சொர்க்கம் நரகம் குறித்த பல்வேறு நம்பிக்கைகள் மக்களிடையேக் காலங்காலமாக நிலவி வருகின்றது. காலங்கள் மாறினாலும் இந்த சொர்க்கம் நரகம் என்பது குறித்த நம்பிக்கை மாறாமலேயே இருக்கின்றது. இது குறித்த கதை அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை வட்டாரத்தில் இது வேறு விதமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அது ஒரு பெரிய ஊர். அதனைச் சுற்றி நிறைய கிராமங்கள் இருந்தன. அந்த ஊருக்குப் பல கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்வர். அந்த ஊரில் ஒரு பெரிய கோயில் ஒன்றும் அதன் அருகில் ஒரு மடம் ஒன்றும் இருந்தது. அதில் ஒரு சாமியார் வாழ்ந்து வந்தார்.
அதற்குச் சற்று தள்ளி ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அவள் விலைமகள் ஆவாள். அவள் வீட்டிற்கு எப்போதும் ஆண்கள் வந்த வண்ணம் இருப்பர். அவள் நாள்தோறும் மாலையில் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவாள். அப்போது கோவிலில் அந்தச் சாமியார் அமர்ந்து அங்கு வரும் மக்களுக்கு உபதேசம் வழங்குவார்.
அந்த உபதேசத்தை அந்த விலைமாதும் வந்து அமர்ந்து கேட்டுவிட்டுச் செல்வாள். அந்தச் சாமியார் மிகவும் நல்லவர். அந்த வட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவரும் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவரும் அனைத்து மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி மக்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்து வந்தார். அதனால் அவர் எதைக் கூறினாலும் அதை மக்கள் அனைவரும் கேட்டு நடந்தனர்.
அவ்வாறு இருக்கின்ற போது, ஒருநாள் அவரிடம் அந்தப் பகுதி மக்கள் வந்து அங்கு இருக்கும் விலைமாதைப் பற்றி குறை கூறினா். அவளால் அங்குள்ள பல குடும்பங்கள் சீரழிவதாகவும் அவளைத் தாங்கள்தான் நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
மக்களின் வேண்டுகோளை ஏற்ற அந்தச் சாமியார் மறுநாள் அந்தப் பெண் கோயிலுக்கு வந்த போது அவளைத் தனியாக அழைத்து, ‘‘அம்மா நீ நல்ல வாழ்க்கை வாழக் கூடாதா? ஏன் பிறரது வாழ்க்கையைச் சீரழிக்கும் ஒழுக்கக் கேடான வாழ்க்கையை வாழ்கின்றாய்? நீ உன்னை மாற்றிக் கொண்டுவிடு. பலரின் சாபத்திற்கும் ஆளாகாதே!’’ என்று அறிவுரை கூறினார்.
அவளும் அதைக் கேட்டு, ‘‘சுவாமி நானும் திருந்தி வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கும் இதில் விருப்பமே இல்லை. நான் விட்டுவிடுவதாக இருந்தாலும், மற்றவர்கள் என்னை அதிலிருந்து மீள விடமாட்டேன் என்கிறார்கள். நான் என்ன செய்வது? நான் செய்வது பாவம் என்று எனக்குத் தெரிகிறது. தாங்கள் சொல்கின்றவாறு இனி ஒழுக்கமாக நான் நடந்து கொள்ள முயற்சி செய்கிறேன்’’ என்று கூறிவிட்டுச் சென்று விட்டாள்.
ஆனால் அவளால் தனது தொழிலை விட முடியவில்லை. சாமியாரும் அவளை எப்படியாவது திருத்தி இந்த ஊர்மக்களுக்கு நன்மையைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதற்கு மனதிற்குள்ளேயே யோசித்து ஒரு திட்டம் தீட்டினார். அதனைச் செயல்படுத்தினால் அந்தப் பெண் தனது ஒழுக்கக் கேடான வாழ்க்கையிலிருந்து திருந்தி விடுவாள் என்று முடிவு செய்து, மறுநாளே அதனைச் செயல்படுத்தினார்.
அவர் தனது மடத்திலிருந்து அவள் வீட்டுக்கு ஒரு ஆண் சென்றால் ஒரு கல்லை எடுத்து மடத்துக்கு அருகில் போடுவார். இவ்வாறே செய்து வந்தார். ஒரு சில நாளில் அங்கு ஒரு பெரிய கல்லாலாகிய குன்றே நிமிர்ந்து நின்றது. சாமியார் அந்தப் பெண்மணியை அழைத்து, ‘‘இதோ பார்த்தாயா? இந்தக் குன்று முழுவது ஓரிரு மாதங்களில் உன்னுடைய வீட்டிற்கு வந்து சென்ற ஆண்களின் எண்ணிக்கையாகும். நீ இனிமேலும் எனது இந்த இழிவான வாழ்க்கையைத் தொடராதே. மற்றவர்கள் ஒழுக்கமாக வாழ்வதற்கு நீ வழிவிட வேண்டும். மற்றவர்களின் பாவ மூட்டைகளை நீ சுமந்து கொண்டு இருக்கின்றாய். உனக்கு இறைவனது அருள் கிட்டாது’’ என்று அறிவுறுத்தி அனுப்பினார்.
