எப்பவுமே மாமியார் வீட்டுல மருமகனுக்கு மதிப்புத்தான். எத்தனை வருஷமானாலும் மருமகங்கற முறுக்குக்குக் கொறைச்சலிருக்காது. சில பேரு மருமகங்கறதை ஒவ்வொரு முறையும் நிரூபிச்சிக்கிட்டே இருப்பாங்க. கடைசி வரைக்கும் வீட்டுக்கு வந்த மருமகனுக்கு மாமியார் வீட்டுல மரியாதை கொடுத்துத்தான் ஆகணும். மருமகன் தனியா வந்தாலும் இல்ல பொண்ணு கூட சேர்ந்து வந்தாலும் தனி மரியாதை கொடுக்கணும். இல்லைன்னா எதுவுஞ் சொல்ல முடியாது. பெரிய பிரச்சனை ஆயிரும். இது பத்தின கதை ஒண்ணு இருக்கு.
கறாரான பேர்வழி ஒருத்தன் இருந்தான். அவன் எதுவா இருந்தாலும் கெத்த விட்டுக் கொடுக்க மாட்டான். அவன் என்ன நினைக்கிறானோ அதை ஒடனே மத்தவங்க செய்யணும். இப்படிப்பட்டவன் பக்கத்தூருல சம்பந்தம் போட்டான். அவனுக்குப் பொண்ணுக் கொடுத்தவங்க அவன தாங்குதாங்குன்னு தாங்குனாங்க.
ரெண்டு வருசம் போயிருச்சு. அப்படி இருக்கயில ஒருநாள் அவன் பக்கத்தூருக்குப் போக வேண்டிய சூழல் வந்துருச்சு. அவனும் போனான். போன வேலைய முடிச்சிக்கிட்டு அப்படியோ மாமியா வீட்டுக்கும் போயிப் பாத்துட்டு வந்துருவோம்னு அங்க போனான். மருமகனப் பாத்த மாமியாரும் மாமனாரும் நல்லாக் கவனிச்சாங்க...
மாமியாகாரி மருவமனுக்குக் கொழுக்கட்டை செஞ்சி சாப்புடக் கொடுத்தா. மருமவங்காரனும் கொழுக்கட்டையச் சாப்புட்டான். அவன் இதுக்கு முன்னால இந்தமாதிரி கொழுக்கட்டையச் சாப்புட்டது கெடையாது. கொழுக்கட்டை நல்லா ருசியா இருந்ததுனால வேணுங்கறதச் சாப்புட்டான். சாப்புட்டுப்புட்டு மாமியாகாரிக்கிட்ட இத எப்படிச் செய்யிறதுன்னு கேட்டான். மாமியாகாரியும் பக்குவத்தச் சொல்லிக் கொடுத்தா.
என்ன சாப்புட்டங்கறத மறக்காம மனசுக்குள்ளறயே கொழுக்கட்டை கொழுக்கட்டைன்னு சொல்லிக்கிட்டான். பிறகு இதேமாதிரி நம்ம வீட்டுக்காரிக்கிட்டயும் சொல்லிச் செய்யச் சொல்லணும்னு நெனச்சிக்கிட்டு மாமியாகரிக்கிட்டயும் மாமனாருகிட்டயும் சொல்லிக்கிட்டு ஊருக்குக் கௌம்புனான்.
வழிநெடுக மாமியாரு செஞ்ச கொழுக்கட்டைப் பேரச் சொல்லிக்கிட்டே வந்தான். கொழுக்கட்டை கொழுக்கட்டைன்னு மனசுக்குள்ள சொன்னா மறந்து போகும்னு நெனச்சிக்கிட்டு வாய்விட்டுச் சொல்லிக்கிட்டே வந்தான். ஊருக்குப் போற வழியில தாண்டுற மாதிர ஒரு பள்ளம் இருந்துச்சு. அவனும் பின்னாலயே போயிட்டு வேகமா ஓடிவந்து ஐத்தரிப்பச்சா கொழுக்கட்டைன்னு சொல்லிக்கிட்டே தாண்டுனான்.
தாண்டின பிறகு திரும்பவும் ஐத்தரிப்பச்சா கொழுக்கட்டைன்னு சொல்லிக்கிட்டே வந்தான். அடுத்ததா இதே மாதிரி ஒரு பள்ளம் வந்துச்சு. இவனும் வேகவேகமா ஓடிப்போயி அதத் தாண்டினான். இப்ப ஐத்தரிப்பச்சான்னு மட்டும் சொன்னான். கொழுக்கட்டைங்கறது மறந்து போயிருச்சு. அப்படியே வீடு வர்ற வரைக்கும் ஐத்தரிப் பச்சா ஐத்தரிப்பச்சான்னே சொல்லிக்கிட்டு வந்தான்.
வீட்டுக்குள்ளாற நுழைஞ்ச புருஷனப் பாத்து, ‘‘ஏங்க பக்கத்தூருக்குப் போனீங்களே எங்க அப்பாவையும் அம்மாவையும் பாத்தீகளான்னு’’ கேட்டா.
அதுக்கு அவன், ‘‘ம்..ம்..ம். பாத்தேன் பாத்தேன். நல்லா இருக்காக. ஒங்க அம்மா எனக்கு ஒரு பலகாரம் செஞ்சி சாப்புடக் கொடுத்தாங்க. அதை நீயி செஞ்சி கொடுக்கணும்னு’’ சொன்னான்.
