ஒவ்வொன்னுக்கும் ஒரு கதை இருக்கு. அணிலு மேல மூணு கோடு இருக்கும் அது எதுனால வந்தது தெரியுமா? அதப் பத்தியும் ஒரு கத இருக்கு.
இராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு சென்று இலங்கையில் அசோக வனத்தில் சிறை வைத்து விட்டான். சீதையைத் தேடி இராம இலக்குவர்கள் இருவரும் காட்டில் அலைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அனுமனும், சுக்கிரீவனும் அவர்களுக்கு உதவினர். சீதை இருக்குமிடத்தை அனுமன் கண்டறிந்து வந்து இராம இலக்குவர்களிடம் கூறினான்.
இராம இலக்குவர்கள் இலங்கைக்குப் போவதற்குத் தயாரானார்கள். இலங்கைக்குச் செல்வதற்குக் கடலைக் கடந்து செல்ல வேண்டும். வானரப் படைகள் இலங்கைக்குச் செல்லத் தயாராகும் போது கடல் குறுக்கே இருந்தது. கடலை எப்படிக் கடக்கறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தபோது பாலங்கட்டலாம்னு தோனுச்சி.
ஒடனே அங்க இருந்த குரங்கு, கரடி எல்லாம் சேர்ந்து பாலம் கட்ட தொடங்கிடுச்சுங்க. இராமனுக்கு அங்க இருந்த அத்தனை உயிர்களும் வந்து தங்களால முடிஞ்சத செஞ்சதுங்க. பாலங்கட்டுற வேலைக்கு நாங்களும் வர்றோம்னு அணிலுங்க வந்து இராமனப் பாத்துக் கேட்டதுங்க.
ஆனா இராமன் சின்னஞ்சிறிய அணிலுகளப் பாத்துட்டு, பாவம் இதுகனால என்ன செய்ய முடியும்? நம்மளோட கஷ்டத்துக்கு இந்தச் சின்ன உசுருகளக் கூடவா நாம கஷ்டப்படுத்தனும். நம்மளோட கஷ்டம் நம்மளோடயே போகட்டும்னு மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டு, அணிலகளப் பாத்து, “நீங்க ஒதவி செய்யிறதுக்காக வந்து என்கிட்டக் கேட்டதுக்கு ரொம்ப நன்றி. நீங்கள்ளா சின்னவங்க. ஒங்களால என்னத்தைச் செய்ய முடியும். பராவயில்லை. நீங்க போயிட்டு வாங்க” அப்படீன்னு சொல்லி அதுகளப் போகச் சொன்னாரு.
இதக் கேட்ட அணிலுக நாம இராமனுக்கு என்ன ஒதவி செய்யலாம்னு யோசிச்சிப் பாத்துச்சுங்க. பாலத்தையே பாத்துக்கிட்டு இருந்துச்சு. ஒடனே அதுகளுக்கு சட்டுனு ஒரு யோசன வந்தது. கடல் தண்ணியில விழுந்துட்டு மணல்ல புரண்டுட்டு வந்து பாலத்துல தங்களோட ஒடம்ப ஒதறுச்சிங்க. மணல் விழுந்ததால பாலம் நல்லா உறுதியாயிடுச்சு.
இப்படியே எல்லா அணிலுகளும் வந்து கடல்ல விழுந்து மணல்ல புரண்டுக்கிட்டு வந்து பாலங்கட்டுறதுக்குரிய மணலக் கொண்டு வந்து கொடுத்துக்கிட்டு இருந்துச்சுங்க.
அப்ப பாலங்கட்டுற வேலையைப் பாக்குறதுக்காக அங்க இராமரும் லெட்சுமணரும் வந்தாங்க. பாலம் முடியற தருவாயில இருந்துச்சு. பாலங்கட்டுறதுக்கு வேண்டிய மணல சின்னோண்டு அணிலுக கொண்டு வந்து கொடுத்ததைப் பாத்துக்கிட்டே இருந்த இராம லெட்சுமணருக்கு ரொம்ப ரொம்ப ஆச்சரியமாப் போயிடுச்சு.
இந்த அணிலகள நாம போகச் சொன்னோம். ஆனா இதுக மணல இப்படிக் கொண்டு வந்து கொண்டுவந்து கொடுத்து ஒதவுதுங்களேன்னு நெனச்சிக்கிட்டு பாலங்கட்டுற வேலை முடிஞ்ச ஒடனே அந்த அணிலுகளக் கூப்புட்டுத் தன்னோட மடியில வச்சிக்கிட்டு அதுகளோட பொறுப்பான வேலைகளச் சொல்லிச் சொல்லி வியந்து பாராட்டுனாரு.
அதுகளுக்கு என்ன செய்யிறதுன்னு யோசிச்சாரு. அந்த அணிலுக மேல தன்னோட விரலுகள வச்சித் தடவுனாரு. அப்படியே மூணு கோடு விழுந்துருச்சி. அது பாக்குறதுக்கு அழகா இருந்தது. இராமன் தன்னோட அன்பான நினைவுப் பரிசாக் கொடுத்ததுன்னு அணிலுக நெனச்சிச் சந்தோஷப்பட்டதுங்க.
அன்னையில இருந்து அணிலுக மேல் இருக்குற கோட்டுக்கு இராமர் கோடுன்னு பேரு வந்துருச்சு.
இராமர் தங்கள் ஒடம்பு மேல அன்பாப் போட்ட இராமர் கோட்டப் பார்த்துப் பார்த்து அணிலுக பூரிச்சிப் போச்சுங்க.
அன்னையில இருந்து மக்களும் அணிலுகள அடிக்காம அன்போட பாத்துக்குறாங்க. அணிலுகள அடிச்சா இராமனோட சாபத்துக்கும் கோபத்துக்கும் ஆளாக நேரிடும்னு நெனச்சி, அணிலுகள எதுவும் செய்யாம அதையும் தங்களோட பிள்ளைன்னு நெனச்சிக்கிட்டு அணிற்பிள்ளைன்னு சொல்றாங்க.