அது ஒரு அடர்ந்த காட்டுப் பகுதி. அந்தக் காட்டுப் பகுதிய ஒட்டி ஒரு சின்ன ஊரு. அந்த ஊருல ஒரு விவசாயி அஞ்சாறு ஆடுகளை வளத்து வந்தாரு. அவரு ஆடுகள நல்லாப் பாத்துக்கிட்டதால அந்த ஆடுகளும் அவருக்கு நல்ல பலன்களைக் கொடுத்தன. அவரு வளத்துக்கிட்டு வந்த ஆடுகள்ள ஒண்ணு குட்டி போட்டுச்சு. அது கிடாக்குட்டி.
அந்தக் கிடாக்குட்டிய அதனோட தாயி ரொம்பப் பாசமா வளத்துக்கிட்டு வந்தது. அந்தக் கிடாக்குட்டிக்கிட்ட அம்மா ஆடு தம்பி நாம இருக்கற இந்த இடத்த விட்டுட்டு வேற எங்கயும் போயிடாத. அப்படிப் போனா நம்மள சிங்கமோ நரியோ அடிச்சே கொன்னுடும். அப்படியே எந்த மிருகத்துகிட்டயாவது மாட்டிக்கிட்டா பயப்பிடாம தந்திரமாத் தப்பிச்சு வரணும்னு சொன்னது.
அந்தக் கிடாக்குட்டியும் அம்மா சொல்லறதக் கேட்டு நடந்துச்சு. கிடாக்குட்டி வளந்து பெரிய ஆடா வந்துருச்சு. அந்தக் கிடாய் வளரவளர அதனோட தாடையில தாடியும் பெரிசா வளந்துச்சு. மத்த ஆடுகளோட தாடிய விட இந்தக் கிடா ஆட்டுக்குத் தாடி கொஞ்சம் பெரிசா இருந்துச்சு.
இப்படியே இருந்துக்கிட்டு இருக்கறப்போ அந்த விவசாயி ஆடுகள மேய்ச்சலுக்கு ஓட்டிக்கிட்டுப் போயி வர்றபோது ஒருநாளு காட்டு ஓரமா மேஞ்சிக்கிட்டு இருந்த இந்தக் கிடா பக்கத்துல இருந்த ஓடைத் தண்ணியில தன்னோட மொகத்தப் பாத்துச்சு. அதுக்கே ரெம்ப ஆச்சரியமாப் போயிருச்சு. அடடா நம்ம மொகத்துல எவ்வளவு பெரிய தாடி வளந்து அழகா இருக்கு. இதுமாதிரி யாரோட மொகத்துலயும் இல்லையே. அப்ப நாம பெரியாளுதான்னு நெனச்சிக்கிடுச்சு.
இப்படியே நெனச்சிக்கிட்டே வழிதவறி காட்டுக்குள்ளாறப் போயிடுச்சு. மற்ற ஆடுகள்ளாம் தண்ணியக் குடிச்சிப்பிட்டு விவசாயியோட வீட்டுக்குக் கிளம்பிப் போயிக்கிட்டு இருந்துச்சுங்க. வழிதவறிய கிடாய் வழியத் தேட ஆரம்பிச்சிருச்சு. அப்பப் பாத்துக் கடுமையான மழைபெய்யத் தொடங்கிருச்சு.
மழைபெய்யத் தொடங்குன ஒடனேயே எப்படியாவது மழையில இருந்து தப்பிக்கணும்னு நெனச்ச கிடா வேகவேகமா ஓடி பக்கத்துல இருந்த ஒரு பெரிய குகைக்குள்ளாற போயி ஒக்காந்துக்கிருச்சு. அந்தக் கிடா ஒழிஞ்சது ஒரு பெரிய சிங்கத்துக்குச் சொந்தமான குகை.
மழை வந்ததால சிங்கம் வேட்டையாடறத விட்டுட்டு குகைய நோக்கி வந்துச்சு. அப்ப அதக் கவனிச்ச கிடாய்க்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு. இருந்தாலும் தன்னோட அம்மா சொன்னத மறக்காம தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு தன்னோட கொம்பை குகையோட சுவத்துல போட்டு பரட்டுப் பரட்டுன்னு தேய்ச்சது.
