ஒரு பெரிய ஊரு இருந்துச்சு. அந்த ஊருல நாலஞ்சு கடைத்தெருக்கள் இருந்துச்சு. அந்தக் கடைத் தெருக்களோட நடுவுல ஒரு வயசான பிச்சைக்காரன் நின்னுக்கிட்டே இருப்பான். அவன் யாருக்கிட்டேயும் எதையும் கேக்க மாட்டான். இதக் கொடுங்க அதக்கொடுங்கன்னு கேக்கமாட்டான். அந்தப் பக்கம் போறவுக வாரவுக அவனப் பாத்து இரக்கப்பட்டு அவங்கையில காசப் போட்டுட்டுப் போவாங்க. அவனால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை.
இதுனால அந்த ஊருல உள்ளவங்க அவனுக்குத் தாரளமாவே காசுகளப் போட்டுட்டுப் போனாங்க. கிடைக்கிற காசக் கொண்டு அவன் தன்னோட வயித்துப் பாட்டப் பாத்துக்கிட்டான். தெனந்தோறும் பிச்சை எடுக்கறது. அதை வச்சிச் சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டுட்டு அந்தப் பக்கம் இருக்கற கடைத்தெரு ஓரத்துல படுத்துக்கிடக்கிறதுன்னு இப்படியே ரெம்ப நாளு அந்தப் பிச்சக்காரன் நின்னு நின்னு பிச்சை வாங்கிச் சாப்புட்டுக்கிட்டு இருந்தான்.
ஒரு நாளு காத்தும் மழையும் அடிச்சிப் பேஞ்சிச்சு. எங்க பாத்தாலும் தண்ணிக்காடா இருந்துச்சு. மரமெல்லாம் முறிஞ்சி முறிஞ்சி விழுந்துருச்சு. பல வீடுகள் சேதமாயிப் போயிருச்சு. மழை விட்டஒடனே ஊருல உள்ளவங்க எல்லாரும் ஊரையே சரிப்படுத்துனாங்க. இப்படிச் சரிப்படுத்திக்கிட்டு இருந்தப்ப அவங்களுக்கு அந்தப் பிச்சக்காரனப் பத்தின ஞாபகம் வந்துச்சு.
அவங்க அவன் இருந்த எடத்துக்கு ஓடிப் போயிப் பாத்தாங்க. அந்த எடத்துல அந்தப் பிச்சக்காரன் இல்லை. எங்கடா போயிட்டான்னு ஊரே அவனத் தேடுதேடுன்னு தேடுச்சு. அப்படித் தேடிக்கிட்டுப் போனபோது அவனோட பிணம் ஊருக்கு ஒதுக்குப் புறமா இருந்த குளத்துக்குள்ள கிடந்துச்சு.
கடுமையான மழையினால ஏற்பட்ட வெள்ளத்துல மூழ்கி அவஞ் செத்துப்போனது தெரிஞ்சது. அவன அந்த ஊருக்காரவு எடுத்து அடக்கஞ் செஞ்சாங்க. அதுக்குப் பெறகு அவன் நின்ன இடத்துல அவனுக்கு ஒரு செலைய வைக்கணும்னு முடிவு செஞ்சாங்க.
சிலைய வைக்கறதுக்கு அவன் நின்ன இடத்துல குழி தோண்டுனாங்க. ரெண்டு அடிக்குக் குழி தோண்டின பிறகு டங்குன்னு ஒரு பெரிய சத்தம் கேட்டுச்சு. அதக் கேட்ட ஊருக்காரவு குழி தோண்டுறத நிறுத்திப்பிட்டு அது என்னன்னு பாக்க ஆரம்பிச்சாங்க.
அப்படிப் பாத்தபோது அந்த எடத்துல ஒரு பெரிய வெங்கலப் பானை இருந்துச்சு. அத வெளியில எடுத்துப் பாத்தாங்க. அந்தப் பானை நெறைய தங்கக் காசுகளா இருந்துச்சு. அவங்களுக்கு ஒரே ஆச்சரியமாப் போயிருச்சு. ‘‘இந்தப் பிச்சக்காரன் இவ்வளவுநாளா இந்தப் புதையல் மேலயே நின்னுக்கிட்டுப் பிச்சையெடுத்துக்கிட்டே இருந்திருக்கான். தன்னோட காலடிக்குக் கீழ இவ்வளவு பெரிய புதையல் இருக்கறத அவன் பாக்கவே இல்ல. அவனெல்லாம் ஒரு மனுசனா? இந்தச் சோம்பேறிக்குப் போயி நாம எதுக்குக் காசச் செலவழிச்சிச் சிலை வைக்கணும். தன்னோட காலுக்குக் கீழ இருக்கற புதையலப் பாக்காமா இத்தனை நாளா அவன் பிச்சைய வாங்கியே பொழச்சிருக்கான். அந்தப் புதையல மத்தவங்க எடுத்துறக் கூடாதுன்னுதான் அதே இடத்துல அவன் நின்னுருக்கான்னு’’ சொல்லிட்டு அவங்க அந்தக் குழிய மூடிட்டுப் போயிட்டாங்க.
இப்படித்தான் பல பேரு தங்களுக்கிட்ட என்ன இருக்குதுன்னு தெரிஞ்சிக்காமயே மத்தவங்களுக்கிட்டக் கையேந்தியே வாழ்ந்துக்கிட்டுப் போயிடறாங்க. நமக்குள்ள என்ன இருக்குங்கறத ஒவ்வொருத்தரும் தெரிஞ்சிக்கணுங்கறதுக்காக எங்க ஊருப்பக்கம் இந்தக் கதையச் சொல்லிக்கிட்டு இருக்காங்க.