சித்தத்தை அடக்கியவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்தச் சித்தர்களைப் பற்றி ஒவ்வொரு ஊருலயும் ஒவ்வொரு விதமாகக் கதைகள் வழங்கி வருகின்றன. சித்தர்கள் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் உள்ளவர்கள். எதிர்காலத்தில் என்ன நடைபெறப் போவதை அறிந்து கூறுவதால் அவர்களை மக்கள் சித்தர் சாமி என்று அழைத்து வணங்கினர்.
ஒரு ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஒரு குடிசையைப் போட்டு சில ஆடுகளை வளர்த்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவரைப் பார்க்க ஊராட்கள் அவ்வப்போது வந்து போவர். அவ்வாறு வருகின்றபோது அந்தச் சாமியார் அவர்களுக்கு பல அறிவுரைகள் வழங்குவார்.
இப்படி இருக்கின்றபோது ஒருநாள் அந்தச் சாமியாருக்கு அந்த ஊர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நடக்கப் போகும் பேராபத்து பற்றி மனதினுள் தோன்றியது. அவர் அதை எப்படியாவது அங்கு வரும் மக்களிடம் சொல்லி எச்சரிக்க வேண்டும் என்று நினைத்தார்.
அதனால் அவர் தன்னைப் பார்க்க வந்த ஊர் முக்கியஸ்தர்களிடம் இந்த ஊரிலும் சுற்று வட்டாரத்திலும் இனி மழை பொழியாது. கடுமையான வறட்சி ஏற்படப் போகின்றது. எப்படியாவது அனைவரும் பிழைத்துக் கொள்வதற்கான வழிகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனாலும் அங்கு வந்தவர்கள் அவர் கூறியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அந்தச் சாமியார் நவதானியங்களை மண்ணோடு சேர்த்துக் குழைத்து தன்னோட குடிசைக்குச் சுவர் வைத்தார். இதைப் பார்த்த அந்த ஊர் மக்கள் அவரோட செயலைப் பார்த்து இந்தச் சாமியார் எதுக்காக இப்படிச் செய்கின்றார். இவருக்குப் பைத்தியம் எதுவும் பிடிச்சிருச்சோ? என்று பல்வேறு விதமாகப் பேசியபடி சென்றனர்.
அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது தனக்குக் கிடைத்த தானியங்கள் அனைத்தையும் மண்ணில் குழைத்துக் குழைத்துக் குடிசையைச் சுற்றிப் பெரிய சுவர் ஒன்று வைத்தார். தான் வளர்த்த ஆடுகளுக்குப் பாலைத் தழையையும் எருக்கஞ்செடிகளையும் மட்டும் கொடுத்து வளர்த்தார்.
அந்த ஆடுகளும் அவர் கொடுத்த பாலைமரத்தின் தழைகளையும் எருக்கஞ் செடிகளையும் தின்று பழக்கப்பட்டு விட்டன. இதைப் பார்த்த அந்த மக்கள் இந்தச் சாமியாரு விவரமில்லாமல் எதையோ செய்கின்றார் என்று வேடிக்கை பார்த்துச் சென்றனர்.
அவர் தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் இந்த வட்டாரத்தில் கடுமையான பஞ்சம் நிலவப் போகின்றது. எங்காவது சென்று பஞ்சம் பிழைத்துக் கொள்ளுங்கள் என்றார். அவர் கூறியதைக் கேட்டவர்கள் ஒன்றும் கூறாது அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.
அவர் கூறியதைப் போன்றே கடும் பஞ்சம் ஏற்பட்டது. ஆடுமாடுகள் உணவின்றி இறந்து வீழ்ந்தன. அந்த வறட்சியிலும் பாலை மரமும் எருக்கஞ் செடிகளும் செழித்து வளர்ந்தன. அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வேறு வேறு இடங்களுக்குப் பிழைப்பதற்காகச் சென்றனர்.
அவ்வாறு சென்றவர்கள் அந்தச் சாமியாரையும் அழைத்தனர். அவர் நீங்கள் செல்லுங்கள். என்னால் வர முடியாது என்று கூறிவிட்டார். அந்த வட்டாரத்தில் ஒருவரும் இல்லை. வெறும் குடிசைகளும் இறந்து போன எலும்புக் கூடுகள் மட்டுமே கிடந்தன.
