யாருக்கிட்ட எப்ப எதைக் கேக்கணும்னு ஒரு முறை இருக்கு. எல்லாரும் எப்போதும் ஒரே மாதிரியா இருக்க மாட்டாங்க. இதையெல்லாம் பாத்துத்தான் ஒருத்தர அணுகணும். அப்படி இல்லாமா எக்குத்தப்பா எதையாவது நாம போயிக் கேட்டோம்னா நமக்கு அவமானந்தான் மிஞ்சும். இதுக்கு ஒரு கதை இருக்குது.
ஒரு பெரிய காடு இருந்துச்சு. அதுல பல்வேறு விதமான விலங்குகள் வாழ்ந்து வந்ததுங்க. அந்தக் காட்டுக்கு பெரிய சிங்கம் ஒண்ணு ராஜாவா இருந்துச்சு. அதுபாட்டுக்கு யாரையும் தொந்தரவு செய்யாம வாழ்ந்து வந்துச்சு. அந்த சிங்கந்துக்கூட ஒரு நரியும் இருந்துச்சு. அந்த சிங்கம் வேட்டையாடிட்டு வந்து சாப்பிட்டு எஞ்சியதை எல்லாத்தையும் இந்த நரி சாப்புட்டுரும். சிலசமயம் கொஞ்சங்கூட நரிக்குக் கிடைக்காமப் போயிரும். அப்ப கிடைக்கிற எலும்பத் தின்னுட்டு நரி கிடக்கும். ரெம்ப எதுவும் நரி முரண்டு பண்ணினா ஒரேயடியில சிங்கம் நரிய அடிச்சிரும். இதுக்குப் பயந்துக்கிட்டே இந்த நரி பேசாமா சிங்கத்துக்கூட இருக்கும்.
ஆனாலும், இந்த நரிக்கு மனசுக்குள்ளாற ஒரு உறுத்தல். எல்லாத்தையும் இந்தச் சிங்கம் அடிச்சிருது. இந்தச் சிங்கம் யாருக்கிட்டயும் ஒதை வாங்க மாட்டேங்குதே. எப்படியாவது இந்தச் சிங்கத்தை ஒரு ஒதையாவது வாங்க வச்சிரணும். அதுக்குச் சரியான ஆளத் தேடிப் புடிக்கணும்னு ரெம்ப நாளா இந்த நரி யோசிச்சிக்கிட்டே இருந்துச்சு.
ஒருநாளு சாவகாசமா இருக்கறபோது இந்த நரி சிங்கத்துக்கிட்ட, ‘‘மகாராஜா நீங்கதான் இந்தக் காட்டுக்கே ராஜா. ஆனா ஒரு பயகூட ஒங்கள வந்து பாக்க மாட்டேன்றாங்க. நீங் இருக்கறதே இந்தப் பயலுகளுக்கு மறந்து போச்சு. நீங்க ராஜாவா இல்லையாங்கறதே சந்தேகமா இருக்கு. இதுக்கு ஏதாவது வழிபண்ணனும். இல்லைன்னா ஒங்கள எல்லாரும் மதிக்க மாட்டானுகன்னு’’ சொல்லி உசுப்பேத்தி விட்டுருச்சு.
இதைக் கேட்ட சிங்கம், ‘‘அட நரிப்பயலே நீ சொல்றதும் உண்மைதாண்டா. இங்க என்னைய வந்து ஒரு பயகூடப் பாக்கமாட்டேங்கறாங்க. இதை இப்படியே விட்டுறக்கூடாதுடா. இதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணணும். ஏதாவது யோசனை இருந்தாச் சொல்லுடான்னு’’ நரியப் பாத்துக் கேட்டது.
நாம தெனந்தோறும் இந்தக் காட்டுக்குள்ளாற நடந்து போவோம். எதுத்தாப்புல வர்றதுகளுக்கிட்ட இந்தக் காட்டுக்கு யார் ராஜான்னு நீங்க கேளுங்க. அப்ப அதுக ஒங்கள ராஜான்னு ஒப்புத்துக்கிருச்சுன்னா அதுகள விட்டுருவோம். இல்லைன்னா அதுகள ஒரேயடியா அடிச்சுக் கொன்னுப்புடுவோம். அப்ப மத்ததுகளுக்கும் பயம் வந்துரும். ஒங்ககிட்ட ரெம்ப மரியாதையா நடந்துக்குவாங்க’’ அப்படீன்னு யோசனை சொன்னது.
