எலி ஏன் வயல்ல இருக்கற நெற்கதிர்களை எல்லாம் அழிக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமா? அதுக்கு ஒரு கதை இருக்கு...
ஒரு காலத்துல மனிதர்கள் எல்லாரும் கூட்டங் கூட்டமா வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க... அவங்க உணவுக்காக ஒவ்வொரு நாளும் இடம்விட்டு இடம் மாறிக்கிட்டே இருப்பாங்க. அப்படி இடம் மாறிப் போனாலும் அவங்களுக்கு கால்வயிறும் அரைவயிறும்தான் நிரம்பும். முழுசா வயிறு நிரம்பிப் பசியில்லாம அவங்க இருந்ததுங்கறது இல்லை.
இப்படிப் பசியும் பட்டினியுமா அவங்க உணவத் தேடித் தேடி அலைஞ்சி வாழ்ந்துக்கிட்டிருந்தாங்க. அப்படி உணவு தேடி அவங்க காட்டுல ஒரு நாளு அலைஞ்சிக்கிட்டு இருந்தபோது அன்னைக்குன்னு பாத்து எதுவுமே சாப்பிடறதுக்குக் கிடைக்கல. அதனால அவங்க எல்லாரும் ஒரு பெரிய மரத்தடியில பசி வயித்தக் கிள்ளப் படுத்துக்கிட்டு இருந்தாங்க.
இவங்களோட நிலைமையப் பாத்த ஒரு எலி அவங்களுக்கு எப்படியாவது ஒதவணும்னு நெனச்சது. அந்தக் கூட்டத்துக்குத் தலைவன் மாதிரி இருந்த ஒருத்தனோட பக்கத்துல போயி அவனக் கூப்புட்டு, “ஐயா நீங்கள்ளாம் பசியோடவும் பட்டினியோடவும் இருக்கறது மாதிரித் தெரியுது. நான் ஒங்களுக்கு ஒதவி செய்யலாம்னு பாக்குறேன். என்கிட்டக் கொஞ்சம் நெல்லு இருக்கு. அதனோட விதையத் தர்றேன். நீங்க மண்ணக் கிளறிப் போடுங்க. அதுல இருந்து நெறைய நெல்லு கிடைக்கும். அந்த நெல்ல நீங்க சாப்புடறதுக்கு வச்சிக்கோங்க. நீங்க சாப்பாட்டுக்குக் கஷ்டப்படமாட்டீங்க. ஒரு இடத்துல நெலையா நெலைச்சி இருக்கலாம்”ன்னு சொன்னது.
அதக் கேட்ட அவன் மத்தவங்களயும் எழுப்பி அதச் சொன்னான். அவங்களுக்கும் அது பிடிச்சிருந்தது. எல்லா மனுசனுங்களும் சேர்ந்து அந்த எலிக்கிட்ட, “ஒங்களுக்குப் புண்ணியமாப் போயிரும் எங்களுக்கு அந்த நெல்லக் கொடுங்க”ன்னு கேட்டானுங்க.
அதுக்கு அந்த எலி ஒரு நிபந்தனை விதிச்சது. அந்த மனுசங்களப் பாத்து, “நீங்க எல்லாம் எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடுக்கணும். அது என்னன்னா மனுசங்களான ஒங்கள்ள ஒருத்தரு எறந்துட்டா அவரை பாடையெல்லாம் கட்டித் தாரை தப்பட்டை முழக்கத்தோட அழுது பொலம்பிக் கொண்டு போயி பொதைக்கிறது மாதிரி நானோ என்னச் சாந்தவங்களோ எறந்துட்டா நீங்களும் எங்கள ஒங்களுக்குச் செய்யுறது மாதிரியே செஞ்சி அடக்கம் பண்ணனும் அப்படிச் செய்வீங்களா?”ன்னு கேட்டது.
அதுக்கு அங்க இருந்தவங்க எல்லாரும், “கண்டிப்பா செய்வோம். இது சத்தியம். தயவு செஞ்சி எங்களுக்குக் கொஞ்சம் நெல்லக் குடு ஒனக்குப் புண்ணியமாப் போயிரும்”ன்னு சொல்லி சத்தியம் செஞ்சி கொடுத்தானுங்க.
