“அடேய் கோபி. அந்த ஃபேனைக் கொஞ்சம் போட்டுவிடேன்”, வராந்தாவுக்கு வெளியில் முற்றத்தில் உண்டாக்கிய திண்ணையில் இருந்து பாய்ந்துவந்த கோபி மின் விசிறியைப் போட்டுவிட்டு மறுபடியும் திண்ணைக்கேச் சென்று தரையைப்
பார்த்துக் கொண்டு நின்றான். ஒரு லுங்கிதான் அவனுடைய ஆடை. நரைத்துப்போன முடி. மெலிந்த உடல்வாகு.
ஒரு அறுபது அறுபத்து வயது ஐந்து இருக்கும். பார்த்தால் ஒரு மதிப்பு ஏற்படும் உருவம். நான் பார்க்கும் போதெல்லாம் அவன் அந்த லுங்கியை மட்டும்தான் கட்டிக்கொண்டிருந்தான். ஒரு வேளை பல டிசைன்களில் உள்ள லுங்கிகளை வைத்திருக்கலாம். அதற்கான வாய்ப்பு உண்டு. ஏனென்றால் வாசு ஒரு தற்பெருமைக்காரன்.
அவன், பழைய காலத்துக் குறுநில ராஜாக்களின் ஒரு மனோபாவம் உள்ள ஆள். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள் வைத்து அமுக்கி வெளிப்பார்வைக்கு அமைதியாக நடக்கும் ஒரு ஆள் போலப் பழகுவான்.
வாசுவுடைய அப்பா ஒரு பழைய ஜமீந்தார். இதற்காக வாசுவை நீங்கள் தவறாக நினைக்கக்கூடாது.
இந்த மனோபாவத்தை அவன் ஒரே ஒரு ஆளிடம் மட்டுமேப் பிரயோகிப்பது வழக்கம். ஒன்றையும் பேசாத பாவம் கோபியிடம் மட்டும்தான் இந்தக் குணத்தை அவன் வெளிப்படுத்துவான். அவன் கூப்பிட்டவுடனேயே கோபி திடுக்கிட்டு எழுந்து வந்து வேலைகளை செய்துமுடிப்பான்.
விசிறி ஓடிக்கொண்டிருந்தது. கோபி அண்ணன் மறுபடியும் திண்ணைக்குப் போய் கால்கள் இரண்டையும் இணைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தான். அதிக நேரம் அப்படி உட்கார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.
“அடேய். கோபி. இந்த டீ டம்ளர கொண்டுபோய் வச்சுட்டு வா” குரல் கேட்டவுடன் கோபி குதித்துப் பாய்ந்து வந்தான்.
டம்ளரை கையில் எடுத்துக் கொண்டான். அவன் பேசுவதில்லை. நாக்குக்கு ஏதாவது கோளாறு இருக்கும். இல்லாவிட்டால் எப்போதாவது எதற்காகவாவது ஒரு தடவையாவது அவன் பேசியிருப்பான் அல்லவா? சைகை மொழியைப்
பயன்படுத்தி பேசியதை நான் பார்த்ததேயில்லை. “கோபி பேசமாட்டான்” வாசு சொன்னான். அது சரிதான். அவன் பேசுவதில்லை. பேசுவோரின் வாயை வாசு பூட்டுவதும் இல்லை. கோபி புத்திசாலியாக இருந்தான். அன்றைய எஸ்எஸ்எல்சியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவன். வாசு தொடர்ந்தான்.
“இவன் அப்பாவோட செல்லப் பிள்ளயா இருந்தான். எப்பவும் அப்பா கூடவே இருப்பான். அப்பாவோட புத்தி எல்லாம் கோபிக்கு கிடைச்சுச்சுன்னுதான் அப்ப அம்மா சொல்லுவாங்க. அப்பறம் அவனோட மூளையில ஏதோக் கோளாறு. அவனுக்கு சிகிச்சை செஞ்சு செஞ்சு எனக்குப் பைத்தியமே பிடிச்சுடும் போல இருந்துச்சு”. வாசு பழைய கஷ்டகாலங்களின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டினான். “அடேய் கோபி. நீ மொட்டை மாடிக்குப் போய் அங்க காஞ்சுகிட்டு இருக்கற துணிங்கள எடுத்துகிட்டு வா. மழ வர்ற மாதிரி இருக்கு”. கோபி மீண்டும் ஓடினான்.
