ஒரு ஊருல வியாபாரி ஒருத்தரு இருந்தாரு. அவரு பக்கத்து ஊருகளுக்குக் கழுதை மேல சரக்குகள ஏத்திக்கிட்டுப் போயி வித்துட்டு வருவாரு. அவரு ஆசையா தன்னோட வீட்டுல ஒரு நாய வளர்த்தாரு. அந்த நாயி அவரு மேல ரொம்பப் பிரியமா இருக்கும். அவரும் வியாபாரத்துக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தாருன்னா அந்த நாயோட வெளையாடுவாரு. அந்த நாயி அவருமேல முன்னங்கால் ரெண்டையும் போட்டுக் கொஞ்சும்.
அவரோட வியாபாரத்துக்குப் போயிட்டு வர்ற கழுதை அதைப் பார்த்துட்டு ரொம்ப வருத்தப்படும். நான் எந்த விதத்துல கொறஞ்சு போயிட்டேன். அவரோட வியாபாரத்துக்கு நாந்தானே ரொம்ப ரொம்பத் தொணையா இருக்கேன். என்னோட ஒரு நாளாவது அவரு நாயிக்கிட்ட வெளையாண்டது மாதிரி வெளையாடுறாரா? இல்லியேன்னு மனசுக்குள்ளறயே வருந்துச்சு. இருந்தாலும் அதையெல்லாம் வெளியில சொல்ல முடியாமா மனசுக்குள்ளேயே போட்டுக்கிட்டுப் புழுங்கிக்கிட்டு இருந்தது.
மொதலாளி கழுதைய எப்பவும் கட்டுறது இல்ல. அதனால கழுதை அதுபாட்டுக்கு வீட்டைச் சுத்திச் சுத்தி வந்து படுத்துக்கும். வீட்டு முற்றத்துல சோகமாப் படுத்திருந்துச்சு.
அப்ப அந்தப் பக்கமா அந்த நாயி ஓடி வந்துச்சு. சோகமா இருக்கற கழுதையப் பாத்து, “என்ன அண்ணே ரெம்பச் சோகமா இருக்கறீங்க?” அப்படீன்னு கேட்டுச்சு.
அதுக்கு அந்தக் கழுதை, “ஆமாடா தம்பி வருத்தப்படமா நான் என்ன பண்றது? நீயே சொல்லு. நான் நம்ம மொதலாளிக்கு எந்தளவுக்கு ஒதவியா இருக்கேன். என்னைய ஒரு நாளாவது வீட்டுக்குள்ளாற கூட்டிக்கிட்டுப் போயிருக்காறா? இல்ல ஒன்னையக் கொஞ்சுறது மாதிரி என்னையக் கொஞ்சுறாரா? ஒன்ன மாதிரி நானும் வீட்டுக்குள்ளாற வந்து அவரோட படுக்கையில படுத்து அவரோட வெளையாடுறனா? என்னை அவரு ஒதுக்கி ஒதுக்கி வைக்கிறாரு. அதனாலதான் நான் சோகமா இருக்கேன்னு” சென்னது.
அதைக் கேட்ட நாயி, “அண்ணே! ஓம்மேலயும் நம்ம மொதலாளி பாசமாத்தான் இருக்காரு. நல்லாத் தீனி போட்டு பாத்துக்குறாரு. நீ நம்ம மொதலாளி மேல அன்பா இருண்ணே! இன்னும் நல்லா நீ வேலை செஞ்சியினா அவரு ஒன்னைய நல்லாக் கவனிப்பாருன்னு” சொன்னது.
இருந்தாலும் கழுதைக்கு மனசு ஆறல. நாம என்ன செஞ்சு நம்மளோட அன்பை நம்ம மொதலாளிக்குத் தெரியப்படுத்த முடியும்னு? யோசிச்சது.
ரொம்ப நேரம் யோசிச்சு யோசிச்சு அது ஒரு முடிவுக்கு வந்தது. அந்த நாயி என்னன்ன செய்யுதோ நானும் அதே மாதிரி செஞ்சா நம்ம மேல அவருக்குப் பிரியம் வரும்னு முடிவு செஞ்சு நாயி என்னென்ன செய்யுதுன்னு கவனிக்கத் தொடங்கிடுச்சு.
ரெண்டு நாளா சரக்குகள வாங்குறதுக்காக முதலாளி வெளியூருக்குப் போயிட்டாரு. அப்ப கழுதைக்கு எந்த வேலையும் இல்லை. ஓய்வுல இருந்துச்சு. அந்தக் கழுதைக்கு இன்னைக்கு எப்படியாவது நம்மளோட அன்பை நம்ம மொதலாளிக்கிட்டக் காண்பிக்கணும்னு முடிவு செஞ்சது.
யாரும் இல்லாத நேரத்துல கழுதை வீட்டுக்குள்ளாற போச்சு. நேரா மொதலாளி படுக்குற படுக்கையில படுத்துச்சு. நம்ம மொதலாளி வர்றபோது இந்த நாயி மாதிரியே செய்யணும். அப்படி செஞ்சாத்தான் மொதலாளி நான் அவரு மேல வச்சிருக்கற அன்பை உணர்ந்துக்குவாரு. நாயக் கொஞ்சுறாப்புல நம்மையும் கொஞ்சுவாருன்னு நெனச்சிக்கிட்டே படுக்கையில படுத்துக்கிடந்துச்சு.
