“இங்க யாரும் இல்லயா?” வராந்தாவில் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டு தீபக் ஜன்னல் வழியாக வெளியில் பார்த்தான்.
சப்பையாய்ப் போன தலைமுடி. முழுக்கைச் சட்டை. ஒற்றை வேட்டி. ஒரு ஆள். நின்று கொண்டிருந்தான். வயது ஏறக்குறைய அறுபது இருக்கும். பிச்சைக்காரன் இல்லை.
வாசல் திறந்து தீபக் அவனிடம் “என்ன வேணும்?” என்று கேட்டான்.
அவன் சிரித்தான். “ரொம்ப சந்தோஷமா இருக்கு மகனே. நான் இங்க பக்கத்துலதான் இருக்கேன். இன்னிக்குப் பந்த்ங்கற்துனால ஒரு கடை கூட இல்ல. டீத்தண்ணி கூட குடிக்க முடியல. கொஞ்சம் தந்தாக் கடவுள் காப்பாத்துவாரு” அவன் எதையும் செய்ய முடியாத நிலையோடும் எதிர்பார்ப்போடும் நின்றான்.
“என்னை இதுக்கு முன்னாடி பாத்திருக்கீங்களா?” தீபக் கேட்டான்.
“ஓ. பாத்திருக்கேனே. நீங்க முக்காவாசி ஸ்கூட்டர்லதானே போவீங்க? நான் டவுன்ல ஷட்டருங்கள திறக்கற வேல செய்யற்ஏன். சாமானுங்கள் இறக்கி வைக்கற வேலயையும் செய்வேன். குப்பைங்கள சுத்தப்படுத்துவேன். என் பேரு யோகண்ணன்”
பேச்சுச் சத்தத்தைக் கேட்டு நிஷா வாசலுக்கு அருகில் வந்தாள்.
யோகண்ணன் சிரித்தபடியே கை கூப்பி வணக்கம் சொன்னான்.
“அம்மா. கொஞ்சம் டீ தருவியா? புண்ணியமாப் போகும். மகளுக்கு நல்ல செல்வம் உண்டு சரியா? மகனோட மனைவிதானே?” நிஷா மந்தகசித்தாள்.
“டீ கொண்டு வந்து கொடு” தீபக் நிஷாவைப் பார்த்துச் சொன்னான்.
“பாக்கறேன். சூடு செய்யணும்” அவள் உள்ளே போனாள்.
“உங்க வீடு எங்க இருக்கு?” என்று தீபக் கேட்டான்.
மணிமலையாறுல? அங்கதான் இருந்துச்சு. போன தடவை வெள்ளம்ம் வந்தப்ப… இந்த கொரோனா வர்றதுக்கு முன்னால. என்னோட வீடும் எல்லாமும் அடிச்சுகிட்டுப் போயிடுச்சு. அப்படிதான் நடக்கணும்னு தெய்வம் முடிவு செஞ்சிருப்பாரு”
“நிதியுதவி ஒன்னும் கிடைக்கலயா?” தீபக்.
“எங்கேர்ந்து கிடைக்கறது? நான் நாந்தான்னு என்ன ஆதாரம்? எல்லாம் தண்ணியில அடிச்சுகிட்டு போயிடுச்சு இல்லயா?” என்றான் யோகண்ணன்.
“மனைவி? குழந்தைங்க?” தீபக் கேட்டான்.
“கட்டிகிட்டவ பேரு கத்தரீனா. எனக்கு ஒரே ஒரு பொண்ணுதான். சபீனா. அவ ப்ளஸ் டூ படிக்கறப்ப எவனோ ஒருத்தங்கூட ஓடிப்போயிட்டா. மயிலாடும்காட்டுலயோ எங்கயோ. புகைஞ்சா கொள்ளி வெளியில. அப்பறம் அவளத்
தேடிகிட்டு நான் ஒன்னும் போகல. கத்தரீனா இந்த சோகத்துல செத்துப்போயிட்டா. உடம்பு சரியில்லாதவ”.
இதற்கு நடுவில் நிஷா ஒரு கோப்பை டீயுடன் வந்தாள்.
“இடியாப்பம் இருக்கு. தரட்டுமா?
“அய்யோ! பெரிய உதவி. தாம்மா தா. அமுதம் மாதிரி நான் சாப்பிட்டுக்கறேன்”
நிஷா ஒரு தட்டில் இடியாப்பத்துடன் வந்தாள். அவன் பசியோடு எல்லாவற்றையும் சாப்பிட்டான்.
“நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும். இந்தக் காலத்துல யாரும் இப்படி எல்லாம் உதவி செய்யறது இல்ல. நான் போகட்டுமா? செய்யறதுக்கு இங்க ஏதாச்சும் வேலை இருக்கா? கூலி எதுவும் வேணாம்” அவன் கேட்டுக்கொண்டே திரும்பி நடந்து வந்தான்.
“ஓ. இங்க என்ன வேலை இருக்கு? மொத்தமே ஏழு செண்ட்டுதான்” தீபக் சிரித்தான்.
மூனு செண்ட்டுலயே வாழையையோ தென்னையையோ மரவல்லியையோ வச்சு வளக்கலாம் இல்லயா? மண்ணச் சும்மா போடக்கூடாது”
உள்ளே தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த காசியும் கௌரியும் வராந்தாவுக்கு வந்தார்கள்.
“மகனோட… இல்ல… சாரோட குழந்தைங்களா இருக்கும். புத்திசாலிப் பையன். புத்திசாலிப் பொண்ணு. சாருக்கு எங்க வேலை?” அவன் அதிசயத்தோடு பார்த்தான்.
”பேங்க்ல வேலை. கடத்தெருவுல கூட்டுறவு வங்கி” தீபக் சொன்னான்.
“ஓ. அப்படியா. ரொம்ப நல்லது. நடுவுல வரேன். ஏதாச்சும் தேவைன்னா காதருக் கடையிலச் சொன்னா போதும். நான் வந்துடுவேன்”
யோகண்ணன் கேட்டைத் தாண்டி போனான்.
“நீங்க இன்னிக்கு பேங்குக்கு போகணும்” நிஷா சொன்னாள்.
“ஓ. யாரு வரப் போறாங்க? ஸ்கூட்டர வெளியில இறக்கவும் முடியாது. எவனாச்சும் கல்லெறிஞ்சா பிரச்சனையாகும்”
நிஷாவுக்கு ஸ்கூல் கிடையாது. அவள் ஆரம்பப்பள்ளி டீச்சர்.
“அந்த ஆள் ஒரு பாவப்பட்ட ஆள்னு தோனுது” நிஷா சொன்னாள்.
“பேசறத மட்டும் வச்சு அப்படிச் சொல்ல முடியாது” தீபக் தொலைக்காட்சி செய்திகளைக் கவனித்தான்.
“மாநிலம் முழுவதும் இன்றைக்கு வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. பெரும்பாலான கடைகள் மூடியிருக்கிறது. வாகனங்கள் ஓடவில்லை. ஆளும் கட்சி நடத்தும் ஹர்த்தாலை எதிர்க்கட்சித் தலைவர் வெற்றியடையச் செய்கிறார்.
சில இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன. போலீஸ் எச்சரிக்கையோடு நடந்துகொள்கிறது என்று அரசு கூறுகிறது”
தீபக் பேங்குக்கு போன் செய்தான். யாரும் எடுக்கவில்லை.
நிஷா சமையலறைக்கும் குழந்தைகள் முற்றத்திற்கும் போனார்கள்.
அடுத்த மாதம் ஞாயிற்றுக்கிழமையன்று யோகண்ணன் வந்தான். கையில் ஒரு வெள்ளைப் பூசணி செடியின் கன்று இருந்தது. “இதென்ன?” நிஷா கேட்டாள்.
“வெள்ளப் பூசணி செடிம்மா. உடம்புக்கு ரொம்ப நல்லது. பிடிச்சிடுச்சுன்னா நல்லா காய்க்கும். இங்க மண்வெட்டி இருக்கா?”.
“இல்லயே”
அப்போது குழந்தைகள் ஓடி வந்தார்கள்.
“நாங்க பக்கத்து அப்புவோட வீட்டுலேர்ந்து வாங்கிட்டு வரோம்”. காசி சொன்னான்.
மண்வெட்டியை கொண்டு யோகண்ணன் குழி வெட்டினான்.
குழியில் பூசணியை நட்டான். குழாயில் இருந்து தண்ணீரைக் கப்பில் கொஞ்சம் எடுத்துச் செடியின் அடிப்பகுதியில் ஊற்றினான்.
அன்றைக்கு காலையில் இட்லியையும் டீயையும் சாப்பிட்டுவிட்டுத்தான் யோகண்ணன் திரும்பிப் போனான்.
