திறமையானவங்க அப்படீங்கறதக் குறிக்கிறதுக்கு சமத்து, சமத்தி, சமத்துப்பிள்ளை, கெட்டிக்காரன், கெட்டிக்காரி என்பது போன்ற எத்தனையோ சொற்கள் வழக்கத்துல வழங்கி வருது. திறமையானவங்கங்கறத எப்படிக் கண்டுபிடிக்கிறது? அதப்பத்தின ஒரு கத ஒண்ணு புதுக்கோட்டை மாவட்டம் பக்கம் வழங்கி வருது.
அக்கா தங்கச்சி ரெண்டு பேரு இருந்தாங்க. ரெண்டுபேரும் ஒருத்தரு மேல ஒருத்தரு பாசமா இருந்தாங்க. அதுலயும் சின்னவ ரொம்பக் கெட்டிக்காரி. எதுவா இருந்தாலும் ரொம்பச் சிக்கனமாச் செய்வா. தேவைக்கு அதிகமாச் செலவழிக்கமாட்டா. ஆனா அக்காகாரி தராளமாச் செலவு செய்வா. எதைப் பத்தியும் கவலைப்பட மாட்டா.
இவங்க ரெண்டுபேரும் ஒரே ஊருல வாக்கப்பட்டுப் போனாங்க. அக்காகாரி வீட்டுக்காரன் நல்லாச் சம்பாதித்தான். தங்கச்சியக் கட்டியவனும் நல்லாச் சம்பாதிச்சான். அக்கா தாரளமாச் செலவு செஞ்சதால கொஞ்சங்கூட மிச்சம்புடிக்க முடியல. அதனால வரவுக்கும் செலவுக்கும் சரியா இருந்துச்சு.
தங்கச்சிகாரி வர்ற வருமானத்துல கொஞ்சம் எடுத்து வச்சா. அதிகமாச் செலவழிக்கல. கட்டுச்செட்டா இருந்தா. அக்காகாரி எப்பவும் தங்கச்சிகாரிக்கிட்ட எதையாவது ஓசி வாங்கிக்கிட்டே இருந்தா. தங்கச்சிகாரியும் அக்காதானேன்னு அவ கேக்குறபோதெல்லாம் கொடுத்துக்கிட்டு வந்தா. இப்படி இருக்கறபோது ஒரு நாளு அக்காகாரி தங்கச்சிகாரிக்கிட்ட பணம் கடனாக் கேட்டா.
தங்கச்சிகாரியும் சரின்னுட்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்துரணும்னு சொல்லிக் கடனா அக்காகாரிக்கிட்ட பணத்தைக் கொடுத்தா. பணம் வாங்கின அக்காகாரி சொன்ன நாளுக்குள்ளாற பணத்தைக் கொடுக்கல. தங்கச்சிகாரியும் சரி அக்காகாரி தந்துருவான்னுட்டு பொறுமையா இருந்தா.
கொஞ்சநாளுப் போச்சு. அக்காகாரி பணத்தைக் கொடுக்கிற மாதிரி தெரியல. சரி அக்காக்கிட்டப் போயிப் பணத்தைக் கேப்போம்னு நெனச்சிக்கிட்டு தங்கச்சிகாரி அக்காக்கிட்ட போயி,‘‘ஏக்கா நீயி எனக்கிட்ட வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுக்கக் கூடாதா? எவ்வளவு நாளாயிருச்சுன்னு’’ கேட்டா.
இதைக் கேட்ட அக்காகாரி, ‘‘எப்படி நீ பணங் கொடுத்தே? நான் எப்ப ஒனக்கிட்ட பணம் கடன் வாங்கினேன்? திட்டாந்திரமால்ல நீயி எம்மேல பழியப்போடுற? கடன் வாங்கினேன்னு சொன்னா அப்பறம் நானு பொல்லாதவளா ஆயிடுவேன்னு’’ மல்லு மல்லுன்னு தங்கச்சிக்கிட்ட சண்டைக்கு வந்துட்டா.