சில நாட்கள் காலை பத்துக்கும் பதினொன்றுக்கும் இடையில் முற்றத்தில் கோபி அலட்சியமாக நடப்பதைப் பார்க்கலாம். அதைப் பார்க்கும் போது ஏதோ பெரிய ஆலோசனையில் அவன் இருப்பது போலத் தோன்றும். என்ன? அவன் யோசிக்கக்கூடாதா? நியாயமான கேள்விதான்.
அவனுடைய முகத்தை நான் பல சமயங்களிலும் கவனிப்பதுண்டு. எதற்காக என்கிறீர்களா? ஒன்றுமில்லை. பேருக்குக் கூட பேசாத ஒரு ஆளுடைய முகபாவங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அந்த
ஆராய்ச்சியைச் செய்தேன். அவனுடைய முகத்தில் எப்போதும் ஒரே பாவம்தான். எப்போதும் சீரியஸான முக பாவம்தான். அதில் பல விதங்கள் உண்டு. ஆனால் அவனுடையது எப்போதும் கனிவுடைய ஒன்றுதான். அப்படிப்பட்ட ஒரு
முகமூடியை கோபி தானே தேர்ந்தெடுத்து போட்டுக்கொண்டனா? ஒரு வேளை தன்னந்தனியாக இருக்கும்போது அவன் இந்த முகமூடியை கழற்றிவிடுவானா? அது எப்போது?
வாசு இல்லாத நேரங்களே இல்லை. ஆனால் மாதத்திற்கு ஒரு தடவை வாசுவும் அவனுடைய மனைவியும் சின்னப் பையனைப் பார்க்கச் சொர்னூர் போவார்கள். பெரிய பையன் கல்யாணமாகி அங்கே தங்கியிருந்தான். அவன்
வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். சின்னப் பையனை விட பெரிய பையன் மீது வாசுவுக்கு கொஞ்சம் கூடுதல் ப்ரியம் உண்டு.
ஆனால் வாசு ஊருக்குப் போகும்போது கோபியை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டுப் போவான். அடுத்த நாள் மத்தியானம் திரும்பி வந்துவிடுவார்கள். பேசாத ஒரு ஆளை இப்படி உள்ளே வைத்து வெளியில் பூட்டிவிட்டுப் போவது சரியா? வாசுவேதான் சொல்லுவான். கோபுவுக்கு கொஞ்சம் மூளை சரியில்லை.
இப்படிச் செய்வது மகா பாவம் இல்லையா? இந்தப் பாவங்களை எல்லாம் வாசு எங்கே போய்க் கழுவுவான்? நான் யோசித்துப் பார்த்ததுண்டு. கோபி அல்லவா இதைப் பற்றி யோசிக்க வேண்டும்? அடுத்தவருடைய குடும்ப விஷயங்களில்
தலையிடுவது சரியில்லையே? ஊருக்குப் போய்விட்டு வந்தால் வாசுவுக்கு எல்லாருடனும் பாசம் அதிகமாகும். லட்டு ஜிலேபி இலை அடை எல்லாம் எனக்கு கொடுப்பான். அப்புறம் அழைத்து உட்கார வைத்துப் பேசி ஒரு துவம்ச வதம் செய்வான். கதை விடிகாலை நான்கு மணிக்குக் காரில் ஏறியது முதல் நிகழ்ந்த சம்பவங்களின் வர்ணனைகள் வழியாக விரிந்து பரந்து செல்லும். கேட்க சுவாரசியமாக இருக்கும். வாசு சொல்லி முடிக்கும் போது நாமும் அவனோடு ஒரு பயணம் போன சோர்வு ஏற்படும்.