“நீ வேணா பாரேம்மா. நல்லா வளர்ந்துடும். குழந்தைங்க பள்ளிக்கூடத்துலேர்ந்து வந்தப்பறம் செடிக்குத் தண்ணி ஊத்தினாக் கூட போதும். சாயங்காலம் சாருக்கு நேரம் கிடைச்சாக் கூட தண்ணி விடலாமே? யாரு ஊத்தினா
என்ன?”
குழந்தைங்கள் தலையை ஆட்டினார்கள். சில நாட்கள் கழித்து பூசணியில் பூ பூத்தது.
“அப்பா. நம்மளோட பூசணிச் செடி பூத்துடுச்சு” காசி சொன்னான்.
“பாக்கவே எவ்வளவு அழகா இருக்கு!” கௌரி சொன்னாள்.
காசி ஆனந்தத்துடன் நின்றான். தீபக்கும் நிஷாவும் தோட்டத்திற்கு வந்தார்கள்.
பூசணிக்கொடி காற்றில் அசைந்தாடியது.
“கொஞ்சநாளா யோகண்ணன காணமே?”
“மணிமலைக்கு போயிருப்பாரா இருக்கும்” நிஷா சொன்னாள்.
தீபக் செடிக்குத் தண்ணீர் ஊற்றினான். மழைக்காலம் வந்தது. இடி மின்னலோடு மழை. கார்த்திகை மாதம் பூசணியில் ஐந்தாறு காய்கள் காய்த்தன. கௌரியும் காசியும் சந்தோஷத்தில் கூக்குரல் எழுப்பினார்கள்.
“அப்பா… அம்மா! பூசணி! பூசணி!”
“அண்ணன காணோமே?” ராத்திரி படுத்துக் கொண்டிருந்த போது நிஷா சொன்னாள்.
“அது காய்க்கறப்ப நாம யோகண்ணனுக்கு சமைச்சு செஞ்சு போடலாம்” நிஷா சொன்னாள்.
“ரொம்ப நல்ல ஐடியா. அதத்தான் நானும் யோசிச்சுகிட்டு இருந்தேன். அந்த ஆள் எங்க போய்க் கிடக்காரோ?” தீபக் சிந்தனையில் மூழ்கினான்.
அந்த ஞாயிற்றுக்கிழமை யோகண்ணன் இரண்டு மூன்று ரோஜா குச்சிகள், கீரை, தக்காளி, வெண்டைக்காய் விதைகளுடன் வந்தான்.
“எங்க போனீங்க அண்ணே?” தீபக் சந்தோஷத்தோடு கேட்டான்.
“நான் நடுவுல மணிமலை வரைக்கும் போயிருந்தேன். பஞ்சாயத்து ஆபீசுக்குப் போனேன். ஆனக்கோலத்துல கனடாவ்லேர்ந்து எஜமான் வந்திருந்தாரு. அவருக்கு இப்பதான் வரமுடிஞ்சதாம். அவரு எனக்கு எம்பது ரூபா
கொடுத்தாரு. வீடு அடிச்சுகிட்டு போனது வெள்ளம் வந்தது எல்லாம் சானல் வழியாத்தான் அவருக்குத் தெரிஞ்சதாம்”
எஜமான் கொடுத்த கனடாச் சாக்லெட்டுகளை காசிக்கும் கௌரிக்கும் அவன் கொடுத்தான். காலரா வந்தப்ப அவருதான் உதவி செஞ்சாரு. அவரு டாக்டர் பரீட்சை பாஸாகி கனடாவுக்கு போய் அங்க ஒரு பொண்ணையும் கட்டிகிட்டாரு. அவுங்க அழகியாக்கும் தெரியுமா?”
நிஷா டீயோடு வந்தாள். “உங்க பொண்ண நீங்க போய் பாக்கவேணாமா? மயிலாடும் பாற வரைக்கும் ஒரு தடவை போயிட்டு வாங்க. இப்ப பாத்தா சந்தோஷப்படுவாளா இருக்கும்”
அவன் ஒரு பெருமூச்சு விட்டான்.
“வேணாம். அவங்க அம்மா செத்துப் போறதுக்கு முன்னாலேயே அவ ஓடிப்போயிட்டா. செத்ததுக்கு கூட திரும்பி பாக்கல. யாராச்சும் இப்படி இருப்பாங்களா? ஓ. நான் ஒன்னும் அதப் பத்தியே யோசிக்கறது இல்ல. என்ன
வேணும்னா நடக்கட்டும்”
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அவன் சொன்னான். “சபீனாவுக்கு குழந்தை இருந்துச்சுன்னா அதுக்கு இப்ப மூனு வயசு ஆயிருக்கும்”.
