இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

லாட்டரிச் சீட்டு விற்பனை

மலையாளம்: வி. எஸ். அனில்குமார்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


(கதையைப் பற்றி மூல ஆசிரியர்: “நம் வாழ்க்கையில் இருந்து பலவீனமான ஒரு தொழில்நுட்பம் மெல்லமெல்ல மறைந்து போய்விட்ட ஒரு காலம் இது. தந்தி தான் கதையின் முக்கிய கதாபாத்திரம். இந்த கதை 2001 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது)

வாகனங்களின் ஆதிக்கப்போக்கு நிரம்பி வழியும் காலை ஒன்பதரை மணிக்கு நேரு ஸ்டேடியத்திற்கும் முதன்மைத் தபால் அலுவலகத்திற்கும் இடையில் இருக்கும் சாலையைக் கடந்து செல்லப் பதட்டத்தோடு கமருதீன் காத்துக் கொண்டிருந்தான். அதிர்ஷ்டத்தை விநியோகம் செய்யும் அவனுடைய வாகனத்தில் இருந்து விளம்பரங்கள் முறைப்படி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. பல மணி நேரங்களுக்குப் பிறகு, “ஒரு லாட்டரிச் சீ ட்டு கொடுங்க” என்று சொன்னால் பலன் ஏமாற்றமாகத்தான் இருக்கும்.

விளம்பரம் முழங்கியது. “இதோ. கேரள அரசாங்கத்தின்…” இடைவிடாமல் வந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு இடைவேளை ஏற்படவில்லை. சைக்கிளைச் சாலையின் இந்தப் பக்கத்தில் நிறுத்திவிட்டுப் போகவும் முடியாது. அவன் ஒரு இடைவேளைக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அப்போது குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நின்று செல்லும் பேருந்துகளின் ஒரு அணிவகுப்பு. அவனுக்கு முன்னால் ஒளி வேகத்தில் கடந்துபோயின. “ஒரு இடவேளயும் இல்ல. எல்லாம் காலத்தோட கோலம்”. கமருதீன் உள்ளுக்குள் புலம்பினான்.

அவனுடைய சைக்கிளின் முன்பக்கம் தோகை விரித்த ஒரு மயில் போல இருந்தது. ஹேண்டில் பாரில் நீளமான காட்போர்டில் பரப்பி அலங்காரமாக பல பல வண்ணமயமான லாட்டரிச் சீட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பின்னால் கேரியரில் பேட்டரி, சிறிய டேப் ரெக்கார்டர், ஸ்பீக்கர்கள். கறுத்த பேட்டர் மாதிரி அவனுடைய உள்ளம் கனத்தது.

ஒரு விநாடியின் நூறில் ஒரு பொழுதில் வாகன வரிசை இல்லாமல் போனது. அதிர்ஷ்டத்தைச் சுமந்துகொண்டிருந்த அந்தச் சைக்கிளுடன் அகலமானச் சாலையைக் கமருதீன் வேகவேகமாகக் கடந்தான். “யா அல்லா. ஒரு வழியாத் தாண்டியாச்சு”. அவன் ஆறுதல் பெருமூச்சு விட்டான். சைக்கிளை மேலும் ஒரு தள்ளு தள்ளினான். முன்னால் முதன்மைத் தபால் ஆபீஸ் கட்டிடம். வாசலைத் தாண்டிச் சென்று சைக்கிளை ஒரு காருக்குப் பக்கத்தில் நிறுத்தினான்.

ஸ்டாண்டில் நிறுத்தினான். டேப்பை அணைத்தான். இதை இங்கே வைத்து விட்டுப் போனால் ஆபத்தாகிவிடும் என்ற நினைப்புடன் கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது மூன்று நான்கு காகங்கள் மதில் சுவருக்கு மேல் பறந்து வந்து உட்கார்ந்தன. “வாழ்க்கையில முதல் தடவயா தபால் ஆபீஸ் முன்னால நான் நிக்கறேன்”. எழுதவும் வாசிக்கவும் தெரியாது. இவ்வளவு நாளில் அவன் யாருக்கும் ஒரு கடிதத்தை அனுப்பியதும் இல்லை. அவனுடைய முகவரிக்கு எந்தக் கடிதமும் வந்ததும் இல்லை.