ஆனால் அந்தச் சாமியார் மட்டும் எந்தப் பாதிப்புக்கும் ஆளாகாமல் இருந்து வந்தார். தினந்தோறும் அவரது ஆடுகள் வெளியில் சென்று பாலை மரத்து இலைகளையும் எருக்கஞ் செடிகளையும் தின்றுவிட்டு அவரது குடிசைக்கு வரும். அவ்வாறு வரும் ஆடுகளுக்கு உடலில் அரிப்பு ஏற்படும். அப்போது அந்த ஆடுகள் குடிசையின் சுவரில் தங்களது உடம்பைப் போட்டு உரசி அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும்.
ஆடுகள் சுவரை உரசும்போது அதில் இருந்து வரகு சாமை போன்ற சிறுதானியங்கள் உதிர்ந்து விழும். அவற்றையெல்லாம் எடுத்துச் சுத்தப்படுத்தி ஆடுகளிலிருந்து பாலைக் கறந்து அதில் வேகவைத்து சாமியார் உண்டு வந்தார். இதே போன்று தொடர்ந்து செய்து வந்தார்.
அப்போது வானத்தில் தேவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த ஊரைப் பார்த்தார்கள். ஊர் முழுவதும் அழிந்து ஆங்காங்கே எலும்புக் கூடுகள் கிடந்ததைக் கண்டனர். அவ்வாறு வருகின்றபோது இந்தச் சாமியார் இருந்ததையும் பார்த்தனர்.
ஊரில் ஒருவர் கூட இல்லாதபோது இந்தச் சாமியார் மட்டும் எப்படி இங்கு உயிருடன் வாழ்ந்து வருகின்றார். ஆச்சரியமாக இருக்கின்றதே என்று வியந்தனர். அவரைச் சென்று பார்ப்பது என்று தேவர்களில் முதன்மையானவர்களான மும்மூர்த்திகளும் முடிவு செய்தனர்.
அவர்கள் கடுமையான வெயிலடிக்கும் நடுப்பகலில் அந்தச் சாமியாரைத் தேடி அவரது குடிசைக்கு வந்தனர். அவ்வாறு வந்தவர்களைக் கண்ட சாமியார் ஓடோடியும் வந்து அவர்களை வரவேற்றுத் தன் குடிசைக்குள் அழைத்துச் சென்று அமர வைத்தார்.
அவர்கள் தங்களுக்குப் பசிக்கின்றது. ஏதாவது உண்பதற்குக் கிடைக்குமா? என்று கேட்டனர். அதற்குச் சாமியார் சற்று நேரம் இருங்கள் இதோ ஒரு நொடியில் உங்களது பசியைப் போக்குகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் ஆடுகளில் பாலைக் கறந்து கீழே சிதறிக் கிடந்த சிறுதானியங்களைச் சுத்தப்படுத்தி பாற்சோறு தயாரித்து மும்மூர்த்திகளுக்கும் கொடுத்துப் பசியாற்றினார். வந்தவர்கள் அனைவரும் உண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு உறக்கம் வருவதைப் போன்று உணர்ந்தனர். அதைச் சாமியாரிடம் கூறியவுடன் சரி சற்று நேரம் உறங்குங்கள் என்று கூறி அவர்கள் படுப்பதற்கு இடமும் கொடுத்தார். அம்மூவரும் நன்கு உறங்கினர்.
சாமியாருக்கு வந்தவர்கள் யார் என்று தெரிந்து விட்டது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாது இருந்தார். மூவரும் உறங்கி விழித்தனர். அவர்கள் சாமியாரை அழைத்து எவ்வாறு நீங்கள் மட்டும் இவ்வாறு பசியறியாது மகிழ்வோடு இருக்கின்றீர்கள்? என்று கேட்டனர். அதற்கு அந்தச் சாமியார் நடந்தவற்றையெல்லாம் கூறினார்.
அதைக் கேட்ட அம்மூவரும் தாங்கள் யார் என்பதையும் தாங்கள் வந்ததன் நோக்கத்தையும் கூறி தங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அச்சாமியார் இந்த வட்டாரத்தில் மீண்டும் மழை பொழிந்து அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வரம் கேட்டார்.
தெய்வங்களும் சென்றன. ஊரில் மழை பொழிந்து பஞ்சம் நீங்கி வளம் கொழித்தது. ஊரைவிட்டுச் சென்ற மக்கள் திரும்பி வந்தனர். ஊர் வளமாவதற்கு இந்தச் சாமியாரேக் காரணம் என்று அறிந்து அவர்கள் அந்தச் சித்தரைப் போற்றினர். இந்தச் சாமியாரே இடைக்காட்டுச் சித்தர் என்றும் போற்றப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.