“இதுக்கு ஒரு முடிவு கட்டாம முடியாது. இனிமேலயும் இதப் பொறுத்துக்க முடியாது”. மனைவியின் இந்த வார்த்தைகள்தான் அன்று ஆபீசில் இருந்து வந்த என்னை வரவேற்றது. ஏதோ ஆபத்து நடந்துவிட்டது என்று நான் நினைத்தேன். இயல்பாக அமைதியான சுபாவம் உடையவள் என்றாலும் ஒரு முறை கோபம் வந்துவிட்டால் அப்புறம் ஒரு பேயாட்டம் ஆடிய பிறகே ஜானு அடங்குவாள்.
அவள் இடைவெளி விடாமல் பேசினாள். “இப்படியுமா ஒரு தொந்தரவு? ஒரு தடவை பொறுத்துக்கலாம். பத்து தடவை வேணும்னாலும் பொறுத்துக்கலாம். முன்னூத்தி அறுபத்தி அஞ்சு நாளும் இதே மாதிரியானா?”. நான் என்னுடைய ஆடைகளை மாற்றி நாற்காலியில் வந்து உட்கார்ந்த போதும் அவளுடைய சீற்றம் முடிவுக்கு வரவில்லை.
என்றாலும் நான் பதட்டப்படவில்லை. தங்கச் சங்கிலியை அடகு வைத்து மீட்க வேண்டிய நேரத்துக்கு மீட்காமல் போனதுனாலா? பல தடவை நடையாய் நடந்தாலும் தையல்காரனிடம் தைக்கக் கொடுத்த ஜாக்கெட்டை தைத்துக் கொடுக்காததுனாலா? துணி தோய்ப்பவன் வராமல் போனதுனாலா? இப்படி இயல்பாக வரும் ஓராயிரம் விஷயங்களில் ஏதாவது ஒன்று சம்பவித்திருக்கலாம்.
ஜானு காபியையும் பலகாரத்தையும் முன்னால் கொண்டு வந்து வைத்தாள். காபியை கோப்பையில் ஊற்றிக் கொடுத்ததுடன் அவளுடைய வாயில் இருந்து காரண காரியம் இல்லாத விதமாக கடினமான வார்த்தைகள் ஊர்ந்து விழுந்து கொண்டிருந்தன.
“அப்பறம். ஜானு. என்ன நடந்துச்சு?” “என்ன நடந்துச்சு?”
“இப்போதாச்சும் கேட்டீங்களே? அவன் லாய்க்கு இல்லாதவன்”
“யாரு?”
“இதோ இங்க இருக்கானே ஒரு மரத்தலயன் குஞ்சு!” அவள் சொல்வது எங்க வீட்டு வேலைக்காரனைப் பற்றித்தான் என்று தெரிந்தபோது எனக்கு நிம்மதி ஏற்பட்டது. “இப்ப என்ன நடந்துச்சு?”. “அவன் ஒரு பெரிய அதிகப்பிரசங்கி. அவனை உடனே வீட்ட விட்டு அனுப்புங்க”
ஜானு ஏற்கனவேத் தீர்ப்பை எழுதி விட்டாள். ஆனால் அந்த இளம் வயதுப் பையனைப் பற்றி இப்படி ஒரு அவதூறு கேட்கவேண்டி வரும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அவன் ஒரு பாவப்பட்ட ஜென்மம். சூது வாது திருடு கிடையாது. வம்பு தும்பு கிடையாது. அவதூறான பேச்சு இல்லை. அந்தந்த நேரத்துக்கு எல்லா வேலைகளையும் துல்லியமாகச் செய்வான். அறிவு மட்டும்தான் கொஞ்சம் குறைவு. அதனாலென்ன? வீட்டு வேலைக்காரனுக்கு விஞ்ஞானியின் புத்தி தேவையில்லயே? அதோடு புத்திசாலியான ஒரு வேலைக்காரனைப் போல ஆபத்தானவன் வேறொருவன் இல்லை என்று எங்களுக்கு அனுபவம் சொல்லிக் கொடுத்திருக்கிறது.