இப்போது வெளிநாட்டில் இருக்கும் மனைவிக்கு எழுதவும் வாசிக்கவும் தெரியாது என்பதால் அவளும் எழுதுவதில்லை. கடந்த இரண்டு மாதத்தில் இரண்டு தடவை போன் செய்தாள். இப்போது எனக்குத் துபாயில் இருக்கும் ஜபலபி என்ற இடத்திற்கு இரண்டு தந்திகள் அடிக்கவேண்டும். ஒன்று மனைவிக்கு. மற்றொன்று முதலாளிக்கு. இங்கே அதற்கு உள்ள வசதி இருக்கும் என்று பாலகிருஷ்ணன் அண்ணன் சொன்னதனால்தான் அவன் இங்கே வந்தான்.

“இனிம எங்கப் போயி விசாரிக்கணும்? எங்க போய் தந்திய அனுப்பறது?”. ஹேண்டில் பாரில் இருந்த லாட்டரி சீட்டுகளின் மயில் தோகையை தளர்த்தி எடுத்து சைக்கிளைப் பூட்டி கமருதீன் முக்கியத் தபாலாபீஸின் வராந்தாவையும் தாண்டியிருந்த உள் பகுதிக்குச் சென்றான். அந்த இடம் விசாலமாக இருந்தது. எங்கேப் பார்த்தாலும் எரிந்து கொண்டிருந்த குழல் விளக்குகள். உள்ளே எல்லோரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். ஒரே கூட்டம். ஒவ்வொரு கவுண்டருக்கு முன்னால் பெரிய க்யூ வரிசை. “இவ்வளவு பேரு எங்கே தந்தி அனுப்பறாங்க?”. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “சினிமாத் தியேட்டர்ல கூட இவ்வளவு கூட்டம் இருக்காது” நினைக்கும்போதே சோர்வு ஏற்பட்டது. “யாருகிட்ட கேக்கறது?”

முன்னால் இருந்த ஆளிடம் கேட்கலாம் என்று நினைத்து அவன் நெருங்கிய போது, “வேணாம் வேணாம்” என்று தலையாட்டி ஓடி மறைந்தான். இன்னொரு ஆள் கையை உயர்த்தி வரவேண்டாம் என்று விலக்கினான். மனைவிக்கு தந்தி அனுப்ப வந்தாலும், அவன் ஒரு லாட்டரி சீட்டு விற்பவன்தானே?

வெளிப்படையாக வேண்டாம் என்று சொல்லும் பலரும் இரகசியமாக லாட்டரி சீட்டு வாங்குவது உண்டு என்று அவனுக்குத் தெரியும். பிறகு ஒவ்வொருவரிடமும் கேட்கவேண்டுமா வேண்டாமா என்று புரியாமல் குழம்பி அலைந்தான். சங்கடத்தால் சுருங்கிப்போவது போல அவனுக்குத் தோன்றியது. கடைசியாக, இரண்டாவது வாசலுக்குப் பக்கத்தில் கவரில் ஸ்டாம்ப்பை ஒட்டிக்கொண்டிருந்த லுங்கி கட்டிய ஒரு ஆளிடம் தயங்கியபடி அவன் கேட்டான்.

