எந்தப் பழக்கமுமே தொடர்ந்து இருந்ததுனா அது வழக்கமா மாறிடும். அதனாலதான் பழக்க வழக்கம்னு வழக்கத்துல சொல்றாங்க. என்ன எதுக்கு ஏன்னு எல்லாம் கேட்கமாட்டாங்க. அவங்க பாட்டுக்குக் காரண காரியம் தெரியாம ஒன்னச் செஞ்சிக்கிட்டு இருப்பாங்க. முன்னால உள்ளவங்க என்ன செஞ்சாங்களோ அதை அப்படியே செய்யணும். பழக்க வழக்கத்த மாத்திக்க முடியுங்களா?ன்னு வேற கேப்பாங்க. இதைப் பத்தின ஒரு கதை.
ஒரு ஊருல ஒரு சாமியாரு இருந்தாரு. அவருக்கு அந்த ஊருக்காரவுங்க எல்லாரும் சேர்ந்து ஒரு பெரிய மடத்தைக் கட்டிக் கொடுத்தாங்க. அவரும் அங்க இருந்துக்கிட்டு மக்களுக்கு நல்ல அறிவுரைகளைச் சொல்லிக்கிட்டு இருந்தாரு. அவரு சொன்னது எல்லாம் பலிக்கும்னு அந்தப் பகுதி மக்களுக்கு ரெம்ப நம்பிக்கை.
அதனால அந்தச் சாமியார வந்து பாத்தவங்க சிலபேரு அவரோட சீடர்காளா இருந்து அவருக்கும் அந்த ஊருக்கும் தேவையானவற்றைச் செஞ்சிக்கிட்டு இருந்தாங்க.
எல்லாம் இருந்தாலும் அந்தச் சாமியாருக்குன்னு இருக்கறது ரெண்டு கோவணத் துணிங்க மட்டுந்தான். அதையும் அந்த மடத்துல திரியற எலிகள் வந்து கடிச்சிட்டுப் போயிரும். அவரும் சலிக்காம அந்தக் கோவணத்தைத் தைச்சுக் கட்டிக்கிடுவாரு.
இந்த எலிகளைக் கட்டுப்படுத்தணும்னு நெனச்சாரு. ஆனாலும் அது கைமீறிப் போயிக்கிட்டே இருந்துச்சு. என்ன செய்யிறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தாரு. அப்பதைக்கு அவரோட மனசுல ஒரு எண்ணம் தோன்றுச்சு. இந்த எலிகளை விரட்டறதுக்கு ஒரு பூனைய வாங்கி வளர்க்கலாம்னு நெனச்சி ஊருக்காரங்களுக்கிட்ட சொல்லிப் பூனைய வாங்கி வளர்த்தாரு.
அந்தப் பூனை வந்ததுல இருந்து எலிகளோட தொல்லை இல்லாமப் போயிருச்சு. இந்தப் பூனையும் மடத்துக்குள்ள எங்க வேணுமின்னாலும் போயி சுத்திட்டு வரும். ஆனாலும் இந்தப் பூனையினாலயும் ஒரு சின்னப் பிரச்சனை சாமியாருக்கு வந்துருச்சு.
அது என்னன்னா சாமியாரும் சீடர்களும் காலையில சாமிக்குப் பூசை செஞ்சி சாமியக் கும்புடறபோது காலுக்குள்ளயும் கைக்குள்ளயுமா சுத்திக்கிட்டே வந்துச்சு. இத சாமியாராலயும் சீடர்களாலயும் தடுக்க முடியல.
யோசிச்சுப் பாத்தாங்க. என்ன செய்யிறதுன்னு. அவங்களுக்கு ஒன்னும் தெரியல. சாமியாரு யோசிச்சாரு. ஒருநாளு சாமி கும்புடுறபோது அந்தப் பூனை குறுக்கும் மறுக்கும் போயிக்கிட்டே வந்துச்சு. அதப் பாத்த சாமியாரு இனிமே இந்தப் பூனைய பூசைவச்சி சாமி கும்புடுறபோது இந்தத் தூண்ல கட்டி வச்சிருங்க. நாம எல்லாரும் சாமி கும்புட்ட பிறகு பூனைய அவுத்து விட்டறலாம்னு சொன்னாரு.
அதக்கேட்ட சீடருங்க அந்தப் பூனைய பக்கத்துல இருந்த தூண்ல கட்டிவச்சிட்டுச் சாமி கும்புட்டாங்க. இந்தப் பூனையால எந்தத் தொந்தரவும் இல்லை. இப்படியே தினந்தோறும் சாமி கும்புடுறபோது அந்தப் பூனையப் பிடுச்சுத் தூண்ல கட்டிவச்சிட்டுச் சாமி கும்புட்டுக்கிட்டு வந்தாங்க.
இந்தமாதிரியே சில வருஷம் போச்சு. திடீர்னு சாமியாருக்கு ஒடம்புக்கு முடியாமப் போயிருச்சு. கொஞ்ச நாள்ல முடியாம இருந்த சாமியாரு செத்துட்டாரு. அவங்க வளத்துக்கிட்டு வந்த பூனையும் செத்துப்போச்சு. சாமியாருக்கு செய்ய வேண்டியதையெல்லாம் செஞ்சி அவர சமாதியில வச்சாங்க.
சாமியாருக்குப் பிறகு யாரை மடத்துக்குச் சாமியாரா வைக்கிறதுன்னு யோசிச்சு பெரிய சாமியாரோடேயே இருந்த சின்னச் சாமிய சாமியார வைச்சாங்க. மறுநாள்ல இருந்து வழக்கப்படி பூஜைகள்லாம் தொடங்கிடுச்சு.
ரெண்டு மூணுநாள் சாமி கும்புட்டவங்கக்கிட்ட ஒரு பெரிய மனக்குறை ஏற்பட்டுருச்சு. என்ன குறை அப்படீங்கறத அவங்க யோசிச்சு யோசிச்சுப் பாத்துக்கிட்டே இருந்தபோது அவங்க மனசுல அது ஞாபகம் வந்துருச்சு. சாமி கும்புடுறபோது பூனையப் பிடிச்சு கட்டிவைக்காதது அவங்களுக்குக் குறையாப்பட்டது.
ஒடனே ஊருக்குள்ள போயி ஒரு பூனைக்குட்டிய வாங்கிக்கிட்டு வந்தாங்க. சாமி கும்புடுறபோது அந்தப் பூனை எங்க திரிஞ்சாலும் பிடிச்சிக் கொண்டாந்து பக்கத்துல இருந்த தூண்ல கட்டிப்போட்டுருவாங்க. எதுக்காக பூனையக் கட்டுரோம்? ஏன் கட்டுரோம்னு அவங்களுக்குத் தெரியாது. பெரிய சாமியாரு தூண்ல பூனையக் கட்டுனாரு. ஏதோ ஒரு சாஸ்திரத்திற்குத்தான் கட்டியிருப்பாரு. அதனால நாமளும் சாஸ்திரத்த மதிச்சுப் பூனையக் கட்டணும்னு முடிவு செஞ்சி கட்டுனாங்க.
இந்தப் பழக்கமே நாளடைவில வழக்கமா ஆயிருச்சு. சின்னச்சாமியாரு, அவருக்குப் பிறகு அடுத்தவருன்னு தொடர்ந்து அந்த மடத்துல இந்தப் பழக்கம் வழக்கத்துல இருந்துக்கிட்டு வந்துச்சாம். இப்பத் தெரியுதா பழக்க வழக்கம்னா என்னன்னு. இந்தக் கதை இன்றைக்கும் வழக்கத்துல வழங்கிவருது.