“இருந்தாலும் என்னோட மனைவிக்கு இப்படி தோன்ற காரணமென்னவாக இருக்கும்?” என்று எனக்கு ஆச்சரியம். “ஏதாச்சும் கத்தினானா?”. நான் கேட்டேன்.
“அப்படி ஒன்னும் இல்ல”
“வேல பாக்கலயா?”
“வேல செய்யாட்டா நான் சம்பளம் கொடுப்பேனா?”
“அப்பறம்? உங்கிட்ட தப்பா நடக்க முயற்சி செய்ஞ்சானா?”
“என்ன?”
ஜானு எனக்கு நேராக ஒரு கடுமையான பார்வை பார்த்தாள். அதில் தீப்பொறி தெறித்தது. அந்தப் பார்வை கொஞ்சம் கடுமையாகவே இருந்தது. நான் அதைச் சகித்துக் கொண்டேன். அவளுடைய வாயில் இருந்து வார்த்தைகள் சிதறி
விழ ஆரம்பித்தன. “எங்கிட்ட அவன் தப்பா நடக்க முயற்சி செய்யப் பாத்தா துடைப்பமும் அவனோட முதுகும் நேருக்கு நேரா சந்திக்கும். ஆமாம்”
“அப்பறம் என்ன விஷயம்னு சொல்லு”
“அவன் கெட்டவனாக்கும். வேணாம்னா வேணாம்” ஜானு கடைசி வார்த்தையாகத் தீர்ப்பு சொல்லி முடித்தாள்.
“வேணாம்னு சொல்ல காரணம் என்ன?”
“அதா? குஞ்சுவும் நாராயணியும் இங்க இருக்கக் கூடாது. ஒன்னு அவ போகணும். இல்லாட்டா அவன். உடனே வீட்ட விட்டு அனுப்பியே ஆகணும்”
விஷயம் ஓரளவுக்கு எனக்குப் புரிய ஆரம்பித்தது. இருந்தாலும் எல்லாம் தெளிவில்லாமல் இருந்தது.
“அவனுக்கும் அவளுக்கும் சண்டையா? இல்ல காதலா?”
“ரெண்டும்”
“அர்த்தம் புரியல”
“புரியலயா? அந்த தடி மாட்டுப் பய அவள நிம்மதியா இருக்கவிட மாட்டேங்கறான்”
“அப்படியா! தள்ளிவிடறானா? இடிக்கறானா?”
“உங்களுக்கு என்னத்தன்னு சொல்லி எப்படிப் புரிய வைக்கறது? தேனே பாலேன்னு எப்பப் பாத்தாலும் சொல்லிகிட்டு அவளுக்குப் பின்னாடியேச் சுத்திகிட்டிருந்தா அவளுக்கு கோபம் வராதா?”
“சரிதான். இனி எப்பவும் அந்த மாதிரி நடக்கக் கூடாதுன்னு சொல்லிடலாம். நிலா உள்ள ராத்திரிப் பொழுது அந்த வாழத் தோட்டத்துலயோ இல்ல வேற எங்கயாச்சுமோ போய் நின்னு ப்ரியமானவளேன்னு கூப்பிடவோ பாடவோ செய்யலாம்னு சொல்லிப் புரிய வைக்கலாம்”
“வாய்க்கு வந்த படி பேசறது எல்லாம் இங்க நடக்காது. அவன் இந்த நிமிஷமே வீட்ட விட்டுப் போகணும்”
“ஸ்ரீமதி ஜானகியம்மா இப்படியெல்லாம் பிடிவாதம் பிடிக்காதீங்க. வேத வியாசனோட அப்பா காலத்துலேர்ந்து இந்த மாதிரியெல்லாம் இருந்துச்சுங்கறதுக்கு ஆதாரம் இருக்கு. இங்க நாராயணிங்கற ஒரு அழகிய பாத்தப்ப குஞ்சுவுக்கு ஒரு காதல். முன்னால... எனக்கும் உனக்கும் இருந்தது போலத்தான்”
“நம்ம மாதிரியா இவங்க?”
