எப்பவுமே நம்மளால முடியிற போது எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிறணும். எப்பவும் எல்லா நேரத்துலயும் எல்லாச் செயல்களையும் நாம செய்ய முடியாது. நம்ம உடம்பும் மனசும் அதுக்கு ஒத்துழைக்காது போயிரும். மனசு ஒத்துழைச்சாலும் உடம்பு ஒத்துழைக்காது. அதனால எப்பப்ப எதை எதைச் செய்யணுமோ அதையெல்லாம் காலந்தாழ்த்தாம ஒடனடியாச் செய்யணும். அப்படி செய்யலைன்னா எப்பவுமே அந்தச் செயலைச் செய்ய முடியாமப் போயிரும். அப்ப நாம ரொம்ப வருத்தப்படணும். இதை விளக்குறதுக்காக ஒரு கதை எங்க பக்கத்துல வழங்கி வருது.
ஒரு ஊருல நல்ல வசதியா ஒருத்தரு வாழ்ந்துக்கிட்டு இருந்தாரு. அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. அவரு ரெண்டு பேரு மேலயும் நல்லாப் பிரியமா இருந்தாரு. ஆனாலும் சின்னவளுக்கு மூத்தாளப் பிடிக்காது. எதையாவது புருஷங்கிட்ட போட்டுக்குடுத்துக்கிட்டேதான் இருப்பா.
இருந்தாலும் அவன் கேக்கமாட்டான். சின்னவளுக்கிட்ட மூத்தவளக் கரிச்சிக் கொட்டாம அவக்கிட்ட அன்போட இருன்னு சொல்வான். ஆனா சின்னவ கேக்கமாட்டா. அவ மூத்தவளுக்கும் அவளோட பிள்ளைங்களுக்கும் ஏதாவது கெடுதல் செஞ்சிக்கிட்டே இருப்பா.
இப்படி இருக்கற போது அந்த ஆளு தன்னோட மூத்தவளுக்குத் தான் உசிரோட இருக்கற போதே தன்னோட சொத்துல ஒரு பாகத்தைக் கொடுத்துறணும்னு நெனச்சாரு. அத இப்பச் செய்வோம் அப்பறம் செய்வோம்னு தள்ளிப் போட்டுக்கிட்டே வந்தாரு.
அவருக்கும் வயாசாயிப் போயிருச்சு. அவரு சரி நமக்கிட்ட இருக்கிற தங்க நகையெல்லாத்தையும் உருக்கி உருண்டையா வச்சிக்கிருவோம். அந்தத் தங்க உருண்டையை சின்னவளுக்குத் தெரியாம மூத்தவளுக்கிட்ட கொடுத்துருவோம்னு நெனச்சித் தங்கத்தை ரகசியமா உருக்கி அதப் பத்தரமா தன்னோட தலையணைக்கு அடியில வச்சிட்டாரு. சமயம் பாத்து சின்னவளுக்குத் தெரியாம மூத்த பொண்டாட்டிக்கிட்ட கொடுத்துருவோம்னு இருந்தாரு.
ஆனா அவரு நெனச்சது மாதிரி நடக்கல. தங்கக்கட்டி உருண்டையை தலையணைக்கு வச்ச மறுநாளே அவருக்கு வாதம் வந்து காலக்கைய இழுத்துக்கிட்டு படுக்கையில தள்ளிருச்சு. வாயும் கோணிப்போச்சு. பேச்சும் வரல.
படுக்கையிலயே கெடந்துக்கிட்டு இருந்தாரு. அவரு பக்கத்திலேயே சின்னவ அவருக்கிட்ட இருக்கிற பணங்காசப் புடுங்கறதுக்காக ஒக்காந்துட்டா. மூத்தவள புருஷன நெருங்க விடல. அதனால தான் கொடுக்க நெனச்சத கொடுக்க முடியாத நிலைஅந்த ஆளுக்கு ஏற்பட்டுருச்சு. இப்படியே இருக்கயில ஒருநாளு சின்னவ படுக்கையத் தட்டி போடுறபோது தலையணைக்கு அடியில இருந்த தங்கக் கட்டிய பாத்து எடுத்து மடியில வச்சிக்கிட்டா.
