சில பேரு தன்கிட்ட என்ன இருக்குங்கறத மறந்துட்டு இருப்பாங்க. தனக்கிட்ட என்ன இருக்கு? என்ன இல்லைன்னு அவங்களுக்கேத் தெரியாது. அப்படிப்பட்டவங்க எப்பப் பாத்தாலும் கஷ்டம் கஷ்டம்னு சொல்லிக்கிட்டேக் கஷ்டப்பட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்ககிட்ட இருக்கறதப் பார்த்த மத்தவங்க அவங்களப் பத்தி இழிவாவும் கேவலமாவும் நினைப்பாங்க. இதப்பத்தின கதை ஒண்ணு இந்தப் பக்கம் வழக்கத்துல வழங்கி வருது.
அந்த ஊரு பெரிய ஊரு. அங்க ஒரு பிச்சைக்காரன் ஒருத்தன் இருந்தான். அவன் கையில கன்னங்கரேல்னு ஒரு வரையோடு இருந்துச்சு. அதுலதான் அவன் கடைகடையா ஏறி இறங்கிப் பிச்சை எடுப்பான். இந்த ஓட்டப் பத்தி அவங்கிட்டக் கேட்டாக்க இது என்னப் பெத்த அப்பாரு வச்சிருந்தாரு. அதுக்குப் பெறகு இத நான் வச்சி பிச்சை எடுக்கறேன். இந்த ஓடு எங்க அப்பாவுக்கு எப்படிக் கிடைச்சதுன்னு தெரியாது. வழிவழியா எங்கத் தொழிலு பிச்சை எடுக்கறதுதான். அப்படித்தான் இந்த ஓடு ஏங்கைக்கு வந்துருக்குன்னு பதில் சொல்வான்.
எல்லாரு கடைக்கும் வருவான். கொடுத்தா வாங்கிக்குவான். கொடுக்கலைன்னா பேசாமப் போயிருவான். சந்தைன்னா ஒரு இடத்துல ஓட்ட ஏந்திக்கிட்டு நிப்பான். மழை வந்தாலும் சரி. வெயிலடிச்சாலும் சரி. அப்படியே ஆணி அடிச்சி வச்சமாதிரி சந்தைக்கு நடுவுல ஓட்ட ஏந்திக்கிட்டு நிப்பான்.
சந்தைக்கு வர்ரவங்க போறவுங்க அவனோட வரையோட்டுல ஏதாவது போடுவாங்க. இப்படியே அவனோட காலம் போயிக்கிட்டு இருந்துச்சு. அவன் இப்படி இருந்ததால அங்க இருந்த வியாபாரிங்களுக்கு அவம்மேல ஒரு இனந்தெரியாத பாசமும் பிடிப்பும் ஏற்பட்டுருச்சி. அதனால அவன் கடைக்கு வந்து பிச்சை கேக்குறதுக்கு வரையோட்டை ஏந்துன ஒடனே அவனோட வரையோட்டுல ஏதாவது போட்டுருவாங்க.
அப்படி இருக்கறபோது ஒருநாள் சந்தை கூடினபோது அவனக் காணோம். கடைகளுக்கும் வந்து அவன் பிச்சை எடுக்கல. என்னடான்னு கடைக்காரங்க எல்லாம் அவனப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தாங்க. சந்தை எல்லாம் முடிஞ்சது. அவன ஆளையே காணோம்.
மறுநாளும் அவனக் காணோம். அவனத் தேடிக்கிட்டு அங்க இருந்த அத்தன பேரும் அவன் தங்கி இருக்கற இடிஞ்சி கெடந்த ஒரு கட்டிடத்துக்குள்ளாறப் போனாங்க. அங்க அவன் வாயில நொறைத் தள்ளிச் செத்துக் கிடந்தான். அவன் பிச்சை எடுக்கற வரையோடும் பக்கத்துல கெடந்துச்சு.
அவன் மேல இரக்கப்பட்ட அந்த ஆளுங்க எல்லாரும் அவன அடக்கம் பண்றதுக்கு தூக்கிக்கிட்டு வந்தாங்க. எல்லாரும் சேர்ந்து அவனுக்கு உரிய மரியாதையச் செஞ்சி அவன அடக்கம் பண்ணுனாங்க. பெறகு அவனோட வரையோட்டை அவனோட புதைச்ச எடத்துமேல வைக்கலாம்னு எடுத்தாங்க. அப்பக் கைதவறி அந்த ஓடு ஒரு பெரிய பாறாங்கல்லுல விழுந்துச்சு. விழுந்த ஒடனே அந்த ஓடு ஒடையல.
ஆனா அந்த ஓட்டுல பாசம் மாதிரி படிஞ்சிருந்த கரி அப்படியே தொப்பையாக் கழண்டு விழுந்துச்சு. இப்ப அந்த வரையோடு தங்கம் மாதிரி தெரியத் தொடங்கிடுச்சு.
அதப் பார்த்த அந்த ஆளுங்க அது தங்கமான்னு சோதிச்சுப் பாத்தாங்க. அது தங்கம்னு எல்லாருக்கும் தெரிஞ்சி போயிருச்சு. அவங்களுக்கு ஒரே ஆச்சரியம். அடப்பாவி இவனும் இவனோட பரம்பரையும் தங்ககிட்ட என்ன இருக்குங்கறதையே தெரிஞ்சிக்காம பிச்சை எடுத்தேக் கேவலமாத் திரிஞ்சி செத்துப் போயிட்டாங்களே. இவன நல்லபயன்னு நெனச்சிருந்தோமே. இப்படிப்பட்ட அடி முட்டாளாவும் படு சோம்பேறியாவும் இருந்திருக்கானேன்னு திட்டிட்டு அந்தத் தங்கத்த அரசாங்க கஜானாவுல சேத்துட்டு அந்தப் பிச்சைக்காரனோட அறியாமையையும் முட்டாள் தனத்தையும் சொல்லிச் சொல்லித் திட்டிக்கிட்டுப் போனாங்க.
இந்தப் பிச்சைக்காரன் மாதிரிதான் நாமளும் நமக்கிட்ட இருக்கறது என்னதுங்கறதத் தெரிஞ்சிக்காம நடந்துக்கிட்டு இருக்கறோம். அடுத்தவங்கக்கிட்ட என்ன இருக்குதுங்கறதப் பாக்குறதுக்குத் துடிக்கறமே தவிர நம்மக்கிட்ட என்னென்ன இருக்குங்கறத மறந்துடுறோம். மத்தவங்களப் பார்க்காம நம்மப் பத்தி யோசிச்சா நம்மளோட வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்றதுக்கு இந்தக் கதையை இந்தப் பக்கம் மக்கள் சொல்லிக்கிட்டு இருக்காங்க...