ஒவ்வொரு ஊருலயும் ஒரு கூரு கெட்டவன் இருப்பான். அவங்கிட்ட எதச் சொல்லக் கூடாதுன்னு சொல்றமோ அதைச் சொல்வான். எதைச் செய்யக்கூடாதுன்னு சொல்றமோ அதைச் செய்வான். அவனப் பத்தின கதை ஒண்ணு இந்தப் பக்கத்துல வழக்கத்துல வழங்கி வருது.
ஒரு ஊருல வட்டிக்குப் பணங்கொடுத்து வாங்குற கஞ்சத்தனத்துக்குப் பேருபோன செட்டியாரு ஒருத்தரு இருந்தாரு. அவரு சுத்துவட்டாரத்துல இருக்குற எல்லா ஊருக்கும் போயி பணம் தேவைப்படறவங்களுக்குப் பணத்தைக் கொடுத்துட்டு ஒவ்வொரு வாரக்கடைசி நாள்ல போயி வட்டிய வசூல் செஞ்சிக்கிட்டு வருவாரு.
அப்படி வட்டி வசூல் செய்யப் போறபோது தன்கிட்ட வேலைபாக்குற ஒருத்தனக் கூட்டிக்கிட்டுப் போவாரு. அந்தக் காலத்துல காசுதான் புழக்கத்துல இருந்தது. ஒரு பணம் ரெண்டு பணம்னு சொல்வாங்க. அந்தக் காசுகள வாங்கி சாக்குல போட்டுத் தூக்குறதுக்குத்தான் அந்தச் செட்டியாரு தன்னோட வேலைக்காரனக் கூட்டிக்கிட்டுப் போவாரு. அவனும் காசுகள வாங்கிச் சாக்குலப் போட்டுக்கிட்டுத் தலையில வச்சிக்கிட்டு வருவான்.
இந்தமாதிரி ரொம்ப நாளு அந்த வேலைக்காரன் நாணயமா வேலையச் செஞ்சிக்கிட்டு வந்தான். அப்படி இருக்கறபோது ஒருவாரம் அந்த வேலையாளுக்கு ஒடம்புக்கு முடியாமப் போயிருச்சு. ஆஹா நல்ல வேலைக்காரனுக்குப் போயி இப்ப முடியாமப் போயிருச்சே. என்ன செய்யிறது. வட்டிப்பணத்தை யாருக்கிட்ட கொடுத்து தூக்கிக்கிட்டு வரச் சொல்றதுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தாரு.
நாம கொடுக்கற பணத்தை வாங்கிக்கணும். அதே சமயம் சலிக்காம சுமையத் தூக்கிக்கிட்டு வரணும் அப்படியாரு இந்த ஊருல இருக்குறான்னு சிந்திச்சுப்பாத்தாரு. அப்ப அவருக்குச் சட்டுன்னு அந்த ஊருல இருந்த குப்பான் நினைவுக்கு வந்தான். அந்த ஊருல அவன எல்லாரும் கூருகெட்ட குப்பான் கூருகெட்ட குப்பான்னு கூப்புடுவாங்க.
அவன் ஒரு வெவரங் கெட்டவன். இந்தவாரம் இவனக் கூட்டிக்கிட்டுப் போயி வட்டிப் பணத்தை வசூல் செஞ்சிக்கிட்டு வருவோம்னு நெனச்சிக்கிட்டு அவனத் தேடிப் போனாரு. அவனும் அவரு கூப்புட்ட ஒடனேயே சரின்னு ஒத்துக்கிட்டான். செட்டியாருக்கு ரொம்ப சந்தோஷம். அப்பாடா, நாம எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கிறதுக்கு சரியான ஆளு கெடைச்சிட்டான்னு நெனச்சிக்கிட்டு அவனக் கூட்டிக்கிட்டு ஒவ்வொரு ஊராப் போயி வட்டிக்காச வசூல் செஞ்சாரு. நெறையப் பணம் சேர்ந்துருச்சு.
இனி ஊருக்குப் போயிரலாம்னு நெனச்சிக்கிட்டு கூருகெட்ட குப்பானையும் கூட்டிக்கிட்டு தன்னோட ஊரப்பாத்துக் கௌம்பினாரு. ஆனா அந்தக் கூருகெட்ட குப்பான் செட்டியாரப் பாத்து, அது என்ன? இது என்னன்னு ஓயாமா தொணதொணன்னு கேள்விகேட்டுக்கிட்டே வந்தான். இது செட்டியாருக்குப் புடிக்கல. செட்டியாரு கூருகெட்ட குப்பானப்பாத்து, “டேய் பேசாம வாயமூடிக்கிட்டு வாடா”ன்னு அதட்டுனாரு.
