பப்பு நாயர் சீரியசான முகத்தோடு முற்றத்தில் உலாத்திக் கொண்டிருந்தார். தேங்காய் குலையோடு திண்ணையில் இருந்தது. பக்கத்திலேயே அவருடைய தோட்டத்தில் முதல் நாள் ராத்திரி பிடிக்கப்பட்ட சிறுவன் குட்டப்பன். அவனுடைய கலங்கிய, அழுது அழுது சிவந்து போயிருந்த கண்களுடன் நின்று கொண்டிருந்தான். ஊரில் சமீபத்தில் நடந்த திருட்டுத்தனங்கள் எல்லாம் அவந்தான் செய்தான் என்று வேடிக்கைப் பார்ப்பவர்களின் கூட்டம் அடித்துச் சொன்னது.
தன்னுடைய கௌரவத்துக்கு குறைவு ஏற்பட்டுவிடுமோ என்று நினைத்து பப்பு நாயர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மணி பத்தானபோது அவர் அடிக்கடி வாசல் பக்கம் கண்களை ஓடவிட்டார். மகன் கிருஷ்ணன் குட்டி போலீசுக்குத் தகவல் சொல்லப் போயிருக்கிறான். குட்டப்பனுடைய அழுகையைப் பார்த்துச் சிலருக்கு இரக்கம் ஏற்பட்டது.
மன்னிக்கச் சொல்லிப் பலரும் பப்பு நாயரிடம் கோரிக்கை வைத்தார்கள்.”அவன் இப்பதான் முதல் தடவயா திருடறான். மாட்டிக்கறதும் இதுதான் முதல் தடவை. அதுவும் சூழ்நிலை தூண்டுதலால இப்படி நடந்துடுச்சு. இவனோட வீட்டுல எல்லாரும் பட்டினியில இருக்காங்க. பசிச்சப்ப கஞ்சப்பய குரூப் டீக்கடையிலேர்ந்து இவன் மூனு நாலு தடவை காபி குடிச்சான். கொடுக்கறதுக்கு கையில காசு இல்ல. கடைசியில அந்த ஆளு சொல்லிக் கொடுத்ததுதான் இந்தத் தொழில். பாதி விலைக்குத் தேங்காய விக்கலாம். வர்றத கடை கணக்குல வச்சுகிட்டாப் போதும். கஷ்டங்களுக்கு நடுவுல தான் இவன் காலத்தப் போக்கறான், அதனால இந்த தடவ இவனை மன்னிச்சு விட்டுடணும்” ஒரு கூட்டம் கோரியது.
தன்னைப் போலீசிடம் ஒப்படைக்காமல் இருக்க குட்டப்பன் பப்பு நாயருடைய காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான். அவன் எப்படி கெஞ்சாமல் இருப்பான்? போலீஸ் என்று கேட்டாலேப் பயம். காக்கி உடை. ஆக்ரோஷமான முகம். இன்னும் ஒரு தடவை தன் பேரில் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் தன்னைக் கொன்று விடலாம் என்று அவன் கெஞ்சினான்.
“ஒரு தடவை மட்டும். ஒரே தடவை மட்டும்... அவனக் காப்பாத்தினாப் போதும்” கூட்டம் மறுபடியும் கோரிக்கை விடுத்தது.
பப்பு நாயருக்கு அதைப் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை. குட்டப்பனுடன் அவருக்குத் தனிப்பட்ட பகை ஒன்றும் கிடையாது. ஆனால், இங்கே அதைப் பரிசீலனை செய்யக்கூடாது. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் சாதாரணமானவர்கள் எதுவும் செய்ய முடியாத பலவீனமானவர்களாகவே இருப்பார்கள். விட்டுவிடச் சொல்லி, கூட்டத்தில் இருப்பவர்கள் திருடுவதை ஊக்கப்படுத்துகிறார்கள். பப்பு நாயர் நினைத்தார். போலீஸும் கோர்ட்டும் இருந்தால் மட்டும் போதாது. இதையெல்லாம் பயன்படுத்தி ஊழலை இல்லாமல் செய்ய மக்கள் அரசாங்கத்தோடு ஒத்துழைக்கவேண்டும். குட்டப்பனுடைய கண்ணீரைக் கண்டு அவனிடம் பரிதாபத்தை காட்டுபவர்களை விட இப்போது தான்தான் அவனுடைய நெருங்கிய சொந்தம் என்று அவருக்குத் தோன்றியது.