சிங்கமும், ‘‘ஆமாட நீ சொல்றதுஞ் சரிதான். இப்பவே நாம கௌம்புவோம். எதிர்ல வர்ற ஒவ்வொரு விலங்குக்கிட்டயும் இந்தக் காட்டுக்கு ராஜா யாருன்னு நானே கேள்வி கேக்குறேன்னு’’ சொன்னது.
சிங்கமும் நரியும் கௌம்புச்சுங்க. சிங்கம் முன்னாலயும் நரி பின்னாலயும் போனபோது எதித்தாப்புல ஒரு முயலு வந்துச்சு. அதை மரிச்சி, ‘‘டேய் முயலே இந்தக் காட்டுக்கு யாரு ராஜா?’’ அப்படீன்னு சிங்கம் கேட்டது. முயலு நடுங்கிக்கிட்டே, ‘‘இதுல என்ன சந்தேகம்? நீங்கதான் ராஜா’’ அப்படீன்னது. சிங்கத்துக்கு உள்ளுற மகிழ்ச்சி. ‘‘சரி சரி நீ போ’’ அப்படீன்னு சொல்லிட்டுக் கௌம்புச்சு.
இப்படியே கரடி, நாய், மான், புலின்னு எல்லா விலங்குகளும் சிங்கந்தான் ராஜான்னு சொல்லிருச்சுக. சிங்கத்துக்கு ரெம்ப மகிழ்ச்சியாப் போச்சு. சிங்கம் நரியப் பாத்து, ‘‘என்னடா நரிப்பயலே பாத்துக்கிட்டியா? இந்தக் காட்டுக்கு ராஜா நாந்தான்னு எல்லா விலங்குகளும் ஒப்புத்துக்கிருச்சுல்ல. அப்பறம் என்ன?ன்னு’’ கேட்டது.
இதைக் கேட்ட நரி, ‘‘மகாராஜா நீங்க சொல்றது சரிதான். ஆனா எல்லாரும் வந்து நீங்கதான் ராஜான்னு ஒப்புத்துக்கிட்டாங்க. ஆனா உருவத்துல ஒங்களவிடப் பெருசா இருக்கற யானை மட்டும் வரலையே? கவனிச்சீங்களா? அந்த யானையப் பாத்து இந்தக் காட்டுக்கு ராஜா யாருன்னு கேட்டுறணும். அதுவரைக்கும் எம்மனசு ஆறாது. வாங்க இப்பவே அந்த யானையப் பாத்து இதத் தெளிவுபடுத்திக்கிட்டு வருவோம்னு’’ சொல்லி சிங்கத்த இழுத்துக்கிட்டுப் போச்சு.
யானைய எங்க தேடியும் காணோம். சிங்கம் களைச்சிப் போயிருச்சு. நரியப் பாத்து, ‘‘டேய் நரிப்பயலே நாளைக்கு அந்த யானையப் பாத்து இந்தக் கேள்வியக் கேட்டுக்குவோம். இப்ப வாடா திரும்பிப் போயிருவோம்னு’’ கூப்புட்டுச்சு.
இதக் கேட்ட நரி, ‘‘இங்க பாருங்க மகாராஜா எதையும் ஒடனக்கு ஒடனே முடிச்சிப்புடணும். நாளைக்குன்னு ஆறாப்போட்டம்னா அது அர்த்தமில்லாமப் போயிரும். நீங்கபாட்டுக்கு வாங்க. அந்த யானை எங்க நின்னாலும் அதப் பாத்து ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சிக்கணும்னு’’ சொல்லிக்கிட்டே சிங்கத்தப் பேசவிடாம இழுத்துக்கிட்டுப் போச்சு.
ஒவ்வொரு விலங்குக்கிட்டயா யானை எங்கு இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு சிங்கமும் நரியும் யானை இருந்த எடத்துக்குப் போச்சுங்க. எல்லா யானையும் ஆத்துக்குள்ளாறப் போயிக் குளிச்சிட்டு அப்பத்தான் வெளியில நடந்து வந்துக்கிட்டுருந்துச்சுங்க.