அதக்கேட்ட கூருகெட்ட குப்பான், “அப்பன்னா எனக்குக் காசுகுடுங்க. அப்பத்தான் நான் பேசாம வருவேன்”னு சொன்னான். சரி அவனுக்குக் கொடுக்கிற கூலியக் கொடுத்தா அவன் பேசாம வருவான்னு செட்டியாரும் நெனச்சாரு. தனக்கிட்ட இருந்த ஒரு செல்லாத அஞ்சுரூபாக் காச எடுத்துக் கொடுத்து இத வச்சிக்கிட்டுப் பேசாம வாடான்னு சொன்னாரு. அவனும் அந்தக் காசப் பாத்துட்டு, “ஐயா… இன்னக்கி எனக்கு அஞ்சுரூபா கெடச்சிருச்சே”ன்னு அதைச் சட்டைப் பையில போட்டுக்கிட்டு அதத் தொட்டுத் தொட்டுப் பாத்துக்கிட்டு வந்தான்.
அவங்க தங்களோட ஊருக்கு ஒரு காட்டைக் கடந்துதான் போகணும். இருட்டத் தொடங்கினா களவானி பயம் அதிகம். அதனால கூருகெட்ட குப்பான வெரசா நடடான்னு சொல்லிச் சொல்லி வெரட்டிக்கிட்டு அவரும் வேகமா நடந்து வந்தாரு. அப்படி வந்தும் நடுக்காட்டுக்குள்ளாற வந்தபோது கடுமையா இருட்டிருச்சு. கையில வௌக்குமில்லாம எப்படி நடக்குறது? இருட்டுக்குள்ளாற களவானிப்பயலுக வந்துட்டா என்ன செய்யிறது. இருக்குற எல்லாப் பணமும் போயிருமேன்னு செட்டியாரு நெனச்சிக்கிட்டே வந்தாரு.
அப்ப அந்தக் கூருகெட்ட குப்பான், “ஐயா இனிமே என்னால ஒரு எட்டுக்கூட வச்சி நடக்க முடியாது. இருட்டுல பாத தெரியலைய்யா”ன்னு சொன்னான். செட்டியாருக்குமே பாதை தெரியல. அவரும் தட்டுத்தடுமாறித்தான் நடந்து வந்துக்கிட்டு இருந்தாரு. பேசாமா இந்தப் பாதைக்கு அங்கிட்டு இருக்கிற மரத்தடியில தங்கிட்டு காலையில போயிடலாம்னு நெனச்சிக்கிட்டு, குப்பானப் பாத்து, “டேய் கூருகெட்ட குப்பா, இந்த மூட்டைய கொண்டுவந்து இந்த மரத்துக்குப் பக்கத்துல இருக்கற பொதருக்குள்ளாற போட்டுட்டு, அந்தப்பக்கத்துல நீ படுத்துக்க. நான் இந்தப் பொதருக்குப் பக்கத்துல படுத்துக்கறேன். இருட்டுக்குள்ளாற யாரு வந்தாலும் எதக் கேட்டாலும் எதுவும் தெரியாதுன்னு சொல்லிப்புடு”ன்னு சொல்லிட்டு துண்ட ஒதறித் தரையில விரிச்சிக்கிட்டுப் படுத்துட்டாரு. அவனும் மரத்துக்கு அந்தப் பக்கம் பாதை ஓரத்துல படுத்துக்கிட்டான். கூருகெட்ட குப்பானுக்குத் தூக்கம் வரல. பொரண்டு பொரண்டு படுத்துக்கிட்டே இருந்தான்.
ரெண்டுபேரும் இப்படி இருக்கறபோது திடீர்னு அங்க நாலைஞ்சு பேரு ஓடியார சத்தம் கேட்டுச்சு. செட்டியாரு திடுக்குன்னு தூக்கிப்போட்ட ஒடனே முழிச்சிக்கிட்டாரு. இந்தக் களவானிப் பயலுகக்கிட்ட இருந்து தப்பிக்கணும்னு வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கிட்டு இருந்தாரு.