அந்த நேரத்துல அங்க வந்த சிங்கத்தோட காதுல இந்தச் சத்தம் கேட்டுச்சு. சத்தத் கேட்ட சிங்கம் நம்மளோட குகைக்குள்ளாற வேத்து மிருகம் ஒண்ணு வந்துருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு, ‘‘டேய் யார்றா அது மரியாதையா என்னோட குகைய விட்டுட்டு ஓடிப் போயிரு. இல்லைன்னா ஒன்னையக் கொன்னுருவேன்னு சொன்னது’’
அதைக்கேட்ட கிடாய், ‘‘ஹஹ்ஹ்ஹா ஆ.. டேய் அற்பப் பதரே என்னோட அகோரப் பசிக்கு சரியான வேட்டையா நீ வந்துட்டே. நான் யாரு தெரியுமா கடவுளுக்கிட்ட வரம் வாங்கிக்கிட்டு வந்தவன். இந்தக் காட்டுக்கு என்னையக் கடவுள் ராஜாவா அனுப்பியிருக்காரு. வா வந்து என்னோட பசியப் போக்கிடு’ அப்படீன்னு சொல்லி தன்னோட கொம்ப சுவத்துல பரட்டுப் பரட்டுன்னு தேச்சது.
கிடாய் பேசிய பேச்சும் அதனோட கொம்பு தேய்ச்ச சத்தமும் குகையோட சுவத்துல பட்டு எதிரொலிச்சு பெரிய சத்தமா படுபயங்கரமா குகைக்கு வெளியில வந்து கேட்டுச்சு. ஏற்கனவே பசியோட இருந்த சிங்கத்துக்கு இப்ப இந்தக் குரலக் கேட்டவுடனேயே ஆஹா வந்துருக்கவன் நம்மளவிட பெரிய பலசாலியாத்தான் இருப்பான் போல இருக்குன்னு நெனச்சிச் செத்தேன் பொழச்சேன்னு ஓட்ட ஓட்டமாத் திரும்பிப் பாக்காமா ஓடிருச்சு.
அப்படி ஓடுன சிங்கம் அன்னைக்கு ராத்திரி முழுசும் ஒரு மரத்தடியிலேயே படுத்துத் தூக்கிச்சு. அதுக்குச் சரியாத் தூக்கம் வரலை. எந்த நேரத்துலயும் அந்தப் புதுமிருகம் தன்னைத் தாக்க வரலாம்னு நெனச்சிக்கிட்டே இருந்ததால அது அரைகுறையாத்தான் தூங்குச்சு.
மறுநாளு பளபளன்னு பொழுது விடிஞ்சிச்சு. சிங்கம் என்ன செய்யிறதுன்னு அந்த மரத்தடியிலேயே படுத்துக்கிட்டு யோசிச்சு. அப்பதைக்கு அந்தப் பக்கமா ஒரு நரி வந்துச்சு. அது சிங்கம் படுத்துருக்கறதப் பாத்துட்டு, ‘‘என்ன மகாராசா இப்படி குகைய விட்டுட்டு நடுக்காட்டுக்குள்ளாற வந்து மரத்தடியில படுத்துருக்கீங்கன்னு’’ கேட்டது.
அதுக்குச் சிங்கம் நடந்ததை எல்லாத்தையும் சொல்லிச்சு. அதக் கேட்ட நரி, ‘‘மகாராசா நீங்கதான் இந்தக் காட்டுக்கு ராசா. வேற யாரும் இல்லை. ஒங்கள யாரோ ஏமாத்தி இருக்காங்க. நான் போயிப் பாத்துட்டு வர்றேன்னு’’ கௌம்புச்சு.
அதக் கேட்ட சிங்கம், ‘‘டேய் நரியா தயவு செஞ்சு போயி உயிர விட்டுறாதேடா. பேசாம வா நாம ரெண்டு பேரும் பக்கத்துக் காட்டுக்குப் போயி பொழச்சிக்கிறலாம்னு’’ சொன்னது. ஆனா நரி, ‘‘மகாராசா நீங்க பேசாம இருங்க. நான் போயி அது யாருன்னு பாத்துட்டு வர்றேன்னு’’ சொல்லிட்டுக் கௌம்பிப் போச்சு.
அப்படிக் கௌம்பிப் போன நரி குகைக்கிட்ட போயி குகை வாசலைப் பாத்துச்சு. அப்ப குகைக்குள்ளாற போன காலடித்தடத்தைப் பாத்துட்டு, ‘‘அட இது ஊருக்குள்ளாற நாமபோயித் தூக்கிக்கிட்டு வர்ற ஆட்டோட காலடித்தடமால்ல இருக்குது. ஏதோ ஒரு ஆடுதான் இப்படி இங்க பதுங்கிக்கிட்டு இருக்குதுன்னு’’ மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டு அந்த ஆட்டைப் பாத்துருவோம்னு மெதுவா குகைக்குள்ளாறப் போயி எட்டிப் பாத்துச்சு. அப்ப அது பெருசா தாடி வளந்த ஆட்டுக்கிடாய்னு தெரிஞ்சிக்கிருச்சு.
