சில விலங்குகளைக் கண்டா அன்போட இரையெல்லாம் போட்டு அடிக்காம, கொல்லாமப் பாதுகாக்குறோம். சிலதப் பாத்தா தொரத்தித் தொரத்தி அடிச்சி வெரட்டுறோம். ஓணானப் பாத்தாக் கல்லால அடிச்சி வெரட்டுறோம். இதுக்கு ஒரு காரணம் இருக்கு. இதப் பத்தின ஒரு கதையும் இருக்கு. இந்தக் கதை இராமனோட தொடர்புடையது.
இராமனும் லெட்சுமணனும் சீதையோட காட்டுக்குப் போனாங்க. அப்ப ஒரு பெரிய காட்டுல சீதையோட தங்கி இருந்தாங்க. இராமனும் இலட்சுமணனும் வெளியில போயிருந்ததைப் பாத்துட்டு இராவணேஸ்வரன் சந்நியாசி வடிவத்துல வந்து சீதைக்கிட்ட பிச்சை வாங்கிக்கிட்டு அவளத் தூக்கிக்கிட்டுப் போயிட்டான்.
வெளியில போயிருந்த ரெண்டுபேரும் வந்து பாத்தாங்க. சீதையைக் காணல. ரெண்டுபேரும் தேடுனாங்க. ராமன் ஒரு பக்கம். லெட்சுமணன் ஒரு பக்கம்னு தேடுனாங்க. இராமன் தனியாத் தேடித் தேடி அலைஞ்சதுல அவனுக்கு களைப்பு வந்துருச்சு. வெயில் அதிகமா இருந்ததுனால அவனுக்குத் தண்ணித் தாகம் எடுத்துச்சு.
தண்ணி கிடைக்காமத் தேடித் தேடி அலைஞ்சான். அப்ப ஒரு கள்ளிமர நிழல்ல கொஞ்சம் ஒக்காந்தான். அப்ப ஒரு பெரிய கரட்டான், அதான் ஓணான் ஒண்ணு அந்தப் பக்கமா வந்துச்சு. இராமனப் பாத்துச்சு. இராமன் இந்த கரட்டாங்கிட்ட தண்ணி இருக்கான்னு கேப்பம்னு நெனச்சிக்கிட்டு அதுக்கிட்ட, ‘‘ஏ கரட்டான் எனக்குத் தண்ணித் தாகமா இருக்கு. எங்கயாவது தண்ணி இருக்கா? அல்லது ஒங்கிட்டயாவது தண்ணி இருந்தாக் குடு’’ அப்படீன்னு கேட்டாரு.
அதுக்கு அந்தக் கரட்டான் இராமனத் தெரிஞ்சிக்காம ‘‘ஒனக்குத் தண்ணி வேணுமா? நீ யாருன்னு’’ கேட்டுச்சு. அதக்கேட்ட ராமன் ஆமா எனக்குத் தண்ணி வேணும். நான்தான் தசரதனோட மகன் இராமன். சீதையக் காணோம் அவளத் தேடிக்கிட்டு வந்தேன். வந்த எடத்துல களைப்பா இருந்துச்சு. தண்ணித் தாகமா இருக்கு. எனக்குத் தண்ணி வச்சிருந்தா கொடு”ன்னு கேட்டாரு.
அதக் கேட்ட கரட்டான், தண்ணிதான வேணும். இரு தர்றேன்னு சொல்லிட்டு, அங்ஙன கெடந்த கொட்டங்குச்சிய எடுத்துக்கிட்டுப் போயி மறைவா நின்னுக்கிட்டு தன்னோ மூத்திரத்தைப் பேஞ்சு கொண்டாந்து கொடுத்துச்சு.
அதத் தண்ணின்னு வாங்கிக் குடிக்கறதுக்காக ராமன் வாயிக்கிட்ட கொண்டு போனபோது ஒரே நாத்தமா நாறுச்சு. ராமன் அதத் தூக்கிப் போட்டுட்டாரு. அதப் பாத்த கரட்டான் தலையத் தலைய ஆட்டிக்கிட்டு ராமனப் பாத்து நக்கல் பண்ணிச்சு. அதப் பாத்த ராமனுக்குக் கடுமையான கோவம் வந்துருச்சு.
ஒடனே கரட்டானப் பாத்து, ‘‘நான் தண்ணி கேட்டதுக்கு எனக்கு ஒண்ணுக்குப் பேஞ்சி தந்த அதனால இனிமே ஒண்ண யாரு பாத்தாலும் தொரத்தித் தொரத்தி அடிச்சிக் கொல்லுவாங்க’’ போ அப்படீன்னு சாபங்கொடுத்தாரு. அன்னியில இருந்து இன்னிக்கு வரைக்கும் கரட்டான எங்க பாத்தாலும் சின்னப் பயலுகள்ள இருந்து பெரியாளுக வரை கல்லால தொரத்தித் தொரத்தி அடிச்சிக் கொல்றாங்க. கரட்டானும் தன்னோட செயலுக்காக வருத்தப்பட்டுச்சு. சின்னப் பயலுக அதப் பாத்த ஒடனே, ‘‘நீயி ராமன் தண்ணி கேட்டதுக்கு ஒண்ணுக்குப் பேஞ்சி கொடுத்தியில்ல. ஒன்ன சும்மா விடக்கூடாதுன்னு தொரத்தித் தொரத்தி கல்லால இன்னிக்கு வரைக்கும் அடிச்சிக் கொல்றாங்க. அதனால மத்தவங்க கண்ணுல படாம கரட்டான் ஒதுங்கியே இருக்குது. ஒதவி செய்யாட்டியும் ஒபத்திரவம் செய்யக் கூடாது. பெரியவங்கக்கிட்ட மரியாதக் குறைவா நடந்தா இப்படித்தான் ஆகுங்குறதுக்கு இந்தக் கதையச் சொல்றாங்க.