காட்டுக்குள்ளாற ஓடிவந்தவங்கள்ள ஒருத்தன் பாதை ஓரத்துல படுத்துக்கிடந்த கூருகெட்ட குப்பான் மேல பலமா மிதிச்சிட்டான். அப்படி மிதிச்சவன், தடுமாறி விழப்போனான். அப்ப பக்கத்துல வந்தவன், “என்னடா விழுகிறமாதிரி தள்ளாடிக்கிட்டு வர்ற”ன்னு கேட்டான். அதுக்கு அவன், “ஒரு மரக்கட்டையில மிச்சுட்டேன். அதனால நான் தடுமாறிட்டேன்”னு சொன்னான்.
இதைக்கேட்டுக்கிட்டே இருந்த கூருகெட்ட குப்பானுக்கு கடுமையான கோபம் வந்துருச்சு. அவன் ஒடனே எழுந்திருச்சு, “டேய் யாரப் பாத்து ’மரக்கட்டை’ன்னு சொன்னே? நான் ஒன்னையாட்டம் மனுசன்டா? முட்டாப்பயலே”ன்னு சத்தம்போட்டுக் கத்தினான். அவனோட கத்தலக் கேட்ட களவானிப் பயலுக அந்த இடத்துலேயே நின்னுட்டானுக.
கூருகெட்ட குப்பான் இருக்கற எடத்துக்கு வந்து, அவன மடக்கிப் புடுச்சித் தூக்கி நிப்பாட்டி, “டேய் ஓங்கிட்ட இருக்கற காச எடுடா”ன்னு ஓங்கி ஒரு அறை விட்டான். அந்த அறைய வாங்கின குப்பான், “டேய் அடிக்காதிங்கடா, இந்தாங்கடா ஏங்கிட்ட அஞ்சு பணம் இருக்குடா இந்தக் காச வச்சிக்கிட்டு என்னைய விட்டுருங்கடா”ன்னு சொன்னான்.
அட இந்த நடுக்காட்டுல ஒருத்தன் அஞ்சு பணம் வைச்சிருக்கானேன்னு நெனச்சி அத வாங்கித் தொட்டுத் தடவிப் பாத்தானுக. அப்படிப் பாத்த ஒடனே அது செல்லாத காசுன்னு அவனுகளுக்குப் புரிஞ்சி போயிருச்சு. களவானிப் பயகள்ல ஒருத்தன், “டேய் இது செல்லாத காசுடா. அவன விட்டுட்டு வாங்கடா”ன்னு சொன்னான்.
இதக் கேட்ட கூருகெட்ட குப்பானுக்குச் சுள்ளுன்னு கோபம் வந்துருச்சு. “ஏண்டா களவானிப் பயலுகளா எதைப் போயி செல்லாத காசுங்குறீங்க... இதுவா செல்லாத காசு. இது செல்லுமா செல்லாதாங்குறதுக்கு எங்க செட்டியாரு இருக்காருடா அவருக்கிட்டக் கேளுங்கடா”ன்னு சொன்னான்.
ஒடனே அந்தக் களவானிப் பயலுக, “டேய் இன்னொருத்தனும் இங்க இருக்காண்டா... அவனயும் புடிச்சிக் கொண்டாங்கடா”ன்னு சத்தம் போட்டான். களவானிப்பயலுக செட்டியாரப் போயித் தேடி இழுத்துக்கிட்டு வந்தானுக. அப்படி இழுத்துக்கிட்டு வர்றபோது அவரு பக்கத்துல ஒரு மூட்டை கெடந்தது. அது பூராவும் காசுகளா இருந்ததைப் பாத்துட்டு அவனுக ரொம்ப சந்தோஷப்பட்டானுக.
செட்டியாருக்கு ரெண்டு உதை குடுத்து அவருகிட்ட இருந்த பொருளையும், காசுகளையும் பறிச்சிக்கிட்டு கீழ தள்ளிவிட்டுட்டுப் போயிட்டானுக. அப்பத்தான் அந்தச் செட்டியாருக்கு ஒண்ணு புரிஞ்சது. நாம கூருகெட்ட குப்பான ஏமாத்தனும்னு நெனச்சி அவங்கிட்ட செல்லாத காசக் கொடுத்தோம். ஆனா அதுவே நமக்கு எமனாப் போயிருச்சுன்னு வருத்தப்பட்டாரு. மத்தவங்களுக்குக் கூலி கொடுக்குறதுக்கு லோபிப்பட்டுக்கிட்டு ஒரு கூருகெட்டவன நம்பி வந்து எல்லாத்தையும் இழந்துட்டமேன்னு வருந்துனாரு.
ஏமாத்தனும்னு நெனச்சோம்னா நாமதான் ஏமாந்து போயிருவோம். அதத்தான் இந்தக் கதை நமக்குச் சொல்லுது.