“தந்தி அடிக்கற இடம் எங்க இருக்கு?” லுங்கிக்காரன் கமருதீனை லேசாக முறைத்துப் பார்த்தான். அப்புறம் அவன் “தந்திய தந்தி ஆபீஸ்ல போய்தான் அனுப்பனும். இது போஸ்ட் ஆபீஸ். ஒரு தாய் பெத்த ரெண்டு குழந்தைங்க மாதிரி இரண்டயும் பிரிச்சு வச்சு எவ்வளவு காலமாச்சு! இத்தன நாளும் நீங்க எங்க இருந்தீங்க? ஒரு வேலை செய்யுங்க. நேரா யோக சாலையைப் பிடிச்சு யார்கிட்ட கேட்டாலும் சொல்லுவாங்க”.

“அப்படியொன்னும் பாலகிருஷ்ணன் அண்ணன் சொல்லலயே?”. போஸ்ட் ஆபீஸ்லயே தந்தி அடிக்கறதுக்கும் வசதி இருக்குன்னுதானே அண்ணன் கடயத் திறக்கற நேரத்துல திரும்பிப் பாக்காம சொன்னாரு? இந்த லுங்கிக்காரன் என்னை ஏமாத்தறானா?”. கமருதீன் அவனை உற்றுப்பார்த்தான். அவனும் கமருதீனைப் பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென்று இரண்டு பேரும் ஒரே நேரத்தில் பார்வையின் திசையை மாற்றினார்கள்.


லுங்கிக்காரன் ஸ்டாம்ப் ஒட்டிய கவரை திருப்பி வைத்து ஒரு வளைவு வளைந்து எதிர்ப்பக்கம் இருந்த க்யூவில் கடைசியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் மெதுவாகக் கேட்டான். “எங்க தந்தி அனுப்பணும்?”. அவள் தலையை உயர்த்தி கமருதீனைப் பார்த்தாள். அப்புறம் உதட்டை விரித்தாள். “தெரியல” என்று சைகை செய்துகாட்டினாள். அப்புறம் அவள் தனக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தவனிடம் கேட்டாள்.

“இந்த தந்தி அடிக்கறது இப்பவும் நடக்குதா?”. அந்த ஆள் அதற்கு என்ன பதில் சொன்னான் என்று கமருதீனுடைய காதில் விழவில்லை. கொஞ்ச தூரத்தில் அந்த லுங்கிக்காரன் கமருதீன் இருந்த பக்கம் பார்த்துக் கொண்டேயிருந்தான். அவனுடைய முகத்தில் பரிகாசம் நிரம்பித்துள்ளியது. வெள்ளத்தில் பிய்த்துக் கொண்டு அலையும் கூரை போல கமருதீன் அங்கேயே சுற்றி அலைந்தான்.

ஸ்டாம்ப் கவுண்டரில் இருந்து கடைசியாக தந்தி ஆபீஸ் யோக சாலையில்தான் இருக்கிறது என்ற விவரத்தைக் கேட்டு தெரிந்துகொண்டான். வேகவேகமாக வெளியில் வந்தான். சைக்கிளைத் திறந்து லாட்ட்டரி சீட்டுகளின் மயில் தோகையை ஹேண்டில் பாரில் வைத்து டேப் ரெக்கார்டரை ஆன் செய்தான்.

விளம்பரம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து ஓட ஆரம்பித்தது. “யாருக்காகவும் காத்துக்கொண்டிருக்காமல் நாளை… நாளைக்குத்தான்... நாளைக்கு… கேரள அரசு மாநிலதின் பெரியாறு லாட்டரி டிக்கெட் குலுக்கல் நாளைக்கு…”. யோக சாலையில் கொஞ்ச தூரம் போன பிறகுதான் வண்டியை நிறுத்தினான். டேப்பை ஆஃப் செய்தான். முதலில் பார்த்த ஆளிடம் கேட்டான். “தந்தி அனுப்பற ஆபிஸ் இங்கதானே இருக்கு?”. அவன் பின்னால் இருந்த ஒரு கட்டிடத்தைச் சுட்டிக்காட்டினான்.

