சிலபேரு உயிரோட இருந்தாலும் பிரச்சனை. இறந்து போனாலும் பிரச்சனை. அவங்க எதாவது பிரச்சனைய உருவாக்காகம இருக்கவே மாட்டாங்க. எதையாவது யாருக்காவது பிரச்சனைய உண்டாக்கிக்கிட்டே இருப்பாங்க. இதனால அவரக் கண்டாலே டேய் பிரச்சனை வழியக்க வருதுடான்னு அவங்க மொகத்துல முழிக்கப் பயந்துக்கிட்டு ஓடிடுவாங்க. இந்த மாதிரி வாழக்கூடாதுங்கறதுக்காக ஒரு கதை இருக்கு.
ஒரு ஊருல பெரியசாமிங்கறவன் இருந்தான். அவனுக்குப் பிரச்சனை பெரியசாமின்னே பேரு. இந்தப் பேரு ஏன் வந்ததுன்னா... அவன் யாருக்காவாது பிரச்சனைய உண்டாக்காம இருக்க மாட்டான். ஊருக்குள்ள யாருக்காவது பிரச்சனை வந்ததுன்னா அதுக்கு இந்தப் பெரியசாமிதான் காரணமா இருப்பான். அதனாலதான் இவனுக்குப் பிரச்சனை பெரியசாமின்னு பேரு வந்தது.
இந்தமாதிரி பிரச்சனைய உருவாக்கறதுனால அவன ஊருல ஒருத்தரு கூட மதிக்கறது இல்ல. அவன ஊரவிட்டே ஒதுக்கி வச்சிருந்தாங்க. அவனும் வழியக்க வழியக்கப் போயி ஒவ்வொருத்தருக்கிட்டயும் பேச்சுக் கொடுத்தாலும் அவனோட யாருமே பேசுறது இல்ல. அவன் வர்றான்னு தெரிஞ்சாவே ஓடிப் போயிருவாங்க. அவன ஊருல இருந்தே ஒதுக்கி வச்சிருந்தாங்க.
இதைப் பாத்த அவன் எல்லாருக்கிட்டயும் போயி நான் திருந்திட்டேன். இனிமே யாருக்கும் எந்தப் பிரச்சனையும் பண்ண மாட்டேன். நான் செஞ்சதுக்கு எல்லாருக்கிட்டயும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்னு ஊருக்குள்ள பாக்குறவங்கக்கிட்ட எல்லாம் சொல்லிக்கிட்டுத் திரிஞ்சான். ஆனாலும் இவஞ் சொல்றதை யாரும் நம்பல.
ஒரு சிலரு அவம்மேல பரிதாப்ப்பட்டாங்களே தவிர அவங்கூடப் பேசலை. பிரச்சனை பெரியசாமிக்கு வெறுத்துப் போயிருச்சு. இனிமே நாம இருந்தா என்ன? செத்தா என்ன? அப்படீன்னு நெனச்சிக்கிட்டு அவன் ஒரு முடிவுக்கு வந்தான். ஒருநாள் ஊருக்கூட்டம் நடந்துகிட்டு இருந்துச்சு. ஊருல இருக்கறவங்க எல்லாரும் அங்க கூடியிருந்தாங்க.
அங்க போன அவன் நெடுஞ்சாங்கடையா கூட்டத்துக்கு நடுவுல போயி விழுந்து கும்புட்டான்.
ஊருப் பெரியவங்க அவனபாத்து, ‘‘நீ ஏம்பா எங்க கால்ல வந்து விழற… இப்படிக் கால்ல விழுந்து எங்களப் பிரச்சனையில இழுத்துவிடப் போறியா?’’ அப்படீன்னு கேட்டாங்க.
அதுக்கு அவன், ‘‘ஐயோ அப்படியெல்லாம் இல்லை. நான் திருந்திட்டேன். தேவையில்லாம ஒங்கள எல்லாம் வீணான பிரச்சனைகள்ல இழுத்துவிட்டுட்டேன். என்னைய மன்னிச்சிருங்க. நான் ஒரு உயில் ஒண்ணு எழுதியிருக்கேன். எனக்கு இப்ப ஒடம்புக்கு முடியல. நான் சீக்கிரமே இறந்துடுவேன். அப்படி இறந்து போனேன்னா என்னோட கடைசி ஆசைய இந்த உயில்ல எழுதியிருக்கேன். அதன்படி நீங்க செஞ்சிருங்க’ன்னு கண்ணீர் விட்டுச் சொன்னான்.