இதில் அதிகமாக ஆர்வம் காட்ட அங்கே யாரும் இல்லை. குட்டப்பன் எல்லா ஆசைகளையும் அறுத்து சிதைந்த இதயத்தோடு இருந்தான். நேரத்தைப் போக்க எப்படியோ ஒரு வழி கிடைத்ததைப் பற்றி நினைத்துச் சந்தோஷமடைந்த ஒரு சிலர் மட்டுமே அங்கு இருந்தார்கள். பத்தரை ஆனபோது கிருஷ்ணன் குட்டியோடு இரண்டு போலீஸ்காரர்கள் வந்தார்கள்.
போத்தனும் சுக்ராவும். நாயர் உற்சாகத்தோடு உள்ளே போய் பட்டுப்பாயை எடுத்துக் கொண்டு வந்து கூடத்தில் விரித்தார். அவர்கள் உட்கார்ந்த பிறகு புகையிலையும் துளிர் வெற்றிலையும் நிறைந்த தட்டை அவர்கள் பக்கத்தில் வைத்துவிட்டு நாயர் பாக்கு வெட்ட ஆரம்பித்தார். கௌரவத்தைக் கைவிடாமல் அவர்கள் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.
“வெத்தல போட்டுக்கங்க சார்”. நாயர் பணிவுடன் சொன்னார். “வேணாம் பெரியவரே... அது உங்களுக்கு நஷ்டம்”. சுக்ரா சொன்னார். இருவரும் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. “சார் என்ன அப்படிச் சொல்றீங்க? இது உங்களுக்குக் கொடுக்கறதுக்காகவே வாங்கினது. நாங்க வெத்தல போடல.
இருக்கட்டும் இருக்கட்டும்... நீங்க நஷ்டப்படவேணாம். நீங்க எல்லாம் பெரிய ஆளுங்க இல்லயா? ஆள அனுப்பினா போலீஸ்காரங்க வரணும். இது ஜனநாயகக் காலம்” அவர்களுடையப் பேச்சுக்குக் காரணம் தெரியாமல் நாயர் பிரமித்துப் போய் நின்றார். “இல்ல... விஷம் திங்கத்தானே மகங்கிட்ட காசு கொடுத்து அனுப்பிச்சீங்க? போலீஸ்காரங்களுக்கு இத்துனூண்டு தண்ணி குடிக்கணும்னா கையிலேர்ந்து காசு கொடுத்துக் குடிச்சுக்கலாம்”
நாயருக்கு விஷயம் என்னவெண்ரு ஓரளவுக்கு புரிந்தது. தான் ஒரு பணக்காரன் இல்லையென்றும், அந்த வீட்டையும் கொஞ்ச நிலத்தயும் தவிர வேற சொத்துங்க எதுவும் இல்லையென்றும் அவர் சொன்னார். பிறகு போலீசுக்குத் தன்னைப் பற்றிக் கொஞ்சம் அதிப்பு ஏற்படட்டும் என்று நினைத்து அவர் தன் குடும்பப் பாரம்பரியத்தைப் பற்றி லேசாக சொன்னார்.
“ஹா! அப்ப பெரியவரு அடுத்த மந்திரியாயிடுவார் இல்லயா? அப்ப என்ன மாதிரி இருக்கற பாவப்பட்டவங்கள கொஞ்சம் ஞாபகத்துல வச்சுக்கணும். வேண்டாததப் பத்திப் பேசறத விட்டுட்டு விஷயத்துக்கு வாங்க பெரியவரே. புகார் கொடுத்திருக்கற பப்பு நாயர் நீங்கதானே?” அதுவரை பேசாமல் இருந்த மற்றொரு போலீஸ்காரர் கேட்டார்.
