ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பழக்கம். சிலர் தவறான பழக்கம் என்றறிந்தால் அதனைக் கைவிட்டுவிடுவர். ஆனால் சிலரால் தவறான பழக்கம் என்று அறிந்தும் கூட அதனைக் கைவிட முடியாது. இல்லற வாழ்வினைத் துறந்து துறவியாக இருப்பவரால் கூட சில பழக்கங்களைக் கைவிட முடியாது. அதிலும் ஒட்டுக் கேட்கும் பழக்கம் எல்லாரிடமும் இருக்கும். இந்தப் பழக்கத்தைப் பற்றிய கதை ஒன்று வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றது.
ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவருக்கு எல்லாம் இருந்தும் மனதில் நிம்மதி இல்லை. இந்த நிம்மதி எங்கு கிடைக்கும். எவரிடத்தில் எப்போது கிடைக்கும் என்று அலையோ அலையென்று அலைந்தார். அவருக்கு நிம்மதி கிடைக்கவில்லை. அலைச்சல்தான் மிச்சமாகியது. அவருனால பேசாமலும் இருக்க முடியல.
என்ன செய்யிறதுன்னும் தெரியல. எதுலயும் அவரோட மனசு ஒட்டல. நடைபிணம் மாதிரி திரிஞ்சாரு. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. பேசாம ஒரு முடிவுக்கு வந்தாரு. யாருக்கிட்டயும் சொல்லாமக் கொள்ளாம எல்லாத்தையும் துறந்துட்டு சாமியாராப் போயிட்டாரு. இடுப்பு வேட்டியோட ஒரு மண்சட்டிய எடுத்துக்கிட்டுக் கௌம்பிட்டாரு.
இவரு சாமியாரப் போனதப் பாத்தவங்க எல்லாரும் ஓடிவந்து தடுத்தாங்க. ஆனா அவரு யாரு பேச்சையும் கேட்கவில்லை. அவருபாட்டுக்கு எல்லாத்தையும் ஒதறிட்டுப் போயிட்டாரு. கால்போன போக்குல போனாரு. பசி வந்தா யாருடைய வீட்டுக்கு முன்னால போயி சட்டிய நீட்டிக்கிட்டு நிப்பாரு. அவங்க போடறதச் சாப்பிட்டுத் திரும்பவும் வந்து ஏதாவது ஒரு கோயில்ல படுத்துக்கிடுவாரு.
இப்படியே பொழுது போயிக்கிட்டு இருந்துச்சு. அவரோட மனசுல கொஞ்சம் பாரம் கொறஞ்சது மாதிரி தோணுச்சு. ஒரு நாளு இவரு சட்டியில இருந்த சாப்பாட்டச் சாப்புட்டுட்டு அதைக் கழுவி பக்கத்துல காய வச்சிட்டு பேசாம படுத்துக்கிடந்தாரு.
அப்ப அந்தப் பக்கமா நாலைஞ்சு பொண்ணுங்க அந்தச் சாமியாரைப் பாத்துக்கிட்டே தண்ணீ எடுக்கக் குளத்துக்குப் போனாங்க. அப்படிப் போன பொண்ணுங்கள்ல ஒருத்தி அந்தச் சாமியாரப் பாத்து, "சாமி பண்ட பாத்திரமெல்லாம் வச்சிக்கிட்டுல்ல தூங்கிக்கிட்டு இருக்கே? சாமியாரானாலும் பண்ட பாத்திரமில்லாம இருக்க முடியாது போலருக்கே"ன்னு சொல்லிட்டு களுக்குன்னு சிரிச்சிக்கிட்டே போனா.
இதைக் கேட்ட சாமியாருக்கு சுருக்குன்னுது. துறவின்னா எதுவுமே இல்லாமல்ல இருக்கணும். நாம மண்சட்டிய வச்சிக்கிட்டு இருக்கமே! இதையும் விட்டுடணுமேன்னு நெனச்சிக்கிட்டு அந்தச் சட்டியத் தூக்கிப்போட்டுட்டு கையிலேயே வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரு.
ஒரு நாளு சாயந்தரமா வயலப்பக்கம் போனவரு கொஞ்சம் புல்லைப் புடுங்கி அதத் தலையணையா வச்சிக்கிட்டுப் படுத்துக்கிடந்தாரு. அப்ப அந்தப்பக்கமா விறகு பொறுக்குறதுக்காகப் போன ரெண்டு பொம்பளைங்கள்ல ஒருத்தி, "இந்தச் சாமியாரு ரெம்பத்தான் வசதியாத் தூங்குறாருடி. எல்லாத்தையும் துறந்துட்டாலும் இந்தத் தலையணை சுகத்தைத் துறக்க அவரால முடியலைடி. அப்பறம் எதுக்குச் சாமியாராப் போகணும்" அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டா.
இதக் கேட்டுக்கிட்டே படுத்திருந்த சாமியாரு அடச்சே எல்லாம் போயிருச்சு இந்தச் சுகமா நமக்கு வேணும். இதுவும் வேணாம்னுட்டு அந்தப் புல்லுக்கட்டத் தூக்கிப் போட்டுட்டு வரப்புல தலைய வச்சிப் படுத்திருந்தாரு. கொஞ்ச நேரம் கழிச்சி அந்தப் பக்கமா மொதல்ல போன பொம்பளைங்களே திரும்பியும் வெறகச் சுமந்துக்கிட்டு வந்தாங்க.
அப்ப சாமியாரப் பாத்துச் சொன்ன அந்தப் பொம்பள தன்னோட பக்கத்துல வந்த மத்த பொம்பளையப் பாத்து, "இங்க பாத்தியாடி எந்தப் பழக்கத்தை விட்டாலும் இந்த ஒட்டுக்கேக்குற பழக்கத்த மட்டும் இந்த சாமியாரு விடல. நாம பேசிக்கிட்டுப் போனதை இந்தச் சாமியாரு கேட்டுருக்காரு. அதனால தலைக்கு வச்சிக்கிட்டுப் படுத்திருந்த புல்லுக்கட்டத் தூக்கிப்போட்டுட்டு வரப்புல தலைய வச்சித் தூங்குறாரு. எல்லாத்தையும் விட்டவருக்கு இந்த ஒட்டுக்கேக்குற பழக்கத்தை விடமுடியலயே"ன்னு சொல்லிட்டுப் போனா.
அதைக் கேட்ட சாமியாருக்கு வெட்கமாப் போச்சு. சாமியாராப் போன நமக்கு இதையும் விட்டுரணும்னு தோணலையேன்னுட்டு அதையும் விட்டுட்டாரு.