அதைக் கேட்ட அங்க இருந்தவங்க பாவம்யா இவன் மனந்திருந்திட்டான். இவனோட கடைசி ஆசைய கண்டிப்பா நிறைவேத்தி வைப்போம்னு சொன்னாங்க. பிரச்சனை பெரியசாமி அவங்க சொன்னதைக் கேட்ட பின்னாலதான் கண்ணீரத் தொடச்சிக்கிட்டு அங்கிருந்து கௌம்புனான். ஊருல இருக்கறவங்க அந்த உயிலப் பிரிக்காம அப்படியே பத்திரமா வச்சிருந்தாங்க.
இந்தச் சம்பவம் நடந்த ரெண்டு மூணு நாள்லயே பிரச்சனை பெரியசாமி இறந்து போயிட்டான். அவன் இறந்து போன செய்தி ஊருக்குள்ளாற பரவிருச்சு. ஊருல இருக்கறவங்க எல்லாரும் ஊருப் பெரியவங்களப் போயிப் பாத்து அவன் எழுதிக் கொடுத்த உயிலுப்படி அவனோட கடைசி ஆசைய நிறைவேத்திடுவோம்னு முடிவு செஞ்சாங்க.
உயில எடுத்துப் பிரிச்சி ஒருத்தரு படிச்சாரு. அதுல, ‘‘ஊருப் பெரியவங்களுக்கு என்னோட வணக்கம். நான் ஒங்களுக்கெல்லாருக்கும் பல கெடுதல்களைச் செஞ்சிட்டேன். என்ன மன்னிச்சிருங்க. நான் எறந்த பின்னால என்னோட ரெண்டு கால்லயும் கயித்தக் கட்டித் தெருத்தெருவா என்னைய இழுத்துக்கிட்டுப் போயிட்டு அதன் பின்னால என்னைய எரிச்சிருங்க அப்பத்தான் நான் ஒங்களுக்குச் செஞ்ச பாவங்களுக்கெல்லாம் பிரயாசித்தம் கிடைக்கும்ன்னு’’ எழுதியிருந்தான்.
இவன் எழுதியதைப் படிச்ச பின்னால எல்லாரும் அவனோட கடைசி ஆசைய நிறைவேத்த முடிவு செஞ்சி அவனோட காலு ரெண்டுலயும் கயித்தக் கட்டி ஒவ்வொரு தெருவா இழுத்துக்கிட்டுப் போனாங்க. இப்படி ரெண்டு தெருவுல இழுத்துக்கிட்டு மூணாவது தெருவுல திரும்பறபோது நெறையப் போலிசுக்காரங்கள ஏத்திக்கிட்டு வண்டி ஒண்ணு வந்து ஊருக்காரவுகளத் தடுத்துச்சு.
ஊருக்காரவுகளுக்கு ஒண்ணும் புரியல. எதுக்குப் போலிசு வந்துருக்கு. யாரு வரச்சொன்னான்னு கொழம்பிப் போயி இருந்தாங்க. அப்ப இன்ஸ்பெக்டர் வந்து, ‘‘இங்க பெரியசாமிங்கறவரை ஊருக்காரவுங்க எல்லாரும் சேந்து அடிச்சி ஒதச்சி கால்ல கயித்தக் கட்டித் தெருத்தெருவா இழுத்துக்கிட்டுப் போறதா புகார் வந்திருக்கு. வந்து பாத்தா இந்த ஊரே சேந்து ஒருத்தர அடிச்சி இழுத்துக்கிட்டுத் தெருத்தெருவாத் திரயிரீங்க. ஒங்கள எல்லாரையும் கைது செய்யறோம்னு’’ சொன்னாரு.
அப்பத்தான் பிரச்சனை பெரியசாமியோட கெட்ட நோக்கம் புரிஞ்சது. அட இந்தப் பிரச்சனை பெரியசாமி இருந்தும் கெடுத்தான். இப்பச் செத்தும் கெடுக்கிறான்டா..ன்னு நெனச்சிக்கிட்டு இன்ஸ்பெக்டருக்கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டு அவன் எழுதின உயிலயும் காண்பிச்சாங்க. அதைப் பாத்த இன்ஸ்பெக்டரு அப்பத்தான் நம்புனாரு. பெறகு எல்லாருக்கிட்டயும் மன்னிப்புக் கேட்டுக்கிட்டுத் திரும்பப் போயிட்டாரு.
அன்னையில இருந்து இருந்துங் கெடுத்தான் செத்துங் கெடுத்தான்ற சொலவட இந்தப் பக்கத்துல வழங்கி வருது. இப்படிப்பட்டவங்கல இந்த வட்டாரத்துல நாற்றங்கால்னு சொல்லுவாங்க. நாற்றங்கால்ல விதையப் பாவி அதுக்குப் பெறகுதான் எல்லா வயல்லயும் நடுவாங்க. அதுமாதிரி எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணமானவங்கள நாற்றங்கால்னு இன்றைக்கும் சொல்றாங்க.