ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் உண்டு. ஆனால் அந்தப் பெயருக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்காது. சிவப்பி என்றால் அவள் கருப்பாக இருப்பாள். அதேபோன்று வெள்ளாடு என்று ஆட்டை அழைத்தால் அது கருப்பாக இருக்கும். மனுசனக் கொல்லக் கூடிய அதிக நஞ்சுள்ள பாம்புக்கு நல்லபாம்புன்னு பேரு. இந்த நல்லபாம்பப் பற்றி ஒரு கதை இருக்கு.
ஒரு பெரிய கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்துக்குப் பக்கத்துல பெரிய காடு. அந்தக் கிராம மக்கள் அந்தக் காட்டச் சுத்திச் சுத்தி ஆடு மாடுகள மேய்ப்பாங்களே தவிர அந்தக் காட்டுக்குள்ளாறப் போகமாட்டாங்க. அதுக்கு அந்தக் காட்டுக்குள்ளாற ஒரு பெரிய நல்ல பாம்பு ஒண்ணு இருந்துச்சு. அந்தப் பாம்பு அந்தக் காட்டுக்குள்ளாற சுத்திச் சுத்தி வரும்.
அப்படி வர்றபோது அந்தப் பக்கம் போற வார ஆளுகளையெல்லாம் கொத்திச் சாகடிச்சிடும். அதனால அந்தப் பாம்புக்குப் பயந்துக்கிட்டு அந்தக் காட்டுக்குள்ளாற யாரும் போகமாட்டாங்க. இதுனால அந்தக் காடு பெரியளவுள வளந்து இருந்துச்சு. அந்தப் பாம்பும் சுகமா அந்தக் காட்டுக்குள்ளாற வாழ்ந்துக்கிட்டு இருந்துச்சு.
இப்படி இருக்கறபோது ஒரு நாள் அந்தக் கிராமத்துக்கு ஒரு சாமியாரு வந்தாரு. அப்படி வந்தவரு அந்தக் கிராமத்துல ஒருநாள் தங்கி இருந்தாரு. அந்தக் கிராமத்துக்காரவுங்க எல்லாரும் அவருக்கிட்ட நல்லவிதமா நடந்துக்கிட்டாங்க. அந்தக் கிராமத்துக்காரங்க நடந்துக்கிட்ட முறை அந்தச் சாமியார ரொம்ப மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்தச் சாமியாரு அந்தக் கிராமத்தவிட்டுப் பொறப்படபோது அங்க உள்ளவங்களுக்கிட்ட சொல்லிக்கிட்டுக் கிளம்பினாரு.
அவரு அந்தப் பெரிய காட்டப்பாத்துக் கிளம்பறதப் பாத்த கிராமத்துக்காரங்க ஓட்ட ஓட்டமா ஓடிப்போயி, “ஐயா தயவு செஞ்சி அந்தக் காட்டுக்குள்ளாறப் போயிடாதீங்க. அங்க யாரும் நாங்க போகமாட்டோம். நீங்க நல்லவுங்க. அங்க நீங்க தெரியாமப் போனீங்கன்னா அங்க உள்ள நல்ல பாம்பு வந்து ஒங்களக் கொத்திக் கொன்னுடும். அதனால நீங்க அந்தக் காட்டுக்குள்ளாறப் போற பாதையில போயிடாதீங்க காட்டத் தள்ளி உள்ள பாதையிலேயே போங்கன்னு” சொன்னாங்க.
அதக் கேட்ட சாமியாரு, “நீங்க எம்மேல வச்சிருக்கற அன்புக்கு ரொம்ப நன்றி. அந்தப் பாம்ப நான் பாத்துக்கறேன். எனக்கு அந்தப் பாம்பால எதுவும் நேராது” அப்படீன்னு சொல்லிட்டுக் கிளம்பிக் காட்டுக்குள்ளாற உள்ள பாதையை நோக்கி நடந்து போனாரு.
அப்படிக் காட்டுக்குள்ளாற நடந்து போறபோது, திடீருன்னு பாம்பு சீறுன மாதிரி ஒரு சத்தம் வந்துச்சு. அதக்கேட்ட சாமியாரு அந்தச் சப்தம் வந்த திசையப் பார்த்து மெதுவா நடந்து போனாரு. அப்ப அவரு முன்னால ஒரு பெரிய நாகப்பாம்பு ஒண்ணு படமெடுத்துக்கிட்டு ஆடிக்கிட்டு இருந்துச்சு.
