ஊரித்திரியும் பூச்சி இனங்களுள் பூரானும் ஒன்று. இதனைக் கிராமங்களில் வீடுகளிலோ அல்லது வயல்வெளிகளிலோ கண்டால் கொல்ல மாட்டார்கள். அதிலும் ஆண்கள் அதனைக் கொல்லக் கூடாது. அப்படிக் கொன்றால் பாவம் வந்து சேரும் என்று கூறுவார்கள். பெரும்பாலும் பெண்கள் இதனைக் கொன்று விடுவார்கள். ஏன் ஆண்கள் இந்தப் பூரான்களைக் கொல்வது கிடையாது? இதற்கு ஒரு கதை வழக்கத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.
ஒரு ஊருல புருஷன் பொண்டாட்டி ரெண்டுபேரு இருந்தாங்க. புருஷங்காரன் தெனந்தோறும் வயல் வேலைக்குப் போயி நல்லாச் சம்பாதிச்சிக்கிட்டு வந்து கொடுப்பான். பொண்டாட்டிகாரி வீட்டுல இருந்துக்கிட்டு அவனுக்கு வேண்டியதைச் சமைச்சிப் போட்டுக் குடும்பத்தை நடத்திக்கிட்டு வந்தா.
இப்படியே போயிக்கிட்டு இருந்தது. அப்பப் பாத்து பொண்டாட்டிகாரிக்குப் புத்தி தடுமாறிப் போச்சு. என்னன்னா புருஷங்காரன் வயல் வேலைக்குப் போன பின்னாடி பக்கத்து வீடு, அடுத்த வீடுன்னு போயி பேசப் போயிருவா. அப்படிப் பேசி வந்துக்கிட்டு இருக்கையில பக்கத்து வீட்டுக்காரனோட இவளுக்குத் தொடர்பு ஏற்பட்டுப் போச்சு.
இப்படித் தொடர்பு ஏற்பட்டதனால அவளாள குடும்பத்த சரிவர நடத்த முடியல. புருஷங்காரன் கொண்டு வந்து கொடுக்கறதுல பாதிய அவ தன்னோட கள்ளப் புருஷனுக்குக் கொடுத்துருவா. இதனால குடும்பத்துல வழிச்சிக்க தொடைச்சிக்கன்னு வறுமை வந்துருச்சு.
புருஷங்காரன் என்னடா இப்படி வந்துருச்சேன்னு ரெம்ப வெசனப்பட்டான். இன்னும் ரொம்ப ஒழைக்கணும். அப்பத்தான் நாம இதுல இருந்து மீள முடியும்னு நெனச்சி ஒழைச்சான். ஆனாலும் அவனுக்கு வறுமைதான் மேலும் மேலும் பெருகுச்சி. அவனுக்கு ஒண்ணும் புரியல.
பொண்டாட்டிகாரி புருஷனுக்குத் தெரியாமத் தெரியாம தன்னோட கள்ளப் புருஷனுக்கு எல்லாத்தையும் எடுத்து எடுத்துக் கொடுத்துக்கிட்டே இருந்தா. இதுனால வீட்டுல எந்தப் பொருளும் இல்லாமப் போயிக்கிட்டு இருந்துச்சு.
புருஷங்காரனுக்கு என்னமோ வீட்டுல நடக்குதுன்னு பொறிதட்டுச்சு. சரி பொண்டாட்டிகாரிக்கிட்டக் கேப்போம்னு கேட்டான். ‘‘என்னடி இப்படி தட்டுப்பாடு வந்துருச்சே. என்ன காரணம்னு’’ கேட்டான். அதுக்கு அவ, ‘‘நான் என்ன பண்றது. நீயி கொண்டுக்கிட்டு வர்றது வாயிக்கும் வயித்துக்குமே சரியா இருக்குது. நானென்ன யாருக்கிட்டயும் அள்ளியா கொடுத்துக்கிட்டு இருக்கேன்னு’’ பட்டுன்னு சொல்லிட்டா.
புருஷங்காரன் சரின்னு விட்டுட்டு இதுக்குக் காரணத்தைக் கண்டுபிடிக்கணும்னு மெனக்கெட்டான். ஒருநாளு பொண்டாட்டிகாரிக்கிட்ட வேலைக்குப் போறதாச் சொல்லிட்டு வீட்டுக்குள்ளாற பரண்மேல ஏறி ஒளிஞ்சிக்கிட்டான். பொண்டாட்டிகாரி நம்ம புருஷங்காரன் போயிட்டான்னு நெனச்சிக்கிட்டு மொதநா புருஷங்காரன் வாங்கிக்கிட்டு வந்த அரிசியில பாதிய எடுத்துச் சாக்குல கட்டி எடுத்துக்கிட்டு கள்ளப் புருஷங்கிட்ட கொடுக்கிறதுக்காகப் போனா.
