரானாள். அவள் என்ட்ரேன்சில் நல்ல ஒரு ரேங்க் வாங்குவதற்காக ஜகதீஷூம், அம்பிகாவும் அவளை பலவிதமான கோச்சிங் கிளாஸ்களுக்கு அனுப்பினார்கள். அங்குதான் ஸவச்சாவுக்கு பல பெரிய பெரிய சிந்தனையாளர்களோடும், புரட்சிகாரர்களோடும் பழகுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. யதார்த்தமாக உள்ள ஒரு டாக்டரும் அங்கீகரிக்கவும், நம்பவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாத சில வினோதமான தத்துவங்களை அவள் அங்கே இருந்த சில தோழர்களிடம் இருந்து கற்றுக்கொண்டாள்.
“உலகத்தை குணப்படுத்துவது மருந்துகள் கிடையாது. மாறாக நோயாளியுடைய மனதுதான்...” என்பதுதான் இந்தத் தத்துவங்களிலேயே மிகவும் ஆபத்தான விஷயம்..! ‘ஜகதம்பா மெடிகல் சென்டர்” என்ற பெரிய ஆஸபத்திரி ஒரு பெரிய ஏமாற்று வேலை என்று ஸவச்சா நம்ப ஆரம்பித்ததும் இப்படித்தான். அங்கே இருக்கிற இருபத்தி ஆறு சிகிச்சைப் பிரிவுகளும், அதில் இருக்கின்ற ஸ்பெலிஸ்ட் டாக்டர்களும் சமூகத்துக்கு நன்மைகளைக் காட்டிலும் அதிகமாகத் தீமைகளையே செய்கிறார்கள் என்றும் அவள் நம்பத்தொடங்கினாள். நண்பர்களும், அவ்வாறு இல்லாத சிலரும் வழக்கமாக அனுப்பிக் கொடுத்து வந்த வாட்ஸ ஆப் செய்திகளின் நம்பகத்தன்மையைப் பற்றியும் ஸவச்சா ஆச்சரியப்பட்டுப் போனாள். ஆறு ஏழு நிமிடநேரம் நீண்ட வீடியோ செய்திகள் கூட அவளுக்கு வந்து கொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தில் அவளுடைய அப்பா அம்மா நடத்துகின்ற ஆஸ்பத்திரியில் நடந்து வந்த பல கொள்ளை அடிக்கிற விஷயங்களும் விவரிக்கப்பட்டிருந்தன. இப்படி எல்லாம் இருந்தாலும் ஸவச்சா என்ட்ரேன்ஸ பரீட்சைகள் பலவற்றையும் எழுதினாள்.
டாக்டர் ஜகதீஷும், டாக்டர் அம்பிகாவும் ஸவச்சாவுடைய விசித்திரமான மனப்போக்குகளைப் பற்றி எதுவுமேத் தெரியாமல் அவளை ஆழமாக நேசித்தும், ‘ஜகதம்பா மெடிகல் சென்ட’ருடைய வருங்கால உரிமையாளராகவும் நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
“அம்மா... கொஞ்சநாளா திருட்டுப்பயலுங்க மாதிரி இருக்கற சில பையன்ங்க நம்ம ஸவச்சா குட்டியப் பாக்கறாதுக்கு வராங்க...” என்று வேலைக்காரி நிரூபமாதான் ஒரு நாள் அம்பிகாவிடம் சொன்னது.
“திருட்டுப்பசங்க மாதிரின்னு சொன்னா...?” அதிர்ச்சியைக் காட்டிலும் அதிகமான கோபத்தோடு அம்பிகா நிரூபமாவிடம் கேட்டாள்.
“நீ யாரு...? மூஞ்சியப் பாத்தாலே எல்லாத்தயும் சொல்ற ஆளா...?”
இந்தக் கேள்விக்கு நிரூபமா பதில் எதுவும் சொல்லவில்லை. சொன்னதே அதிகப் பிரசங்கித்தனமாகப் போய்விட்டதே என்று நினைத்துக் கொண்டு சங்கடத்தோடு நின்றாள் அவள். மாதக்கடைசியில் சம்பளத்தைக் கொடுத்துக் கொண்டு அம்பிகா நிரூபமாவிடம் சொன்னாள்.
“நாளைலேர்ந்து நீ வரவேணாம்...”
கொஞ்ச தூரத்தில் கலங்கமே இல்லாத முகத்தோடு இருப்பதைப் போல சிரித்துக் கொண்டு நின்ற ஸவச்சாவை நிரூபமா பயத்தோடு பார்த்தாள். அப்புறம் புடவைத் தலைப்பால் கண்களையும், முகத்தையும் துடைத்துக் கொண்டு வெளியே போனாள். அவள் போனபோது ஸவச்சா அம்பிகாவிடம் சொன்னாள்.
“பாவம் நிரூபமா அக்கா...”
அதற்குப் பதிலாக அம்பிகா சொன்னது.