“இல்ல. அவளுக்கு அவனையும் பிடிச்சிருக்கலாம்”
“ஆமாமாம்”
அது காதில் விழாதது போல நடித்தபடி நான் தொடர்ந்தேன்.
“முன்னால நீ செஞ்ச மாதிரி. சமையல் வேல முடிஞ்சவுடனே அவளும் காலால சித்திரம் வரையவும் தலையில பூந்தோட்டத்த வச்சு வளக்கவும் பெருமூச்சு விடவும் ஆரம்பிக்கட்டும். எழுதத் தெரியும்னா காதல் கடுதாசுங்க எழுதட்டும்”
“நீங்க அவனை வீட்ட விட்டு அனுப்புவீங்களா?”
“இல்ல. கல்யாணம் கட்டி கொடுக்கலாமே?”
“அவனுக்கு கல்யாணப் பந்தல் போடறதுக்கா இந்த வீடு இருக்கு?”
நான் சொன்னேன். “ஒருத்தர ஒருத்தரு விரும்பறாங்க. பிடிச்சிருக்கு. கல்யாணம் கட்டிக்கட்டும். முன்னால நானும் நீயும் செஞ்ச மாதிரி. கல்யாணத்துக்கு முன்னால நான் உனக்கு ரெண்டு மூனு தடவை முத்தம் கொடுத்ததுனால இந்தப் பிரபஞ்சத்தோட ஒரு ஆணி கூட இளகிப் போயிடல. இப்ப நமக்கு ரெண்டு குழந்தைங்க பிறந்தாச்சு”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது”
அந்த வார்த்தைகளின் மதிப்பை பற்றிய உண்மையான அர்த்தத்தை நான் மனம் திறந்து சொல்வது என்னை அந்த சூழ்நிலையில் இருந்து காப்பாற்றாது என்று எனக்குத் தோன்றியது. என்ன இருந்தாலும் நான் ஒரு ஆம்பளை இல்லையா? வேறொரு வழியில் அவளுடன் சமாதானமாகப் போக நான் தீர்மானித்தேன்.
“நீ சொல்ற மாதிரியே இவனை வீட்ட விட்டு அனுப்பிடலாம். ஆனா? புதுசா வர்றவனும் இந்த மாதிரி நடந்துக்கமாட்டாங்கறதுக்கு என்ன உத்தரவாதம்?”
“அப்படின்னா சரி. அவள வீட்ட விட்டு அனுப்பிடலாம். அதுதான் நல்லது”
“அது வேணாம். அவந்தான் போகணும். அனுப்புவீங்களா?”