பப்பு நாயர் ஆமாமாம் என்றார். பிறகு தன்னுடைய புகாரில் சொல்லியிருந்த விஷயத்தை மறுபடியும் ஒரு தடவை சொன்னார். குட்டப்பன் பேச நா எழாமல் நடுங்கிக் கொண்டு நின்றான். சுக்ரா அவனைப் பக்கத்தில் அழைத்தார். உண்மையைச் சொல்லணும். இல்லாட்டா உடம்புல தொட்டு கேக்கணும் என்றும் போலீஸ் பாணியில் உபதேசம் செய்தார்.
அந்தக் குற்றத்தை அவந்தான் செய்தானா? என்று விசாரித்தார். அவன் எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டான். குற்றம் செய்ய தூண்டியதாக ஒரு டீக்கடைக்காரனுடைய பெயரும் வந்த போது போலீஸ்காரர்களின் முகத்தில் பிரகாசம் ஏற்பட்டது. அப்போது மெலிந்த உருவத்தோடு ஒரு இளம் வயதுக்காரன் படியேறி உள்ளே வந்தான்.
முழுக்கைச் சட்டையும் பனியனும் தலையில் கட்டிய துண்டும். துண்டை ஒரு தடவை எடுத்துவிட்டு காற்றடித்தால் கீழே விழுந்துவிடுமோ என்பது போல அதை மறுபடியும் தலையில் கட்டிக் கொண்டான். தொப்பிள் தெரியும் படி
வேட்டியை மடக்கிக் கீழே இறக்கிக் கட்டிக் கொண்டிருந்தான். பீடியைப் பிடித்துக் கொண்டு புகையை நாலாப்பக்கங்கமும் பரப்பிவிட்டபடி நுழைந்த அவனுடைய நடை எல்லோருடைய பார்வையையும் அவன் பக்கம் திருப்பியது.
“அட! இது மூனு சீட்டு கீ வர்கீஸ் இல்லயா?”. எல்லோரும் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தார்கள். போலீஸ்காரர்கள் இருக்கும் இடத்துக்கு அவனைப் போல ஒரு ஆள் தைரியமாக வருவதா!? குடி. அடிதடி. ஆக்ரமிப்பு. இதெல்லாம்தான் அவன் தொழில். இது தவிர சந்தைகளிலும் விழா காலத்திலும் பணத்தை பிடுங்கும் மூன்று சீட்டு விளையாட்டு.
இப்படிப்பட்ட ஒருத்தன் போலீஸ்காரர்கள் கண்ணில் படுவதா! தன் வீட்டுக்குள் ஒரு அசிங்கம் வருவது போல வெறுப்போடு நாயரும் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றார்.
“அடட! போத்தன் அண்ணனும் சுக்ரா அண்ணனுமா? என்ன விசேஷம்?”. பீடி குடித்துக் கறையாகி கறுத்துப் போன பல்வரிசையை வெளியில் காட்டிக்கொண்டு அவன் லேசாக ஒரு சிரிப்பு சிரித்தான். “ஹ! உன்னோட அக்கம் பக்கத்துக்காரங்களா இவங்க? உன் வீடு இங்கதானே பக்கத்துல இருக்கு?
அப்ப நமக்கு ஒரு ஆளாச்சு. என்ன போத்தண்ணன்?” சுக்ரா சொன்னார்.
அவனுடைய ஒற்றை சிரிப்பில் போலீஸ்காரர்களின் கௌரவம் எல்லாம் வெண்ணை உருகிய நெய் போல ஆனதைப் பார்த்து கூடியிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். “அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. நான் இந்தப் பக்கம் வந்தேன். இரண்டு அண்ணனுங்களும் இந்த வீட்டுக்குள்ள நுழஞ்சதப் பத்தி தெரிஞ்சப்ப சரி பாத்துட்டுப் போலாம்னு நினைச்சுகிட்டுதான் வந்தேன். அதில்லாம இவங்ககூட எனக்கு ஒரு பழக்கமும் கிடையாது” அணைந்து போன பீடியின் சாம்பலை உதித்துவிட்டு காதுக்கு நடுவில் வைத்தான்.