தங்கச்சிகாரிக்கு என்னடா நம்ம அக்கா கடன வாங்கிக்கிட்டு வாங்கலைன்னு சொல்றாளேன்னு ரொம்ப வருத்தம். அவ அக்காகிட்டத் திரும்பத் திரும்பக் கேட்டா. ஆனா அக்காகாரி கடன் வாங்கவே இல்லைன்னு சாதிச்சா. ஒடனே தங்கச்சிகாரி நான் போயி ஊரு அம்பலத்துக்கிட்ட சொல்லப்போறேன்னு சொல்லிட்டு ஊருல இருக்கிற ஊர் அம்பலத்துக்கிட்ட பிராது கொடுத்தா.
அதக் கேட்ட ஊரு அம்பலகாரரு ஆளவிட்டு அக்காகாரிய வரச்சொன்னாரு. ஊரம்பலத்தப் பாக்க வந்த அக்காகாரியப் பாத்து, ‘‘நீ ஒன்னோட தங்கச்சிக்கிட்ட கடன் வாங்குனது உண்மையான்னு’’ கேட்டாரு. அதுக்கு அக்காகாரி, ‘‘சத்தியமா நான் ஏந் தங்கச்சிக்கிட்ட கடன் வாங்கலையா. அவ பொய் சொல்றா’’ன்னு அழுதுகிட்டே சொன்னா. ஊரம்பலம் தங்கச்சிகாரியப் பாத்து, ‘‘என்னம்மா ஒங்கக்கா இப்படிச் சொல்றா. நீ அவ கடன் வாங்கினான்னு சொல்றே.. நீயாவது உண்மையச் சொல்லுன்னு’’ அதட்டிக் கேட்டாரு. அதுக்குத் தங்கச்சிகாரி, ‘‘ஐயா நான் பொய்சொல்லலை. எங்கக்காக்கிட்ட பணம் கடனாக் கொடுத்தது உண்மை. ஆனா அதைத் திரும்பக் கேட்டதுக்கு நான் வாங்கவே இல்லைன்னு எங்கக்கா சொல்லுதுன்னு’’ அவளும் அழுதுக்கிட்டுச் சொன்னா.
ஊரம்பலத்துக்கு ஒண்ணுமே புரியல. ஆனா அவருக்கு அக்காகாரிமேல சந்தேகமா இருந்துச்சு. அவ நடந்துக்கிட்ட மொறை அவரச் சந்தேகப்பட வச்சது. அதோடுமட்டுமில்லாம அவரு ரொம்ப புத்திசாலி. எப்படிப்படட வழக்கையும் சரியா விசாரிச்சு யாருக்கும் பாதகமில்லாம தீர்ப்புச் சொல்லிருவாரு.
அவரு மறுபடியும் அக்காகாரியப் பாத்து, ‘‘ஏம்மா நீயி ஒன்னோட தங்கச்சிக்கிட்ட கடன் வாங்குனது உண்மைதானே. மறைக்காம உண்மையச் சொல்லு’’ அப்படீன்னு மிரட்டிக் கேட்டாரு. அப்பவும் அவ உண்மைய ஒத்துக்கல. சரி இவங்கள நாளைக்குக் காலையில வரச்சொல்லித் தீர்ப்பச் சொல்வோம்னு நெனச்சிக்கிட்டு அவங்க ரெண்டுபேரையும் வீட்டுக்குப் போகச் சொன்னாரு.
மறுநாள் காலையில வீட்டுக்கு முன்னால சேறும் சகதியுமா இருக்கற மாதிரி பாத்துக்கிட்டாரு. அக்காவும் தங்கச்சியும் வேகவேகமா ஊரம்பலத்தோடு வீட்டுக்கு வந்தாங்க. ரெண்டுபேரும் சகதி கிடக்கறதப் பாக்காமா வந்துட்டாங்க. கால்ல நல்லா சகதி ஒட்டிக்கிருச்சு. காலுமுழுவதும் சகதியா இருந்ததால ஆளுக்கு ஒரு பெரிய செம்புல தண்ணியக் கொடுத்து காலைக் கழுவிக்கிட்டு வாங்கன்னு சொன்னாரு.