“இல்ல”
”வீட்ட விட்டு அனுப்பியே ஆகணுங்கறேன்”
“அது நடக்காதுங்கறேன்”
ஜானுவுடைய பார்வை புயற்காற்று மாதிரி விர்ர்ரென்று வீசியது. கோபத்துடன் உள்ளேப் போனாள். எனக்கு சங்கடமாகிப் போனது. அவனை அனுப்புவதில் ஆட்சேபணையில்லை. ஆனால் அந்த அளவுக்கு அவன் என்ன தப்பு செய்தான்? மனதுக்கு பிடித்தவளிடம் காதல் பேசுவது ஒரு குற்றமா? அப்படிப் பார்த்தால் இந்தக் குற்றம் செய்யாதவர்கள் இந்த உலகத்தில் எத்தனை பேர் இருப்பார்கள்? அவன் என்னோட வீட்டில் வேலை செய்கிறான் என்பதற்காக மனிதனுக்கே உரிய அவனுடைய இணையை கண்டுபிடிப்பதற்கு அவனுக்கு இருக்கும் உரிமையில் குறுக்கிடலாமா? ஆனால்? அவளுக்கு இவனை பிடிக்கவில்லை என்றால்? அப்படியென்றால் சலாம். உங்களை எனக்குப் பிடிக்கவில்லை. இப்படி ஒரு வார்த்தை சொன்னால் போதுமே? உண்மையில் காதலை வெளிப்படுத்துவதை இந்த அளவுக்கு ஒரு பெரிய குற்றமாக ஒரு பெண் கருதுவாளா? தன் அழகை பாராட்டும் போக்கு எந்தப் பெண்ணுக்காவது பிடிக்காமல் இருக்குமா என்ன? ஆனால் இந்த தத்துவத்திற்கு எல்லாம் இங்கே இடமில்லை. ஜானு தேவையில்லாமல் பிடிவாதம் பிடிக்கிறாள். அவளோட விருப்பம் போலச் செய்யட்டும். ஆனால் சாயங்காலம் ஆகிய பின்னும் அவள் என்னிடம் ரவில்லை. முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கால்களை அழுத்தி அழுத்தி வைத்து நடந்து கொண்டிருந்தாள்.
அது மட்டும் இல்லை. எதிர்ப்பின் அடையாளமாக வாசல் கதவையும் ஜன்னல் கதவையும் பெட்டியையும் எல்லாம் சத்தத்தோடு மூடவும் திறக்கவும் செய்தாள். சூழ்நிலை இந்த அளவுக்கு மோசமாகிவிட்ட போது கொஞ்சம் வெளியில் போய்விட்டு வரலாம் என்று எனக்குத் தோன்றியது. வானம் மூடிக்கொண்டிருந்தது. அப்படிப்பட்ட ஒரு சாயங்காலப் பொழுதில் வெளியில் இறங்கி நடக்க ஒரு சலிப்பு. கார்மேகங்கள் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழத் தயாராக இருந்தன. தாழ்வாகத் தொங்கிக்கொண்டிருந்தன. மழை எந்த நிமிஷத்திலும் வானத்தைப் பிய்த்துக்கொண்டு பெய்யலாம். சாறல் விழும் இந்த மாதிரி நேரங்களில் தனியாக நடக்க நான் விரும்புவதில்லை. இந்த மாதிரி எத்தனை சாயங்கால நேரங்களில் நானும் ஜானுவும் நடந்து போயிருக்கிறோம்? ஒரு பெரிய குடைக்குக் கீழே பரஸ்பரம் தோளை உரசிக் கொண்டும் சீரியஸான, அல்பமான ஒரு ஆயிரம் விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டும் நடந்து போகும் போது வாழ்க்கை மேலும் கொஞ்சம் சுலபமானதாகத் தோன்றும்.
கிழிந்த ஆடைகளுடன் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என்னைத் தாண்டிப் போனார்கள். வயதான இவர்கள் வாழ்வது அல்லவா வாழ்க்கை? இவர்கள் காதலித்தாக் கல்யாணம் செய்து கொண்டார்கள்? இல்லை கல்யாணமே செய்து கொள்ளவில்லையா? காதல் வாழ்க்கையில் தர்க்கங்களோ தகராறுகளோ வருவதுண்டா? வாயில் வெற்றிலைப் பாக்கைப் போட்டுக்கொண்டு கடந்த காலத்தை மனதிற்குள் மெதுவாக அசை போட்டபடி ஒன்றிரண்டு பென்ஷன் வாங்கும் ஓய்வு பெற்ற மனிதர்கள் என்னைக் கடந்து போனார்கள். எல்லாவற்றையும் பார்த்தபடி நான் நின்றேன்.
“எந்தக் கோட்டையப் பிடிக்க இப்படி கனவு கண்டுகிட்டு நிக்கறீங்க?”