“கோபி. அந்தக் கேட்டத் திறந்துவிடு”. வாசு கடைக்குப் போக காரில் புறப்படுகிறான். சிறிய வயதில் கோபி அழகுடன் இருந்தான். ஒல்லியான உடம்பு. அதிகம் பேசுவதில்லை. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில். “அப்பா அவனை டாக்டராக்கணும்னு நினைச்சார். ஆனால் நான் ஒரு ரௌடிப் பய மாதிரி நடந்துகிட்டேன். எப்பப் பாத்தாலும் சரியில்லாத கூட்டுக்காரங்க. வாழ்க்கையில செய்யக்கூடாதது எல்லாத்தயும் செஞ்சிருக்கேன். ஆனா பாத்தாத் தெரியாது
இல்லயா?” வாசு கொஞ்சம் நிறுத்தினான்.
“அந்த காலத்துல எனக்கு ஒரு தைரியம் இருந்துச்சு. ஏன்னா சரியில்லாத நண்பர்களோட ஒரு கூட்டமே என்னைச் சுத்தித் திரிஞ்சுது. எல்லாம் பின்னால ஒரு நாள்ல பெரிய பிரச்சனைகளா இருந்துச்சு. எல்லாப் பயல்களும் தறுதலைப் பசங்களா இருந்தாங்க. ஒரு தடவை போதைப் பொருளக் கூட பயன்படுத்தியிருக்கேன். எல்லாத்தப் பத்தியும் தெரிஞ்சுக்கணும் இல்லயா? அன்னிக்கு எனக்கு வயசு இருபது கூட இருக்காது. ஒரு நாள் சாயங்காலம் நண்பண் ஒருவன் ஒரு பொருளத் தந்தான்.
உடனேச் சாப்பிட்டு சோதிச்சுப் பாத்தேன். ஆகாயத்துல பறவைங்க பறக்கற மாதிரி தோனிச்சு. ஸ்கூட்டர்ல வீட்டுக்கு வர்ற வழியில நான் நடுவுல குனிஞ்சு வண்டி டயர பாத்தேன். வண்டி ஆகாயத்துல பறந்து போய்கிட்டு இருக்கற மாதிரி
தோனிச்சு. போதையோட மயக்கத்துல மிதந்துகிட்டே முன்னாலப் போய்க்கிட்டுருந்த லாரி மேல மோதினப்பத்தான் நான் ஆகாயத்துலேர்ந்து பூமிக்கு இறங்கி வந்தேன்.
அதிர்ஷ்டவசமா உயிர் தப்பினேன். அதுக்கப்புறம் இன்னிக்கு வரை அந்தப் போதப்பொருளக் கையாலத் தொடல”. வாசுவுடைய தள்ளு வண்டி கதைப் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. “கோபியோட கதயத்தான் முன்னால நாம
சொல்லிகிட்டிருந்தோம். அவன் எப்பவும் அப்பா கூடவேதான் இருப்பான். அப்பாவோட நிழலா இருந்தான்.
அப்பா சொல்ற மாதிரியே கேப்பான். அப்படி ஒரு நாளு அப்பா கூட வயக்காட்டு வழியா நடக்கறப்பதான் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்துச்சு. அந்த இடத்துலயே அவரு மயங்கி விழுந்தாரு. செத்துப் போனாரு. இது கோபுவுக்கு
பெரிய அதிர்ச்சி. சிகிச்சை ஆரம்பிச்சுது. ஆயுர்வேதம் அலோபதி எல்லாத்தயும் பாத்தோம்.
ஆனா மனசோட தாளம் தப்பிப் போச்சு. அப்பறம் தெய்வத்தோட அன்பளிப்பா நான் அவனை எங்கூடவே வச்சுகிட்டேன்” வாசு கதையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அன்றைக்கு வாசுவுக்கு நல்ல மூடு. நிறுத்துவதாகத்
தெரியவில்லை. நடுவில் அனாவசியமான ஒரு கேள்வியை வாசுவின் மீது நான் தொடுத்தேன்.