பிறகு முற்றத்திலேயே நின்று கொண்டு கை நீட்டி வெற்றிலையையும் சுண்ணாம்பையும் எடுத்து அலட்சியமாக போட்டான். “அட நல்ல வெத்தலயா இருக்கே? போடுங்க அண்ணே!”. அவன் பப்பு நாயரை லேசாக பார்த்துவிட்டு அனுதாபத்தோடு தொடர்ந்தான். “அட என்ன சீரியஸா யோசிச்சுகிட்டு இருக்கீங்க?” அந்த அழைப்பை மறுக்க முடியாமல் இருவரும் வெற்றிலை போட ஆரம்பித்தார்கள்.
தன் வீட்டுக்கு வந்த புதிய விருந்தாளி தான் நினைத்த மாதிரி இல்லை என்பதைப் புரிந்து கொண்ட பப்பு நாயர் முழு மனதுடன் இல்லை என்றாலும் அவனை உட்காருமாறு அழைத்தார். அவன், அதைப் பொருட்படுத்தாமல் போலீஸ்காரர்கள் இருவரிடமும் எதையெதையோச் சொல்லியபடி நின்று கொண்டிருந்தான்.
வெற்றிலை போடுவது முடிந்தவுடன் ஒரு போலீஸ்காரர் வர்கீசை முற்றத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் கொஞ்ச நேரம் இரகசியமாக ஏதோப் பேசினார்.
திரும்பி வந்த வர்கீஸ் பப்பு நாயருடைய காதில் ஏதோ பேசினான். கடைசியில் நாயர் ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு வந்து இருவருக்கும் பொதுவாகக் கொடுத்தார். “இப்போதைக்கு இத வச்சுக்கங்க
போதலைன்னா காலையில வருவாரு” என்று அவருடைய அனுமதி இல்லாமலேயே வர்கீஸ் போலீசிடம் சிபாரிசு செய்தான்.
“இது இன்னிக்கு மெனக்கெட்டு வந்ததுக்கு. பெரியவ்ருக்கு ஆரியம் ஏதாச்சும் நடக்கணும்னா நாளைக்கு ஸ்டேஷனுக்கு வரணும். ஏதாச்சும் கொடுக்கணும். எழுத்தரயும் பாக்கணும்” ஐந்து ரூபாயோடு தான் ஒரு சாதாரண ஆள் என்ற நிலையில் இருந்து பெரிய ஆள் என்ற நிலைக்கு உயர்ந்ததைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என்பதை நாயர் புரிந்து கொண்டார்.
”ஆட்சி மாறினாலும் இதுல எல்லாம் ஒரு வித்தியாசமும் இல்ல” போலீஸ் அமைச்சரை அவருக்குத் தெரியும். என்றாலும் போலீச்காரருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். இப்படியேத் தொடர்ந்தால் எல்லாம் முன்பு போலத்தான். இதில் எங்கோ குழப்பம் இருக்கிறது என்று அவர் நினைத்தார். “டேய். உன்னோட ஆளுங்க யாரும் இங்க இல்லயா?”
சுக்ரா குட்டப்பனிடம் கேட்டார். தன் பலவீனத்தை தெரிவிப்பது போல அவன் அவரை ஒரு முறை பரிதாபமாக பார்த்தான். அவனுடைய வீட்டில் ஆயாவும் இரண்டு மூன்று சிறிய குழந்தைகளும் மட்டுமே இருக்கிறார்கள் என்று யாரோ அப்போது சொன்னார்கள். “ஓஹோ! அப்படின்னா தேங்காக்குலைய எடுத்துகிட்டு நடடா. அப்ப பெரியவரு காலையில ஸ்டேஷனுக்கு வரணும்”. நாயர் பதில் எதுவும் சொல்லவில்லை. அங்கே கூடியிருந்தவர்கள் முன்னால் வர்கீஸ் தன் பெருமையை நிலைநாட்டும் வகையில் முன்னால் நடந்தான். போலீஸ்காரர்கள் பின்னால் சென்றார்கள். அவர்களுக்கும் பின்னால் குட்டப்பன் தேங்காய்களுடன் நடந்தான்.
