யாரையும் இழிவாப் பேசக் கூடாது. அப்படிப் பேசுனா அது எதுலாயவது கொண்டுபோய் விட்டுடும். ஏன்னா உலகத்துல எதுவும் இழிவானது இல்லை. ஒவ்வொரு காலத்துலயும் ஒவ்வொண்ணு மதிப்புப் பெறுது. இதுதான் உண்மை. இதைப் புரிஞ்சுக்காம நாந்தான் பெரியவன் அப்படீன்னு சொல்லிக்கிட்டு மத்தவங்கள இழிவுபடுத்தக் கூடாது. எந்த நிலைமையும் யாருக்கும் எப்பவும் வரலாம். அதனால எல்லாரையும் மதிச்சு நடக்கணும். செருப்பு நாடாண்ட கதை இதைத்தான் விளக்கமாச் சொல்லுது.
இந்த உலகத்தைக் காக்குறவரு திருமால். அவர் எல்லாருக்கும் வைகுண்டத்துல இருந்து வரம் கொடுத்துக்கிட்டு இருந்தாரு. வரம் வேணுங்கற எல்லாரும் வந்து வாங்கிக்கிட்டுப் போனாங்க. வைகுண்டத்துக்கு வந்தவங்க எல்லாரும் போனபிறகு யாராவது வருவாங்கன்னு கொஞ்ச நேரம் இருந்தாரு திருமால். ஒருத்தரும் வரலை.
சரி இனி யாரும் வரமாட்டாங்க நாம கொஞ்சநேரம் கண்ணசருவோம்னுட்டு படுத்தாரு. அதுக்கு முன்னால அவரோட கிரீடத்தை எடுத்து பக்கத்துல வச்சிட்டாரு. அவரோட செருப்பு மட்டும் கீழ கெடந்துச்சு. திருமாலு அசதியில தூங்க அரம்பிச்சாரு.
அப்ப இந்தக் கிரீடம் செருப்பப் பாத்து, ‘‘ஏய் இங்க பாத்தியா என்னைய பகவான் தன்னோட பக்கத்துலயே வச்சிருக்காரு. ஆனா நீயி கீழயே கிடக்கிற. உன்னவிட ஒசந்தவன் நாந்தான். புரிஞ்சிக்கோ?’’ அப்படின்னு சொன்னது.
செருப்பு ஒன்னும் பேசலை. அமைதியா இருந்துச்சு. அது அமைதியா இருந்ததைப் பாத்த கிரீடத்துக்கு தலைக்கனம் ரொம்ப ஏறிப்போயிருச்சு. மறுபடியும் செருப்பப் பாத்து, ‘‘என்ன ஒன்னால எதுவும் பேசமுடியலயா? நீ பேசறதுக்கு என்ன இருக்கு? நாந்தான் பெருமானோட தலையில இருந்து அழகுபடுத்துறேன். ஆனா நீயி கால்ல கிடந்து நல்லா மிதிபடுறே. ம்ம்ம்… என்னோட பெருமை ஒனக்கு எங்க தெரியப் போகுது?”ன்னு கேலிபண்ணி கெக்கபிக்கன்னு சிரிச்சது.
இதப் பாத்த செருப்பு, ‘‘இங்க பாரு நான் பெருமானோட கால்ல மிதிபட்டாலும் அவரோட பாதத்தைப் பாதுகாக்கிறேன். அது எனக்குப் போதும். இதைவிட எனக்கு என்ன வேணும்? எனக்கு எதுவும் வேணாம். ஒனக்குப் பெருமையின்னா அதை நீயே வச்சிக்கோ. ஒனக்குப் பெருமை இருக்குங்கறதுக்காக மத்தவங்களோட மனசப் புண்படுத்தாதே? எல்லாருக்கும் ஒரு காலம் வரும். அதைப் புரிஞ்சிக்கோன்னு’’ சொன்னது.