புருஷங்காரன் அவ பின்னாலயே அவளுக்குத் தெரியாமப் போனான். பொண்டாட்டிகாரி அவ வச்சிருக்கிற கள்ளப் புருஷங்கிட்ட அரிசியக் கொடுத்துட்டுத் திரும்பி வந்தா. புருஷங்காரனுக்கு எல்லாம் தெரிஞ்சி போச்சு. இப்படித்தான் நம்மளோட பொருளு போகுதுன்னு தெரிஞ்சிக்கிட்டான்.
இவளக் கையுங் களவுமாப் புடிக்கணும்னு நெனச்சிக்கிட்டு வீட்டச் சுத்திச் சுத்தி வந்தான். பொண்டாட்டிகாரிக்கு ஆஹா நம்மளோட கள்ளத் தொடர்பப் புருஷங்காரன் தெரிஞ்சிக்கிட்டான் போலருக்கு. கையுங் களவுமா புடிச்சிட்டான்னா நம்ம கதை அதோகதியாப் போயிடும். இனி இவன விட்டு வைக்கக் கூடாது. இவங் குடிக்கற பால்ல விஷத்தப் போட்டுக் கொன்னுற வேண்டியதுதான் முடிவு பண்ணினா.
புருஷங்காரனுக்குச் சந்தேகம் வராத அளவுக்கு பொண்டாட்டிகாரி கெட்டிக்காரத்தனமா நடந்துக்கிட்டா. ஆனாலும் புருஷங்காரன் அவள நம்பள. ரெம்பக் கவனமா நடந்தான். ஒருநாளு எப்பவும் போல வயலுக்குப் போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வயலுக்குப் போனான்.
பொண்டாட்டிகாரி இவன இன்னைக்கு வெஷம் வச்சிக் கொன்னுப்புடணும்னு முடிவு செஞ்சா. அதுக்காக நல்ல பால வாங்கிக்கிட்டு வந்து நல்லாச் சுண்டச் சுண்டக் காய்ச்சி அதுல அதிகமான வெஷத்தைகலக்கறதுக்காக ரெடியா வச்சிருந்தா.
புருஷனும் வயலுக்குப் போயிட்டு வந்து சாப்பிட வந்தான். அன்னைக்கு அவனுக்குப் புடிச்சதை நல்லா சமைச்சி பொண்டாட்டிகாரி போட்டா. அவனும் அவ சந்தேகப் படாதவாறு நல்லாச் சாப்புட்டான். அவன் சாப்புட்டு முடிச்ச பின்னால அவனுக்குப் பால்ல வெஷத்தைக் கலந்து கொண்டுக்கிட்டு வந்து கொடுத்தா. அவனும் பால் நல்ல கமகமன்னு இருக்கறதப் பாத்துட்டு அதக் கொஞ்ச நேரம் ஆறின பெறகு குடிக்கிறேன்னு பக்கத்துல வச்சிருந்தான்.
அப்படி இருக்கறபோது எங்கிருந்தோ ஒரு பூரான் வேகமா ஊர்ந்து வந்து அவன் குடிக்க வச்சிருந்த பால்ல விழுந்துடிச்சி. அதப் பாத்த புருஷங்காரன் ஆஹா இந்தப் பால்ல பூரான் விழுந்துருச்சேன்னு நெனச்சி அதக் குடிக்காம கீழ ஊத்துனான். அப்ப அவன் வீட்டுல வளத்த பூனை அதைவந்து நக்கிக் குடிச்சது. அப்படிக் குடிச்ச பூனை ஒடனே கொஞ்ச நேரத்துல இறந்து போயிடுச்சி. இதப் பாத்த பொண்டாட்டிகாரிக்குப் படபடன்னு வந்துருச்சு.
புருஷன் அடிச்சே கொல்லப்போறான்னு நெனச்சி உண்மையச் சொல்லிருவோம்னு அழுதுகிட்டே உண்மையச் சொன்னா. அதக் கேட்ட புருஷங்காரன், ‘‘என்னக்கி நீ இப்படி நடந்துக்கிட்டியோ இனிமே இங்க ஏங்கூட நீ வாழக் கூடாது. சொல்லாமக் கொள்ளாம நீ ஒன்னோட அப்பன் வீட்டுக்குப் போயிரு. போறதுக்கு முந்தி என்னோட தாலியக் குடுத்துரு. இந்தப் பூரான்மட்டும் வந்து இந்தப் பால்ல விழுந்து என்னையக் காப்பாத்தலன்னா நான் இன்னேரம் பாலக் குடிச்சிட்டு செத்துருப்பேன்னு’’சொல்லி அவள அடிச்சித் தொரத்திவிட்டுட்டான். இந்தச் சேதி ஊருமுழுக்கப் பரவிடிச்சி. அன்னையில இருந்து இன்னவரைக்கும் யாரும் ஆம்பளைங்க பூரானக் கொல்லமாட்டாங்க. அதத் தூக்கித் தூரப் போட்டுட்டு வந்துடுவாங்க.