சைக்கிளைத் திருப்பி டேப்பை ஆன் செய்தான். “சீக்கிரமா வாங்க. நிறய தடவை லாட்டரி சீட்டு வாங்கி நீங்க சலிச்சுப் போயிருக்கலாம். நிராசைப்படாதீங்க. இதோ. மாநில அரசாங்கத்தோட ஒரு டிக்கெட். யாருக்குத் தெரியும் இந்த தடவ...” முன்னால் ஐந்து மாடிக் கட்டிடம். சைக்கிளைப் பூட்டினான். லாட்டரி சீட்டுகளின் தொகையை கையில் எடுத்துக் கொண்டு கட்டிடத்திற்குள் நுழைந்தான்.

பூட்டப்படாத அந்தச் சைக்கிள் தனிமையில் மௌனமாக நின்றது. கையில் இருந்த கார்டு போர்டை பின்பக்கமாக சேர்த்துப் பிடித்துக்கொண்டு அவன் நின்றான். அப்போது அவனுக்கு முன்னால் லிஃப்ட் வாயைப் பெரிதாக பிளந்து திறந்தது. ஐந்தாறு பேர் அதற்கு உள்ளே இருந்து வெளியில் வந்தார்கள். கமருதீனை இடித்துத் தள்ளி விட்டு வெளியில் போனார்கள்.

முன்னால் அதோ திறந்து கிடக்கும் லிஃப்ட். அது மேலேதான் போகிறது என்று அவனுக்குத் தெரிந்தது. ஆனால் எப்படிப் போகறது? விழித்துக் கொண்டு நிற்கும்போதே அதன் வாசல் கதவு மூடியது. சத்தத்துடன் மேல் நோக்கிப் போனது. அந்த நேரம் ஒரு இளம் வயதுப் பையன் மூச்சிரைக்க ஓடிவந்தான். லிஃப்ட் போனதைப் பார்த்து கவலையோடு நின்றான்.

அவசரமாக சுவரில் இருந்த ஒரு ஸ்விட்ச்சை அழுத்தினான். கமருதீன் தயங்கிக்கொண்டே அவனிடம் பேசினான். “நண்பரே. என்னையும் மேலேக் கூட்டிகிட்டுப் போகணும்”. “எத்தனையாவது மாடிக்கு?”. இளைஞன் கேட்டான். “தந்தி ஆபீஸ் இருக்கற இடத்துக்கு”. “அது நாலாவது மாடியில. உங்களுக்கு எந்த ஊருக்குத் தந்தி அனுப்பணும்?”. அவன் கேட்டான்.”ஜபிலபிங்கற இடத்துக்கு”

“மை குட்னெஸ். அது கல்ஃப்பிலதானே இருக்கு? என்ன அனுப்பணும்?”.

“அதெல்லாத்தயும் அப்பறமா பேசிக்கலாம் நண்பரே. நீங்க எனக்கு கொஞ்சம் உதவி செய்யணும். எனக்கு ரெண்டு தந்தி அனுப்பணும். ஒன்னு என்னோட மனைவிக்கு. இன்னொன்னு முதலாளிக்கு”. “தந்தி அடிக்கச் செலவு அதிகமா ஆகும். உங்களுக்கு இ மெயில் அனுப்பினா போதாதா? அரபு நாட்டுக்காரங்களுக்கு இ மெயில் அட்ரஸ் இருக்குமே? அதுதான் லாபம்”

கமருதீன் சொன்னான். “இ மெயில்னா எந்த மெயில். எனக்குத் தெரியாது. அதப் பத்தி கேட்டதும் இல்ல. அப்பறம்தானே அது லாபமா நஷ்டமான்னு யோசிக்கணும்? தெரியாதவனுக்கு யானை கூட தெரியாத ஒன்னுதான்”. நான்காவது மாடியில் லிஃப்ட்டைத் திறந்து இரண்டு பேரும் வெளியில் வந்தார்கள். அங்கேயும் கம்ப்யூட்டர் கவுண்டர்கள். டெலிபோன் பூத்துகள். கண்ணாடிக் கூண்டுகள். கமருதீனுக்கு மறுபடி சிறிதாவது போலத் தோன்றியது.