அப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்க வேண்டியதில்லை என்று பிறகு பல சமயங்களிலும் எனக்குத் தோன்றியது. ஆனால் வாசு தன்னுடைய சொந்த வாழ்க்கையில் கோபுவை ஏற்றுக் கொண்டதைப் பற்றியும் அதற்கு அப்புறம்
ஏற்பட்ட கஷ்டங்களை அவன் தொடர்ந்தான். நான் சும்மா ஒரு கேள்வியைக் கேட்டேன்.
அந்தக் கேள்வி வாசுவை குழப்பிவிட்டது. பதில் கிடைத்தது என்றாலும், அதில் எனக்கு ஒரு திருப்தி ஏற்படவில்லை.
“கோபி கல்யாணம் செஞ்சுகிட்டாரா?”
இதுதான் நான் கேட்ட கேள்வி. வழக்கம் போல வாசுவும் அவனுடைய மனைவியும் இந்த மாதமும் ஊருக்குப் போனார்கள். போகும்போது கோபிக்கு சாப்பிடத் தேவையான உணவை எல்லாம் எடுத்து வைக்க வாசுவுடைய மனைவி
மறக்கவில்லை. ஒரு கோப்பை குடிக்க தண்ணீரும் வைக்கப்பட்டது.
வாசு வீட்டைப் பூட்டி சாவியை என்னிடம் தந்தான். கோபி அமைதியானவன். எப்போதோ அந்த வீட்டுக்குப் பக்கத்தில் நடந்து சென்ற போது தொலைக்காட்சியில் நந்தனம் சினிமா பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கு நிம்மதியாக இருந்தது. நான் வாசுவுடைய வீட்டுக்கு திரும்பிப் போகவில்லை.
அடுத்த நாள் வாசு போனில் கூப்பிட்டான். “மனைவிக்கு உடம்பு சரியில்ல. அவளுக்கு தல சுத்துது. ஆஸ்பத்திரியில இருக்கோம். நாளைக்கு வரோம். கோபிய பத்திரமாப் பாத்துக்கணும்” சொல்லி முடித்தான். அன்னிக்கு ராத்திரி எனக்கும்
கோபிக்கும் இரண்டு பொட்டலம் சப்பாத்தியையும் குருமாவையும் வாங்கிக்கொண்டேன். வாசுவின் வீட்டை அடைந்தேன்.
கையில் இருந்த சாவியை வைத்து கதவைத் திறக்கும்போது லேசான ஒரு பதட்டம் ஏற்பட்டது. கோபியைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அவன் வயலண்ட் ஆக மாறுவானா? தெரியாது. உள் அறையில் தொலைக்காட்சி சத்தம் கேட்டது.
கோபியின் கட்டிலுக்குப் பக்கத்தில் ஒரு தொலைக்காட்சி செட் அப். என்னைப் பார்த்தவுடன் கோபி எழுந்தான். அங்கே இருந்த நாற்காலியில் உட்காரச் சொல்லி அவன் என்னுடன் சைகை பாஷையில் பேசினான்.
சப்பாத்தியை சாப்பிடத் தயாரானேன். கோபி என்னுடைய கையில் இருந்த பொட்டலத்தை வாங்கிக் கொண்டான். கீழே இருந்த சாப்பாட்டு மேசைக்கு அழைத்தான். சமையலறையில் இருந்து இரண்டு தட்டுகளையும் இரண்டு பாட்டில்
தண்ணீரையும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தான். இருக்கைகளில் நாங்கள் உட்கார்ந்தோம். பேசாத கோபியோடு நானும் எதுவும் பேசவில்லை.
ஆனால் என்னை அதிர்ச்சி அடையச் செய்து கோபி மெல்லிய குரலில் கேட்டான். “வாசு அண்ணன் இன்னிக்கு வரல இல்லயா?”