அந்தப் பெண்ணிற்கு மிகுந்த மன வருத்தம். நாம் என்ன வேண்டுமென்றா இதனைச் செய்கிறோம். நமக்குச் சற்றும் விருப்பமில்லாமல்தானே இதனைச் செய்கிறோம். ஐயோ நான் பல பாவ மூட்டைகளைச் சுமக்கின்றேனே? இதற்கு விடிவே கிடையாதா?’’ என்று பலவாறு அழுது புலம்பினாள். பின்னர் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளைப் போன்று தனது வீட்டுக் கதவைச் சாத்தினாள்.
பின்னர் தனது பூஜைஅறையில் அகல் விலக்கினை ஏற்றி வைத்து மனமுருகத் தனது பாவங்களை எல்லாம் போக்குமாறு கண்ணீர் விட்டுக் கதறினாள். வெளியில் கனத்த மழை கொட்டத் தொடங்கியது. இடி, மின்னல், காற்று, மழை என்று வெளுத்து வாங்கியது. அப்போது மிகப்பெரிய இடியானது அந்தப் பகுதியில் விழுந்தது. அவ்வாறு விழுந்த இடி சாமியாரின் மடத்தின் மீதும், அந்த விலைமாதின் வீட்டின் மீதும் விழுந்தது.
இருவரும் ஒரே நேரத்தில் இறந்தனர். அப்போது விலைமாதின் உயிரை இறைவனது தூதுவர்கள் வந்து அவளைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றனர். சாமியாரின் உயிரை எமகிங்கரர்கள் வந்து பற்றி இழுத்துக் கொண்டு நரகத்திற்குச் சென்றனர். சாமியாருக்கு மிகுந்த வருத்தமாகப் போய்விட்டது. அவரை எமகிங்கரர்கள் எமதர்மனிடம் இழுத்துச் சென்று நிறுத்தினர். எமதர்மனைப் பார்த்து, ‘‘எமதூதர்களே!! என்னை ஏன் நரகத்திற்கு அழைத்துச் செல்கின்றீர்கள். நான் என்ன தவறு செய்தேன். இறைவனையே நினைத்துக் கொண்டு மக்களுக்கு நன்மைகளைச் செய்த எனக்கு ஏன் இந்த நிலை? ஊரையெல்லாம் கெடுத்தவளுக்கு இறைவனது சொர்க்கமா? இது நீதி இல்லை. எமதர்மனாகிய தாங்கள் இவ்வாறுசெய்யலாமா? இவ்வாறு செய்தால் தர்மநியாயம் குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள்? நான் என்ன தவறு செய்தேன் என்பதையாவது தாங்கள் சொல்லியே ஆகவேண்டும்’’ என்று கேட்டார்.
அதைக் கேட்ட எமதர்மன், ‘‘சுவாமி தாங்கள் ஒழுக்கம் தவறாது, மற்றவர்களுக்கு நன்மையே செய்து வந்தீர்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் சில காலமாக நீங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு என்ன செய்தீர்கள். இறைவனை வணங்கவில்லை. எதைப் பற்றியும் நினைக்கவில்லை. அந்த விலைமாதின் வீட்டிற்கு வரும் ஆட்களையே எண்ணிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் உங்களது கடமையிலிருந்து தவறிவிட்டீர்கள். அவ்வாறு கடமை தவறியதால்தான் இந்த நரகத்திற்கு உங்களை அழைத்து வரவேண்டியதாகிவிட்டது. உங்களது உள்ளத்தில் இறைவனுக்குப் பதில் அந்த விலைமாதே ஆக்கிரமித்திருந்தாள். அதைத் தாங்கள் உணரவில்லை. அதனால்தான் இந்தத் தண்டனை. ஆனால் அவள் தான் செய்வது தவறு என்பதை உணர்ந்து மனதார இறைவனை வேண்டினாள். அவள் தனது பாவங்களைப் போக்க வேண்டும் என்று நாள்தோறும் மன்றாடினாள். அவளது உள்ளத்தில் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனால் அவள் சொர்க்கத்திற்குச் சென்றாள். இருக்கின்ற இடம் வேறாக இருக்கலாம். ஆனால், நினைவுதான் மிகவும் முக்கியம். நீங்கள் உயர்ந்த இடத்தில் இருந்தீர்கள். ஆனால் உங்களது எண்ணம் முழுக்க முழுக்க அவளைச் சுற்றியே இருந்தது. அதனால்தான் இந்த நிலை ஏற்பட்டது’’ என்று கூறியவுடன் சாமியார் தனது தவற்றை உணர்ந்து வருந்தினார்.
எண்ணம் போல வாழ்வு. நாம் எங்கு இருக்கின்றோம் என்பது முக்கியமல்ல. நாம் எந்த எண்ணத்தோடு வாழ்கிறோம்? என்பதுதான் மிகவும் முக்கியம். நாம் எந்த நிலையிலும் நமது கடமையிலிருந்து தவறக் கூடாது. அவரவர் கடமைகளை அவரவர் செய்ய வேண்டும் என்பதற்கு இக்கதை இவ்வட்டாரத்தில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.