திடீரென்று வந்த இந்த கேள்வி என்னை நிஜ உலகத்துக்கு அழைத்து வந்தது. எதிரே மிஸ்டர் பணிக்கர். பெரிய மீசை. கதர் ஜிப்பா. நின்று கொண்டிருந்தார். அவர் என்னுடைய பழைய நண்பர். நாங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். அவர் அரசியல் வாழ்க்கையில் ஈடுபடப் போனார். குடும்பச் சூழ்நிலை என்னை மற்றொரு வழிக்கு இட்டுச்சென்றது. அவர் என்னுடைய ஒரு தலைவராவார். இருந்தாலும் அந்த பழைய நட்பை மறக்கவில்லை. அவ்வப்போது என்னுடைய வீட்டுக்கு வருவார். அவரைப் பார்த்தபோது முதலில் எனக்கு வெறுப்புதான் ஏற்பட்டது.
“இந்த சங்கடமான நேரத்துல இந்த உபதேசம் செய்யற ஆள யாரு இங்க இழுத்துகிட்டு வந்தது?”. ஆனால் அடுத்த நிமிஷத்தில் அவரை வரவேற்பதில் நான் பெரிய உற்சாகம் காட்டினேன். அது இயல்பானது போல என்னிடம் இருந்து வந்தது. “பணிக்கர். நீங்க ஏன் கல்யாணம் செஞ்சுக்கல?”. நான் பட்டென்று கேட்டுவிட்டேன்.
“நானா? இன்னிக்கு அரசியல்ல கல்யாணமானவங்க தேவைல்ல”. நான் திடுக்கிட்டுப் போனேன். எத்தனை தீர்க்கமான பதில்? அவருக்கு முன்னால் நான் என்னை ஒரு கிருமியைப் போல உணர்ந்தேன். அவர் அதைப் பற்றி நீட்டி முழக்கிப் பேசினார். அவர் தன்னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தெரியாத ஒரு ஆள். கல்யாணமாகவில்லை என்ற சுமையை முதுகில் கொண்டு நடக்கிறார். அரசியல் பாரத்தை ஆனமட்டும் அவர் ஏற்கனவே சுமந்து கொண்டு வாழ்கிறார்.
“சமையல் ஆயிடுச்சு. குளிச்சுட்டு வர்றீங்களா?”. மனைவியின் மணி நாதம் முழங்கியது. குளியல் மட்டும் இல்லை. நீண்ட நேர தியானம் செய்வது அவருடைய பழக்கம்.
“என்ன?” நான் கேட்டேன்.
“என்னவோ!”. ஜானுவின் பதில். ஜானுவைப் பார்த்தேன். குழந்தைகளைப் பார்த்தேன். தூங்கிக் கொண்டிருந்தார்கள். முன்பு ஏற்பட்டிருந்த திகைப்பும் சங்கடமும் அகன்ற போது “ஓடி வாயேன்! ஓடி வாயேன்!”. கீழ் தளத்தில் இருந்து கூக்குரல் சத்தம் கேட்டது. அது குஞ்சுவுடைய குரல்தான்.
“என்ன சத்தம் அது?” கேட்டேன்.
“ஓடி வாங்க முதலாளி”. குஞ்சு படுக்கும் இடத்தில் ஒரு விரிப்பு மட்டுமே இருந்தது. எதிர்ப்பக்கம் இருந்த அறைக்கு சென்றேன். அங்கே நாராயணி. அந்தக் காட்சி திடுக்கிட வைப்பதாக இருந்தது. குஞ்சு பணிக்கரை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தான். பீதியுடன் இருந்த நாராயணி ஒரு மூலையில் சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டு நின்றாள்.
”விடு” குஞ்சுவிடம் நான் சொன்னேன்.
“என்ன நடந்துச்சு?”. என்னுடைய மனைவி குறுக்கே புகுந்து கேட்டாள்.
இந்த ஆளு இப்படி இருப்பாருன்னு நான் நினைக்கல சின்னம்மா”
“என்னடி சொல்ற நாராயணி?” ஜானு கேட்டாள்.