“உண்ட வீட்டுக்கே துரோகம் செய்யறா” என்பதுதான். அந்த சுவாரசியமான பழமொழி ஸவச்சாவுக்குப் பிடித்திருந்தது. அவள் அதை ரசித்து, போதும் என்கிற வரைக்கும் சிரித்தாள். நிரூபமா குறிப்பிட்டிருந்த பையன்கள் டாக்டருடைய வீட்டுக்கு அதற்கு அப்புறமும் வந்தார்கள். அவர்கள் ஸவச்சாவுடைய அறையில் இருந்து மெல்லிய குரலில் பலவற்றையும் சொன்னார்கள். புதிய வேலைக்காரி நிரஞ்சனா அவர்களை பார்த்தும் பார்க்காதது மாதிரி தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை மட்டும் யந்திரத்தைப் போல செய்து முடித்துவிட்டு தினமும் திரும்பப் போனாள். என்றாலும் அவளுடைய காதுகளுக்குஅ சில சமயங்களில் உள்ளே இருந்து கேட்ட வார்த்தைகள்... விடலைப்பருவத்தினாலோ... காதலாலோ... ஒருவரோடு ஒருவருக்கு இருக்கும் கவர்ச்சியாலோ உளறிக் கொட்டுகிற வாடிக்கையான வார்த்தைகளாக இல்லை என்பது நிரஞ்சனாவை பெரிதாகக் கவலைப்படச் செய்தது. “ ச்சீ...” அந்த சங்கடத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு அந்தத் திசையை நோக்கித் தலையைக் கூட வைத்துப் படுக்காமல்... நிரஞ்சனா தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
“என்ன பசங்க இதுக எல்லாம்...?” அவள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
“இப்ப இல்லாம இவுங்க எப்பதான் ஜோக் எல்லாம் அடிச்சு சிரிக்கறது...?”
‘ஜகதம்பா மெடிகல் சென்டர்’ ஜகதம்பா மல்டி ஸபெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக மாறியதற்காகவும், ‘ஜகதம்பா நர்சிங் காலேஜு’டைய தொடக்க விழாவுக்காகவும் ஸவச்சாவுடைய ராசியான கையால் விளக்கேற்றி வைத்துத்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்த அன்றுதான் ஸவச்சாவுக்கு இந்தியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற ஒரு மெடிகல் காலேஜில் எம். பி. பி. எஸ்க்கு அட்மிஷன் கிடைத்தது பற்றிய மின்னஞ்சல் கிடைத்தது. ஸவச்சாவுக்கு இது ஒரு சந்தோஷமான சர்ப்பரைசாக இருக்கட்டும் என்று நினைத்து அவளுடைய அப்பா அம்மா அவளை போனில் அழைத்து முன்கூட்டியே இந்த விவரத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அன்று சாயங்காலம் டாக்டர் தம்பதிகள் ஆஸபத்திரியில் இருந்து திரும்பி வருகிற வழியில்... நகரத்தில் மிகவும் பிரபலமான மிகவும் பெரிய பாக்கரியில் இருந்து ஒரு பெரிய காகிதப்பெட்டி நிறைய லட்டு வாங்கினார்கள். அவர்கள் அதையும் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தபோது... ஸவச்சாவும் அவளுடைய நான்கு நண்பர்களும்.. வரவேற்பு அறையிலேயே புன்னகையோடு காத்துக்கொண்டு இருந்தார்கள். நிரூபமா முன்பு சொன்ன திருட்டுத்தனமாத் தோன்றுகிற பையன்களை அப்போதுதான் டாக்டர் தம்பதிகள் நேருக்குநேராகப் பார்ப்பது...
நினைத்துப் பார்ப்பதற்குக் கூட நேரம் இல்லாமல் இரண்டு டாக்டர்கள் மீதும் நான்கு பையன்களும் பாய்ந்தார்கள்... காகிதப்பெட்டி தரையில் விழுந்து லட்டுகள் சிதறித் தெறித்தன. சிறிதுநேரப் போராட்டத்துக்குப் பிறகு, இரண்டு டாக்டர்களுக்கும் சுயநினைவே இல்லாமல் டைனிங் டேபிளில் கிடக்கவேண்டி ஏற்பட்டது. பையன்களில் ஒருவன் ஸவச்சாவுக்கு கூர்மையான ஒரு ஸகேல்பல்15 என்கிற ஒரு ஆபரேஷன் பிளேடை கறுப்புநிறமுடைய ஒரு பிளாஸ்ட்டிக் பிடியில் பொருத்தி ஸவச்சாவிடம் கொடுத்தான். ஸவச்சா அதற்கு அப்புறம் கொஞ்சம் கூட நடுக்கம் இல்லாமல்... அழகான கைகளால் தனக்குச் சொந்தம் இல்லாத அப்பா, அம்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆரம்பித்தாள்.
தமிழ்நாட்டில் ஒரு கிராமப்புறத்தில்.. ஐந்து இலக்க எஸ. டி. டி கோடையும், அதன் தொடர்ச்சியாக இருந்த ஆறு இலக்க நம்பர்களையும் மொபைல் போனில் டயல் செய்து ஒரு பையன் உற்சாகத்தோடு சொன்னான்.
“இனிம நீங்க வரலாம்... முதல் டெஸ்ட் சக்சஸ் ஆயிடுச்சு...”