அப்பறம் சத்தம்போடா குகைய விட்டு வெளியில வந்த நரி சிங்கத்தப் பாக்குறதுக்காகப் போனது. வேகவேகமாச் சிங்கத்துக்கிட்ட போயி, ‘‘மகாராசா நம்மள ஏமாத்துனது ஒரு ஆடு. அது மொகத்துல ஒரு தாடி வளந்து போயி இருக்கு. மத்தபடி ஒண்ணுமில்லை. அத நான் பாத்துட்டேன். நீங்க வாங்க அந்த ஆட்ட அடிச்சி வெரட்டிடலாம்னு’’ சொல்லி சிங்கத்தக் கூட்டிக்கிட்டுக் குகைக்கு வந்துச்சு.
குகை வாசலுக்கு வர்றபோது சிங்கத்துக்கு ஒதறல் எடுத்துருச்சு. சிங்கம் நரியப் பாத்து, ‘‘டேய் என்னைய வேணுமின்னே நீ கொல்லப் பாக்குற. குகைக்குள்ளாற இருக்கறது கடவுளோட வரம் வாங்குன மிருகம். அத நாம ஒண்ணும் செய்ய முடியாது. நாம இப்படியே திரும்பிப் போயிருவோம் வான்னு’’ கூப்பிட்டது.
அதுக்கு நரி, ‘‘என்ன ராசா பயப்படுறீங்க. நான் முன்னால போறேன். நீங்க பின்னால வாங்க. அப்படியும் ஒங்களுக்குத் பயமா இருந்துச்சுன்னா என்னோட கழுத்துல கயித்தக் கட்டிக்கிடறேன். அத ஒங்களோட கால்ல கட்டிக்கிட்டு எம்பின்னால வாங்கன்னு’’ தைரியம் சொல்லிக் கூட்டி போச்சு.
குகையோட வாசல்ல நின்னு நரி, ‘‘டேய் ஆடே நீ யாருன்னு எங்களுக்குத் தெரியும் தைரியம் இருந்தா ஒடனே வந்துரு. இல்லைன்னா உள்ளாற வந்து நாங்க ஒன்ன தொலைச்சுக்கட்டிருவோம்னு’’ சொன்னது.
இதைப் பாத்த கிடாய், ‘‘ஆஹா இந்த நரிப்பய இப்படிக் கௌம்பி வந்துட்டானே. இவன எப்படியாவது மடக்கி வெளியேத்திட்டு நாம ஊருக்குள்ளாறப் போயிடனும்ணு நெனச்சிக்கிட்டு, ‘‘சபாஷ் நரியாரே! நாம போட்டத் திட்டப்படியே இந்த சிங்கத்த அடிச்சிச் சாப்பிடுறதுக்கு சரியாக் கூட்டியாந்துட்டியே. அப்படியே அந்த சிங்கத்தை விடாமப் பிடிச்சிக்கோ. நான் என்னோட ஆயுதத்தைக் கூர்தீட்டிக்கிட்டு வர்றேன். எனக்கு இன்னைக்கு விருந்துதான். எனக்குக் கிடைக்கிற விருந்துல ஒனக்கும் பங்கு தர்றேன். கவனமா அந்தச் சிங்கத்தைப் பாத்துக்கோ’’ அப்படீன்னு சொல்லிட்டு தன்னோட கொம்பை செவுத்துல பரட்டுப் பரட்டுன்னு தேய்ச்சது.
இந்தச் சத்தம் குகைக்குள்ளாற எதிரொலிச்சி அப்படியே வந்து பெலக்காக் கேட்டது. அதக்கேட்ட சிங்கம், ‘‘அடேய் வஞ்சக நரிப்பயலே நீயி இந்தப் புது மிருகத்தோட சேர்ந்து என்னையக் கொல்றதுக்குத் திட்டம்போட்டுட்டு என்னையக் கட்டி இழுந்தாந்து வேற நிறுத்துறியா.. இனிமே இந்தப் பக்கமே தலைவச்சிப் படுக்கமாட்டேன்டா..ன்னு’’ சொல்லிட்டு வேகவேகமா ஓடுச்சி.
சிங்கத்தோட கால்ல கட்டியிருந்த நரி காடுமேடல்லாம் இழுபட்டு சின்னாபின்னமாயி செத்துப்போயிருச்சு. குகைக்குள்ளாற இருந்த ஆட்டுக்கிடாய் குகையவிட்டு வெளியில வந்து ஊரப்பாத்து ஓடி எப்படியோ அதோட ஆளுகளப் பாத்துருச்சு. பாத்துட்டு தான் எப்படி ஆபத்துல இருந்து தப்பிச்சேன்னு எல்லாருக்கிட்டயும் சொல்லிக்கிட்டே இருந்துச்சு. மனசு தைரியம் இருந்தா அவங்க எப்படியாப்பட்ட இடத்துல இருந்தாலும் ஜெயிச்சுருவாங்க.