மத்தியான நேரமாகிவிட்டது. தேங்காய்களை வர்கீசின் வீட்டில் வைத்துவிட்டு குட்டப்பனையும் கூட்டிக்கொண்டு அவர்கள் நேராக குரூப்பின் டீக்கடைக்குச் சென்றார்கள். அவனைக் கூப்பிட்டு அவனிடம் பலதைப் பற்றியும் கேட்டார்கள். போலீஸ் முன்பேச் சொல்லிக் கொடுத்திருந்த மாதிரி அந்தக் குற்றத்தை குரூப்பின் தூண்டுதலின் பேரில்தான் தான் செய்ததாகக் குட்டப்பன் எல்லோருக்கும் முன்னால் வெளிப்படையாகச் சொன்னான்.
இதோடு குட்டப்பனுடய பெயரில் அவர்களுக்கு ஒரு தனிப் பாசம் ஏற்பட்டது. அதுவரை அவனுக்கு சாப்பிட எதுவும் கொடுக்காமல் இருந்ததற்காக பப்பு நாயரைக் கடுமையாகத் திட்டி விட்டு, அவனுக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுக்கச் சொல்லி டீக்கடைக்காரனிடம் சொன்னார்கள். அதற்காகும் பணத்தையும் தாங்கள் கொடுப்பதாக அவர்கள் சொன்னார்கள்.
வர்கீஸ் அங்கேயும் ஒரு மத்யஸ்த்தம் செய்பவனானான். தன்னையும் ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கொண்டு போவார்கள் என்ற நிலை ஏற்பட்டபோது குரூப் எதையும் செய்யத் தயாராக இருந்தான். கடைசியில் ஐந்து ரூபாய் நோட்டுக்கள் இரண்டு நஷ்டப்பட்டது. டீக்கடைக்காரன் கேசில் இருந்து சுதந்திரமானான். “உனக்கு வேணுங்கற எல்லாத்தயும் சாப்பிட்டுக்க. கூச்சப்படாதே.” காபி குடித்துக்கொண்டிருந்த குட்டப்பனுக்கு மறுபடியும் ஒரு தடவை
தைரியம் சொல்லிவிட்டு இரண்டு போலீஸ்காரர்களும் எதிர்ப்பக்கம் இருந்த கள்ளுக் கடைக்குப் போனார்கள். அவர்கள் திரும்பி வர அரை மணி நேரமானது.
அப்புறம் வர்கீசிடம் சொல்லிவிட்டு குட்டப்பனையும் அழைத்துக்கொண்டு அவர்கள் ஸ்டேஷனை நோக்கி நடந்தார்கள். போலீஸ்காரர்களோடு அத்தனை நேரம் பழகியதால் உண்டான தைரியம் குட்டப்பனுடைய பயத்தைக் குறைத்தது. கையில் ஒரு பைசா கூட இல்லாமல் இருந்ததால் அடுத்த நாள் பப்பு நாயர் ஸ்டேஷனுக்குப் போகவில்லை.
“எப்படின்னாலும் குத்தம் செஞ்சவனை கூட்டிகிட்டுப் போயிட்டாங்க. அவனுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டும். அப்புறம் தான் கொடுத்திருக்கற அந்தப் புகாரை யாராலும் அவ்வளவு சுலபமா மாத்த ஒன்னும் முடியாது”. நாயர் தனக்குத்தானேச் சொல்லித் தன்னைத்தானேச் சமாதானப்படுத்திக் கொண்டார். அன்று சாயங்காலமான போது குட்டப்பன் முடியை அழகாகச் சீவியிருந்தான். அதோடு ஒரு வேட்டியையும் காலர் வைத்த பனியனையும் போட்டுக் கொண்டிருந்தான்.
கிராமத்தில் கடைத்தெருவுக்கு வந்து ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டு அக்கம்பக்கத்துக்காரர்களிடம் குசலம் விசாரித்தான்.