அவன் கௌரியைப் பார்த்தான். நிஷா வற்புறுத்தவில்லை. “எவ்வளவு திடீரென்று சொந்தபந்தங்களுக்கு காயம் ஏற்படுகிறது? அதெல்லாம் ஆறுவதற்குக் காலம் எடுக்கும்” நிஷா நினைத்துக் கொண்டாள்.
“உங்களுக்கு ஆட்டோ ஓட்டத் தெரியுமா? சொல்லுங்க. நான் ஒரு ஆட்டோவ ஏற்பாடு செஞ்சு தரேன். என்னோட நண்பனோட டிரைவர் செத்துப்போயிட்டாரு. ஆளு கிடைக்கல” தீபக் சொன்னான்.
யோகண்ணன் அதைக் கேட்டு பெரிதாக சிரித்தான். “அய்யோ! அது வேணாம்ப்பா. இப்பவே திருநக்கரையில ஆட்டோக்காரங்களுக்கும் லாட்ட்ரிச்சீட்டு விக்கறவங்களுக்கும் இடையில அடிதடி சண்டை. சரிப்படாது. நான் போறேன்”
குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்தால் தோட்டத்து செடிகளை நோக்கிதான் நேராகப் போனார்கள்.
காசி ஐந்தாவதும், கௌரி மூன்றாவதும் படிக்கிறார்கள்.
செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த குழந்தைகளை நிஷா அழைத்தாள்.
“ரெண்டு பேரும் காபி குடிக்க வாங்க” அன்று இரவு முழு நிலா. பூசணிக்காய் நிலா வெளிச்சத்தில் பளபளத்தது. பூரண சந்திரன் தோட்டம் முழுவதையும் உல்லாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். சிவப்புப் பூசணியும் கீரையும் தக்காளியும் வளர்ந்து கொண்டிருந்தன. குளிர்காற்று ஜில்ல்லென்று வீசியது.
அடுத்த மாதம் சனிக்கிழமை சாயங்காலம் யோகண்ணன் வந்தான். தோட்டம் முழுவதையும் பார்த்தான். பூசணியின் அடியில் இருந்த காய்ந்து போன இலைகளை எடுத்துப் போட்டான்.
“இனிம சமையலுக்கு எடுத்துக்கலாம்”
“அப்படின்னா நாளைக்கு நீங்க வாங்க. சாப்பாடு தயார்” நிஷா சொன்னாள்.
அடுத்த நாள் ஒரு தென்னம்பிள்ளையுடன் வந்தான்.
“இது பதினெட்டாம் மாசம் காய்க்கும்” சொல்லியபடியே அவன் கன்றை நட்டான்.
“யோகண்ணன் எங்களோட இடத்த ஒரு விவசாய நிலமா ஆக்கிட்டீங்க” தீபக் சொன்னான்.
“ஓ. இதெல்லாம் தெய்வத்தோட கிருபைதான்” அவன் சிரித்தான்.
நிஷா டீயோடு வந்தாள். குழந்தைகள் கப்பில் கொண்டு வந்த தண்ணீரை அவன் செடிகளுக்கு ஊற்றினான்.
“ஆந்திரா பேடான்னு சொல்றது என்ன தெரியுமா? பூசணிதான். சர்க்கரப் பாகை காய்ச்சி அதுல முக்கி எடுப்பாங்க. சாக்லேட்டிலயும் இனிப்புதானே?”
குழந்தைகள் இருவரும் தலையை ஆட்டினார்கள். சாப்பிடும்போது யோகண்ணன் அவர்களுக்கு பழைய கதைகளைச் சொன்னான். கதை கேட்கும் சுவாரசியத்தோடு குழந்தைகள் இருவரும் ஆர்ப்பரித்துச் சிரித்தார்கள்.
கிளம்பும் நேரத்தில் குழந்தைகளை அருகில் அழைத்து அன்புடன் அரவணைத்து யோகண்ணன் சொன்னான். “நீங்க நல்லாப் படிச்சு பெரிய ஆளா வரணும்”
நிஷாவைப் பார்த்து சொன்னான். “நீ சொன்ன மாதிரி நான் மயிலாடும்பாற வரைக்கும் போறேன். சபீனா என்னோட பொண்ணுதானே? விவரம் என்னன்னு தெரிஞ்சுகிட்டு வரேன்”
“அண்ணே. பூசணிக்காய கொஞ்சம் கொண்டு போங்க. இங்க இவ்வளவும் செலவழியாது” தீபக் சொன்னான்.