பின்னால் லாட்டரி சீட்டுகளின் மயில் தோகை ஆடியது. அதைப் பற்றித் தெரிந்தது போல இளைஞன் சொன்னான். “நீங்க கவலப்படாதீங்க. அட்ரஸயும் விவரத்தையும் கொடுங்க. நான் ஃபார்ம் எல்லாத்தயும் நிரப்பித் தரேன்“. கமருதீன் படைத்தவனுக்கு நன்றி சொன்னான். அப்புறம் இடுப்பில் சொருகியிருந்த ஒரு துண்டுக் கடுதாசியை எடுத்து இளைஞனுக்கு நேராக நீட்டினான்.

“என்ன விவரம் அனுப்பகணும்?”. “நான் சொல்றது போல எழுதணும். என்னோட மனைவி ஆயிஷாவுக்கு அனுப்பற தந்தியில கமருதீன் செத்துப்போயிட்டான். உடனே புறப்படு”. சொல்லிவிட்டு அவன் ஒரு நிமிடம் நடுங்கினான். பிறகு தொடர்ந்தான்.

“அரபி முதலாளிக்கு அனுப்பற தந்தியில ஆயிஷாவோட புருஷன் செத்துப்போயிட்டான். அவள வேகமா அனுப்பணும்னு செய்தி அனுப்புங்க” பேசி முடித்த அவனுக்கு மூச்சு முட்டியது. இருமி இருமி அவனுக்கு மூச்சு நின்று விடுவது போலத் தோன்றியது.

“நீங்கதானே கமருதீன்? அப்பறம் எதுக்கு இப்படி ஒரு தந்தி!”. இளைஞன் கேட்டான். “அதெப்படி நண்பரே உங்களுக்குத் தெரிஞ்சுச்சு. என்னோட அஞ்சு குழந்தைஞ்களோட அம்மா ஆயிஷா. வயித்தக் கழுவ தான் துபாய்க்கு போனா. யாரு யார யாரு காப்பாத்தறது? அவ அங்க கொடுமய அனுபவிக்கறா. படிக்க எழுத தெரியாததுனால எல்லா விஷயத்தயும் எப்படியோ ஒரு கேசட்டுல ரெக்கார்டு செஞ்சு எனக்கு அனுப்பினா. கேக்கறதுக்கோ சொல்றதுக்கோ முடியாத அவ்வளவு கஷ்டம். கேக்கறதுக்கே சகிக்கமுடியாத கொடுமைங்க”. அவன் கலங்கிப்போனான். பக்கத்தில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்துகொண்டான். அவன் சொன்னது போலவே இரண்டு ஃபார்ம்களில் விவரத்தையும் முகவரிகளையும் எழுதி இளைஞன் அவற்றை கவுண்டரில் கொடுத்தான்.

அப்போது கமருதீன் தள்ளாடியபடி எழுந்திருந்து கவுண்டருக்குப் பக்கத்தில் வந்தான். பணத்தை எடுத்து இளைஞனிடம் கொடுத்தான். அவனுடைய முகத்தில் துயரத்தின் சாயல் தாண்டவமாடியது. இயந்திரம் எழுதிய ரசீதுகளை கையில் வாங்கியபோது அவனுடைய கைகள் நடுங்கின. மீதிப் பணத்தை இளைஞன் அவனுடைய பாக்கெட்டில் வைத்தான். பிறகு கமருதீனுடைய தோளைப் பிடித்து அவன் சொன்னான்.