எலியும் சத்தியத்த வாங்கிக்கிட்டு தன்னோட வளைக்குள்ளாற இருந்த நெல்லுல கொஞ்சத்த அள்ளிக் கொண்டாந்து மனுசங்கக்கிட்ட கொடுத்துச்சு.
மனுசனுங்க அதை வாங்கி எலி சொன்னது மாதிரியேப் பூமிக்குள்ளாப் போட்டு விதைச்சாங்க. நெல்லு நல்லா வௌஞ்சது. அவங்களோட பசியும் போயிருச்சி. அந்த நெல்ல வச்சேத் திரும்பத் திரும்ப விதைச்சி எங்கயும் போகாம ஒரே இடத்துல இருந்து மனுசனுங்க வாழத்தொடங்கினாங்க.
அப்படி இருக்கற நேரத்துல இந்த எலியும் அங்கிட்டு இங்கிட்டு போயிக்கிட்டு இருந்துச்சு. அதுக்கு மனசுக்குள்ளாற இந்த மனுசங்க நமக்கிட்ட செஞ்சி கொடுத்த சத்தியத்தைக் காப்பாத்துவானுங்களா? இல்ல மதிக்காம நடந்துக்குவாங்களான்னு? ஒரு சந்தேகம் வந்துருச்சு. சரி இதச் சோதனை செஞ்சி பாத்துருவோம்னு நெனச்சிக்கிட்டு ஒருநாளு மனுசங்க நெல்லு வெதைச்சிருந்த வயல் பக்கம் போனது.
அப்படிப் போனபோது, அந்த வயலத் தன்கிட்டச் சத்தியஞ் செஞ்சி கொடுத்த மனுசங்கக் கூட்டத் தலைவன் சுத்திப் பாத்துக்கிட்டு வந்தான். அத அந்த எலி பாத்துட்டு, “சரி இவன சோதன பண்ணுறதுக்கு இதுதான் சரியான நேரம்னு நெனச்சிக்கிட்டு, வய வரப்புல அது செத்துப்போனது மாதிரி முண்டாமப் படுத்துக்கிருச்சி.
அப்ப அந்த வழியா மனுசன் வந்தான். அவன் வழியில தனக்கு ஒதவுன எலி செத்துப் போயிக் கிடக்கறதப் பாத்தான். ஒடனே அந்த எலியோட வாலப் புடுச்சி அத ஒரு வீசு வீசி பலங்கொண்ட மட்டும் தூக்கி பக்கத்துல ஓடுன ஆத்துக்குள்ளாற வீசுனான். எலி தொபக்கடீர்னு ஆத்துத் தண்ணிக்குள்ளாற விழுந்துருச்சி.
எலிக்குக் கோபமான்னா கோபம் அப்படி ஒரு கோபம். மெதுவா அந்தத் தண்ணியில இருந்து நீந்திக் கரை சேந்து ஓட்ட ஓட்டமா ஒடியாந்து அந்த மனுசன் முன்னால நின்னுக்கிட்டு, “அடப் பச்சத் துரோகிப் பயலே. எனக்கிட்ட சத்தியஞ் செஞ்சி கொடுத்த மாதிரி நீ நடந்துக்கல. அதனால இனிமே இந்த மனுசங்க எல்லாம் எனக்கு எதிரி. நீங்க வெதக்கிற நெல்ல எல்லாத்தோட வேரை எல்லாம் அறுத்தெறிஞ்சிடுவோம். அதுமட்டுமில்லாம நீ வெளைய வச்சிருக்கற எந்தப் பயிரா இருந்தாலும் அதையெல்லாம் நானும் எங்க எனத்தவங்களும் அத அறுத்து எங்களோட வளைக்குள்ளாற சேத்து வச்சிக்குவோம். இதுதான் நாங்க ஒங்களுக்குக் கொடுக்குற தண்டனை” அப்படீன்னு சொல்லிட்டுப் போயிருச்சு.
அன்னையில இருந்த இந்த எலிங்க தங்களுக்குத் துரோகம் செஞ்ச மனுசனப் பழிக்குப்பழி வாங்குறதுக்காக அவங்களோட வெள்ளாமையை அழிக்கத் தொடங்கிடுச்சிடுங்க. எலிங்க வயல்ல வெளையற நெல்ல கத்தரிச்சிக்கிட்டுப் போயி வளைக்குள்ளாற வைக்கிற ரகசியம்.