எல்லாமே தனக்குத்தான் கிடைக்கணும். வேற யாருக்குமே கிடைக்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்கதான் நெறையப் பேரு இருக்காறாங்க. இப்படி சுயநலத்தோடு இருக்கறவங்கதான் அதிகம். இப்படிப்பட்டவங்க தாங்களும் வாழ மாட்டாங்க. மத்தவங்களையும் வாழ விடமாட்டாங்க. அவங்க எண்ணமே அவங்கள அழிச்சிடும். இதப் பத்தின ஒரு கதை இருக்கு கேளுங்க.
ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்துச்சி. அந்தப் பாட்டி யாருக்கும் எதுவும் கொடுக்காது. படு கருமியா இருந்துச்சு. ஆனா தெனமும் கோயிலுக்கு மட்டும் போகும். ஆனா எச்சிக்கையிலகூட காக்கையா விரட்டாது. இப்படியே அந்தக் கிழவி இருந்துக்கிட்டு இருந்துச்சு.
அப்பப் பாத்து திடீருன்னு அந்தக் கிழவி இறந்து போச்சு. அந்தக் கிழவிய எமகிங்கரர்கள் எல்லாரும் கட்டி இழுத்துக்கிட்டுப் போனாங்க. இழுத்துக்கிட்டுப் போயி எமதர்மராசா முன்னால நிப்பாட்டுனாங்க.
எமதர்மராசா அந்தக் கிழவியப் பாத்து, "இந்தக் கிழவி கடைசிவரைக்கும் எந்தப் புண்ணியத்தையும் பண்ணலை. அதனால இதக் கொண்டுபோயி நரகத்துல தள்ளிவிட்டுட்டு வாங்க" அப்படீன்னு உத்தரவு போட்டாரு. அந்தக் கிழவி அழுது கத்துனா. அவ கதறக் கதற எம கிங்கரர்கள் அவள இழுத்துக்கிட்டுப் போயி நரகத்துக்குள்ள தள்ளிவிட்டுட்டு வந்தாங்க.
நரகத்துக்குள்ளாற தள்ளப்பட்ட அந்தக் கிழவி ஆண்டவன நெனச்சி அழுது கத்துச்சு. "ஆண்டவனே நாளு தவறாம ஒன்னோட வாசலுக்கு வந்து கும்புட்டேனே! என்னப் போயி நரகத்துக்குள்ளாற தள்ளிவிட்டுட்டியே! நல்லா இருக்கா? என்னைய சொர்க்கத்துக்குக் கூட்டிட்டுப் போங்க" அப்படீன்னு கத்துச்சு.
அவ கத்துன கத்தப் பாத்துட்டு கடவுளும் மனசு எரங்கி வந்துட்டாரு. அவரு அந்தக் கிழவியப் பாத்து, "நீயி ஏதவாது நல்லது செஞ்சிருக்கியா?"ன்னு கேட்டாரு. அதுக்கு அந்தக் கிழவி, "அப்படியெல்லாம் ஒண்ணும் செஞ்சதா எனக்கு ஞாபகமில்லை. நன் செஞ்சது எதாவது ஒங்களுக்கு ஞாபகம் இருந்தா அதச் சொல்லி நீங்க என்னையக் காப்பாத்துங்க"ன்னு... அந்தக் கிழவி கடவுளுக்கிட்டயே திரும்பச் சொன்னா.
கடவுளும் யோசிச்சிப் பாத்தாரு. அவரோட ஞாபகத்துல ஒரு சம்பவம் வந்துச்சு. அந்தக் கிழவி ஒரு நாளு ஒரு அழுகிப்போன வாழப்பழத்தை தனக்கு வேணாம்னு ரோட்டுல தூக்கிப் போட்டா. அதை அந்தப் பக்கம் பசியோட வந்த ஒரு பிச்சக்காரன் எடுத்துச் சாப்பிட்டான். இந்தப் புண்ணியத்தைத் தவிர வேற எதுவும் அந்தக் கிழவி செய்யலை. சரி இந்தப் புண்ணியத்தை வச்சாவது அவளைக் காப்பாத்தி சொர்க்கத்துக்குப் போக வைப்போம்னு நெனச்சார்.
