சிலருக்கு எப்பவும் மனம் நிறையவே நிறையாது. எல்லாம் இருந்தாலும் ஏதோ சொல்ல முடியாத ஒரு குறை இருந்துக்கிட்டே இருக்கும். அப்படிப்பட்டவங்களை எப்பவும் யாராலும் திருப்திப்படுத்தவே முடியாது. அதுமட்டுமல்லாமல் அவங்க அவங்க எண்ணத்தைப் போன்றே அவங்க அவங்களோட வாழ்க்கையும் இருக்கும். உருவம் மாறினாலும் ஒருத்தரோட எண்ணங்களை மாற்ற முடியாது. ஒருத்தரோட எண்ணம் போன்றே வாழ்க்கையும் அமையும். எப்பவும் போதுங்கற எண்ணத்தோடவும் மனசோடவும் வாழ்தல் வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். இதப்பத்தின ஒரு கதை புதுக்கோட்டை வட்டாரத்துல வழங்கி வருது.
ஒரு காட்டுக்குள்ள சாமியாரு தவம் செஞ்சிக்கிட்டு இருந்தாரு. அவரு இந்த மாதிரி தவம் செஞ்சி செஞ்சிப் பல ஆற்றல்களைப் பெற்றாரு. அந்தமாதிரி பல ஆற்றல்களைப் பெற்றாலும் அவற்றையெல்லாம் தவறா அவரு எப்பவுமே பயன்படுத்துனது இல்லை. ஆனா உதவின்னு யாராவது வந்து கேட்டா அதை ஒடனே செஞ்சிக் கொடுத்துருாரு. அப்படிப்பட்ட நல்லவரா அந்தச் சாமியாரு இருந்தாரு...
அவரு தினந்தோறும் ஆத்துக்குப் போயிக் குளிச்சிட்டு வந்து இறைவனக் கும்பிட்டு தவத்துல இருப்பாரு. அப்படி அந்தச் சாமியாரு தவத்துல இருக்கறபோது ஒரு காட்டுப் பூனையால துரத்தப்பட்ட எலி வேக வேகமா வந்து சாமியாருக்குப் பின்னால ஒழிஞ்சிக்கிருச்சு. எலிய விரட்டிக்கிட்டு வந்த பூனை எலிய ஒண்ணும் செய்ய முடியல. பூனை போயிருச்சு.
பூனை போன பிறகும் எலி சாமியாருக்குப் பின்னால இருந்துக்கிட்டே இருந்துச்சு. சாமியாரு கண்விழிச்சுப் பாத்தாரு. எலி பின்னால நிக்கறத உணர்ந்துக்கிட்டு, ‘எலியே நீ என்னோட முன்னால வந்து நில்லு. பயப்படாதே. வா’’ அப்படின்னு சொன்ன ஒடனே அந்த எலி வந்து சாமியாரு முன்னால நின்னது.
பயந்துக்கிட்டே இருந்த எலியப் பாத்து, ‘‘எதுக்கும் நீ பயப்படாதே! ஒனக்கு என்ன வேணும்னு கேளு நான் செய்யறேன். நீ எதைக் கேட்டாலும் அதை நான் தர்றேன்னு’’ சாமியாரு சொன்னாரு. அதக் கேட்ட எலி, ‘‘சாமி என்னய இந்தப் பூனை எப்பப் பாத்தாலும் தொரத்திக்கிட்டே இருக்குது. அதனால நான் பயந்து பயந்தே வாழ்ந்துக்கிட்டு இருக்கறேன். என்னயப் பூனையா மாத்திட்டீங்கன்னா நான் பயமில்லாம இருப்பேன்னு’’ சொன்னது.
அதைக் கேட்ட சாமியாரு, ‘‘சரி நீ நெனச்சது மாதிரி பூனையாப் போயிச் சந்தோஷமா இருன்னு’’ சொல்லி தன்னோட கமண்டலத்துல இருந்த தண்ணீர எடுத்து எலிமேல தெளிச்சாரு. எலி பூனையா மாறிடுச்சு. சாமியாரக் கும்பிட்டுட்டு வேக வேகமா திரும்பிப் போயிருச்சு.
பூனையா மாறிய எலி ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. இப்படிக் கொஞ்ச நாளு போனது. திடீர்னு சாமியாரு முன்னால பூனை வந்து நின்னது. ‘‘ சாமி என்னயக் காப்பாத்துங்கன்னு’’ சாமியாரு கால்ல விழுந்து கும்பிட்டது. பூனையப் பாத்த சாமியாரு, ‘‘நீ கேட்டதத்தான் கொடுத்துட்டேன்ல அப்பறம் ஏன் இந்த மாதிரி பயந்துக்கிட்டு வந்து நிக்கறே. இப்ப ஒனக்கு என்ன வேணும் சொல்லு’’ அப்படீன்னு கேட்டாரு.
பூனையா மாறின எலி, ‘‘சாமி ஊருக்குள்ளாற இருக்கற நாயெல்லாம் என்னையத் தொரத்திக்கிட்டு வருது. நாயக் கண்டாலே எனக்கு ஒதறல் எடுக்குது. என்னையவிட இந்த நாயிதான் வலிமையானதா இருக்கு. அதனால என்னைய நாயா மாத்திடுங்கன்னு’’ சொன்னது.
