யார் யாரை எதெதுக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும்னு ஒரு கணக்கு இருக்கு. சில பேரக் கூட்டிக்கிட்டுப் போனா அந்தக் காரியம் நல்லா நடக்கும். சிலபேரக் கூட்டிக்கிட்டுப் போனா நடக்குற காரியமும் நடக்காமப் போயிடும். சிலபேரு நம்ம கூட வராம இருந்தாலே போதும்னு நாம போயிடணும். இதைப் பத்தின கதையொண்ணு இந்தப் பக்கம் வழக்கத்துல இருந்து வருது.
ஆடு களவாங்குற களவானிப் பய ஒருத்தன் இருந்தான். அவன் எப்படிப்பட்ட இடத்துலேயும் ஆடுகளக் களவாண்டுக்கிட்டு வந்துருவான். ஆனா அவனுக்கு ஒதவிக்கு யாராவது ஒரு ஆளு மட்டும் இருக்கணும். கூட வர்ற ஆள பேசாம இருக்கச் சொல்லிட்டு இவனே எல்லாத்தையும் பாத்துக்கிடுவான். ஒரு எடத்துல களவாங்கணும்னு முடிவு பண்ணிட்டான்னா அதை முடிக்காம விடமாட்டான்.
இப்படித் திறமையான களவானிப் பய ஒரு ஊரு வழியாப் போனான் அப்ப அந்த ஊருல நல்ல நல்ல ஆடுகளா மந்தை மந்தையாத் திரிஞ்சிச்சு. இந்த ஆடுக எங்க அடையுதுங்க, அதுகள பத்திரமாப் பாதுகாக்கறவன் யாரு? எந்த எடத்துல கிடை போடுறாங்க? அப்படீங்கற விவரத்தையெல்லாம் சேகரிச்சிக்கிட்டான் அவன்.
சாயந்தரம் ஆடுகள அடைக்கிற எடத்தையும் பாத்துட்டு வந்துட்டான். ஊருக்குப் பக்கத்துலயே அந்தக் கிடை இருந்துச்சு. அதப் பாதுகாக்க ரெண்டு ஆளுக இருந்தானுங்க. இந்தக் கெடையில இருந்து ரெண்டு மூணு ஆட்டையாவது களவாண்டுறணும் நெனச்சிக்கிட்டு அதுக்கான நாளையும் குறிச்சான்.
ஆனா அவங்கூட வர்றவனுக்குக் கடுமையான காச்சல். யாராவது ஒருத்தரு கூட இருந்தா எப்படியும் ரெண்டு மூணு ஆட்டையாவது களவாண்டுக்கிட்டு வந்துடலாமே. இப்ப யாரைப் போயிக் கூட்டிக்கிட்டுப் போறது அப்படீன்னு தீவிரமா யோசிக்க ஆரம்பிச்சான்.
அவன் இருக்கற ஊருல ஒரு சாமியாரு இருந்தான். அவன் எப்பவும் சாங்கெ எடுத்துக்கிட்டு ஒவ்வொரு கோயிலாப் போயி ஊதிக்கிட்டு அந்தக் கோயில்கள்ல கொடுக்கற சோத்த வாங்கித் தின்னுட்டு வருவான். ஊருக்குள்ளாற இருக்கற வீடுகளுக்குப் போயி சங்க ஊதி பிச்சை கேட்டு சோறோ அரிசியோ கெடைக்கிறத வாங்கிக்கிட்டு வந்து சாப்பிட்டுப் படுத்துக்குவான்.
அந்தச் சாமியாரு தங்கி இருக்கற எடத்துக்குப் போயி அந்தக் களவானிப் பய சமயம் பாத்து அந்தச் சாமியாரு ஆளுக்கிட்ட ஆசை வார்த்தை கூறினான். அதைக் கேட்ட அந்தச் சாமியாரு ஆளு, ‘‘நான் இது வரைக்கும் இந்த மாதிரியெல்லாம் செஞ்சது கிடையாது. இந்தமாதிரிக் களவாங்கற பழக்கமும் எனக்கிட்ட இல்லைன்னு’’ சொன்னான்.
அதைக் கேட்ட களவானிப் பய அவன விடுறதா இல்லை. அட இதுக்கெல்லாம் பழக்கமும் தேவையில்லை. நான் சொல்லித் தர்றது மாதிரி நீ செய்யி. கெடைக்கிறதுல ஆளுக்குப் பாதியா எடுத்துக்குவோம்னு’’ சொன்னான்.
சாமியாரு ஆளுக்கு மனசுக்குள்ளாற கொஞ்சம் ஆசை துளுத்துக்கிட்டு வந்துச்சு. அந்தாளு களவானிப் பயலப் பாத்து, ‘‘நமக்கு எம்புட்டுக் கெடைக்கும். சொல்லு. கெடைக்கிறதப் பாத்துட்டு நான் பதிலச் சொல்றேன்னு’’ சொன்னான்.
அதுக்கு அந்தக் களவானிப் பய, ‘‘இங்க பாருய்ய ரெண்டு மூணு ஆட்டை பிடிச்சி வித்தோம்ணு வச்சிக்க கிட்டத்தட்ட ஆளுக்கு முப்பது ரூவாக் கெடைக்கும். ஆளுக்கு ரெண்டாடுன்னு பிடிச்சோம்னா இன்னமும் கூடக் கெடைக்கும். இந்த ரூவாக் கெடச்சதுன்னா நீயி இனிமேலு பிச்சை எடுக்கறதுக்கே போக வேணாம். கொஞ்சம் யோசிச்சுப் பாரு. நீ கெடைக்கு வெளியில நில்லு. நான் போயி ஆட்டக் களவாண்டுக்கிட்டு வந்து ஒனக்கிட்ட தர்றேன். நீ ஆட்டைப் புடிச்சிக்கோ. நான் ரெண்டு மூணு ஆட்டைத் தூக்கிக்கிட்டு வந்தவுடனே நாம ரெண்டுபேரும் ஆடுகளத் தோள்ள தூக்கிப் போட்டுக்கிட்டு வந்துருவோம். வான்னு’’ கூப்புட்டான்.