அந்தப் பாம்பப் பார்த்த சாமியாரு, “என்ன நாகராசா என்னயப் பாத்துட்டு படமெடுத்து ஆடுறியா? ஒனக்கு நல்லபாம்புன்னு ஒரு பேரு இருக்குத் தெரியுமில்ல. இந்த மாதிரி நல்ல பாம்புன்னு பேர வச்சிக்கிட்டுக் காட்டுக்குள்ளாற வாரவுங்க போறவங்களக் கொத்திக் கொல்லலாமா? இது உம்பேருக்குப் பொருத்தமான செயலா இல்லையே”ன்னு சொன்னாரு.
சாமியாரு சாந்தமாக் கேட்டதப் பாத்த நல்லபாம்பு, “சாமி நீங்க சொல்லறது சரிதான். இந்தப் பக்கமா வர்றவுங்க என்னயக் கொல்லறதுக்காக கல்லத் தூக்கி எம்மேல எறியறாங்க. இந்த மனுசங்களே நல்லவுங்க இல்ல. கெட்ட எண்ணம் புடிச்சவங்க. அப்படிப்பட்ட கெட்ட எண்ணம் உள்ளவங்கள, என்னயக் கொல்ல நினைக்கறவங்கள நான் கொல்றது தப்பா”ன்னு திருப்பிக் கேட்டுச்சு.
அதக் கேட்ட சாமியாரு, “நீ நெனக்கிற மாதிரி எல்லாரும் கெட்டவங்க இல்லை. மனுசங்கள்ளயும் நல்லவங்க இருக்கறாங்க. அதப் புரிஞ்சிக்க. நீயி எல்லாரையும் கொத்திக் கொல்லக்கூடாது. ஒனக்கு வேண்டிய எரையத் தின்னுட்டு நீ பாட்டுக்குப் பேசாமா சாதுவா யாரையும் கொத்திக் கொல்லாமா நல்லபாம்புங்கறதுக்கு எடுத்துக்காட்டா இரு. நாஞ்சொல்றதச் செய்யி. ஒன்ன சாமியா நெனச்சிக் கும்புடுவாங்க. நான் இப்பப் போறேன். எப்போதாவது இந்தப் பக்கம் இனி வர்றபோது உன்னையப் பாக்குறேன். நல்லபாம்பா மாறி இரு”ன்னு சொல்லி அந்தப் பாம்புக்கு அறிவுரை சொல்லிட்டுப் போயிட்டாரு.
சாமியாரு சொன்ன அறிவுரையக் கேட்ட பாம்பு இனிமே யாரையும் கொத்திக் கொல்லக் கூடாதுன்னு முடிவு செஞ்சது. இதுனால அந்தக் காட்டுக்குள்ளாற கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வரத் தொடங்கினாங்க. அந்தப் பாம்பு அவங்கள ஒண்ணும் செய்யாம இருந்துச்சு.
பாம்பு ஒண்ணுஞ் செய்யாம இருந்ததப் பார்த்தக் கிராமத்து ஜனங்க அந்தப் பாம்பக் கண்டபடி அடிக்க ஆரம்பிச்சாங்க. மாடுமேய்க்கிற சின்னப்பசங்க எல்லாரும் அந்தப் பாம்ப நல்லா அடிச்சி காயப்படுத்திட்டாங்க. அந்தப் பாம்பு குற்றுயிரும் கொலைஉயிருமா ஆயிப்போயிடுச்சு. அதப் பாத்த சின்னப்பசங்க பாம்பு செத்துப் போயிருச்சுடான்னு நெனச்சிக்கிட்டு அதப் போட்டுட்டுப் போயிட்டாங்க.
அந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துல மயங்கம் தெளிஞ்சி மெதுவா தன்னோட இருப்பிடத்துக்குப் போயிருச்சு. சாமியாரு பேச்சக் கேட்டதனால இப்படி ஆயிப்போச்சேன்னு நெனச்சிக்கிட்டு பகல்பொழுது முழுவதும் தன்னோட இருப்பிடத்துக்குள்ளாறயே இருக்கும். இராத்திரிப் பொழுதானா வெளியில வந்து தனக்கு வேண்டிய இரையத் தேடிப்புடிச்சித் திங்கும்.
சிலசமயம் பாம்புக்கு எந்த எரையும் கிடைக்காது. இதனால பாம்பு ரெம்ப வத்திப் போயி சின்னக் குச்சிமாதிரி ஆயிப்போயிருச்சு. இப்படியே கொஞ்ச நாளு போயிருச்சு. ஒருநாளு அந்தச் சாமியாரு அந்தக் காட்டு வழியா வந்தாரு.