நரிக்கு இதுதான் சிங்கத்த மாட்டிவிடுறதுக்கு சரியான நேரம்னு நெனச்சிக்கிட்டு, சிங்கத்தப் பாத்து, ‘‘மகாராஜா கேளுங்கன்னு’’ தூண்டிவிட்டது. சிங்கம் யானைகளோட பக்கமப் போயி, ‘‘ஏய் யானைகளா இந்தக் காட்டுக்கு யாரு ராஜா? ’’அப்படீன்னு கேட்டது. இதைக் காதுல வாங்கிக்காமயே யானைகள் நடந்து போச்சு. சிங்கத்துக்குக் கோபம் பொத்துக்கிட்டு வந்துருச்சு.
நான் இந்தக் காட்டுக்கு ராஜா. நாங்கேக்கறதுக்குப் பதிலுச் சொல்லாம இந்த யானைங்க போறதா? அப்படீன்னு மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டு ஓட்ட ஓட்டாமா ஓடிப்போயி யானைக முன்னால கொஞ்சம் எட்டியே நின்னுக்கிட்டு, ‘‘என்ன நாம்பாட்டுக்குச் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீங்கபாட்டுக்குப் போயிக்கிட்டு இருந்தா எப்படீன்னு?’’கேட்டுச்சு.
இதப்பாத்த நரி ஓட்டமா ஓடிப்போயி மறைவான எடத்துல நின்னு என்ன நடக்குதுன்னு வேடிக்கை பாத்துச்சு. சிங்கம் சொன்னதைக் கேட்ட யானை, ‘‘ஏ சிங்கமே நீ என்ன சொன்ன அப்படீங்கறது என்னோட கதுலயே விழல. ஏங்காதுல விழுகிறது மாதிரி கொஞ்சம் பக்கத்துல வந்து சொல்லு’’ அப்படீன்னு சொன்னது.
சிங்கமும் தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு யானைக்கு முன்னால நின்னுக்கிட்டு, ‘‘இந்தக் காட்டுக்கு யாரு ராஜாங்கறதச் சொல்லிட்டு அப்பறமாப் போங்கன்னு’’ சொன்னது.
ஒடனே முன்னால நின்ன யானை தன்னோட துதிக்கைய நீட்டி சிங்கத்தைப் புடுச்சி தூக்கி எறிஞ்சது. சிங்கத்தோட ரெண்டு மூணு எலும்புக ஒடிஞ்சி போச்சு. இதுக்கு மேல இங்க நின்னா நம்மல இந்த யானைக கொன்னுருங்கன்னு நெனச்ச சிங்கம் செத்தோம் பிழைச்சோம்னு ஓட்டமா ஓடி வந்துருச்சு. அதனால நடக்க முடியல. கால இழுத்து இழுத்துக்கிட்டு வந்துச்சு.
இதப் பாத்த நரி மனசுக்குள்ளேயே சிரிச்சிக்கிட்டு, ‘‘அடடா மகாராஜா இந்த யானைகளுக்கு எவ்வளவு கொழுப்பு. கேள்விக்கு விடை தெரியலைன்னா பேசாமப் போயிறவேண்டியதுதான. அதுக்குப் போயி ஒங்கள இப்படித் தூக்கிப் போட்டுக் கொல்லப் பாக்கலாமா? நீங்க கவலைப் படாதீங்க மகாராஜா இந்த யானைகளுக்கு அறிவே இல்லை’’ அப்படீன்னு சொன்னது.
இதைக் கேட்ட சிங்கம், ‘‘டேய் நரிப் பயலே எல்லாம் உன்னாலதாண்டா. சும்மா இருந்த என்னைய உசுப்பேத்திவிட்டு மிதிவாங்கவச்சு இப்ப வந்து ஆறுதலா சொல்ற. ஓம்பேச்சக் கேட்டதுக்கு எனக்கு வேணுன்டா.. இனிமே நீ இங்க வராத. ஓடிப்போயிரு. இங்க வந்த கொன்னே போட்டுருவேன்னு’ சொன்ன ஒடனே நரி வெரண்டு அடிச்சி ஓடிப்போச்சு. நல்லவங்ககூட சினேகம் வச்சிக்கிடலைன்னா இப்படித்தான் அவமானப்பட வேண்டியிருக்கும். அதனால நல்லவங்ககூட சேரணும்னு இந்தக் கதையச் சொல்வாங்க.