இதைப் பாத்த புருஷங்காரன் கத்திக்கித்திப் பார்த்தான். அவனால ஒண்ணும் செய்ய முடியல. அவனோட கத்தலக் கேட்டு மூத்தவளும் அவளோட பிள்ளைங்களும் பக்கத்துல இருந்தவங்களும் ஓடிவந்து அவனப் பாத்தாங்க. அவனோட கண்ணுல கண்ணீரு வழிஞ்சிக்கிட்டே இருந்துச்சு. அவன் ம். . .ம்…னு அனத்திக்கிட்டே இருந்தான்.
தான் வச்சிருந்த தங்க உருண்டையத் தன்னோட மூத்த பொண்டாட்டிக்கிட்ட எப்படியாவது வாங்கிக் கொடுத்துரணும்னு நெனச்சி கையச் சிரமப்பட்டுத் தூக்கி உருண்டை வடிவில ஆட்டி ஆட்டிக் காமிச்சி சின்னப் பொண்டாட்டியப் பாத்தான்.
அவன் சொன்னது மத்தவங்களுக்குப் புரியல. ஆனா சின்னவளுக்குப் புரிஞ்சி போயிருச்சு. அட இந்த ஆளு நாம எடுத்து வச்சிருக்கற தங்க உருண்டைக் கட்டியத்தான் சொல்றான் போலருக்கு. இது மத்தவங்களுக்குத் தெரியப்படாதுன்னு நெனச்சி, ஒரு யோசன பண்ணினா.
ஒடனே சின்னவ, ‘‘ஐயோ நம்ம வீட்டுக்காரருக்கு விளாம்பழம் வேணுமாம் அதத்தான் அவரு கைய உருட்டி உருட்டிக் காட்டுறாரு. அவரோட கடைசி ஆசையத் தீத்து வைங்க. இல்லாட்டி அவரு அந்த விளாம்பழத்தைத் திங்காமயே செத்துப் போயிருவாரு. அவரோட ஆத்மா சாந்தியடையாதுன்னு’’ சொன்னா.
இதைக் கேட்ட புருஷங்காரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவனால எதுவும் பேச முடியல. ம்… ம்…ம்னு கத்திக்கிட்டே சின்னவளப் பாத்தான். சின்னவ ஒடனே மத்தவங்களப் பாத்து, ‘‘யாராவது ஓடிப்போயி விளாம்பழத்தை வாங்கிக்கிட்டு வந்து அவருக்குக் கொடுங்கன்னு’’ ஒப்பாரி வச்சி அழுதா.
சின்னவளோட புள்ளைங்கள்ள ஒருத்தன் கடைத்தெருவுக்கு ஓடிப்போயி விளாம்பழத்த வாங்கிக்கிட்டு வந்தான். வந்தவன் அத மூத்தவகிட்ட கொடுத்து ஒடச்சிக் கொடுக்கச் சொன்னான். விவரம் புரியாத மூத்தவளும் அத ஒடச்சிப் புருஷனோட வாயில வச்சித் திணிச்சா.
விளாம்பழத்த அந்த ஆளாள சாப்பிட முடியல. அது தொண்டையில போயி அடச்சிக்கிருச்சு. அவரால மூச்சு விடமுடியாம திணறிச் செத்துட்டாரு. எல்லாரும் அழுதாங்க. சின்னவ ஒப்புக்கு ஒப்பாரி வச்சி அழுதா.
கடைசியில அவரோட ஆசை நெறவேறாமலேயே போயிருச்சு. ஒடம்புல மூச்சுக்காத்து இருக்கறதுக்குள்ளறயே நாம செய்ய நெனைக்கறதச் செஞ்சிப்புடணும். அப்படி இல்லைன்னா எதையும் செய்ய முடியாது. இத மனசுல வச்சிக்கிட்டுத்தான் நம்மாளுங்க ‘காத்துள்ள போதே தூற்றிக்கொள்’ அப்படீன்னு சொல்லி வச்சிருக்காங்க.