இதைக் கேட்ட கிரீடம், ‘‘அட இங்கபாருடா கீழ கெடக்கிற பயலுக்கு எத்தன வாய்க்கொழுப்புன்னு? பெருமானோட பாதத்தைப் பாதுகாக்குறாங்களாம்.. ஏய் செருப்பே, பெருமானப் பாக்க வர்றவங்க எல்லாரும் என்னையத்தான் நேருக்கு நேராப் பாக்குறாங்க. ஒன்னைய யாராவது பாக்குறாங்களா? இல்லையே. இதப் புரிஞ்சிக்கோ? எல்லாருக்கும் காலம் வருமாம்ல. ஒண்ணுமில்லாத பயலுக்குப் பேச்சப் பாரு பேச்சன்னு’’ ரெம்பக் கேவலமாப் பேசுனது.
செருப்பு இதைக் கேட்டு, ‘‘ரெம்ப தலைக்கனத்தோட பேசாத. எல்லாருக்கும் என்ன கொடுக்கணும்னு பெருமானுக்குத் தெரியும். என்னப் பொருத்த வரையிலும் நான் சந்தோஷமாவே இருக்கேன். எனக்கு இந்தச் சந்தோஷம் போதும்னு’’ சொல்லிட்டு தேம்பித் தேம்பி அழுதது.
இதையெல்லாம் கேட்டுக்கிட்டே இருந்த திருமாலு மெதுவா ஏந்திருச்சு, ‘‘என்ன கிரீடமே என்னோட தலையில இருக்கேங்கறதுக்காக இப்படிப் பேசலாமா? எல்லாரையும் தூக்கி எறிஞ்சி பேசக்கூடாது. என்னக்கி நீ மத்தவங்கள மதிக்காம இழிவா கர்வத்தோட பேசினியோ அதுக்கான தண்டனைய நீ அனுபவிச்சே ஆகணும். நல்லாக் கேட்டுக்கோ எந்தச் செருப்பை இழிவாப் பேசினியோ அந்தச் செருப்பு இந்த நாட்டையே ஆளப்போகுது. நீயி அந்தச் செருப்போட தலையில இருந்து அழகுபடுத்தப் போற. ஒருவருஷம் ரெண்டு வருஷம் இல்லை பதினாலு வருஷம் நீ இந்தச் செருப்போட தலையில இருந்து அழகுபடுத்தணும். அதுக்கு அப்பறம் நீங்க ரெண்டு பேரும் இங்க வாங்கன்னு’’ சொல்லி கிரீடத்துக்குச் சாபம் கொடுத்தாரு.
அதக் கேட்ட கிரீடம், ‘‘பெருமானே என்னைய மன்னிச்சிடுங்க. நான் ஏதோ புரியாமாப் பேசிட்டேன். இனிமே இந்தமாதிரி நடந்துக்க மாட்டேன்னு’’ சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கிடுச்சு.
செருப்பு பெருமான வணங்கி நின்னுச்சு. பெருமான் அதப் பாத்து எப்பவும் நீ பணிவா இருக்கற. அதனால என்னைக்கும் என்னோட அருள் ஒனக்கு உண்டு. போய்வான்னு’’ சொன்னாரு.
திருமால் இட்ட சாபத்துனால திருமால் இராமாவதாரம் எடுத்தப்ப இராமனோட செருப்ப அரியணையில வைச்சித்தான் பரதன் இராமனோட பிரதிநிதியா இருந்து நாடாண்டான். அரியணையில இருந்த செருப்பு மேல இராமனோட கிரீடம் இருந்து அழகுபடுத்துச்சு. இப்படி பதினாலு வருஷம் செருப்பு அரியணையில இராமனுக்குப் பதிலா இருந்து அயோத்திய ஆண்டுச்சு. அதுக்கு அப்பறம் இராமனாகிய திருமாலப் போயி செருப்பும் கிரீடமும் போயிச் சேந்துச்சு. இதுதான் செருப்பு நாடாண்ட கதை. அதனால யாரையும் நாம மரியாத இல்லாம பேசக் கூடாது. எல்லாரையும் மதிச்சு நடந்துக்கணும்.