“என்னோட காலப் பிடிச்சு இழுத்தாரு! பயந்து போயிட்டேன்.”
“யாரு?”
ஜானுவுடைய கேள்விக்கு அவள் உடனே பதில் சொல்லவில்லை. நான் பணிக்கருடைய தோளில் கையை வைத்து கேட்டேன். அவர் புளியங்காயைத் தின்றவரைப் போல முகத்தை வைத்துக்கொண்டு நின்றார். அந்த மனிதனுடைய கையையும் பிடித்துக்கொண்டு நான் நாராயணிக்கு முன்னால் போய் நின்றேன். “பணிக்கர கல்யாணம் கட்டிக்க உனக்கு விருப்பமா?”
“என்ன!”. பட்டென்று குஞ்சுவிடம் இருந்து வெளிவந்த சத்தத்தை நான் பொருட்படுத்தவில்லை. “வேணாம். வேணாம்”. அவள் அழ ஆரம்பித்துவிடுவாள் போலிருந்தது.
“குஞ்சுவப் பிடிச்சிருக்கா?” நிசப்தம் நிலவியது.
“சம்மதமா?”
ஒரு புன்முறுவல். வெட்கத்தில் ஒரு கோணல் சேஷ்டை.
“சம்மதமா?”
முந்தானையைப் பிடித்துக்கொண்டு ஒரு முடிச்சு போட்டாள்.
“சொல்லு”
“ஆமாம்”. “சரி பணிக்கர். உங்களுக்கு சான்ஸ் இல்ல. பிரம்மசாரியா இருக்க யோகம் இருக்கு”
வெட்டப்பட்ட பலாப் பழம் போன்ற சிரிப்போடு குஞ்சு அறையின் வாசல் வரை எங்களுடன் வந்து விடை கொடுத்தான். எல்லாரும் மௌனமாக இருந்தார்கள்.
பணிக்கர் பச்சை மிளகாயை கடித்த முக பாவத்துடன் சொன்னார்.
“மிஸ்ட்டர். தப்பா நினைக்காதீங்க. எனக்கு ஒரு நோய். கனவுலகத்துல சஞ்சரிக்கற ஒரு நோய். கொஞ்ச நாளா”
“என்ன?”, ஜானுவுடைய அந்தக் கேள்வியின் கூர்மையைப் புரிந்து கொண்ட நான் சொன்னேன்.
“சரிதான். அப்படித்தான் இருக்கும். எனக்கும் இருந்துச்சு. உன்னை கல்யாணம் கட்டிக்கறதுக்கு முன்னால. பணிக்கர். அமைதியா தூங்குங்க.. மேல் மாடிக்கு போனோம். நான் கேட்டேன்.
“குஞ்சுவ வீட்டுக்கு அனுப்பிடலாம் இல்லயா?”
“வேணாம். கல்யாணம் கட்டித்தர்றதா சொன்னீங்க?”
“இருந்தாலும் போகட்டும்..
“வேணாம். வீட்ட விட்டு அனுப்பினா அவன் ராத்திரியெல்லாம் இங்க வருவான். கேட்டா கனவு காணுற பழக்கம்னு சொல்லுவான். இத கட்டுப்படுத்தறதுக்கு ஒருவழியும் இல்ல. இனி பொறுத்துக்க முடியாது”
இப்படி சில நிமிடங்கள் கடந்து போயின. ஜானு அமைதியாக என்னிடம் கேட்டாள்.
“முன்னால நீங்களும் கணவு கண்டுகிட்டு இருந்ததா சொன்னீங்க இல்லயா? அப்ப எங்க போனீங்க?”
நான் கண்களைச் சிமிட்டிக் காட்டினேன். தூங்க ஆரம்பித்து விட்டது போல நடிக்க முயற்சி செய்தேன். பணிக்கருடைய குறட்டைச் சத்தம் லேசாகக் கேட்க ஆரம்பித்தது. அந்த நோயாளி சுகமாக தூங்கட்டும்”