அன்று சுகமாக சாப்பிட்ட கதையை சொன்னபோது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. வியப்போடு பலரும் அவனை நெருங்கினார்கள். குட்டப்பன் தன் அனுபவங்களை எல்லோருக்கும் கதை போலச் சொன்னான்.
“ராத்திரியில கூட லாக்கப்புல போட்டு அடைக்கல”. போலீஸ்காரர்கள் எல்லோருக்கும் அவனைப் பிடித்துப் போய்விட்டது. ஸ்டேஷனுக்கு பல்வேறு வேலைகளுக்காக வருபவர்கள் எல்லோரும் அவனுக்குத் திண்பண்டத்தையும் காபியையும் வாங்கிக் கொடுத்தார்கள்.
அவனுக்கு கொடுக்காமல் எழுத்தர் சார் எதுவுமேச் சாப்பிடுவதில்லை. திருட்டுத்தனமாகப் பொருட்களை விற்பவன் ஒருவன் அவனுக்கு வேட்டி பனியனை வாங்கிக் கொடுத்தான். பெரும்பாலான நேரங்களிலும் வந்தவர்கள் எட்டனாவை
அவனிடம் கொடுத்து ஹெட் கான்ஸ்ட்டபிளிடம் கொடுக்கச் சொன்னார்கள். நாயர் முன்பேச் சொன்னபடி போகாமல் இருந்ததால் அவர் மீது போலீஸ்காரர்களுக்குக் கோபம்.
இனி மேல் அவர் ஸ்டேஷனுக்குப் போவது, அவருக்கு நல்லதில்லை என்று அவன் ஒரு பிரச்சாரம் செய்தான். நினைப்பது போல எதையும் செய்து கொள் என்று போலீஸ்காரர்கள் அவனுக்கு அனுமதி கொடுத்துவிட்டதாக அவன் சிலரிடம் இரகசியமாகச் சொன்னான். நான்கு மணிக்கு ஒரு கான்ஸ்டபிள் வந்து குட்டப்பனை தேடினார்.
பக்கத்தில் இருந்த ஒரு இடத்துக்கு அவன் துணையாகப் போகவேண்டும். அவர்கள் ஒன்றாக அந்த இடத்துக்குப் போனார்கள். திரும்பி வந்தபோது ஒரு நேந்திர வாழைப்பழக் குலையை பஸ் ஸ்டாண்டு வரை தூக்கிக் கொண்டு போய் அவருக்குக் கொடுத்தான். அதற்கு அவனுக்கு எட்டனா கூலி கிடைத்தது.
அடுத்த நாளும் அவனுக்கு அதே போல ஒரு வேலை இருந்தது.
குற்றவாளிகளைக் காட்டிக் கொடுப்பது, சங்கடப்படுபவர்களை தூண்டிவிட்டு அவர்களைப் புகார் கொடுக்கச் சொல்வது என்று பல வேலைகள். இப்படியா அங்கே போலீஸ்காரர்களுக்கு ஒரு ஏஜெண்ட் உருவானான். ஊரில் கல்வி செயல்பாட்டாளர்கள் யார் என்று முடிவு செய்வது அவனுடைய வேலையானது.
“அப்போ தேங்கா குல ஒன்ன நீங்க போலீஸ் அண்ணனுக்கு கொடுத்தனுப்பணும். அதுக்கு உரிய நியாயமான விலய அவங்க கொடுத்துடுவாங்க”. சில நாட்கள் கழித்து வர்கீஸ் பப்பு நாயரிடம் சொன்னான்.
சுற்றுமுற்றும் பார்த்து வேறு எவரும் அதை கேட்கவில்லை என்பதை உறுதி செய்த பிறகு நாயர் ஒரு வார்த்தை கூட பேசாமல் உள்ளே போனார். அவர் தேங்காயையும் கொடுக்கவில்லை... வார்த்தையையும் கொடுக்கவில்லை...
ஆனால் இந்த கதை சிறிது நேரத்திற்குள் ஊர் முழுவதும் பரவிவிட்டது!