“வாங்க. கீழ கொண்டு போய் விடறேன்”. கமருதீன் இளைஞனைப் பார்த்தான். அந்தப் பார்வை சூன்யமாக இருந்தது. அதைப் பார்த்து இளைஞன் திடுக்கிட்டான். கமருதீனுடைய முகத்தில் உயிர்த்துடிப்புக்கான உணர்ச்சிகள் எதுவுமில்லை. என்றோ இறந்துபோய்விட்ட ஒரு மனிதனுக்கு முன்னால்தான் தான் நிற்கிறோம் என்று இளைஞனுக்குத் தோன்றியது.

“செத்துப்போன இந்த ஆளால நடக்க முடியுது”. இளைஞன் ஆச்சரியத்தோடு நினைத்தான். மெல்லக் காலடி எடுத்து வைத்து நடக்கும்போது கமருதீன் இளைஞனிடம் கேட்டான். “நீங்க இங்க எதயும் செய்யறதுக்கு வரலயா?”. “இப்ப இதுதான் என்னோட வேல. நீங்க வாங்க”. அவன் கமருதீனை லிஃப்ப்டில் ஏற உதவினான். லிஃப்ட் கிளம்பியபோது அது பூமியில் எங்கோ ஆழ்ந்து போவது போலத் தோன்றியது.


லிஃப்ட்டைத் திறந்து வெளியில் வந்தபோது இளைஞனுடைய கையைப் பிடித்துக்கொண்டு கமருதீன் கேட்டான். “என்னோட நண்பரே. நீங்க அந்த கேசட்டக் கேக்கறீங்களா? நீங்க லாட்டரி டிக்கெட் விக்கற விளம்பரத்ததானே கேட்டிருப்பீங்க?அதோட இதயும் கேட்டுப் பாருங்க. பசி பட்டினியிலேர்ந்து தப்பிச்சுடலாம்னு நினைச்சுதான் ஆயிஷாவ அனுப்பினேன். அரபி முதலாளி கொடும தாங்கல”.

கமருதீன் வேட்டியை மாற்றிக் கட்டி டிராயருடைய பாக்கெட்டில் இருந்து ஒரு கேசட்டை எடுத்தான். டேப் ரெக்கார்டரில் இரிந்த லாட்டரி டிக்கெட் கேசட்டை மாற்றினான். புதிதாகஎடுத்ததை போட்டான். டேப் ரெக்கார்டரை ஆன் செய்தான்.

பட்டென்று அது பெரிய சத்தத்துடன் முழங்க ஆரம்பித்தது.

“எனக்கு போதும்”. இளைஞன் பாய்ந்து சென்று அதை ஆஃப்ப் செய்தான். பிறகு சொன்னான். “இவ்வளவு சத்தம் வேணாம். எல்லாரும் கேப்பாங்க”.

“கேக்கட்டும் நண்பரே. இதயெல்லாம் நான் மட்டும் கேட்டாப் போதாது இல்லயா? ஜனங்களும் கேக்கட்டும். லாட்டரி சீட்டு விக்கறவனோட கதய ஊர்க்காஅங்க எல்லாருக்கும் தெரியவேணாமா?”. டேப் ரெக்காடர் மறுபடியும் பேச ஆரம்பித்தது.

“என்னை இங்கேர்ந்து எப்படியாச்சும் காப்பாத்தணுங்க. யாரும் வீட்டுல இல்லாத சமயமாப் பாத்துதான் நான் இத ரெக்கார்டு செஞ்சு அனுப்பறேன். சாமானுங்க வாங்க போனப்ப கடையில ஒரு மலயாளப் பையனப் பாத்தேன். சுரேஷ். எப்படி இதுல பேசணும்னும் அவந்தான் சொல்லிக்கொடுத்தான். இத உங்க கையில கிடைக்கற மாதிரி செய்யறேன்னும் சொன்னான். படைச்சவன் கேசட்ட கண்டிப்பா உங்க கையில கிடைக்கச் செய்வான். அரபி முதலாளியோட கையிலேர்ந்து நீங்க என்னை சீக்கிரமா காப்பாத்தணும். அவன் ரொம்ப மோசமானவன். என்னோட ஆடைங்களக் கழட்டிப் பாப்பான். பிடிச்சு கஷ்டப்படுத்துவான். அடிப்பான். குத்துவான். இன்னும் கொஞ்சம் போனா அவன் என்னை அழிச்சுடுவான். நீங்க என்னைக் காப்பாத்தணும்”.

