ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நினைப்பு. அவங்க அவங்களும் தங்களைப் பத்தி பல்வேறு விதமா நினைச்சிக்கிட்டே இருப்பாங்க. ஆனா அது தவறு. தாங்கள்தான் இந்த ஒலகத்தையே தாங்கிக்கிட்டு இருக்கறது மாதிரியும் தாங்கள் இல்லைன்னா இந்த ஒலகமே அழிஞ்சி போகுங்குற மாதிரியும் நெனச்சிக்கிட்டு இருப்பாங்க. கோயில் கோபுரத்துல இருக்கற பொம்மை தான்தான் இந்தக் கோயில் கோபுரத்தைத் தாங்குற மாதிரி நெனச்சிக்கிட்டு இருக்கும். ஆனா அது தவறுங்கறது மத்தவங்களுக்குத்தான் தெரியும். தன்னால ஒண்ணுமே இல்லைன்னு தெரிஞ்சா தாம் தூம்னு ஆடமாட்டாங்க. இதப் பத்தின ஒரு கதை இருக்கு.
ஒரு ஊருல ஒரு கோவேறு கழுதை இருந்துச்சாம். அது தன்னோட உருவத்தைப் பார்த்துப் பார்த்துத் தன்னைத்தானே ரசிக்கும். அந்தக் கழுதை அழகா இருந்ததால அந்த ஊர் மக்கள் அங்க இருந்த கோயில்ல இருக்கற சாமி சிலையை எடுத்து வச்சி ஊர்வலமாக் கொண்டுக்கிட்டுப் போவாங்க.
இப்படியே ஒவ்வொரு வாரமும் நடந்துச்சி. ஊர்ம்க்கள் அனைவரும் இந்தக் கழுதை முன்னால வந்து நின்னுக்கிட்டு கும்புட்டு விழுவாங்க. இதைப் பார்த்த கழுதைக்கு மனசுக்குள்ளாற ஒரே சந்தோஷம். ஆஹா நம்மளோட அழகப் பார்த்துத்தான் இந்த மக்கள் எல்லாரும் கும்புட்டு விழறாங்க. எனக்குக் கிடைச்ச பாக்கியம் வேற யாருக்கும் கிடைக்காது. கையெடுத்துக் கும்புடறது மட்டுமில்லாம சூடமும் பத்த வச்சிக் கும்புடுறாங்களேன்னு பெருமைப் பட்டுக்கிடுச்சி.
இப்படியே கொஞ்ச நாளு போச்சு. கழுதைக்கு மனசுக்குள்ளாற சாமியவிட தான்தான் மிகப் பெரிய ஆளுங்கற நெனப்பு வந்துருச்சு. அதனால அந்தக் கழுத தனக்குப் பின்னால வர்றவங்கள வேணுமின்னே ஒதைக்கும். முன்னால நின்னு சாமி கும்புட்டா முன்னங்காலால எட்டி மிதிக்கும். இப்படியே இருந்துச்சு.
இதைப் பாத்த ஊரு ஆளுங்களுக்கு ஒண்ணும் புரியல. என்னடா இந்தக் கழுத இப்படிப் பண்ணுதுன்னு நெனச்சிக்கிட்டு சாமியக் கும்புட்டுட்டுப் போயிக்கிட்டே இருந்தாங்க. இதப் பாத்த கழுதை நம்மளப் பாத்துத்தான் இந்த ஜனங்க பயப்படுறாங்கன்னு நெனச்சிக்கிட்டு இன்னும் ரொம்ப ரொம்ப மோசமா நடந்துக்க ஆரம்பிச்சிடுச்சு. இதனோட சேட்டை அதிகமானதப் பாத்த அந்த ஊரு மக்கள் என்ன செய்யிறதுன்னு யோசிச்சாங்க.