அந்தக் கிழவியப் பாத்து, "நீ ஒனக்கும் தெரியாம ஒரு அழுகின வாழப்பழத்தைக் கொடுத்து ஒருத்தனோட பசியப் போக்கிருக்க. அதனலா அந்தப் பழத்தையே இப்ப ஒன்னையக் காப்பாத்த அனுப்பறேன். நீயி அந்தப் பழத்தப் புடிச்சிக்கிட்டு சொர்க்கத்துக்குப் போயிச் சேரு"ன்னு சொன்னாரு. அதக் கேட்ட பாட்டி சரின்னா.
கடவுள் சொன்ன மாதிரியே ஒரு அழுகுன வாழப்பழம் கிழவிய நோக்கி வந்துச்சு. அந்தப் பழத்தைக் கெட்டியா கிழவி புடிச்சிக்கிட்டா. பழம் பறக்க ஆரம்பிச்சிருச்சு. கிழவிக்கு ஏகப்பட்ட சந்தோஷம். ஆஹா கடைசியில கடவுளு நமக்கு இரக்கப்பட்டு சொர்க்கத்தைக் கொடுத்துட்டாருன்னு நெனச்சா.
வாழப்பழம் அவளை வேகமா சொர்க்கத்தைப் பாத்துக் கொண்டுபோச்சு. அப்ப இந்தக் கிழவி தன்னோட கால யாரோ புடிச்சித் தொங்குறது மாதிரி இருந்தவுடனே யாருடா இப்படித் தொங்குறதுன்னு கீழ குனிஞ்சி பாத்தா. அவளோட கால பத்துப் பதினைஞ்சி பேரு புடிச்சிக்கிட்டு வந்தாங்க. அவளுக்கு கடுமையான கோபம் வந்துருச்சி. அட நாஞ்செஞ்ச தருமத்தாலதான் நான் சொர்க்கத்துக்குப் போறேன். ஆனா நீங்க என்ன செஞ்சிங்க. ஒண்ணுஞ் செய்யாம என்னோட காலப்புடிச்சிக்கிட்டு சொர்க்கத்துக்கு வரப்பாக்குறீங்களா? இப்ப காலை விடப் போறீங்களா? இல்லையா?"ன்னு அந்தக் கிழவி கேட்டுச்சு.
ஆனா யாரும் அவளோட காலை விடுறமாதிரி தெரியலை. அந்தக் கிழவியும் காலை ஒதறி ஒதறிப் பாத்தா. யாரும் கீழ விழறமாதிரி தெரியல. என்னென்னமோ செஞ்சி பாத்த கிழவிக்குத் தாங்க முடியாத கோபம் வந்துருச்சு. அவ என்ன செய்யிறோம்னு தெரியாமலேயே வாழப்பழத்தை விட்டுட்டு அவங்களோட கைய தன்னோட கால்ல இருந்து பிடிச்சி இழுத்துவிட்டா. அவங்க நரகத்துக்குள்ளாற விழுந்தாங்க.
இந்தக் கிழவியும் அவங்களோட சேர்ந்து விழ ஆரம்பிச்சிட்டா. கிழவிக்குப் படுகோவம். "ஏ கடவுளே நாஞ் செஞ்ச புண்ணியத்துக்காக எனக்குச் சொர்க்கத்தக் கொடுத்த ஆனா இப்ப என்னய நரகத்துக்குள்ளாற தள்ளிட்டீயே. இது நல்லா இருக்கா?"ன்னு கேட்டா.
அதக் கேட்ட கடவுள், "நீ மட்டும் வாழணும்னு நெனச்சதே தப்பு. எப்ப அப்படி நினைச்சியோ அப்பவே நீ சொர்க்கத்த இழந்துட்ட. நாம மட்டும் வாழக் கூடாது. நாம கூட இருக்கறவங்களும் வாழணும். அப்பத்தான் நல்லா இருக்கும். நீ சொர்க்கத்துக்கு வரக்கூடிய நிலையிலும் நீ திருந்தலே. அதனால ஒனக்குக் கிடைக்க வேண்டிய சொர்க்கமும் ஒனக்குக் கிடைக்கல"ன்னு சொல்லிட்டு மறைஞ்சிட்டாரு. கிழவி இதக் கேட்டுட்டு ரொம்ப வருத்தப்பட்டுட்டு நரகத்தை நோக்கிப் போனா. தன்னலத்தோட யாரும வாழக்கூடாது. பொதுநலத்தோடு வாழணும். மத்தவங்களுக்கு எதுவுஞ் நல்லது செய்யாம இருந்தா இப்படித்தான் கிடைக்கிறதும் கிடைக்காமப் போயிரும்...