லாட்டரி சீட்டு விற்கும் வாகனத்தில் இருந்து அசாதாரணமான விளம்பரத்தைக் கேட்டு திடுக்கிட்டு அதற்குள் ஐந்து பத்து பேர் வாகனத்தைச் சுற்றி கூடி நின்றார்கள். சுவரில் சாய்ந்து நின்றுகொண்டு இளைஞன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். புதிய வகை விளம்பரமா இது என்று சுற்றி நின்றவர்களுக்குத் தெரியவில்லை. அதில் ஒரு ஆள் “சினிமாவோட வசனமா?” என்று கேட்டான். கமருதீன் டேப் ரெக்கார்டரை ஆஃப்ப் செய்தான்.

சைக்கிளை ஸ்டாண்டில் இருந்து இறக்கினான். கிளம்பும்போது கமருதீன் “இதான் என்னோட கதை. நான் போகட்டுமா நண்பரே? நான் எதயும் மறக்கமாட்டேன். அப்புறம் பாக்கலாம்”. இளைஞன் பதில் எதுவும் சொல்லவில்லை. சுற்றிலும் நின்றுகொண்டிருந்தவர்கள் விஷயம் தெரியாமல் கலைந்து சென்றார்கள்.

கமருதீன் சைக்கிளில் ஏறி அந்த சாலையை மீண்டும் கடந்துகொண்டிருந்தான். ஆறு சாலைகள் கூடும் சந்திப்பை அடைந்தபோது அவன் சிறிது நின்றான். அந்த நேரம் சாலையில் நெரிசல். ஏராளமான வாகனங்கள் வரிசை வரிசையாக எறும்பு போல ஊர்ந்து சென்றுகொண்டிருந்தன. போக்குவரத்து நெருக்கடி. எதிர் திசையில் ஒரு ஊர்வலம் வந்துகொண்டிருந்தது.

அது பெரிதாக இருந்தது. “காலங்காத்தாலயே ஊர்வலமா?”. அவன் ஆச்சரியப்பட்டான். ஊர்வலத்தில் ஒரு சில பேர் மட்டுமே முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள். பலரும் மரண ஊர்வலத்தில் போவது போல மௌனமாகச் சென்று கொண்டிருந்தார்கள். “இது முடிய நிறய நேரமாகும். பஸ் காரெல்லாம் நெரிசல்ல சிக்கிகிட்டிருக்கு. சைக்கிள் கூட நுழைஞ்சு போக முடியாத அளவுக்கு எல்லா இடத்திலயும் நெரிசல்”

கமருதீனுக்கு எரிச்சல் வந்தது. அவன் டேப் ரெக்கார்டரை பட்டென்று ஆன் செய்தான். “இதயும் எல்லாரும் கேளுங்க”. அவன் முணுமுணுத்தான். ஊர்வலத்தின் பலவீனமான முழக்கங்களுக்கு இடையில் ஆயிஷாவுடைய அலறலும் கேட்க ஆரம்பித்தது.

“நீங்க என்னைக் காப்பாத்தணும். இல்லாட்டா நான் செத்துப் போயிடுவேன். அரபி முதலாளியோட பொண்டாட்டியும் மோசமானவதான். அரபி இல்லாத நேரத்துல நான் அவள தடவி இன்பப்படுத்தணும். இதுக்கு மேல சொல்ல என்னால முடியல. எதயாச்சும் செய்யுங்க. காப்பாத்துங்க. என்னோட குழந்தைங்களப் பாத்துட்டுதான் சாகணும். காப்பாத்துங்க… காப்ப்பாத்துங்க…”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/story/translation/p42.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License