அப்படி வந்தவருக்கு அந்தப் பாம்போட ஞாபகம் வந்துருச்சு. சரி வந்ததுதான் வந்தோம் இந்தப் பாம்பப் பாத்துட்டுப் போயிருவோம்னு நெனச்சிக்கிட்டு அந்தப் பாம்பு எந்தப் பக்கம் இருக்குங்கறத தன்னோட ஞானதிருஷ்டியினாலா தெரிஞ்சிக்கிட்டு அது தங்கியிருந்த இடத்துக்குப் போனாரு.
அந்த இடத்துக்கு வெளியில நின்னுக்கிட்டு, “ஏ நாகராசா, சாமியாரு வந்துருக்கேன். பயப்படாத. வெளியில வா...”ன்னு கூப்புட்டாரு. அந்தப் பாம்பு சாமியாரு குரலக் கேட்டவுடனே மெதுவா ஊர்ந்து வந்துச்சு.
அந்தப் பாம்பப் பார்த்த சாமியாருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அந்தப் பாம்பப் பார்த்து, “என்ன இப்படி எலும்பும் தோலுமா ஆயிட்ட. நீ இப்படி ஆனதுக்கு என்ன காரணம்?” அப்படீன்னு கேட்டாரு. அதக்கேட்ட பாம்பு, நடந்த கதையைச் சொல்லிட்டு, ”எல்லாம் நீங்க சொன்னதக் கேட்டதால வந்த வினை... நான் கொத்தாதனால எல்லாரும் என்னைய அடிச்சித் துன்புறுத்துனாங்க. அதனால நான் பகல்ல வெளியில வர்றதே இல்லை. அதனால சரியான சாப்பாடு எனக்குக் கெடைக்கல. சாப்பாடு சரியாச் சாப்புடாததால நான் ரொம்ப மெலிஞ்சி போயிட்டேன்” னு சொல்லி அழுதது.
அதக் கேட்ட சாமியாரு, “ஏ நாகராசா, நான் உன்கிட்ட சொன்னத நீ சரியாப் புரிஞ்சிக்கல. நீ உன்னை அடிக்க வர்றவங்களப் பாத்துட்டுச் சாதுவா இருக்காத புஷ்ஷுன்னு சீறு. ஆனாக் கொத்தாத. நீ சீறுனாலே அதக்கேட்டுப் பயந்துக்கிட்டு ஒன்னைய எதுவும் செய்யாமப் போயிருவாங்க. ஒன்னையக் கொத்தச் சொல்லல சீறிப் பயமுறுத்ததத்தான் சொன்னேன். இனிமே அப்படியே செய்யி. ஒனக்கு எதுவும் வராது. பழையபடி நீ நல்லா இருப்பே”ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.
பாம்பும் மறுநாளு பகல்ல சாமியாரு சொன்னது மாதிரி வெளியில வந்தது. அப்ப அந்தப் பக்கமா வந்த ஒரு கிராமத்து ஆளு அந்தப் பாம்ப அடிக்கறதுக்காக கம்ப எடுத்தாரு. ஒடனே அந்தப் பாம்பு, படமெடுத்து, புஷ்ஷுன்னு ஒரு சீறு சீறுச்சி. அந்த ஆளு பயந்துக்கிட்டு ஓட்ட ஓட்டமா காட்டுக்குள்ளாற ஓடிப் போயிட்டாரு. அதப் பாத்த நல்லபாம்பு சாமியாரு சொன்னத சரியாப் புரிஞ்சிக்கிருச்சு. அவரு சொன்ன மாதிரியே நடந்துச்சு. அந்தப் பாம்பு சீறுனதப் பாத்துட்டுப் போனவங்க பாம்பப் பத்திக் கிராமத்து ஆளுகக்கிட்ட சொன்னாங்க. அதக்கேட்ட ஆளுங்க பயந்து போயி அந்தப் பாம்ப எதுவும் செய்யாம ஒதுங்கிப் போக ஆரம்பிச்சாங்க. பாம்பும் யாரையும் கொத்தாம நல்லபாம்பா மாறி வாழ்ந்துக்கிட்டு வந்தது. யாரையும் பயமுறுத்தலாமே தவிர பழிக்குப் பழிவாங்கக் கூடாதுங்கறதைத்தான் இந்தக் கதை நமக்குச் சொல்லுது.