யோகண்ணன் இரண்டு நிமிடம் யோசித்தான். “சரி. அப்படீன்னா நான் மணிமலைக்குப் போயிட்டு அப்புறம் மயிலாடும்பாற போறேன். ஒன்ன வெத்தலப்பாக்கு கடை வாசுதேவங்கிட்டயும் இன்னொன்ன சர்ச்சுல இருக்கற
ஃபாதருக்கும் கொடுக்கறேன். அப்பறம் என்னோட சொந்தக்காரப் பொண்ணு ஒன்னு இருக்கு. அதுக்கும் கொடுக்கறேன். அப்புறம் யாருக்குக் கொடுக்கறது?” அவன் யோசித்தான்.
“சபீனாவுக்குப் பதினேழு வயசுதான் ஆயிருக்கும் அப்ப. அவளோட தோழியோட அண்ணன் கல்ஃப்ல இருந்தான். அவன் ஒரு மொபைல் போன் கொடுத்தான். இப்படிதான் அவளுக்கு ஒரு போன் கிடச்சது. நல்ல மனசோடதானே கொடுக்கறான்னு நினைச்சு நானும் கத்தரீனாவும் கண்ண மூடிகிட்டு இருந்துட்டோம். அப்பறம்தானே விஷயம் தெரிஞ்சுச்சு? பஸ் ஸ்டாப்புல இவள ரெகுலரா பாத்துகிட்டு இருந்த ஒருத்தன் அவளக் கூட்டிகிட்டு வீட்ட விட்டு ஓடிட்டான். என்னத்த செய்யறது? எல்லாம் அவங்களோட தலயெழுத்து. அவ அதிர்ஷ்டம் அவ்வளவுதான்”
யோகண்ணனுக்கு மணிமலை சரிவில் மஞ்சள், கடுகு, இஞ்சி, கீரை எல்லாம் இருந்தது. நல்லா விளயற பயிருங்க. கிடைக்கறத தினமும் கடையிலயும் கேக்கறவங்களுக்கும் கொடுத்தான். ஆனால் 2018ல வந்த வெள்ளப்பெருக்கு
எல்லாவற்றையும் விழுங்கிக்கொண்டு போய்விட்டது. அவனுடைய வீடும் தோட்டமும் வயலும் எல்லாம் அடித்துக்கொண்டு போயின.
கத்தரீனா புகலிடம் போன அரசுப் பள்ளிக்கூடத்து வராந்தாவில்தான் செத்தாள்.
ஊர்க்காரர்கள்தான் உடலைக் கண்டுபிடித்து சர்ச்சுக்கு கொண்டு போனார்கள்.
சுறுசுறுப்பான பையன்களும் பொண்ணுங்களும் அவனுக்கு உதவினார்கள். குன்றின் மேல் இருந்ததால் சர்ச்சில் வெள்ளம் வரவில்லை. மீட்புப் பணியிலும் மருந்து துணிகள் சாப்பாடு கொடுக்கச் சின்ன வயசுக்காரர்கள் துணையாக இருந்தார்கள்.
குழந்தைகள் அவனுக்கு டாட்டா சொன்னபோது யோகண்ணனுடைய கண்களில் ஒரு சோகம் படர்ந்தது. பிறகு மறுபடியும் ஒரு தடவை வேலை நிறுத்தம் வந்தது. செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்த தீபக் திடுக்கிட்டுப் போனான். டீ கப் கையை விட்டு நழுவிக் கீழே விழுந்தது. நிஷா ஓடிவந்தாள். தீபக் செய்தித்தாளில் மரண செய்திகள் வரும் பக்கத்தில் இருந்த ஒரு செய்தியைக் காட்டினான்.
“அடையாளம் தெரியாத மனித உடல். மயிலாடும்காடு வாய்க்காலில் வயது ஏறக்குறைய அறுபது இருக்கும். முதியவருடைய உடல். பையில் குடும்பப் புகைப்படமும் ஒரு பூசணிக்காயும் இருந்தன… தெரிந்தவர்கள் பக்கத்தில் இருக்கும்
போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்கவும்”
தீபக் மௌனியானான். போட்டோவை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான். நிஷா சங்கடத்தோடு முற்றத்திற்குப் போனாள். குழந்தைகளும் அதிர்ச்சியோடு தொடர்ந்தார்கள்.
நிஷா இரண்டு ரோஜாப்பூக்களை பூசணிச்செடியின் அடியில் வைத்தாள்.
“பசங்களா. இனி யோகண்ணன் வரமாட்டாரு”
பூசணிக்கொடியும் இலைகளும் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.