அக்கா தங்கச்சி ரெண்டுபேரும் தண்ணிய வாங்கிக்கிட்டு காலக் கழுவுனாங்க. அக்காகாரி கால்ல தண்ணிய எல்லாத்தையும் ஊத்திட்டு இன்னுங் கொஞ்சம் தண்ணிதாங்கன்னு கேட்டா அம்பலத்துகிட்ட. அவரும் சரின்னு கொடுத்தாரு. ரெண்டாவது தடவை கொடுத்த தண்ணீரையும் அவ காலிபண்ணிட்டு மறுபடியும் மூனாவதா இன்னொரு செம்புத் தண்ணீரக் கேட்டா. அதையும் கொடுத்தாரு அம்பலம். அவ அதையும் மிச்சம் வைக்காம ஊத்திக் காலக் கழுவிட்டு வந்தா.
ஆனா தங்கச்சிகாரி ஒரு செம்புத் தண்ணீருலேயே காலச் சுத்தமாக் கழுவிட்டு மிச்சத் தண்ணீரையும் வச்சிருந்தா. அதப் பாத்த அம்பலம் அக்காகாரியப் பாத்து, ‘‘ஏம்மா பொய்சொல்ற. நீயி ஒன்னோட தங்கச்சிக்கிட்ட நிச்சயமா கடன் வாங்கியிருக்கே. ஒழுங்கா மரியாதையா அவகிட்ட வாங்குன பணத்தைத் திருப்பிக் கொடுத்துரு. இல்லைன்னா ஓம்மேல குற்றச்சாட்டுச் சொல்லி ஊரைவிட்டே ஓதுக்கி வச்சிருவேன்னு’’ சொன்னாரு.
அதக்கேட்ட அக்காகாரி பயந்து போயி தான் கடன் வாங்குனது உண்மைதான்னும் தன்னை மன்னிச்சிருங்கன்னும் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டா. அதுக்குப் பெறகு தங்கச்சிகாரிக்கிட்ட வாங்குன பணத்தையும் திருப்பிக் கொடுத்துட்டுப் போயிட்டா. தங்கச்சிகாரி ஊரம்பலத்துக்கு நன்றியச் சொல்லிட்டு வீட்டுக்குப் போயிட்டா.
இதப் பாத்துக்கிட்டு இருந்த வேலைக்காரன் ஊரம்பலத்துக்கிட்ட, “எப்படிய்யா அக்காகாரிதான் குற்றவாளின்னு கண்டுபிடிச்சீங்கன்னு” கேட்டான்.
அதுக்கு அம்பலம், “அக்காகாரி மூணு செம்புத் தண்ணி வாங்கியும் கால ஒழுங்காக் கழுவல. அவ தண்ணீய அதிகமாச் செலவழிச்சா. ஆனா தங்கச்சிகாரி ஒரு செம்புத் தண்ணீருல காலச் சுத்தமாக் கழுவிட்டு தண்ணிய மிச்சம் வச்சா. அதுலருந்து அக்காகாரி வரவுக்கு மீறி செலவு செய்யக் கூடியவன்னு தீர்மானிச்சிட்டேன். தங்கச்சிகாரி ரெம்பச் சிக்கனமா வாழறவன்னும் தெரிஞ்சிக்கிட்டேன். அதனாலதான் அக்காகாரி குற்றவாளின்னு தீர்ப்பச் சொன்னேன்னு” சொன்னாரு. அவரோட புத்திசாலித்தனத்தக் கண்ட வேலைக்காரன் ரொம்ப வியந்து போயிட்டான். இன்னக்கி வரைக்கும் இந்த ஊரம்பலத்தோட தீர்ப்பக் கதையாச் சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கிறாங்க.