மொதலாளியும் வந்தாரு. நேரா வீட்டுக்குள்ளாறப் போனாரு. அப்பப் பாத்து படுக்கையில படுத்துக்கிடந்த கழுதை அங்கிட்டும் இங்குட்டுமாக் குதிச்சுக் கும்மாளம் போட்டு படுக்கையில துள்ளிக் குதிச்சது. அதனா கட்டில ஒடஞ்சது. ஒடஞ்ச கட்டில்ல இருந்து வேகமா குதிச்ச கழுதை ஓட்டமா ஓடிவந்து மொதலாளி முன்னால நாயி செய்யிறது மாதிரியே செஞ்சது.
அவரு முன்னால நாயி குதிக்கறது மாதிரி குதிச்சது. அப்படிக் குதிச்சதால அங்ஙன இருந்த பொருளெல்லாம் ஒடஞ்சது செதறிடுச்சு. கழுத அப்படியும் இப்படியும் குதிச்சு வந்து தன்னோட முன்னங்கால உயரத் தூக்கி நாயி செய்யிற மாதிரி அவரோட தோள்ள போட்டு அவரோட மொகத்தை தன்னோட நாவால நக்கிக் கொடுத்துச்சு.
கழுதை மொதலாளி எதிர்பாராத நேரத்துல காலத்தூக்கிப் போட்டதுல மொதலாளி கீழ விழுந்தாரு. அதனால அவரோட மண்டை சுவத்துல பட்டு நல்லாப் பொடைச்சிப் போச்சு. கழுதை நாவால மொதலாளியோட மொகத்தை நக்குனதால மொகமெல்லாம் வீச்சமும் எரிச்சலும் ஏற்பட்டுப்போச்சு.
மொதலாளி கழுதை செய்யிறதப் பாத்துட்டு எரிச்சப்பட்டு கடுமையாக் கோபங்கொண்டு, கழுதைக்கு வெறிபுடுச்சிப் போச்சுன்னு நெனச்சி, அங்க கெடந்த கட்டைய எடுத்து, கழுதையை நையப் புடைச்சு வெளிய வெரட்டிக் கொண்டு வந்து கட்டிப் போட்டாரு. கட்டிப் போட்டதுமில்லாம அதுக்குத் தீனியோ தண்ணியோ எதுவும் கொடுக்கல.
கழுதைக்கு ஒடம்பெல்லாம் வலி. அங்கங்க சின்னச் சின்னக் காயம். கழுதைக்கு அதத் தாங்க முடியல. தன்னோட அன்பை மொதலாளி புரிஞ்சிக்கிடலயே. அந்த நாயி செய்யிற மாதிரிதானே நாமளும் செஞ்சம். இதுக்கு ஏன் மொதலாளி கோபப்படறாரு. ச்சே நம்மள மொதலாளிக்குப் புடிக்கவே மாட்டேங்குதுன்னு” பொலம்பிக்கிட்டே அழுதுகிட்டு இருந்துச்சு.
அப்ப அங்க வந்த நாயி கழுதையப் பாத்து, “அண்ணே கவலப்படாதண்ணே. நீயி மொதலாளி மேல வச்சிருக்கறது உண்மையான அன்புதான். ஆனா அத வெளிப்படுத்துற மொறதான் தப்புண்ணே! அவங்க அவங்க மொறையில அன்பை வெளிப்படுத்துணும்ணே! நான் என்னோட வழியில அன்பை வெளிப்படுத்துறேன். அதையே நீ பார்த்துட்டு அதே மாதிரி செய்யக் கூடாது. நீ ஒன்னோட வழியிலதான் அடுத்தவங்க மேல வச்சிருக்கற அன்பை வெளிக்காட்டணும். அப்படி இல்லாததாலதான் இந்தமாதிரி நெலமைன்னு” சொல்லி ஆறுதல் கூறுச்சு.
இதைக் கேட்ட கழுத, “ஆமாந்தம்பி நீ சொல்லறதுதான் சரி. யாராரு எப்படி நடந்துக்கணுமோ அப்படித்தான் நடந்துக்கணும். அதைவிட்டுட்டு மத்தவங்க செய்யிறாங்களேன்னு நாமளும் ஒண்ணச் செய்யப்படாது. அப்படிச் செஞ்சா என்னய மாதிரி அடிபட வேண்டியதுதான். நான் இதைப் புரிஞ்சிக்கிட்டேம்பான்னு” சொன்னது.
அப்பறமா கழுதை கடுமையா வேலை செஞ்சது. மொதலாளிக்கும் கழுதைய ரொம்பப் புடுச்சிப்போச்சு. கழுதைய நல்லாக் கவனிச்சாரு. கழுதையும் மகிழ்ச்சியா இருந்துச்சு.
நாம நாமளா இருக்கணும். அடுத்தவங்களப் பாத்துட்டு எதையும் செய்யக் கூடாதுங்கறதுக்கு இந்தக் கதையச் சொல்வாங்க.