பொண்டாட்டியும் ‘‘சரி செய்யிறேன். அது என்னன்னு சொல்லுங்கன்னா’’ புருஷங்காரனுக்குப் பேரு மறந்து போயிருச்சு. ஆனா அவன் சொல்லிக்கிட்டே வந்தது மறக்கலே. ஒடனே அவன், ‘‘இந்த பாரு ஐத்தரிப் பச்சான்னு ஒரு பலகாரம். அதச் செஞ்சிகொடுன்னான்’’
பொண்டாட்டிகாரிக்கு ஒண்ணும் புரியல. ‘‘அட என்னங்க நீங்க சொல்றீங்கன்னு’’ கேட்டா. அதுக்கு, ‘‘ஏண்டி நாஞ்சொல்றது ஒனக்குப் புரியல. அதாண்டி ஐத்தரிப்பச்சா பலகாரம். அதச் செஞ்சு கொடுன்னான்’’
பொண்டாட்டிக்காரிக்குத் தலையப் பிச்சுக்கலாம் போல வந்துருச்சு. ‘‘என்னது நம்ம வீட்டுக்காரனுக்கு ஏதும் புத்திகித்தி பொரண்டு போச்சா? என்னன்னமோ சொல்லி அதச் செஞ்சிகுடுன்னு பாடாப்படுத்துறானேன்னு’’ நெனச்சிக்கிட்டுப் பேசாம அந்தப் பலகாரம் என்னவா இருக்கும்ணு யோச்சிக்க ஆரம்பிச்சா.
இதப்பாத்த புருஷங்காரனுக்கு கோவம் முட்டிக்கிட்டு வந்துருச்சு. ‘‘ஏண்டி நாம்பாட்டுக்குச் சொல்லிக்கிட்டு இருக்கேன். நீபாட்டுக்குக் குத்துக்கல்லுமாதிரி ஒக்காந்துக்கிட்டு இருக்க. ஒனக்கு என்ன திமிரு... இப்ப எந்திருச்சி வந்து ஐத்தரிப்பச்சா செஞ்சி கொடுக்கிறியா இல்லையான்னு’’ கேட்டான்.
பொண்டாட்டிகாரிக்கு ஒண்ணும் புரியாமா, ‘‘அட என்னங்க வெளாங்காத்தனமா என்னென்னமோ சொல்றீங்க... சொல்லறத என்னன்னுதான் புரியும்படியாத் தெளிவாச் சொல்லித் தொலையுங்களேன்னு’’ வெடுக்குன்னு கேட்டுப்புட்டா.
கோவந்தாங்காத புருஷங்காரன், ‘‘ஏண்டி என்னப்பாத்தா வௌங்காதவனாவாத் தெரியுது. எவ்வள திமிரு ஒனக்குன்னு’’ சொல்லி அவளப் போட்டுக் கம்பால கடுமையா அடிச்சான். அடி பொறுக்காத பொண்ணாட்டிகாரி ‘‘ஐயோ என்னைய எம்புருஷன் அடிச்சிக் கொல்றானே... யாராவது இருந்தா வந்து காப்பாத்துங்களேன்னு’’ சொல்லிக் கத்துனா.
புருஷங்காரன் விடுறதா இல்ல. அடிவெளுத்து வாங்குனான். பொண்டாட்டிகாரியோட சத்தத்தக் கேட்ட பக்கத்துல இருக்கறவங்க வந்து அவனத் தடுத்து விலக்கி விட்டாங்க. பொண்டாட்டிகாரி தேம்பித் தேம்பி அழுதா. அதப் பாத்த பக்கத்துவீட்டுக்காரி , ‘‘ஏய்யா நீயெல்லாம் ஒரு ஆம்பளையாய்யா இந்த மாதிரி கொழுக்கட்டை மாதிரி வீங்குற அளவுக்கு அடிச்சிருக்கே? சுத்த கூறுகெட்ட ஆளாவுள்ள இருக்கன்னு’’ புருஷங்காரனப் பார்த்துச் சொன்னா.
அதக்கேட்ட புருஷங்காரனுக்கு அப்பத்தான் தன்னோட மாமியா செஞ்சி கொடுத்த பலகாரம் கொழுக்கட்டைன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. ஒடனே தன்னோட பொண்டாட்டியப் பாத்துட்டு, ‘‘அடியே நா ஏதோ ஞாபகத்துல மறந்துட்டேன். இப்ப ஞாபகத்துக்கு வந்துருச்சு. ஒங்கம்மா எனக்குக் கொழுக்கட்டை செஞ்சி கொடுத்தாங்க. நீயும் அதுமாதிரி கொழுக்கட்டை செஞ்சி எனக்குக் கொடுன்னு’’ கேட்டான்.
அதக்கேட்ட பக்கத்து வீட்டுக்காரி, ‘‘அடப் பாவிமனுசா இந்தக் கொழுக்கட்டைக்குத்தான் இந்தப்பாடா. இத முன்னாடியே சொல்லித் தொலைச்சா என்னா? இப்படி இந்தப் பிள்ளையப் போட்டு அடிஅடின்னு அடிச்சிப்போட்டுட்டியே இனிமே இந்த மாதிரியெல்லாம் செய்யாதய்யான்னு’’ சொல்லிட்டுப் போயிட்டா.
பொண்டாட்டிகாரியும் தன்னோட புருஷனோட கூறு கெட்ட தனத்த நெனச்சி வேதனப்பட்டா. பெறகு அவனுக்குக் கொழுக்கட்டை செஞ்சிக் கொடுத்தா. இன்னைக்கும் கொழுக்கட்டை செஞ்சி சாப்புடற போது இங்க உள்ளவங்க இந்தக் கதைய ஞாபகப்படுத்திப் பேசுவாங்க. எப்பவும் நிதானத்தோடயும் நல்ல நினைவோடயும் இருக்கணுங்கறத இந்தக் கதை நமக்குச் சொல்லுது.