சாமிக்கும் ஆசை வந்துருச்சு. எத்தனை நாளுதான் இப்படி சங்க ஊதிக்கிட்டுத் திரியறதுன்னு முடிவு செஞ்சி, ‘‘சரி வாரேன்னு’’ களவாங்குறதுக்குக் கௌம்பிட்டான். அப்படிப் போறபோது தன்னோட சங்கையும் எடுத்துக்கிட்டு வந்தான்.
அதைப் பாத்த களவானிப் பய, ‘‘ஆமா களவாங்கப் போறபோது ஏஞ்சாமி இந்தச் சங்கு. இந்தச் சங்க இங்ஙனயே வச்சிட்டு வா. பெறகு வந்து எடுத்துக்கிருவோம்னு’’சொன்னான்.
அதைக் கேட்ட சாமியாராகிய ஆளு, ‘‘ஐயையோ இதை வைச்சிட்டு வந்தால் யாராவது எடுத்துக்கிட்டுப் போயிடுவாங்க. சங்கு ஏங்கிட்டயே இருக்கட்டும். நாமபாட்டுக்கு நம்ம வேலையச் செய்வோம்னு’’ மறுத்துட்டான்.
களவானியும் இந்தச் சங்கக் கொண்டுக்கிட்டு வர்றதுனால நமக்கு என்ன நட்டமாவா போயிரும். அதக் கொண்டுக்கிட்டு வரவேண்டாம்னு சொல்லிட்டா எங்க அந்தச் சாமியாரு வராமப் போயிடுவானோன்னு நெனச்சிக்கிட்டு சரி வான்னு அந்தச் சாமியாரையும் கூட்டிக்கிட்டுப் போனான்.
சாமியாரும் களவானி கூடச் சேர்ந்து களவாங்கப் போனான். ரெண்டுபேரும் பக்கத்து ஊருக்கு வந்துட்டாங்க. இருட்டிடுச்சு. நல்லா இருட்டட்டும்னு களவானி நல்ல சமயத்தைப் பார்த்துக்கிட்டே இருந்தான். ஆடுகள அடைச்சிப் போட்டுருக்கற கெடைய வாட்டசாட்டமான ரெண்டு ஆளுகளும் நல்லாத் தூங்குனப் பெறகு களவானி கெடைக்குள்ளாற நொளஞ்சு ரெண்டு ஆடுகளத் தூக்கிக்கிட்டு வந்து சாமியாருக்கிட்டக் கொடுத்திட்டு மூணாவதா ஒரு ஆட்டைப் புடிக்கிறதுக்காக் கிடைக்குள்ளாறப் போனான்.
அப்பப் பாத்து சாமியாரு புடிச்சிருந்த ஆடுக கத்த ஆரம்பிச்சிருச்சு. அந்த ஆடுக கத்துனா அதப்பாத்து மத்த ஆடுகளும் கத்திரும் அப்பறம் காவக்காரனுக முழிச்சிக்கிருவானுகன்னு நெனச்ச களவானி சாமியாராளப் பாத்து, ‘‘யோவ் சங்கப் புடியா… ஆடுகத்துது. சங்கப் புடியான்னு’’ சொன்னான்.
சங்குன்னா ஆட்டோட குரல்வளைன்னு அர்த்தம். ஆனா சாமியாராளு தன்னோட சங்கத்தான் பிடிச்சி சத்தமா ஊதச் சொல்றான்னு நெனச்சிக்கிட்டு, ஒடனே அந்தச் சாமியாராளு தன்னோட மடியில கட்டி வச்சிருந்த சங்க எடுத்து சத்தமா ஊதுனான். இதைக் கேட்ட களவானி ஐயையோ மோசம் போயிட்டமேன்னு நெனச்சிக்கிட்டு கெடையவிட்டு வெளியில வந்து சாமியாரள ஓங்கி ஒரு அறைவிட்டுட்டு, ‘‘ஆட்டோட கழுத்துச் சங்கப் புடிடான்னா நீ பாட்டுக்கு ஒன்னோட சங்கெடுத்துச் சத்தமா ஊதற. ஒன்னப் போயி நான் கூட்டிக்கிட்டு வந்தேன் பாருன்னு’’ சொல்லிக்கிட்டே ஓட ஆரம்பிச்சான்.
ஆனா அதுக்குள்ளாற காவக்கரனுக ரெண்டுபேரும் எந்திருச்சு வந்து சாமியாரளயும் களவானியையும் புடிச்சி நல்லா ஒதைஒதைன்னு ஒதச்சு பஞ்சாயத்தக் கூட்டி அவனுகளுக்கு மொட்டையடிச்சிக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுத மேல ஏத்தி வெரட்டிவிட்டானுக. எதுக்கா இருந்தாலும் அறிஞ்சவந் தெரிஞ்சவனத்தான் கூட்டிக்கிட்டுப் போகணும்.
அப்படிக் கூட்டிக்கிட்டுப் போகலைன்னா இப்படித்தான் மாட்டிக்கணும்.