இந்தக் கழுதைமேல இனிமே சாமிய ஊர்வலமாக் கொண்டுக்கிட்டு வரக்கூடாதுன்னு முடிவுபண்ணினாங்க. மறுநாளு இந்தக் கழுதை தன்னைத்தான் சாமியத் தூக்குறதுக்கு ஓட்டிக்கிட்டுப் போவாங்கன்னு நெனச்சிக்கிட்டு ரொம்பக் கர்வமா நின்னுகிட்டு இருந்துச்சு. ஆனா அந்த ஊராளுங்க எல்லாரும் ஒரு பெரிய மாட்டு வண்டியக் கொண்டு வந்து அந்த வண்டியில சாமிய வச்சி ஊர்வலத்தை ஆரம்பிச்சாங்க.
இதப் பார்த்த கழுதைக்கு ரொம்பக் கோவம் வந்துருச்சி. ஒடனே ஊர்வலத்துக் குறுக்கே பாஞ்சி ஊர்வலத்தை நிறுத்த முயற்சி செஞ்சது. அதப் பாத்த அந்த ஊராளுங்க அந்தக் கழுதையை படார் பாடார்னு அடிச்சித் தொரத்துனாங்க.
அடிவாங்குன கழுதை கத்திக்கிட்டே கூட்டத்தப் பாத்து, “ஏன் எல்லாரும் என்னைய அடிக்கிறீங்க. என்னையக் கடவுளா நினைச்சிக் கும்புட்டுட்டு என்னையவே நீங்க அடிக்கலாமா? ஒங்களுக்கு மூளையே இல்லையா? நான் ஒங்களால வணங்கப்பட்டவன் இல்லையா?”ன்னு கேள்வி மேல கேள்வியக் கேட்டுச்சி.
அதுக்கு அந்த ஊராளுங்க அந்தக் கழுதையப் பாத்து கைகொட்டிச் சிரிச்சாங்க. அந்தக் கழுதைக்கு ஒண்ணுமே புரியல. அது, “எதுக்காகச் சிரிக்கறீங்க”ன்னு கேட்டுச்சு.
அதக்கேட்ட ஊர்க்காரங்க, “பின்ன சிரிக்காம என்ன பண்ணச் சொல்ற. நாங்க ஒன்னக் கும்புடல. ஓம்மேல இருந்த கடவுளத்தான் கும்புட்டோம். கடவுளுக்குத்தான் சூடத்தைப் பொருத்திக் காட்டினோம். இதெல்லாம் ஓம்மேல இருந்த கடவுளுக்குத்தானே தவிர ஒனக்கு இல்லை. கடவுளக் கும்புட்டதை ஒன்னையக் கும்புட்டதா நீ நினைச்சதே தப்பு. நீ ஒன்னக் கடவுளா நினச்சிக்கிட்டு தாறுமாறா நடந்துக்கிட்டே. அதனாலதான் இப்ப மாட்டு வண்டியில சாமிய ஒக்காரவச்சி எடுத்துக்கிட்டு ஊர்வலமாப் போறோம். தள்ளி நில்லு. இல்லைன்னா ஒன்ன இந்த ஊர விட்டே விரட்டிருவோம்”ன்னு சொன்னாங்க.
இதக் கேட்ட கழுதை ஐயையோ அப்ப இவங்கள்ளாம் சாமியத்தான் கும்புட்டுருக்காங்க. அதைப் போயி தப்பா நினைச்சிக்கிட்டு தவறா நடந்துக்கிட்டோமே. நம்மளோட தலைகனத்துக்குச் சரியான பாடங் கெடைச்சிருக்குன்னு தலையைத் தொங்கப்போட்டுக்கிட்டு அங்க இருந்து பக்கத்துல இருந்த காட்டுக்குள்ளாற போயிடுச்சி. மத்தவங்க செய்யிறதப் பாத்துட்டு அதத் தப்பாப் புரிஞ்சிக்கிடக் கூடாதுங்கறத இந்தக் கதை நமக்குச் சொல்லுது. அதுமட்டுமில்லாம நெனப்புத்தான் பொளப்பக் கெடுக்குங்கற பழமொழியும் இந்தக் கதைக்காக இந்தப் பக்கம் வழக்கத்துல வழங்கி வருது.