சாமியாரும் சரின்னு சொல்லி கமண்டலத்துல இருந்து தண்ணிய எடுத்துத் தெளிச்சாரு. பூனை நாயா மாறிடுச்சு. நாயா மாறுன எலி சாமியாரக் கும்பிட்டுட்டு வேக வேகமா ஊருக்குள்ளாறப் போச்சு. இப்ப நாயெல்லாம் இந்த நாயப் பாத்துட்டு எதுவும் செய்யல. பேசாமப் போயிருச்சுக. நாயா மாறுன எலி மனம் போன போக்குல ஊரச் சுத்திச் சுத்தி வந்துக்கிட்டு இருந்துச்சு.
இப்படியே கொஞ்ச நாள் போனது. ஒருநாள் ஒரு வீட்டுக்குள்ள புகுந்து நாயா மாறுன எலி ஒரு பாத்திரத்துல இருந்த சாப்பாட்ட சாப்புட்டுக்கிட்டு இருந்துச்சு. அதப் பாத்த அந்த வீட்டுக்காரன் பெரிய வெறகுக் கட்டையை எடுத்துக்கிட்டு வந்து நாய வெரட்டுனான். இந்த நாயி வேக வேகமா ஓடுச்சு. அந்த மனிதனும் விடாமத் தொரத்துனான். நாயா மாறுன எலி வேக வேகமா ஓடுச்சி.
மனிசனால ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குப் பின்னால ஓட முடியல. சரி நாயி போனாப் போகுதுன்னு நெனச்சிக்கிட்டுத் திரும்பி வந்துட்டான். வேகமா ஓடுன எலி சாமியாரு முன்னால போயி நின்னது. நாயா மாறுன எலியப் பாத்த சாமியாரு, ‘‘இப்ப ஒனக்கு என்ன வேணும். எதைப் பாத்து பயந்து போயி வந்துருக்கன்னு’’ கேட்டாரு.
அதக் கேட்ட நாயா மாறுன எலி, ‘‘சாமி நாயா இருக்கற நான் சந்தோஷமாத்தான் இருந்தேன். ஆனா இந்த மனுஷங்க என்னையச் சந்தோஷமா இருக்க விடல. மனுசங்களால எனக்குப் பயம் வந்துடுச்சு. என்னைய மனுசனா மாத்திட்டீங்கன்னா மகிழ்ச்சியா இருப்பேன்னு’’ சொன்னது.
அதக் கேட்ட சாமியாரு, ‘‘சரி மனுசனாப் போன்னு’’ சொல்லி நாயா இருந்தத மனுசனா மாத்திவிட்டாரு. மனுசனா மாறுன எலி சந்தோஷந் தாங்க முடியாம ஆடிப் பாடிக்கிட்டுப் போச்சு. அப்படிப் போய்க்கிட்டு இருந்தப்போ ஒரு சிங்கம் அந்தக் காட்டுக்குள்ளாற இருந்து வந்தது. அதப் பாத்த மனுசன் ஐயோ சிங்கம் வந்துருச்சே. என்ன பண்றதுன்னு நெனச்சிக்கிட்டு அங்கிட்டும் இங்குட்டுமா ஓடுனான்.
அந்தச் சிங்கமும் அவன விடாமத் தொரத்துச்சு. மனுசனா மாறு எலிக்கு ஒண்ணும் புரியல. சரி இனிமேலும் இப்படி ஓடிக்கிடடு இருக்க முடியாது. நாம பேசாம சாமியாருக்கிட்டயே போயிருவோம்னு சாமியாருக்கிட்ட வந்துருச்சு.
‘‘சாமி சிங்கத்துக்கிட்ட இருந்து, என்னையக் காப்பாத்துங்க. என்னையக் காப்பாத்துங்கன்னு’’ சாமியாரு முன்னால விழுந்து கும்புட்டுக் கதறுச்சு. மனுசனா மாறுன எலியப் பாத்த சாமியாரு, ‘‘கவலைப் படாதே. சிங்கம் உன்னை ஒன்றும் செய்யாது. நீ மனுசனா மாறினாலும் மனசு அளவில இன்னும் எலியாத்தான் இருக்க. இப்ப ஒன்ன சிங்கமா மாத்தினாலும் நீ எலியாத்தான் இருப்ப. அதுமட்டுமில்ல எதுலயும் ஒனக்கு மனநிறைவோ மன அமைதியோ இல்ல. அதனால நீ மறுபடியும் எலியாவே இருந்துரு. அதுதான் ஒனக்கு நல்லது. தேவை இல்லாததுக்கெல்லாம் ஆசைப்படாதேன்னு’’ சொல்லி கமண்டலத்துல இருந்து தண்ணிய எடுத்துத் தெளிச்சாரு. மனுசனா இருந்த எலி மறுபடியும் எலியாவே மாறிடுச்சு.
எலியா மாறுன ஒடனே சாமியாரக் கும்பிட்டுட்டு, ‘‘சாமி யாரு எப்படி இருக்கணுமோ அப்படியே இருக்கறதுதான் எல்லாருக்கும் நல்லது. நான் எலியாவே இருக்கறதுதான் எனக்கு நல்லதுன்னு’’ சொல்லிட்டு எலி காட்டுக்குள்ளாற ஓடிப் போயிருச்சு. மனங்கொண்டதுதான் மாளிகை. அதைவிட்டுட்டு மனசப் போட்டுக் குழப்பிக்கிட்டு இருக்கக் கூடாது. தெளிவா இருக்கணும்.